சனி, 13 ஆகஸ்ட், 2011

மக்கள் பிரச்சனைகளை பேசாமல் நாடாளுமன்றத்தை முடக்கும் செயல் தேசவிரோதமானது.

                       சென்ற பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வங்கி சம்பந்தப் பட்ட மசோதாவை அரசு அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது ஆளும் காங்கிரஸ்  கட்சி மற்று அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.-க்கள் அவையில் போதுமான பேர்கள் இல்லை. அதனால் அந்த மசோதாவைத் தாக்கல் செய்யமுடியாமல் போய்விடக் கூடும் என்கிற அச்சத்தில் மசோதா தாக்கல் செய்வதற்கான ஆதரவை முக்கிய எதிர்கட்சியான  பாரதீய ஜனதா கட்சியிடம் கோரிய போது  பா.ஜ.க. -வினர் மறுக்காமல் ஆதரவு தெரிவித்ததால் அந்த வங்கி மசோதாவை காங்கிரஸ் கட்சியினால் தடையில்லாமல் வெற்றிகரமாக தாக்கல்  செய்ய முடிந்தது  என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
               தேசத்தை சீரழிக்கும் வேலைகளை ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள். அதேப்போல் கடந்த ஒன்றாம் தேதி ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கும் பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் என்பது  துவங்கி இரண்டு வார காலம் ஆனபோதிலும், இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் வருத்தப்பட வேண்டிய ஒன்று ஆகும்.
                   நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அவைதுவங்கியது முதலே பிரதான பிரச்சனைகளிலிருந்து இரு அவைகளின் கவனத்தையும் திசைதிருப்பி பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதோடு .
நாட்டு மக்களை வதைக்கும் விலைவாசி உயர்வு, வரலாறு காணாத மெகா ஊழல்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க விடாமல் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருப்பதில் ஆளும் காங்கிரசும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் கூட்டுச்சேர்ந்து நாடகமாடுகின்றன என்று இடதுசாரி கட்சித்தலைவர்களும்  குற்றம்சாட்டுகின்றனர். 
               விலைவாசி உயர்வு உள்பட நாட்டு மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவிடாமல் பிரதான எதிர்க்கட்சியான பாஜக நாடாளுமன்றத்தை முடக்குவது என்பதும் , இந்தப்பிரச்சனைகளில் விவாதம் நடக்காமல் இருந்தால் சரி.. நாம் மாட்டிக்கொள்ளாமல்  இருந்தால் சரி என்று ஆளும் காங்கிரஸ் நடந்து கொள்வதும் அப்பட்டமான ஒரு நாடகமாகவே தெரிகிறது.
                    தினந்தோறும் நாடாளுமன்றத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனையை கிளப்பி அவை நடவடிக்கைகளை முடக்குவோம் என்று பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்றக் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்  கூறியிருப்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. பாஜக மட்டுமே இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் இடத்தையும் மதிப்புமிக்க நேரத்தையும் தங்களது அர்த்தமற்ற கூச்சல் குழப்பத்தின் மூலம் பா.ஜ.க ஆக்கிரமித்துக்கொள்வது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


கருத்துகள் இல்லை: