செவ்வாய், 8 மே, 2012

இந்தியாவை வட்டமிடுகிறது அமெரிக்க கழுகு....!

இந்திய உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு....  
   
           அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பல்வேறு திட்டங்களை 
எடுத்துக்கொண்டு இந்தியாவிற்கு பறந்து வந்திருக்கிறார். அதுவும் வந்தவர் நேரிடையாக தலைநகரில் இறங்கவில்லை. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 
கட்சியின் தலைமையிலான இடதுசாரி அரசை சகித்துக்கொள்ள முடியாத அமெரிக்க 
''பிணந்திண்ணி கழுகு'',  தாங்கள் செய்த பல்வேறு  மகாசதிவேலைகளால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை நேரில் காண ஹிலாரி கிளிண்டன் 
நேரிடையாக கொல்கத்தாவிற்கு வந்து  இறங்கினார். அதுமட்டுமல்ல மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை பாராட்டிப் பாராட்டி புளகாங்கிதம் அடைந்தார்.
                  மம்தாவோ வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறார். எசமானியம்மா மம்தாவை தூக்கி வைத்து அம்புட்டு பாராட்டிட்டாங்கலாம். அம்மணியை பிடிக்கவே முடியலைங்க. மம்தா அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை எல்லாம் கேட்டு ஹிலாரி கிளிண்டன் மம்தாவை பாராட்டிப் பூரித்துப் போய்ட்டாங்களாம். மேற்கு வங்க நூலகங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிகைகள் வாங்க தடை, பள்ளிப் பாடப் புத்தகங்களில் காரல் மார்க்ஸ் - எங்கெல்ஸ் சம்பந்தப்பட்ட பாடங்கள் நீக்கம், கேலிச்சித்திரம் வெளியிட்ட கல்லூரிப் பேராசிரியருக்கு சிறை தண்டனை, இடதுமுன்னணி அரசு வழங்கிய நிலங்கள் ஏழைகளிடமிருந்து பறிப்பு போன்ற மம்தா ஆட்சியின் சாதனைகளை பார்த்து பூரிப்படைந்து ஹிலாரி கிளிண்டன் மம்தாவின் மீது பாராட்டு மழையாக  பொழிந்திருக்கிறார். அதற்கு பரிசாக ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க முதலீடுகளை வாரி வழங்கியிருக்கிறார். 
                 இது ஒரு பக்கம் நடந்தாலும், இன்னொரு பக்கம் இப்படி மம்தாவை பாராட்டுவதன்  மூலம் அவரை வசியம் பண்ணும் வேலையும் நடந்தது. மம்தா தான் அரசியல் பிழைப்பை நடத்த அவ்வப்போது ''இடதுசாரி'' முகமூடியை போட்டுக்கொண்டு நாடகமாட வேண்டியிருக்கிறது. அதன் காரணமாகத்தான்,  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை நுழைக்க மத்திய அரசு முயற்சிக்கும் போதெல்லாம் அதற்கு எதிர்ப்பு காட்டிவந்தார். அதனால் ஹிலாரி கிளிண்டன் மம்தா அக்காவிடம் இதற்கு எதிர்ப்பு காட்ட வேண்டாம் என்று
தாஜா பண்ணியிருக்கிறார். 
                மம்தாவின் மேற்கு வங்க  அரசு ஹிலாரி கிளிண்டனை பாசத்தோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்கும் பொருட்டு,  ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலக 
கட்டடங்கள் அனைத்தும் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்பதையும் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.
           அதுமட்டுமல்ல, இந்தியா - வங்கதேசம் சம்பந்தப்பட்ட தீஸ்டா நதிநீர்ப் பிரச்சனை பற்றியும் ஹிலாரி கிளிண்டன் மம்தாவிடம் பேசியிருக்கிறார் என்பதும் இங்கே 
குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவின் ''பெரியண்ணன்'' தனத்தை தான்  காட்டுகிறது. இது போன்ற உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்ததால், ஹிலாரி கிளிண்டன் அப்படி எதையும் பேசவில்லை என்று பம்மியிருக்கிறார். 
              பிறகு தலைநகருக்கு பரந்த அமெரிக்க கழுகு ஹிலாரி கிளிண்டன், அங்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உட்பட பிரதமர் மன்மோகன் சிங் 
மற்றும் மத்திய அமைச்சர்களை  சந்தித்திருக்கிறார். ஈரான் நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் நிர்பந்தம் செய்திருக்கிறார். ஏற்கெனவே அமெரிக்காவின் இதுபோன்ற  நிர்ப்பந்தம் காரணமாகவே  ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக் கொண்டுள்ளது என்பதையும்,   ஈரானுடனான குழாய் வழி எரிவாயு திட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளது என்பதையும் யாரும் மறந்துவிடமுடியாது. 
                 இந்திய நாட்டின் பொருளாதார ரீதியான பாதிப்புகளை உருவாக்கும் அமெரிக்காவின்  இது போன்ற தலையீடுகளையும், நிரபந்தங்களையும் இந்திய குடிமக்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்கவேண்டும். அமெரிக்காவின் இதுபோன்ற நிர்பந்தங்களுக்கு  எஜமான விசுவாசத்தோடு ஆட்சியாளர்கள் அடிபணிந்தால் எதிர்காலத்தில் இந்திய மக்களின் வாழ்வாதாரம் என்பது 
கேள்விக்குறியாகிவிடும்.

கருத்துகள் இல்லை: