இன்று மதியம் தொலைக்காட்சிகளில் எல்லாம் பரபரப்பான செய்தியொன்று ஓடிக்கொண்டிருந்தது. மத்திய அரசு ஊழியர்கள் சம்பந்தமான செய்தி அது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களின் வாக்குகளை குறிவைத்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்காக ஏழாவது ஊதிய கமிஷனை அறிவித்து அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காங்கிரஸ் கட்சிக்காரனுங்க காரணம் இல்லாமல் ஆற்றில் இறங்கமாட்டார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். தேர்தல் நேரத்தில் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு அவர்களது ஓட்டுக்களை ''பொறுக்கும்'' சூழ்ச்சி தான் இது என்பதை அவர்களும் அறிந்து தான் வைத்திருக்கிறார்கள்.
பாராளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருகிற இந்த சூழ்நிலையில் இன்னொரு அதிர்ச்சித் தரும் அறிவிப்பை மத்திய அரசு நாளை வெளியிடவிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஊதிய கமிஷன் பரிந்துரை செய்யும் வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில் ஊதியத்தை உயர்த்தி தருவது என்றும், பணி ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்துவது என்றும் நாளை கூடவிருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஊதியத்தை உயர்த்தித் தருவதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கமுடியாது. ஆனால் அதே சமயம், ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் செயல் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது மட்டுமல்ல. கடுமையாக கண்டிக்கத்தக்கது.
நாட்டில் படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்கள் கோடிக்கணக்கில் அதிகரித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை நியாமாக உருவாக்கித் தருவதில் மத்திய அரசு கவனம் செலுத்தாமல், ஏற்கனவே பணியிலிருப்பவர்களுக்கு மேலும் பணி நீட்டிப்பை அளிப்பது என்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது. தேசத்தின் மீது அக்கறையுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. அதுமட்டுமல்ல. அரசின் இந்த செயல் என்பது மத்திய அரசு தங்களுக்கு எதிரான படித்த- வேலைதேடும் இளைஞர்களின் கோபத்தை அரசு ஊழியர்களுக்கு எதிராக திருப்பிவிடும் செயலாகும்.
எனவே மத்திய அரசு துறைகளிலும், அதன் சார்பு நிறுவனங்களிலும் காலியாக இருக்கும் இலட்சக்கணக்கான இடங்களை நிரப்பி வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைகொடுங்கள். அது தான் இதுவரையில் தவறு மேல் தவறு செய்துவந்த மன்மோகன் அரசு செய்யும் நியாயமான செயலாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு கடைசி காலத்திலாவது ஒரு நல்ல செயலை செய்யட்டுமே பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக