வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

வேலை கொடுங்கள் நீங்கள் தரும் இலவசங்களை நாங்களே வாங்கிக்கொள்கிறோம்..!

 தேவை இலவசங்கள் அல்ல.. வேலைவாய்ப்பும், வாங்கும் சக்தி உயர்வும்..     


          நேற்று ஆகஸ்ட் 4 அன்று   சமர்ப்பிக்கப்பட்ட  நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நன்றாகவே இருக்கிறது என்றே சொல்லலாம். இதன்  மூலம் அதிமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்று தெரிகிறது. இந்த முயற்சி என்பது  வரவேற்கத்தக்கது.
              உணவு உற்பத்தியை உயர்த்துவது, விதை மானியம், தடையில்லா உரம் விநியோகம்,  நுண்ணிய நீர்பாசனம், ஏரி - குளம் சீரமைப்பு போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், தமிழக நதிகள்  இணைப்பது பற்றி அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும்.
              சாலை போக்குவரத்து, மின்னுற்பத்தி, மின்சார சிக்கனம், மரபுசார மின்னுற்பத்தி ஊக்குவிப்பு போன்றவற்றிற்கும் நிதி ஒதுக்கப்பட்டு, ஆகஸ்ட் 2012 - க்குள் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக ஆக்குவோம் என்று அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது.
             கல்வித்துறையில் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் விடுபடுவதைத் தவிர்க்க 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் அந்த ஆண்டு கல்வியை முடிக்கும்போது அவர்களுக்கு பணச்சலுகையாக 1,000 / 2,000   ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மாணவர்களில் பெரும்பகுதியினர் பள்ளிக்கு வருவதை உத்தரவாதப்படுத்தும் நல்ல அம்சமாகும்.
              இவைகள் மட்டுமல்லாது பல நல்ல அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாகித் தரவேண்டியக் கடமையை தமிழக அரசு மறந்துவிட்டது என்பது தான் ஒரு வேதனையான விஷயமாகும்.
               வேலை வாய்ப்புகளை விரிவாக்குவதற்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இல்லை என்பது மிகப்பெரிய குறையாகும். அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியிடங்களை நிரப்புவதோடு, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேவையான ஆசிரியர்கள், அலுவலர்களை நியமித்து வேலைவாய்ப்பு அளித்திடவேண்டும். இதன் மூலம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவதோடு, நீங்கள் தரும் கவர்ச்சிகரமான இலவசங்களை அவர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிக்கொள்வார்கள். மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வாங்கும் சக்தியையும் அதிகரித்துக்கொடுங்கள். உங்களால் இலவசமாக கொடுக்கமுடியாத பொருட்களையும் அவர்களாகவே வாங்கிக்கொள்வார்கள்.
இதைதான் மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: