புதன், 10 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றி

உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு
              தமிழகத்தில் சமச்சீர் கல்விக்காகப் போராடி வருகிறவர்களுக்கு ஒரு முக்கிய வெற்றியாக, அதனை நடப்புக் கல்வியாண்டிலேயே செயல்படுத்தியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை செவ்வாயன்று (ஆக.9) தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், பொதுப்பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது உட்பட, சமச்சீர் கல்வி ஏற்பாடுகளை அடுத்த 10 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தவும் ஆணையிட்டது.
              நீதிபதிகள் ஜே.எம். பான்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுஹான் ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு க்குழு, தமிழகத்தில் முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி தரமற்றது, கடுமையான குறைபாடுகள் உள்ளது என்பதால் தான் அதை நிறுத்திவைப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட் டது என்ற வாதத்தைத் தள்ளுபடி செய்தது.
           தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பி.பி. ராவ், என்.சி.இ.ஆர்.டி. வகுத்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப சமச்சீர்கல்வித் திட்டம் உருவாக்கப்படவில்லை என்று கூறினார்.
            தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, பெற்றோர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், என்.ஜி.ஆர். பிரசாத், விடுதலை ஆகியோர் சென்ற கல்வி ஆண்டிலேயே முதல் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி பாடங்கள் அறிமுகமாகிவிட்ட நிலையில், இந்த ஆண்டு அடுத்த வகுப்புகளுக்கு வந்துள்ள மாணவர்கள் பழைய பாடத்திட்ட அடிப்படையிலான புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பது அறிவியல்பூர்வமற்றது என்றும், கல்வி உரிமைச் சட்டத்திற்கு மாறானது என்றும் வாதிட்டனர்.
                இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 19 அன்று அளித்த தீர்ப்பில் அரசின் வாதத்தைத் தள்ளுபடி செய்து நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஆணையிட்டிருந்தது. அத்துடன் ஜூலை 22ம் தேதிக்குள் பொதுப் பாடப்புத்தகங்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டு மென்றும் பணித்திருந்தது.
          இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. முதலில் ஆகஸ்ட் 5ம் தேதிவரையிலும் பின்னர் 10ம் தேதி வரையிலும் பொதுப்பாடநூல் விநி யோகத்திற்கான கெடுவை உச்சநீதி மன்றம் நீட்டித்தது.
         செவ்வாயன்று (ஆக. 9) அளித்த தீர்ப்பில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 25 கூறுகளை ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை அளிப்பதாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் அறிவித்தனர்.
             தமிழகப் பள்ளிகளில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மாணவர்கள் பயில்கிறார்கள். இவர்களில் 90 விழுக்காட்டினர் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 45,000 அரசுப் பள்ளிகளில் பயில்பவர்கள். 11 ஆயிரம் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும், 21 ஓரியண்டல் பள்ளிகளும், 50 ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளும் தனித்தனி வாரியங்களின் கீழ், தனித்தனி பாடத் திட்டங்களோடும், தேர்வுமுறைகளோடும் இயங்குகின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வாறு நான்குவிதமான பள்ளிக்கல்வி வாரியங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
          உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம், நடைமுறையில் நான்கு வாரியங்களின் கீழும் உள்ள பள்ளிகளில் ஒரே சீரான பாட நூல்கள், தேர்வுமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு வழி திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள பொதுப்பாடப்புத்தகங்கள் வீணாகிவிடுமோ என்ற கவலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
            தமிழகத்தில் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, தனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது. பாடநூல்களில் குறைகள் இருக்குமானால் அவற்றை மட்டும் நீக்கிவிட்டு மாணவர்களுக்கு பொதுப்பாடநூல்களில் உள்ள இதர பாடங்களை நடத்தலாம் என்று கல்வியாளர்களும், பல்வேறு அமைப்புகளும் எடுத்துக்கூறின. எனினும் அரசு அதனை ஏற்க வில்லை.
             இந்தப் பின்னணியில் உச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி அரசு செயல்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா திங்களன்று (ஆக. 8) சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
          உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பல்வேறு பகுதியினரும் வரவேற்றுள் ளனர். அரசு சட்டமன்றத்தில் அறி வித்தபடி, தமிழகத்தில் சமச்சீர்கல் வியை நடப்புக் கல்வியாண்டிலேயே செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். முழுமையான சமச்சீர்கல் விக்கான இதர நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சமச்சீர்கல்வியை வலியுறுத்தி வந்துள்ளவர்கள் கோரியுள்ளனர்.
நன்றி : தீக்கதிர் 

கருத்துகள் இல்லை: