காவி பயங்கரவாதத்தின் இன்னொரு பயங்கரமான உண்மை முகம் சாமியார்
அசீமானந்தாவின் வாக்கு மூலங்களின் வழியே வெளிச்சத்திற்கு
வந்துள்ளது. தற்போது அம்பாலா மத்தியச்சிறையில் இருக்கும் சாமியார்
அசீமானந்தா மீதான குற்றங்கள் என்ன? 18பிப்ரவரி2007-ல் இந்தியாவுக்கும்
பாகிஸ்தானுக்கும் இடையே ஓடும் சம்ஜவுதா விரைவு ரயிலில் வெடிகுண்டு வைத்து
68 உயிர்களை கொன்றது; மே 2007ல் ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில்
வெடிகுண்டு வைத்து 11 உயிர்களை கொன்றது; அக்டோபர் 2007ல் ஆஜ்மீரில் உள்ள
மசூதி ஒன்றில் குண்டுவைத்து 3 பேர் உயிரைப் பறித்தது. இந்தக் குற்றங்களுக்கு
பின்னணியாக இருந்தது மட்டுமல்ல... அதற்கான சதித்திட்டத்தை வகுத்த ''கொடிய
குற்றவாளி'' இந்த காவி சாமியார் அசீமானந்தா. இவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது நடத்திய
சந்திப்புகளின் மூலம் கிடைத்த விபரங்களை, ஆதாரங்களுடன், ‘தி கேரவன்‘ என்கிற ஆங்கில இதழ்
வெளியிட்டுள்ளது.
‘நம்பிக்கையாளர்’ என்று தலைப்பிடப்பட்ட
அக்கட்டுரையில் சாமியார் அசீமானந்தா, தான் சதித்திட்டம் தீட்டியதை
ஒப்புக்கொண்டிருக்கிறார். அத்துடன், தங்கள் சதிச்செயல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்
ஆசீர்வாதம் இருந்தது என்றத் தகவல்களையும் வெளியிட்டிருக்கிறார். தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத்,
கடந்த 2005-ஆம் ஆண்டில், ‘இந்த வன்முறைச் செயலை கண்டிப்பாக செய்யவெண்டும்
என்றும், ஆனால் ஆர்.எஸ்.எஸ் பெயர் சம்பந்தப்படக்கூடாது’ என்றும்
அறிவுறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பது, விரிவாக
வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ’நாங்கள் சம்பந்தப்படாவிட்டாலும், உங்கள்
பக்கம் தான் நிற்கிறோம் என்றும், அந்த செயல் கிரிமினல் குற்றம் ஆகாது
எனவும், நமது கொள்கையுடன் சம்பந்தப்பட்டதாகத்தான் இந்துக்கள் கருதுவார்கள்.
இந்தியா முழுவதும் இந்த வன்முறையைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ்-ன் ஆசீர்வாதம்
உண்டு’ என்று மோகன் பகவத் சொன்னதாக, அசீமானந்தா மிக இயல்பான தனது
உரையாடலில் வெளிப்படுத்தியுள்ளார். அசீமானந்தாவின் கூட்டாளியான சுனில் ஜோஷி
என்பவர் 2007 டிசம்பரில் சந்தேகச் சூழ்நிலையில் இறந்துவிட்டார். அதே
சமயம், தேவையான ஆதாரங்கள் இருந்தும் மோகன் பகவத் இதுவரை சுதந்திரமாகவே
நடமாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யார் இந்த
அசீமானந்தா? அசீமானந்தாவின் இயற்பெயர் நபகுமார் சர்க்கார் என்பதாகும்.
அவரது தந்தை ஒரு காந்தி பக்தர். காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு
எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற தந்தையின் சொல்லை மீறி ஒரு
தீவிர இந்து வெறியனாகத்தான் அசீமானந்தா வளர்ந்திருக்கிறார்.
சிறு வயதில்
ராமகிருஷ்ணா மடத்துடன் இருந்த தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொண்டு,
ஆர்.எஸ்.எஸ் கிளை ஸ்தாபனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இந்து அல்லாதவர்கள்
மீதுகடும் வெறுப்பை வளர்த்துக் கொண்டார். இவர், குண்டு வெடிப்புச் சதித்திட்டங்களை தனது உரையாடலில் எந்தகுற்ற உணர்வும் இல்லாமல்
வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் செய்தி வெளியாகியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ்
வழக்கம் போல் தனக்கும், அசீமானந்தாவுக்கும் எந்த தொடர்புமில்லை என சொல்லத்
தொடங்கியுள்ளது. ஆனால், இதே அசீமானந்தாவுக்கு டிசம்பர் 2005ல் கோல்வால்கர்
விருதை ஆர்.எஸ்.எஸ் வழங்கியது. இதில் பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர்
ஜோஷி கலந்து கொண்டார் என்பதும் நினைவுகூரத்தக்கது. வன்முறையும்,
பயங்கரவாதமும் குஜராத்தின் தென்பகுதியில் கிழக்கும் மேற்கும் மஹாராஷ்டிர
மாநிலம் எல்லையாக அமைந்துள்ள மிகச்சிறு பிரதேசம் ‘டாங்ஸ்’. அங்கு வாழும் 2
லட்சம் மக்கட்தொகையில் 73சதவீதம் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். 93
சதவீதம் ஆதிவாசியினர். கிறிஸ்துவ பாதிரிமார்கள் இங்கு பணியாற்றிவந்தனர்.
அசீமானந்தா
இந்த இடத்தை தன் மைய வேலைப்பகுதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவசரகால
நிலைக்குப் பின்னர் வங்காளத்திலும் வடகிழக்கு பகுதியிலும் பணியாற்றவே
ஆர்எஸ்எஸ்-ஆல் தோற்றுவிக்கப்பட்ட ‘வனவாசி கல்யாண் ஆசிரமம்’ என்ற ஸ்தாபனம்
அசீமானந்தாவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்தது. டாங்ஸ் பகுதியில்
அமைதியின்மையும், வன்முறையும் ஒரு சேர, அசீமானந்தா 1998ல் அங்கு சென்ற பின்
தலைதூக்க ஆரம்பித்தன. அது, மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கு
பெரும் தலைவலியாக மாறியது. முதலமைச்சராக இருந்த கேஷூபாய் படேலை கூப்பிட்டு
அசீமான்ந்தாவை கட்டுக்குள் கொண்டுவர பணிக்கும் அளவுக்கு நிலைமை
சென்றது. இச்சமயத்தில், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்றில் அசீமானந்தாவை
சந்தித்த நரேந்திர மோடி, “சுவாமிஜி, நீங்கள் செய்யும் வேலைக்கு ஈடு
இணைகிடையாது. நீங்கள் சரியான வேலையை செய்கிறீர்கள். நான் தான்
முதலமைச்சராகப் போகிறேன். வந்த பிறகு உங்கள் வேலையை நான் பார்த்துக்
கொள்கிறேன். அமைதியாக இருங்கள்” என்று கூறியுள்ளார். அக்டோபர் 2001ல் மோடி
முதலமைச்சரான பின்னர், கோத்ரா சம்பவத்தை காரணமாக வைத்து ஆயிரக்கணக்கான
முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். டாங்ஸ் பகுதிக்கு வடக்கில் உள்ள
பஞ்ச்மஹால் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தொழிக்கும் வேலைக்கு
நான் தலைமை தாங்கினேன் என்று அசீமானந்தா பெருமையுடன் தனது பேட்டியில்
கூறியுள்ளார். அசீமானந்தாவின் பிடியை பலப்படுத்த மோடி, 2002ல் டாங்ஸ்க்கு
விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது.
டாங்ஸ் பகுதி இப்போது
ஆர்.எஸ்.எஸ்-ன் முழுக்கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. டாங்ஸ் பரிசோதனையின்
வெற்றி, அசீமானந்தாவுக்கு மட்டுமல்ல மோடிக்கும் இந்துத்துவா அரசியலுக்கு
புதுவடிவம் கொடுக்கும் முயற்சிக்கு உந்து சக்தியாக திகழ்ந்தது. இதற்கு
பின்னர் தான் சம்ஜவுதா விரைவு ரயில், ஆஜ்மீர், மாலேகாவ், ஹைதராபாத்,
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுவெடிப்பு
நிகழ்த்த பயங்கரவாத சதித்திட்டங்கள் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில்
தீட்டப்பட்டன. இவை அனைத்தையும் அசீமானந்தா தனது பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எப்படியும் மறுப்பார்கள் என்று தெரிந்தே உரையாடல்
டேப்புகளையும் கையோடு வெளியிட்டுள்ளது ‘தி கேரவன்‘ ஏடு!
(‘மாற்று’ இணைய
இதழில் வந்த விபரங்களுடன்)
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக