சனி, 22 அக்டோபர், 2011

“முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை” - ஜூனியர் விகடன்

            வல்லரசு என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, இத்தனை காலமாகத் தனது நாட்டுக்குள் இருந்த ‘இன்னொரு அமெரிக்கா’வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது. அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்ற வர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங் களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது!
                         அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத் தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த10 ஆண்டுக ளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாததால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உருவெடுத்து வருகிறது.
                                       கடந்த 2007-08ல் அங்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அப்போது 1.5 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. பண நெருக்கடியில் சிக்கி, கடன்களை அடைக்க முடியாமல் திணறிய 50 லட்சம் பேரின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப்பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அன்றைய அதிபர் புஷ் அறிவித்தார். அது தங்களை முழுமையாகக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், தவறு இழைத்த நிதி நிறுவனங்களுக்கு 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைத்ததே, அந்தப் ‘பொருளாதார மீட்சி நடவடிக்கை’ யாக அமைந்தது. இதனால் ஏழை, மத்தியதர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்க வில்லை.
                                 அப்போதுதான், ‘நம்மால் முடியும்.. மாற்றம் நிச்சயம்’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத் திலேயே முடிந்தது. அமெரிக்கப் பாணியைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இதுதான் நிலை. மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்து வந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத்தொடங்கின. ஒபாமா காலத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஓடியது. இதுதான் கார்ப்பரேட் உலக தர்மமாக மாறியது.
                           பொறுத்துப்பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும்? அக்டோபர் 15ம் தேதி, இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. உலகப் பங்கு வர்த்தகத்தின் கோயிலாகக் கொண்டாடப்படும் ‘வால் ஸ்ட்ரீட்’டை எதிர்த்து இந்த மக்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்கினார்கள். ‘வால் ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கினர். அது கடந்த சனிக்கிழமை அன்று உலகம் தழுவிய அளவுக்கு மாறியதுதான் அதிரடியான மாற்றம். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையிலான அனைத்துக் கண்டங்களிலும் 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின் டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினின் மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பங்குச்சந்தை வீதி என்று எங்கெங் கும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு... கார்ப்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு கட்டுவது!
                         'முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை’, ‘பங்குச்சந்தைகளை முட மாக்குவோம்’ ‘சர்வதேசச் செலாவணி நிதி யத்தை இழுத்து மூடுவோம்’, ‘கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’ ‘ஏழை- பணக்காரர் பிரிவினைக்கு முடிவு கட்டுவோம்’ என்று கோஷங்கள் விண்ணைப்பிளக்கின்றன. தன்னெழுச்சியுடனும் சமூக வலைதளங்கள் உதவியுடனும் ஒன்று கூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
                        உலகம் முழுக்கப் பரவும் இந்தப் போராட் ங்களுக்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. இந்தப் போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழ் திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற ‘புரட்சி மட்டுமே தீர்வு’ என்று அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து விண் அதிர முழங்குகிறார்கள்.
                                முதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ, அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பார்த்து அனைத்து நாட்டு அரசாங்கங்களும் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

சமஸ்
நன்றி : ஜூனியர் விகடன் (23.10.2011)

1 கருத்து:

kumaresan சொன்னது…

முதலாளித்துவம் எங்கே முற்றிய நிலைக்கு வருகிறதோ அங்கே புரட்சி முளைவிடும் என்ற மார்க்ஸ் கருத்து உண்மை என்பது இங்கே நிலைநாட்டப்படுகிறது. அதே நேரத்தில் முதலாளித்துவம் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்துவிடாது. சாம தான பேத தண்ட முறைகள் அனைத்தையும் பயன்படுத்தி கிளர்ச்சிகளை ஒடுக்க முயலும். இப்போது சுடர் விடத் தொடங்கியுள்ள போராட்ட எழுச்ச்சயைப் பெருந்தீயாக்குவது மக்கள் இயக்கங்களின் கடமை.