பதற வைக்கும் பரமக்குடி காட்சிகள்
வேனுக்குள் துடித்த முத்துக்குமாரின் உயிர்..
தமிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம். அதில் நிகழ்ந்த மரணங்கள், கேள்விப்படுகிறவரின் கண்களில் ரத்தம் கசிய வைப்பவை. இறந்துபோன சிலரது உறவுகளையும் சுற்றத்தாரையும் சந்தித்தோம்.
அந்தப் பெண் நிலை குத்திய பார்வையோடு உட்கார்ந்து இருக்க... கையில் வளைகாப்பு நடந்த அடையாளமாகக் கண்ணாடி வளையல்கள். இன்னோர் உயிரையும் சுமந்துகொண்டு இருக்கிறாள். ஆனால், அந்த உயிரைத் தந்த ஜெயபால் உயிரைக் காவல் துறை பறித்துவிட்டது. அவள் பெயர் காயத்ரி. திருமணமாகி ஓர் ஆண்டுதான் ஆகிறது. கலப்பு மணம் புரிந்த தம்பதி. பரமக்குடி - ராமநாதபுரம் சாலையில் உள்ள மஞ்ஞூரில் உள்ளது அவர்கள் வீடு. நிறைமாதக் கர்ப்பிணியாதலால் பரமக் குடியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்ட மனைவியைப் பார்க்க பரமக்குடிக்கு வந்த ஜெயபாலுக்குதான் பரிசாகக் கிடைத்தது, துப்பாக்கிக் குண்டு!
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உணமை அறியும் குழுவில் ஒருவராக, ஜெயபாலின் உறவினர்களை சந்தித்தோம்.
''எம் புள்ள அந்த போஸ்ட் மரத்துல பாதி இருப்பான். ஆயுதம் இல்லாம வந்தா, பத்து கான்ஸ்டபிள்னாலும் சமாளிப்பான். பாவிக, அவனைத் துப்பாக்கியால சுட்டு... அப்படியும் சாகலைன்னு, மிதிச்சுக் கொன்னுருக்காங்க. என் புள்ளய சாக் கடையில தூக்கிப் போடப்போனப்பத்தான் 'ஏன்டா இப்புடி பண்றீங்க?’ன்னு ஒருத்தர் கேட்டிருக்கார். அந்த வயசானவரையும் கொன்னுட்டாங்க...'' என்று அரற்றுகிறார் ஜெயபாலின் அப்பா பாண்டி.
''நான் ஒரு பழ வியாபாரிங்க. என் பொண்ணை ஸ்கூலுக்குப் போகையில பார்த்துட்டு, என்கிட்ட வந்து 'கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு கேட்டுச்சு. மொதல்ல முடியாதுன்னேன். அந்தப் புள்ள என் பொண்ணு மேல ரொம்ப ஈர்ப்பா இருந்ததைப் பார்த்துட்டு, 'வேற சாதின்னாலும் பரவால்ல’ன்னு ஒப்புக்கிட்டுக் கல்யாணம் பண்ணிவெச்சேன். என் பொண்ண நல்லா வெச்சுக்குச்சு. ஆனா, இப்படி அல்பாயுசுல அநியாயமாப் போகும்னு யாரு நெனச்சா!'' என்று கலங்கினார் காயத்ரியின் தாய்.
இத்தனை பேர் பேசினாலும், காயத்ரி மட்டும் எதுவும் பேசவில்லை. பள்ளியில் படிக்கும்போது தடகள விளையாட்டு வீராங்கனை! ''அரசு கொடுத்த ஒரு லட்சம் ரூபாயைவைத்துக்கொண்டு இந்தப் பெண் எத்தனை நாளைக்குக் காலம் தள்ள முடியும்? அரசு வேலை ஏதாவது கிடைக்காதா..?'' என்பது ஜெயபால் தரப்பின் கோரிக்கையாக இருக்கிறது.
ஜெயபால், புதிய தமிழகம் கட்சியின் உறுப்பினராக இருந்தாலும், தீவிரமாக அரசியலில் ஈடுபடு பவர் கிடையாது. 'பரமக்குடி சென்றவரைக் காணவில்லை’ என்று அவரது செல்போனுக்குத் தொடர்புகொண்டபோது, ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. குடும்பமே தவித்து நின்றிருக்கிறது. காலையில் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்து, விஷயத்தைத் தெரிந்துகொண்டவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஓட, மாலை 5.30 மணி வரை முகத்தைப் பார்க்கவிடாமல் காவல் துறை அலைக்கழித்திருக்கிறது.
ஒரே பிள்ளையைப் பறிகொடுத்த ஜெயபாலின் தாய், எதுவுமே பேசாமல் வெறித்தபடி இருந்தார். இது மஞ்ஞூரில் நடந்த கதை. கனத்த மனதோடு, அடுத்த கிராமமான காக்கனேந்தல் போனோம். அங்கே இருந்து ஒரு திருமணத்துக்குச் சென்றவர், பிணமாய்த் திரும்பி வந்த சோகத்தை சுமந்துகொண்டு இருந்தது அந்த கிராமம்.
நண்பர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்ற வெள்ளைச்சாமியும் சின்னாளும் பரமக்குடிக்கு வரும்போது துப்பாக்கி சூடு நடக்கிறது. மறுநாள் காலை வரை இவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. வெள்ளைச்சாமியின் பெயர் மட்டும் தொலைக்காட்சியில் இறந்தவர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட, சின்னாளின் கதி என்ன என்று கிராமமே தேடுகிறது. அவரும் இறந்துவிட்டதாக முடிவு செய்து குடும்பத்தினர் அழுதுகொண்டு இருந்த போது... பரமக்குடியில் இருந்து 25 கி.மீ. தூரம் நடந்தே தனது கிராமத்துக்கு வந்த 65 வயது சின்னாளைக் கண்டதும், கிராமமே சூழ்ந்துகொள்கிறது.
என்ன நடந்தது என்று சின்னாளிடம் கேட்டோம். ''ரெண்டு பேரும் பரமக்குடி வந்தப்போ, சாலை மறியல் நடந்துது. நாங்க அங்கே என்னன்னு புரியாமப் பார்த் துட்டே போனோம். எனக்கு பத்தடி முன்னால வெள்ளைச்சாமி போக... நான் பின்னால போனேன். திடீர்னு நான் பார்த்துக்கிட்டு இருக்குறப்பவே பெரிய கம்பால போலீஸ் அவரை அடிச்சுது. உடம்புல ஒரு இடம் விடலை. அத்தனை அடி..! நான் பயந்து போய் வாயடைச்சு நிக்க... என் காலிலும் போலீஸ் அடிச்சுது. நான் உடனே தலைதெறிக்க ஓடி, பக்கத்துல உள்ள கோயில் பக்கம் ஒளிஞ்சு நின்னு பார்த்தேன்.
வெள்ளைச்சாமியை ஆத்திரம் தீர்ற வரைக்கும் அடிச்சாங்க. வெள்ளைச்சாமியைத் துப்பாக்கியால சுடலை. அடிச்சேதான் கொன்னாங்க. என் கண்ணாலயே பார்த்தேன். அப்புறம் போலீஸே தூக்கிட்டுப் போய் ஒரு வண்டியில ஏத்துச்சு. நான் வெளிய வரப் போனேன். அப்போ அங்கே பக்கத்து வீட்டுல இருந்த ஒரு பொம்பளைப் புள்ள, 'அங்கே போகாதீங்க. உங்களையும் அடிச்சே கொன்னுடுவாங்க’ன்னு அவுங்க வீட்டுக்குள்ள கூப்பிட்டு வெச்சுருந்துச்சி. அந்தப் புள்ள இல்லேன்னா, நானும் அப்பவே செத்திருப்பேன். பஸ் ஓடலைங்கறதால மறுநாள் நடந்தே ஊருக்கு வந்தேன்...'' என்றார் திகிலாக.
அடுத்து இன்னொரு கிராமத்தின் துயரம் இது. காக்கனேந்தலில் இருந்து நயினார் கோவில் போகும் வழியில் இடதுபுறச் சாலையில் இருக்கிறது பல்லவராயனேந்தல். அங்கிருந்து தன் மகன் திருமணத்துக்கு, 11-ம் தேதி பரமக்குடியில் உள்ளவர்களுக்குப் பத்திரிகை வைக்கச் சென்றார் கணேசன். போன இடத்தில் துப்பாக்கி சூட்டுக்குப் பயந்து ஓடிய அவரது நெஞ்சுப் பகுதிக்குக் கீழே குண்டு பாய்ந்து இறந்துபோனார்.
அவர் குடும்பத்தார் நம்மிடம், ''அவர் இறந் தாலும் அந்த சோகத்தி லும், கல்யாணத்தை முடிச் சிட்டோம். நின்னுருச்சின்னா அந்தப் பொண்ணுக்கு மறுபடியும் கல்யாணங்கிறது கனவாப் போயிருமே... அவர் இருந்து நடத்திவெச்சிருக்க வேண்டிய கல்யாணம் இது. ஆனா...'' என்று மேற்கொண்டும் பேச முடியாமல் அழுதனர்.
அடுத்த உயிர்ப் பலி... வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர். தன் மகளைப் பார்ப்பதற்காக பரமக்குடி வந்த பன்னீர், செப்டம்பர் 11-ம் தேதி காலை 11.30 மணிக்கு தன் மகள் ரெபெய்க்காளிடம், ''இங்க பதற்றமா இருக்கு. கவலைப்படாதே! வந்துடுறேன்...'' என்றிருக்கிறார். ஆனால், அதன் பின் கொஞ்சநேரத்தில் செல்போன் அணைந்து போக... தந்தையைக் காணாமல் இவர் தேட... இரவு 7.30 மணிவாக்கில் மீண்டும் செல்போன் ஆன் செய்யப்பட்டு... போலீஸ்காரர் ஒருவர்தான் பன்னீரின் பெயர், ஊர் என்று எல்லா விவரங்களையும் அவரது மகளிடம் கேட்டிருக்கிறார்.
ரெபெய்க்காள் நம்மிடம், ''எல்லா விவரத்தையும் கேட்டுட்டு, அப்பா இறந்த சேதியைக்கூட போலீஸ் சொல்லலை. அப்பாவின் நெற்றியில் குண்டு பாய்ந்த காயம் இருந்தது.. உடல் பூராவும் லத்தியால் அடிச்ச காயங்களும் இருந்துச்சு...'' என்று கேவினார்.
சடையனேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரும் இந்த சம்பவத்தில் உயிர்விட்டவர். இவரது உடலைக் காட்டுகிறேன் என்று சிவகங்கை, இளையான்குடி, ராமநாதபுரம், மதுரை என்று குடும்பத்தினரை இழுத்தடித்திருக்கிறது போலீஸ். 11-ம் தேதி இம்மானுவேல் குருபூஜையில் கலந்துகொள்ள பரமக்குடி சென்றார் முத்துக்குமார். இவருடைய வலது பக்க விலாவில் குண்டு பாய்ந்து... போலீஸ் அவரை இளையான்குடி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அப்போதும் அவருக்கு உயிர் இருந்திருக்கிறது. முதலுதவி செய்யப்பட்டு மதுரைக்கு மாற்றப்பட்டார். அங்கே இரவு 9.30 மணி வரை உயிருடன் இருந்தவர், அதன் பின்தான் இறந்திருக்கிறார்.
அடுத்ததாக இறந்துபோன தீர்ப்புகனி, கீழக்கொடும்பளூரைச் சேர்ந்தவர். பரமக்குடிக்கு காலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர், துப்பாக்கிச் சூடு நடப்பதைப் பார்த்தவுடன் அப்படியே தனது வாகனத்தை அங்கேயே ஓர் இடத்தில் விட்டுவிட்டுக் கிளம்பி இருக்கிறார். நிலைமை ஓரளவு சரியானது போல் தெரிந்து, மாலை 4 மணிக்கு தன் வாகனத்தை எடுக்க வந்தவரைப் பிடித்துக்கொண்டது போலீஸ். அவரை அடித்து இழுத்துப் போனதைப் பார்த்ததாக அவருடைய பெரியப்பா எஸ்.பி.முனியாண்டி நம்மிடம் சொன்னார்.
''கை ரெண்டையும் பின்னாடி கட்டிவெச் சுட்டு, லத்தியால அடிச்சுக்கிட்டே போலீஸ் வண்டியில அவனை ஏத்துனதை நான் பார்த்தேன். அப்புறம் ஒரு தகவலும் இல்ல. மதுரையில் தீர்ப்புகனி உடல் இருப்பதாத் தகவல் தெரிஞ்சு போய்ப் பார்த்தப்போ, அவன் உடம்புல இருந்த துணி எல்லாம் காணோம். அவனோட பனியனை மட்டும் இடுப்பில் சுத்தியிருந்தாங்க. மண்டையில் அடிச்சு, பின்னந்தலையே பிளந்து இருந்துச்சு. குதிகாலில் சின்னதா ஒரு ரத்தக் காயம். குண்டு பாய்ஞ்ச அடையாளமே இல்லை!'' என்றார் சோகமாக.
''இந்தத் திட்டமிட்ட தாக்குதல் தேவைதானா?'' என்ற கேள்வியுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயை சந்தித்தோம்.
''துப்பாக்கி சூடு நடந்தது எனக்குத் தெரியாது. நடந்து முடிந்தவுடன் தாசில்தார் எனக்குத் தகவல் சொன் னார். நான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடவில்லை. இந்த நிலைமையை வேறு மாதிரி கையாண்டிருக்கலாம் என்பதை விவாதரீதியாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால், துப்பாக்கிச் சூட்டின் பின்னால் சதி இருக் கிறது என்கிற சந்தேகம் தேவையற்றது. பரமக்குடி நகரின் பாதுகாப்புக்காகவே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது!'' என்று மட்டும் சொன்னார்.
நடந்து முடிந்த துப்பாக்கி சூட்டின் முதல் தகவல் அறிக்கையில், தானே முதலில் சுட்டதாக ஒப்புக்கொண்டு இருக்கும் பரமக்குடி இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சந்தித்தோம். ''விசாரணை கமிஷன் அமைத்த பின்னால், நான் எதுவும் பேசக் கூடாது!'' என்றார். ''மாவட்ட ஆட்சியர் இது குறித்துப் பேசுகிறார். நீங்கள் பேச மறுக்கிறீர்களே?'' என்று கேட்டபோது, ''அவர் சம்பவத்தோடு சம்பந்தப்படவில்லை. நான் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பதால் பேச முடியாது!'' என்றார் திட்டவட்டமாக. தனது முதல் தகவல் அறிக்கையில், 'சாலை மறியல் செய்தவர்கள் தாக்கியதில் தனக்குப் பலத்த காயம் பட்டதாகவும், அதன் காரணமாகவே துப்பாக்கி சூடு நடத்த வேண்டி வந்தது’ என்றும் தெரிவித்திருக்கிறார் சிவக்குமார்.
அரசாங்கம் அமைத்துள்ள விசாரணை அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்!
- கவின் மலர்
நன்றி : ஜூனியர் விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக