சனி, 1 அக்டோபர், 2011

என்னாங்கடா டேய்.... கிண்டலா பண்றீங்க..?

                மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒவ்வொரு மாதமும் புதுதில்லியில் சம்பிரதாயமாக செய்தியாளர்களை சந்தித்து தனது துறை சார்ந்த விபரங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கமாய் வைத்துள்ளார்.  தனது துறையின் செயல்பாடு, எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்கள் கூட்டத்தை சிதம்பரம் கூட்டினாலும் அவரது துறை சாராத கேள்விகளை அவரிடம் செய்தியாளர்கள் எப்போதும் கேட்காமல் விடுவதில்லை.
                   இதேப்போல் நேற்றும் - வெள்ளிக்கிழமையும் வழக்கம்போல் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருக்கும்   சூழல்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதனால் இந்தச் சந்திப்பின் போது பெரும்பாலும் 2ஜி சார்ந்த கேள்விகளையே செய்தியாளர்கள் எழுப்பினார்கள்.
                 2ஜி சம்பந்தப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும், '' எனக்கு ஞாபகம் இல்லை''.. ''எனக்கு ஞாபக மறதி உண்டு''.. போன்ற பதில்களையே அவர் திரும்பத் திரும்ப சளைக்காமல் பதில் சொல்லியிருக்கிறார். குற்றவாளிகள் தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகள் தான் இவைகள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஊழல் செய்து மாட்டிக்கொண்ட ஒரு அமைச்சர் இப்படி பேசுவது என்பது நாட்டு மக்கள் அனைவரையும் ''கேனைப்பசங்கன்னு'' நெனைச்சி கொழுப்பாக பேசியதாகத் தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். 
                     இதற்கு முன்பு கூட, காமன்வெல்த் விளையாட்டில் பல ஆயிரம் கோடிகளை சுருட்டி திஹார் சிறையிலிருக்கும் சுரேஷ் கல்மாடி கூட செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் ''எனக்கு மறதி நோய் இருக்கிறது'' என்று மத்திய புலனாய்வுத் துறையிடம் கூசாமல் பொய் சொன்னதையும் இங்கே பொருத்திப் பார்க்கவேண்டியிக்கிறது.
                 அதுமட்டுமல்ல, ஒரு மந்திரி, ''எனக்கு ஞாபக மறதி இருக்கிறது'' என்று சொன்னால் அவர் எப்படி தொடர்ந்து மந்திரியாக நீடிக்கமுடியும்..?  என்பது தான் மக்களின் கேள்வியாகும்.
                 சிதம்பரத்திற்கு இப்படி ஞாபக மறதி உண்டென்றால், மன்மோகன் சிங்கையும், சோனியாவையும் அல்லவா எதிர்காலத்தில் மறந்துவிடுவார்.
              ஞாபக மறதி என்று சொல்லி, செய்த குற்றத்திற்காக தண்டனைப் பெறாமல் தப்பிக்க முடியாது மிஸ்டர் சிதம்பரம்...!

கருத்துகள் இல்லை: