மம்தா பானர்ஜியின் பொய்களும் புனை சுருட்டுகளும் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழுகின்றன. அவரது நிஜமுகத்தை மேற்குவங்க மக்கள் பார்க்கத் துவங்கியிருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி ஆட்சி நடந்தபோது, மாவோயிஸ்டுகள் என்று தங்களை கூறிக்கொள்ளும் கொலைகாரக் கூட்டத்துக்கு இவர் அரசியல் புகலிடம் அளித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் என்று யாருமே இல்லை. மார்க்சிஸ்டுகள்தான் அட்டூழியம் செய்கிறார்கள் என்று கொஞ்சம் கூட நா நடுங்காமல் பேசினார். ஆனால் இன்றைக்கு இவர் முதலமைச்சரான பின்பு மாவோயிஸ்டுகளை கொலைகாரர்கள் என்றும், வன மாபியாக்கள் என்றும் வசைபாடத் துவங்கியிருக்கிறார். ஒருவார காலத்திற்குள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் விளைவு விபரீதமாகயிருக்கும் என்று கர்ஜிக்கிறார். மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளே இல்லை என்று பேசிய வாய்தான், இன்று கெடு விதிக்கிறது. ஆட்சியைப் பிடிப்பதற்காக மாவோயிஸ்டுகளை இவர் பயன்படுத்திக் கொண்டார். சிங்கூர், நந்திகிராமம் ஆகிய இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ்காரர்களும் மாவோயிஸ்டுகளும் சேர்ந்து கூட்டாகக் கலகம் செய்தனர். இடது முன்னணி அரசு, மாவோயிஸ்டுகளை சமாளிக்க கூடுதலாக மத்திய அரசிடமிருந்து படைஅனுப்பக் கேட்டபோது, அதை ஆட்சேபித்தவர் மம்தா. ரயிலை கவிழ்த்து மாவோயிஸ்டுகள் அட்டூழியம் செய்தபோது கூட, இதற்குக் காரணம் மாவோயிஸ்டுகள் அல்ல என்று நற்சான்றிதழ் வழங்கியவர் இவர். மம்தாவின் நோக்கம் நிறைவேறிவிட்டது. மம்தா கட்சியினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. மம்தா கட்சியினரையும் மாவோயிஸ்டுகள் கொலை செய்கின்றனர். இதனால் வேறு வழியின்றி கெடுவிதிக்கும் நிலைக்கு மம்தா தள்ளப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை தேசத்தின் பிரச்சனையாகக் கருதாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதாக கருதி, அவர்களுக்கு ஆயுத உதவி, பண உதவி உட்பட ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா, இன்றைக்கு அவர்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். இப்போது என்ன செய்யப்போகிறார் மம்தா பானர்ஜி? ஏற்கனவே நான் கூறியது பொய். மாவோயிஸ்டுகள் மேற்குவங்கத்தில் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கும் அரசியல் நேர்மை இவரிடம் உண்டா? மாற்றம் என்ற வார்த்தையை இவர் உச்சரித்தபோது, பின்பாட்டு பாடிய கார்ப்பரேட் ஊடகங்கள் இப்போது என்ன செய்யப் போகின்றன? மம்தா கூறியுள்ளபடி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லையென்றால், இவர் எடுக்கப் போகிற நடவடிக்கை என்ன? விடை தெரிய வேண்டிய கேள்விகள் இவை. குறுகிய அரசியல் நலனுக்காக பயங்கரவாதத்தை வளர்த்துவிடுவது பெரும் ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்திய வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. இப்போது அந்தப் பட்டியலில் மேற்குவங்க அனுபவமும் சேர்ந்துள்ளது. நன்றி : தீக்கதிர் |
புதன், 19 அக்டோபர், 2011
மம்தா பானர்ஜி - மாவோயிஸ்டுகள் தேன் நிலவு கசந்துவிட்டது - இப்போது என்ன செய்யப்போகிறார் மம்தா ?
லேபிள்கள்:
மம்தா பானர்ஜி,
மாவோயிஸ்டுகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக