சனி, 29 மார்ச், 2014

மோடியும் டாடாவும்...!

          
            வளர்ச்சிக்கு முன்மாதிரி குஜராத் என்று முதலாளிகளும், ஊடகங்களும் பெருமிதத்துடன் பேசியும் எழுதியும் வருகின்றன. ஆனால் குஜராத்தின் வளர்ச்சி யாரைச் சென்று அடைந்திருக்கிறது என்ற கேள்விக்கு இவர்கள் பதிலளிக்காமல் மௌனம் சாதிக்கின்றனர். அல்லது இடத்தைக் காலி செய்து விட்டு செல்கின்றனர். அவர்கள் போல் நாம் இருக்க முடியாது. வளர்ச்சியின் பங்குகள் வளர்ச்சிக்கு உழைத்த மக்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் சென்று அடையவேண்டும். ஆட்சிக்கட்டிலில் வெள்ளையன் அமர்ந்திருப்பதற்குப் பதிலாக ஒரு வேற்று நிறத்தவன் உட்காருவதல்ல சுதந்திரம். மாறாக சுதந்திரத்தின் பலன் அனைத்தும் மக்களைச் சென்று அடைய வேண்டும். அதுதான் சுதந்திரம் என்று இலக்கணம் வகுத்தான் மாவீரன் பகத்சிங். இந்தியாவில் இது நடக்கவில்லை என்பது உண்மை. அதே வேளையில் குஜராத் மட்டும் வளர்ச்சியில் பிரகாசிப்பதாக மோடியும்,பாஜகவும் பீற்றி வருகின்றனர்.
            மக்களைச் சென்றடையாத வளர்ச்சி என்ன வளர்ச்சி என்று பாமரன் கேட்கிறான். வளர்ச்சி மக்களைச் சென்று அடைய வேண்டும் என்று மோடி ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. அவர் கவலைப்படுவதெல்லாம், முதலாளிகள் வருத்தப்படாமல் லாபம் சம்பாதிக்க வேண்டுமே என்றுதான். அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். இன்ஸ்டண்ட் காபி தான் துரித உணவுகளின் முன்னோடி இருந்தது. அதையடுத்து இப்போது பலவகை துரித உணவுப்பண்டங்கள் வந்துவிட்டன. ஆனால் மோடியின் ஆட்சியில் இன்ஸ்டண்ட் நிலம் கிடைக்கிறது. மோடி அரசு அளிக்கும் நிலம் யாருக்கு கிடைக்கிறது என்பதுதான் கேள்வி? அவர் உபரிநிலங்களை கையகப்படுத்தி ஏழை விவசாயிகளுக்கு அளிக்கவில்லை. மாறாக நல்ல விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து பறித்து முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையிலும் மலிவாகவும் வழங்கி வருகிறார். தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற  நிலங்களை ஏலத்தில் விற்பதற்குப் பதிலாக, ''துடிக்கும் குஜராத்'' எனும் பெயரில் நடந்த மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் முதலாளிகளுக்கு கிட்டத்தட்ட இனாமாக வழங்கி வருகிறார். டாடா நிறுவனத்துக்கு இந்த விஷயத்தில் லாட்டரி அடித்தது என்று கூறலாம்.
           மேற்கு வங்காளத்தின் சிங்கூர் கிராமத்தில் இருந்து மம்தா கட்சியினர் நடத்திய வன்முறையால் விரட்டப்பட்ட டாடா நிறுவனத்துக்கு சனந்த் கிராமத்தில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தார் மோடி.. டாடா நிறுவனம் சிங்கூரில் இருந்து குஜராத்தில் நிறுவப்படும் என்று டாடா அறிவித்த இரண்டு நாட்களில் நிலம் ஒதுக்கப்பட்டது. டாடாவுக்கு 1100 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. டாடாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் சந்தை விலை சதுர மீட்டருக்கு ரூ.10 ஆயிரமும் அதற்கு மேலும். ஆனால் மோடி அரசு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.900 பெற்றுக்கொண்டு 1100 ஏக்கர் நிலத்தை விற்றது. இந்த சலுகை போதாது என்று அதற்கு ரூ.33 ஆயிரம்கோடி மதிப்புள்ள சலுகைகளும் வழங்கியது. மேலும் டாடா நிறுவனம் நிலத்தின் விலையை ஆறுமாதங்களுக்கொரு முறை ரூ.50 கோடி வீதம் செலுத்தலாம் என்றும் கூறிவிட்டது. டாடாவுக்கு விற்கப்பட்ட நிலம் யாருடையது? இந்த நிலத்தை குஜராத் அரசு கால்நடை பல்கலைக்கழகத்துக்காக ஒதுக்கியிருந்தது. முதலில் இந்த ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்தது. உரிய நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் இந்த நிலம் டாடாவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நில ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையும் இல்லை. மேலும் டாடா நிறுவனம் நூற்றுக்கு பத்து பைசா வட்டியில் அரசிடம் இருந்து ரூ.9570 கோடி கடன் பெற்றுள்ளது.
இந்தக் கடனை இருபது வருடங்களுக்கு டாடா நிறுவனம் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை. இந்த நிலப்பரிமாற்றத்துக்கு மேலும் பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஸ்டாம்ப் டூட்டி கட்ட வேண்டியதில்லை. பதிவுக்கட்டணம் கிடையாது. சாலை மற்றும் ரயில் இணைப்புகள் உடனடியாக அரசால் வழங்கப்படும். உப தொழில்களுக்கு துரிதமாக நிலங்கள் ஒதுக்கப்படும். சலுகை விலையில் நீர் விற்கப்படும். டாடாவின் நானோ கார் நிறுவனத்துக்கு இவ்வகையில் அரசு வழங்கிய சலுகையின் மொத்த மதிப்பு ரூ.33 ஆயிரம் கோடியாகும். சனந்த் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள டாடா நானோ கார் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் ஒவ்வொரு காரிலும் அரசின் அல்லது வரி செலுத்தும் பொதுமக்களின் இழப்பு கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த காரில் இருந்து கிடைக்கும் லாபம் எதுவும் அரசுக்கு அல்லது மக்களுக்கு கிடைக்காது. அது மொத்தமாக டாடாவின் வங்கிக்கணக்கில் டெபாசிட் ஆகும்.
              இந்த தொழில் முனைப்பைத்தான் மோடியின் கிரீடத்தில் மற்றுமொரு ரத்தினம் என்று பாஜகவும் பிக்கி, அசோசாம் போன்ற வர்த்தக முதலாளிகள் அமைப்புகளும் கூறி புளகாங்கிதம் அடைகின்றன. இது போன்ற சலுகைகளை ஏராளமான பெருநிறுவனங்களும் அடைந்து வருகின்றன. எல் அண்ட் டி, அதானிகள், அம்பானிகள், எஸ்ஸார்கள் போன்ற நிறுவனங்களுக்கு குஜராத் அரசு வழங்கிய சலுகைகள் ஏராளம். அவை குறித்த விவரங்கள் ஊடகங்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன. எனவேதான் நிறுவனங்களின் ஊடகங்கள் மோடி அலை வீசுவதாக சுனாமியை கிளப்பி வருகின்றன. சாதாரண மனிதனின் வயிற்றில் அடித்து விட்டு சலுகை சார் முதலாளிகள் அரசுப்பணத்தை கொள்ளையடித்துச் செல்கின்றனர். இது போன்ற சலுகைகளை மனிதகுல மேம்பாட்டுக்குரிய சேவைகளில் மோடி அரசு அளிக்கவில்லை. மாறாக மனிதர்களின் மலத்தை மனிதர்கள் அள்ளுவது ஒரு தெய்வீக அனுபவம் என்று மோடி வர்ணிக்கிறார். கல்வி, பொது சுகாதாரம், ஆரோக்கியம், பொது விநியோகம், வேலை உற்பத்தி போன்றவற்றுக்கு அரசு நிதி வழங்குவதில் ஆயிரத்தெட்டு நடைமுறைகள் தடையாக உள்ளன.
            செல்வந்த முதலாளிகளுக்கு அனைத்தும் தடையின்றி கிடைக்கும் என்பதுடன் இருக்கும் கட்டுப்பாடுகளும் கருணையுடன் அகற்றப்படும். ஆனால் அதுவே சாதாரண மனிதர்களுக்கென்றால் அவையனைத்தும் தடுக்கப்படும், நிறுத்தப்படும், மறுக்கப்படும். இந்த வகையில் ஐமு கூட்டணிக்கும் மோடிக்கும் வேறுபாடு கிடையாது. ஐமு கூட்டணிக்கு எதிராக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றுக் கொள்கை கொண்ட அரசை மோடியால் தரமுடியாது.

(நிலோத்பல் பாசுவின் கட்டுரையைத் தழுவி எழுதியவர் தாஸ்)

கருத்துகள் இல்லை: