2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தான் குற்றவாளி என்றால் அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், பிரதமர் மன மோகன் சிங்கும் குற்றவாளிகளே என திஹார் சிறையிலிருக்கும் ஆ.ராசா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் சூழ்நிலையில், இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு, பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய நிதிஅமைச்சகம் அனுப்பிய முக்கிய கடிதம் ஒன்றில், 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அளிக்கப்பட்ட போது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை 2001ம் ஆண்டு கட்டண விகிதத்திலேயே அளிப்பதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தாலும், அதற்குப் பதிலாக ஏல முறையிலேயே உரிமம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாலும் இந்த ஊழலே நடந்திருக்காது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக்கடிதம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து உலகமே பார்த்தது. இந்தக் கடிதம், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் சிதம்பரத்தை பாதுகாக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் முயற்சிகள் மேற்கொண்டனர். அதனால் இந்தக் கடிதம் வெளிவர மூலக்காரணமாக இருந்த இப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், ப. சிதம்பரத்தையும் சமாதானப்படுத்தி சமரசம் செய்துவைத்தனர். அதனால், ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அளிக்கும் விவகாரத்தில் எதேச்சதிகாரமான முறையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கடிதம் தொடர்பாக ஏற்கெனவே விளக்கமளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி - இந்தக்கருத்தானது, பல்வேறு அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டே பிர தமருக்கு அனுப்பப்பட்டது என்பதை ஒப்புக்கொண்ட பிரணாப் முகர்ஜி இறுதியில் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி தலையீட்டினால் சிதம்பரத்தொடு சமாதானம் ஆனார். இருவரும் ஜோடியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது என்பது ஒரு கேலிக்கூத்தாகும்.
சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பு குறித்து மேற்படி கடிதத்தில் இடம்பெற்றிருந்த விபரங்களுக்கு நிதியமைச்சர் என்ற முறையில் தான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று புது விளக்கம் ஒன்றையும் சென்ற வியாழனன்று அளித்தார். தனது அமைச்சரவை சகாவான சிதம்பரத்தை பாதுகாக்கும் நோக்கில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புதிய விளக்கம் ஒன்றை அளித்தார். இது பிரணாப் முகர்ஜியின் பரிதாப நிலையை தான் காட்டியது.
பிரணாப் முகர்ஜி விளக்கமளித்ததைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனை முடிந்துவிட்டது என்று உடனே சிதம்பரம் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்தார். ஆனால் பிரச்சனை இன்னும் முடிந்துவிடவில்லை... 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீடு செய்வதில் அரசுக்கு பேரிழப்பு ஏற்படுத்திய ஒரு நடை முறையை செயல்படுத்தியதில் அவருக்கு நேரடியாக தொடர்பும் பங்கும் இருக்கிறது என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக