பெற்றோர்களுக்கும்,
இளைஞர்களுக்கும்
ஒரு நல்ல பாடம்...!
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று கேளிக்கை வரிவிலக்கு பெறுவதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு வரிவிலக்கு பெற்ற முதல் திரைப்படம் இது தான்.
இந்த திரைப்படம் பழைய இந்தி படத்தை தழுவி எடுக்கப்பட்டதால், இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் விஜய்யின் வழக்கமான முத்திரைகளும், அடையாளங்களும் இந்த படத்தில் இல்லை. வழக்கமாக விஜய் படமென்றால், விஜய்யை அறிமுகப்படுத்தும் போதே ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் இருக்கும். ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளும், கார்கள் பறப்பதும் உருளுவதும், எதிர்களின் எலும்புகள் உடைக்கப்படுவதும், கத்தியால் வெட்டப்படுவதும், பன்ச் டயலாக்கும், படம் முழுக்க விஜய் முகமும் - என நம் மண்டைய பொலந்துகட்டும். தாங்கவே முடியாது. ஆனால் அந்த விஷயமெல்லாம் இந்த படத்தில் இல்லை. விஜய் மட்டுமல்லாமல், அவருடன் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள். மூவருக்கும் சமமான வாய்ப்பு. படம் முழுக்க நகைச்சுவை. பரவாயில்லை... காசு கொடுத்து கடைசிவரை சிரித்துக்கொண்டே இருக்கலாம்.
இந்த படம் மற்றப் படங்களைப்போல் குறைகளும் நிறைகளும் கொண்ட படமாக இருந்தாலும், நிறைகளை பாராட்டாமல் இருக்கமுடியாது. இந்த படத்தின் கதையே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகள் தான். அதில் படிக்கும் மாணவர்கள், கல்லூரி நிர்வாகம், இன்றைய கல்வி முறை, அந்த கல்லூரியில் படிக்கும் நாயகர்களின் குடும்பம், அவர்களின் எதிர்பார்ப்பு - போன்ற இன்றைய பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் திணிப்பையும், அறிவையும், திறமையையும் வளர்க்காமல், கோழைத்தனத்தை மட்டுமே வளர்த்து, கடைச் சரக்காகிப் போன கல்விமுறையில் உண்டான போட்டி மனப்பான்மையையும், அதனால் படிக்கும் மாணவர்களிடத்தில் உருவாகியிருக்கும் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் படம் பிடித்து காட்டுகிறப் படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.
பிள்ளைகள் விருப்பப்பட்டதை படிக்கவும், அதில் அவர்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும் பெற்றோர்கள் அனுமதிக்கவேண்டும். மாறாக பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது என்பது தான் இந்தப் படத்தின் மையக்கருத்து. ''ஏ. ஆர். ரகுமான் கிரிக்கெட் பிளேயர் ஆனாலோ... சச்சின் மியூசிக் டைரக்டர் ஆனாலோ... அவர்கள் இந்த அளவுக்கு சாதனையாளர்களாக வந்திருக்க மாட்டார்கள்'' என்ற வசனம் அருமை. ஆர்வம் இருக்கும் துறையில் திறமையை வளர்த்துக்கொண்டால் தான் சாதனையாளர்களாக வரமுடியும் என்று அழுத்தமாக இந்த திரைப்படம் கூறுகிறது.
அதேப்போல் இன்றைய தனியார் பொறியியல் கல்லூரிகள் எப்படியெல்லாம் மாணவர்களிடையே போட்டிகளையும், வெறித்தனத்தையும் உண்டாக்கி அவர்களுக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்குகிறார்கள் என்பதையும் காட்டுகிறார்கள்.
இப்படிப்பட்ட கல்லூரிகள் உண்டாக்கும் மன அழுத்தத்தினால் வசதியில்லாத வீட்டுப் பிள்ளைகள், கிராமப்புறத்து இளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிற பயங்கரத்தையும் இந்த படம் எடுத்துக் காட்டுகிறது.
கதாநாயகர்களில் ஒருவனான ஜீவா தான் நன்றாக படிப்பதற்கும், தேர்வில் தேர்ச்சிப்பெருவதற்கும் ஏகப்பட்ட சாமிப்படங்களை வைத்து பூஜை செய்வதும், தன்னுடைய கைகளில் சாமிக்கயிறுகளை கட்டிக்கொள்வதுமாக இருப்பதையும் காட்டி, பிறகு உனக்குள் இருக்கும் கோழைத்தனத்தைப் போக்கி, தைரியத்தை வரவழைத்துகொள்... உனக்குள் இருக்கும் திறமைகள் தானாக வெளியேவரும் என்று சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், அந்த கதாநாயகனே மனம் மாறி தன் கைகளில் கட்டியிருந்த சாமிக்கயிறுகளை கழற்றி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் ''மலத்தொட்டியில்'' போடுவது போல் காட்டியிருப்பதும் மூடநம்பிக்கைக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த விஷயத்தில் இயக்குனரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது.
மேலே ''நண்பன்'' படத்தில் உள்ள நிறைகள் சிலவற்றைத்தான் சொல்லியிருக்கிறேன். படத்திலுள்ள குறை என்று கேட்டால் சிலது இருக்கிறது.
படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, படிப்பே வராத தன் எஜமான் வீட்டு பையனுக்காக அவன் பெயரில் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று பட்டம் வாங்கி அவனிடம் கொடுத்து, அந்த பையனை பட்டதாரியாக ஆக்கியிருப்பது என்பது ''ஆள்மாறாட்டத்தை'' அல்லவா குறிக்கிறது...? அதேப்போல் தன் நண்பன் ஜீவா தேர்வில் பாஸ்பண்ண வேண்டும் என்பதற்காக பிரின்சிபால் அறையை திருட்டுச் சாவி போட்டு திறந்து, உள்ளே சீல் வைத்து வைக்கப்பட்டிருக்கும் வினாத்தாளை எடுத்து வந்து ஜீவாவிடம் கொடுப்பது என்பது கள்ளத்தனம் அல்லவா...? எவ்வளவோ நல்ல கருத்துக்களை உதிர்க்கும் கதாநாயகன் விஜய், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதாக காட்டியிருப்பது என்பது நெருடலாக இருக்கிறது.
தமிழ்நாட்டுப் பெண்கள் கருப்பாக - குண்டாக - குள்ளமாக இருப்பது போன்ற கேலியான சித்தரிப்பை இயக்குனர் சங்கர் வரும் காலங்களில் தூக்கி எறியவேண்டும். இது போன்ற செயல்களும் ஒரு சமூக குற்றம் தான் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.
கடைசியா ஒன்னேஒன்னு சொல்லிபுடுறேங்க.... அந்த கதாநாயகியா வர்றாங்களே இலியானா... ஒல்லியானான்னு வெச்சிருக்கலாம்... அம்புட்டு கோடி பணத்தைப் போட்டு இந்த படத்தை எடுத்ததா சொல்லுறாங்களே....இந்த டைரக்கேட்டருனால.... அந்தம்மாவுக்கு சரியான சாப்பாடு போட முடியலையாக்கும்... அது மட்டுமில்லைங்க... பாட்டு சீன்ல கூட இலியானாவுக்கும், அவங்க கூட ஆடுற பொண்ணுங்களுக்கும் கூடவா முழு டிரஸ் வாங்கிக்கொடுக்க காசு இல்ல... ஆம்புளைங்கல்லாம் மூணு நாலு டிரஸ் போட்டு ஒடம்பு பூரா மறைச்சிகீறாங்க... பாவமுங்க இந்த பொம்பளை புள்ளைங்க ரெண்டே பீசை போட்டு ஆடுதுங்க... எவ்வளவோ செலவு பண்றீங்க...அவங்க ஒடம்ப மறைக்கிறதுக்கு நல்ல டிரஸ் - ஆ வாங்கிக்கொடுங்க அய்யா... அவங்க உடம்பையும் காசாக்கிற வேலையை விட்டுடுங்க அய்யா...
2 கருத்துகள்:
ராம்ஜி அவர்களே! உங்கள் ஊர் அமைச்சர் பத்தாப்பு படிப்புக்கே ஆள அனுப்பினார்.சண்டாளங்க இன்னும் அவரை உள்ள அனுப்பாம இருக்காங்களே ஐயா! ---காஸ்யபன்
கல்வி வியாபாரத்தை பற்றி புத்தக வியாபாரி "சேத்தன் பகத்" எழுதிய நாவல்.....இதில் ஒளிந்திருக்கும் வியாபார அரசியலையும் தெரிந்து கொள்வோம்...
கருத்துரையிடுக