வெள்ளி, 13 ஏப்ரல், 2012

மம்தாவின் அராஜகம் ஓயவில்லை....!



                 மேற்குவங்கத்தில் மம்தாவின் அராஜக போக்கும், ஜனநாயகத்திற்கு எதிரான போக்கும் கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருக்கிறது.   மேற்குவங்க மாநிலத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை சட்டம் நடைமுறையில் உள்ளதோ என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் மேற்குவங்க அரசு நூலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் பத்திரிக்கைகளுக்கும், ஆங்கில பத்திரிக்கைகளுக்கும் தடைவிதித்திருந்தார். அது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்று பத்திரிகை உலகமும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
            அந்த எதிர்ப்பு அலை ஓய்வதற்குள், அடுத்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் உள்ள காரல் மார்க்ஸ் மற்றும் ரஷ்யப் புரட்சி பற்றியப் பாடங்களை நீக்கி மம்தா உத்தரவிட்டது என்பது மேற்குவங்கம் மட்டுமல்லாது நாடு முழுவதுமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. 
           இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மதம் பிடித்த யானை மண்ணை அள்ளி தன் தலையிலேயே போட்டுக்கொள்வது போல் அடுத்து,  நேற்று வியாழக்கிழமை இரவு, அம்பிகேஷ் மகாபத்ரா என்ற மேற்குவங்க  ஜாதவ்புர் பல்கலைக்கழக  வேதியியல் துறைப் பேராசிரியர் மம்தாவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மம்தாவை விமர்சனம் செய்து கார்ட்டூன் தயார் செய்து வெளியிட்டார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. அது மட்டுமல்ல இந்திய மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே கொடுத்திருக்கிறது. கார்ட்டூன் வெளியிட்டதற்காக அந்த பேராசிரியரை கைது செய்ததன் மூலம் மம்தா இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே மீறியிருக்கிறார் என்று தான் பொருள். 
                  தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் மம்தாவின்   அராஜகப் போக்கு என்பது நாம் மறந்துவிட்ட சர்வாதிகாரி ஹிட்லரை தான்  நமக்கெல்லாம் நினைவுப்படுத்துகிறது....
Courtesy : The Hindu / 14.04.2012
           போகிற போக்கைப் பார்த்தால், அந்த கார்ட்டூனைப் பார்த்து வாய்விட்டு சிரித்ததற்காக பொதுமக்களும் தண்டிக்கப்படுவார்களோ என்கிற அச்சம் எழுகிறது.   இன்றைக்கு 14. 04. 2012 தேதியிட்ட இந்து பத்திரிகையில் வந்திருக்கும் கார்ட்டூனைப் பார்க்கும் போது நமக்கெல்லாம் அப்படித் தான் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை: