வியாழன், 20 பிப்ரவரி, 2014

நீதியரசரும், முதலமைச்சரும் உயர்ந்து நிற்கிறார்கள்...!

            


             முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலையாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டு நீண்ட ஆண்டுகளாக தங்களுக்கு யாரிடமிருந்தும் கருணைக் கிடைக்காமல் மரணதண்டனையை எதிர் நோக்கி காத்திருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் போன்றோருக்கும், மரணதண்டனையை எதிர்க்கும் மனிதநேயம்  கொண்டோருக்கும் நீதியரசர் சதாசிவம் அவர்கள் தலைமையிலான உச்சநீதிமன்ற பென்ச் நேற்று முன் தினம் அளித்த தீர்ப்பு என்பது நிம்மதி பெருமூச்சை அளித்திருக்கிறது. கருணைமனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் 23 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அந்த மூன்று பேர்களின் மரணதண்டனையை ஆயுள்தண்டனையாய் குறைத்து நீதியரசர் தீர்ப்பு வழங்கினார்.
              மனிதம் வாழ - மானுடம் தழைக்க நீதியரசர் சதாசிவம் அவர்கள் அளித்த தீர்ப்பின் மூலம் சட்டத்தின் நுணுக்கங்களைப் பயன்படுத்தி நீதிதேவதையின் கண்களை மீண்டும் திறந்திருக்கிறார். அதற்காக மீண்டுமொருமுறை நெஞ்சார பாராட்டவேண்டும். அதுமட்டுமல்ல நீதியரசர் குற்றவாளிகளின் தண்டனையை குறைத்ததோடு தீர்ப்பை சுருக்கிக்கொள்ளாமல், அவர்கள் விடுதலைப் பெறுவதற்கான வாய்ப்பையும் கோடிட்டுக்காட்டி, அதை மாநில அரசால் தான் செய்யமுடியும் என்ற ஆலோசனையையும் வழங்கியதன் மூலம் தன்னை ஒரு திறமையான நீதியரசராக மட்டுமல்லாமல் முற்போக்கான மனிதராக உலகத்திற்கு காட்டியிருக்கிறார். அதற்காகவும் அவரை கண்டிப்பாக பாராட்டியாகவேண்டும்.
                  நீதியரசர் சதாசிவம் அவர்கள் உச்சநீதி மன்றத்தில் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய 24மணி நேரத்திற்குள், தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் புதியதொரு வரலாற்றை உருவாக்கினார். கடந்த 2000-ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையிலான திமுக  அரசு எந்த சட்டமன்றத்தில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனையை உறுதி செய்து அப்போதைய மாநில ஆளுநருக்கு  பரிந்துரை செய்ததோ, அதே சட்டமன்றத்தில் நீதியரசர் கொடுத்த துருப்புச்சீட்டைப் பயன்படுத்தி, காலம் தாழ்த்தாமல் தீர்ப்புக்கு மறுநாளே அந்த மூன்று பேருடன் ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் நளினி உட்பட மற்ற நான்கு பேரையும் சேர்த்து ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவை  உறுதியாக அறிவித்த  தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களையும் நெஞ்சார  பாராட்டவேண்டும். அதுமட்டுமல்லாமல், மூன்று நாட்களுக்குள் அந்த ஏழு பேரின் விடுதலைக்கு அனுமதி வழங்காவிட்டால், தமிழக அரசே சட்டப்படி விடுதலை செய்யும் என்று உறுதியாக - அழுத்தமாக பேசியதை பார்த்து உலகமே வியந்து பார்க்கிறது.
               இதன் மூலம், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் இரட்டிப்பு சந்தோசம் தான். தங்களுக்கு கிடைத்த மரணதண்டனை நீக்கப்பட்டது மட்டுமல்லாமல், விடுதலையும் கிடைத்ததில் நிச்சயமாக அவர்களை பொருத்தவரையில் இரட்டிப்பு சந்தோஷமாகத்தான் இருக்கும்.
             அந்த மூவருக்கும் கொடுக்கப்பட்ட மரணதண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியதால் நீதியரசர் சதாசிவம் அவர்களும், ஆயுள் தண்டனைக் கைதிகள் ஏழு பேரையும் விடுதலை செய்து சட்டமன்றத்தில் அறிவித்ததால் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் உயர்ந்து நிற்கிறார்கள். 

கருத்துகள் இல்லை: