செவ்வாய், 1 மார்ச், 2011

மக்களைப்பற்றி சிந்திக்காத பட்ஜெட்..



               ஏற்கனவே மக்கள் கடுமையான விலைவாசி உயர்வால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த
வக்கில்லாத மத்தியில் ஆளும் காங்கிரஸ் - தி மு க கூட்டணி  அரசு நேற்றைய தினம் 28.02.2011 அன்று பட்ஜெட் என்கிற பெயரில்  சாதாரண மக்கள் தலையில் மிகப்பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டிருக்கிறது..உணவு , உரம் , எரிபொருள்  போன்றவற்றிற்கு இதுவரை அரசு அளித்துவந்த மானியத்தில் ரூ.20000 கோடி வரையில் வரும் நிதியாண்டில் வெட்டப்படுகிறது என்கிற அபாய அறிவிப்பை இந்த பட்ஜெட் கொடுத்திருக்கிறது.. 
             தற்போது உணவு, எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் மூலம் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் , எரிபொருள், உணவு, உரம் ஆகியவற்றிற்கு அளித்துவந்த மானியத்தில் ரூ.2000 கோடியை குறைத்தது என்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியதாகும். உணவிற்கு அளித்துவந்த மானியத்தில் ரூ.27 கோடி குறைத்திருப்பது என்பது பொது விநியோகமுறையை சீர்குலைப்பதும், நாட்டின் உணவு பாதுகாப்பை கேள்விக்குரியாக்குவதும் தான் அரசின் நோக்கம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.   உணவுப்பாதுகாப்பு தொடர்பான ஒரு அர்த்தமுள்ள 
சட்டத்தை நிறைவேற்ற இந்த அரசிற்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
               ஏற்கனவே மத்திய அரசு பெட்ரோல் - டீசல் விலைகளை தாறுமாறாக உயர்த்திக்கொண்டே போகும் சூழ்நிலையில் , எரிபொருளுக்கு அளித்து வரும் மானியத்தில் ரூ.15000 கோடி வரை வெட்டியிருப்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிற்போக்குத்தனமான மக்கள் விரோத போக்கையே காட்டுகிறது. பெருமுதலாளிகள், பெரியப் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் வரிகளை ஏய்த்து அயல்நாட்டு வங்கிகளில் போட்டுள்ள கறுப்புப் பணத்தை 
நம் நாட்டிற்கு கொண்டுவருவதற்கான எந்தவொரு உருப்படியான திட்டமும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
               காப்பீடு, வங்கி, ஓய்வூதியம் சம்பந்தமான சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என்கிற அபாய அறிவிப்பு அந்நிய மூலதனத்தை வரவேற்கவே தவிர நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ நல்லது செய்ய அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்..
                மொத்தத்தில் காங்கிரஸ் - தி மு க கூட்டணி அரசு அளித்துள்ள இந்த நிதி நிலை அறிக்கை என்பது தேசத்தின் சாதாரண மக்களுக்கு எதிரானது. 
அதே சமயத்தில் ரூ.88000 கோடி வரை பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை கொடுத்து சந்தோஷப்படுத்துகிற பட்ஜெட்.



கருத்துகள் இல்லை: