நேற்று முன்தினம் இருபது வயதே ஆன இளம்பெண் செங்கொடி ராஜீவ் கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து, தன்னைத் தானே தீயிட்டு கொளுத்திக் கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்ச்சி என்பது தமிழக மக்களின் நெஞ்சை உலுக்கியது. இறந்து போன அந்த பெண் செங்கொடி, சமூகக் கொடுமைகளை வீதி நாடகங்கள் மூலம் இடித்துரைக்கும் கலைக்குழுவைச் சார்ந்தவர். தப்பாட்டக் கலைஞர். நிச்சயமாக அவர் நெஞ்சுரமிக்க - வீரமிக்க பெண்ணாகத் தான் இருந்திருப்பார். அப்படிப் பட்ட பெண்ணே இப்படிப்பட்ட முடிவுக்கு வந்ததென்பது மிகவும் வருந்தத்தக்கது. இனஉணர்வு என்பதை அவருக்கு விஷமாக ஊட்டப்பட்டிருக்கிறது. இன உணர்வுகளை - இன வெறியை தூண்டிவிடும்... தங்களை தமிழினத்தின் தலைவர்களாக காட்டிக்கொள்ளும் சீமான், வைகோ, திருமாவளவன், நெடுமாறன் போன்றவர்கள் தான் இதற்கு காரணமானவர்கள். இவர்களே இந்த பெண்ணின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள். பேச்சுரிமை என்ற பெயரில் இவர்கள் ஆற்றும் உரைகளேல்லாம் இனவெறியை தூண்டும் அளவிற்கு இருக்கிறது. இவர்களுக்கு இது தான் தொழில். இவர்களின் அரசியல் இலாபத்திற்காக, இது போன்று இனவெறியைத் தூண்டி, இளைஞர்களை பலி கொடுத்து அதில் குளிர் காய்பவர்கள் தான் இவர்கள். இதே மூன்று கொலையாளிகளுக்காக இவர்கள் தீக்குளிப்பார்களா..?
இந்த தேசத்தின் விடுதலைக்காக பிரிட்டிஷ் படையோடு போர் செய்து போர்முனையில் உயிர்த் தியாகம் செய்தார்களே.. ஜான்சி ராணி லக்குமி பாய், திப்பு சுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன் - இவர்களைப் பற்றி சீமான் - வைகோ போன்றவர்களெல்லாம் இன்றைய மாணவர்களுக்கு - இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்களா...? தேசத்தின் விடுதலைக்காக ஏப்ரல் 13 , 1919 அன்று ஜாலியன்வாலாபாக்கில் உயிர்த் தியாகம் செய்தார்களே பெண்கள் - குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பேர் - அவர்களைப் பற்றி சொல்லிக்கொடுத்திருப்பர்களா இவர்கள்..? இந்த தேசத்தின் விடுதலைக்காக தூக்குமேடையை முத்தமிட்டார்களே - மாவீரர்கள் பகத் சிங், ராஜ குரு , சுபதேவ், உத்தம்சிங் போன்ற இளைஞர்களைப் பற்றி இந்த
தமிழினத்தலைவர்கள் - இன மானத்தலைவர்கள் இன்றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் சொல்லிக்கொடுத்திருப்பார்களா..? அல்லது இன்றைய இளைஞர்கள் இவர்களைப் பற்றி நினைத்து தான் பார்த்ததுண்டா..?
இப்படிப்பட்ட சரியான வழிகாட்டுதல் இல்லாமல், இது போன்ற பொறுப்பில்லாத தலைவர்களின் பொறுப்பில்லாத உணர்ச்சிமிக்க வசனங்களை கேட்டு, உணர்ச்சிவசப்பட்டு இது போன்று தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுப்பது என்பது அறிவுடமையாகாது. ஒரு குற்றவாளிக்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது பெருமையளிக்கும் செயலல்ல.. இது வீரமரணமும் அல்ல என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எங்கள் அருமை இளைஞர்களே.... கண்மூடித்தனமாக அற்ப உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காதீர்கள். பகுத்தறிவோடு கலந்த நல்ல சிந்தனைகளே நமக்கு நல்ல வழிகாட்டும். இன்றைக்கு இளைஞர்களுக்கு நல்வழி காட்டக்கூடிய நல்ல அமைப்பு தேவைப்படுகிறது. அதைத் தேடுங்கள்... அதில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.. நீங்களும் ஜான்சி ராணி அளவிற்கு, கேப்டன் லக்ஷ்மி அளவிற்கு, தோழர் லீலாவதி அளவிற்கு நாளைய சரித்திரம் புகழும்படி வாழலாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக