திங்கள், 28 மே, 2012

சிம்லாவில் புதிய வரலாறு படைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...!

              நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிம்லா மாநகராட்சிக்கான  மேயர் மற்றும் துணைமேயர் பதவிக்கான நேரடித் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர். சஞ்சய் சௌஹான் மேயராகவும், தோழர். திகந்தர் பன்வார் துணை மேயராகவும் அதிக வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.   கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தன் கை வசம் வைத்திருந்த சிம்லா மாநகராட்சியை காங்கிரஸ் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியிடம் இழந்திருக்கிறது என்பதையும்,  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பதையும் இந்திய மக்கள்  கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அம்மாநில ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய பாரதீய ஜனதா கட்சிக் கூட இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.              மேலும் மேயரையும், துணைமேயரையும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் தேர்தல் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் ஹிந்தி மொழி பேசும் பகுதியில் வாழும் மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மாநகராட்சியின் ஆட்சி அதிகார பொறுப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்றால் இது அம்மாநில  மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. 
           வேட்புமனு தாக்கல் செய்தது முதல் கடைசி நாள் பிரச்சாரம் வரை சிம்லா மக்கள் 
காட்டிய ஆர்வமும் உற்சாகமும் வெற்றியை பறை சாற்றியது என்ற சொல்லலாம். இந்த 
வெற்றியின்  மூலம்   சிம்லா மாநகராட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது. ஊழலும், சந்தர்ப்பவாதமும், தேசத்துரோகமும் நிறைந்த காங்கிரஸ் கட்சியையும், பாரதீய ஜனதா கட்சியையும் மக்கள் தூக்கி எறிய  தொடங்கிவிட்டார்கள்  என்பதை தான் இந்த தேர்தல் வெற்றி சிறப்பாக காட்டுகிறது. 
              மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றியை தந்த சிம்லா மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: