கோழிக்கோட்டில் கட்சியின் 20வது அகில இந்திய மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய அவர் கூறியதாவது:- 2008 ஆம் ஆண்டில் நமது கட்சிக் காங்கிரஸ் நடந்ததற்குப் பின்னுள்ள காலகட்டம் உலகப் பொருளாதார நெருக்கடியைக் கண்டதானதாகும். 1930 -களில் ஏற்பட்ட பெருமந்தத்திற்குப் பிறகு உருவான கடுமையான நெருக்கடியாகும். 21 - ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் தொட ரும் இந்த நெருக்கடி ஒரு திருப்புமுனையாகும்.
மூலதனத்தால் உந்தப்படும் முதலாளித்துவ உலகமயமாக்கல் நிலைத்து நிற்காது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதன் தாக்கமானது ஐரோப்பாவில் உள்ள வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் மற்றும் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஆளும் வர்க்கம் கைதூக்கிவிட்டுள்ளது. மக்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தியுள்ளன. இதன்விளைவாக வேலையின்மை, இருப்பிடமின்மை மற்றும் உழைக்கும் மக்களின் சமூகப்பாதுகாப்பு பலன்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன.உழைக்கும் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் மற்ற பிரிவினர், வாலிபர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்க்கைத்தரம் மீதான தாக்குதலுக்கு எதிராக பரவலான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் பொது வேலை நிறுத்தங்கள், வால் ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம், பெரிய அளவிலான மாணவர் மற்றும் வாலிபர் அணிதிரட்டல்கள் ஆகியவை நவீன-தாராளமயக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோருகின்றன.
நவீன-தாராளமய அமைப்புக்கு எதிராக நடக்கும் அனைத்துப் போராட்டங்களுக்கும் கட்சி தனது ஆதரவை அளிக்கிறது. தனது மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் தனது முரட்டுத்தனமான நடவடிக்கைகளைத் தொடர்கிறது. இந்தக் காலகட்டத்தில் லிபியா மீதான நேட்டோ தாக்குதலை நாம் பார்த்தோம். சிரியாவைக் குறி வைத்துள்ளார்கள். ஈரானுக்கெதிராக இஸ்ரேலுடன் கைகோர்த்துக் கொண்டு பதற்றங்களை உருவாக்குகிறார்கள். அரபு நாடுகளில் எழுந்துள்ள மக்கள் எழுச்சி களை தங்கள் வசமாக்கிக் கொள்ளவும், திசைதிருப்பவும் ஏகாதிபத்தியம் மேற் கொள்ளும் தலையீடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. சிரமமான நிலையிலும் சுதந்திர நாட்டுக்காகவும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கு முழுமையாக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.தெற்கு ஆசியாவில் உள்ள அனைத்து இடது, ஜனநாயக மற்றும் முற் போக்கு சக்திகளுக்கு நமது கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.
நமது பிராந்தியத்தில் நவீன-தாராளமயக் கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்திய செல்வாக்கு ஆகியவற்றால் உருவான பொதுவான பிரச்சனைகளாக இருக்கும் ஏராளமான வறுமை, பெரும் அளவிலான ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பிரச்சனைகளை அந்த சக்திகள் சந்திக்கின்றன.
கொடூரத் தாக்குதல் தொடுக்கும் தாராளமயம்
ஐ.மு.கூட்டணி-2 ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. ஏழை மக்களின் மீது கடுமையான தாக்குதலை ஏற்படுத்தும் வகையில் உணவு மற்றும் அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதுபோன்ற அம்சங்களைக் கொண்ட மோசமான ஆட்சியாக இது இருக்கிறது. விவசாய நெருக்கடிக்கு தீர்வு காணப்படாததால் மீண்டும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த ஆட்சியின் நவீன-தாராளமயக் கொள் கைகள் உழைக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. வறுமைக் குறியீடுகளையே மோசடியாக நிர்ணயிக்கிறார்கள். இருபதாண்டு கால தாராளமயம், எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றத் தாழ்வை அதிகரித்திருக்கிறது. இதனால் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படையான விஷயங்கள் கூட கிடைக்காத கோடிக்கணக்கான மக்கள் இருக்கையில், சில பெரும் பணக்காரர்களையும் இது உருவாக்கியது.
நவீன-தாராளமயத்திற்கு எதிரான போராட்டத்தை பிரதானமானதாக மார்க்சிஸ்ட் கட்சி எடுத்துக் கொள்கிறது. பிப்ரவரி 28 அன்று நடந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நாடு முழுவதுமுள்ள உழைக்கும் வர்க்கத்தின் பதிலடியாக அமைந்தது. இனிவரும் போராட்டங்களுக்கு இது முன்னோட்டமாக அமையும். இதற்கான பணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை கட்சி மாநாடு விவாதிக்கும்.உயர்மட்ட ஊழலைப் பொறுத்தவரை ஐ.மு.கூட்டணி அரசு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இது வரை காணாத அளவிலான ஊழல்கள் கடந்த எட்டு ஆண்டு கால ஆட்சியில் நடந்திருக்கிறது. இது நவீன-தாராள மயக் கொள்கையின் வெளிப்பாடாகும். பெரும் வர்த்தகம், ஆளும் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கிடையில் கூட்டு உள்ளது.
இவர்கள் பொதுப் பணத்தை சூறையாடி வருகிறார்கள். அரசு அதிகாரிகள் மட்டத்தில் உள்ள ஊழலைக் களைய லோக்பால் அவசியம்தான். ஆனால் அதுமட்டுமே போதாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகள் மட்டுமே ஊழலை எதிர்த்து நம்பகத் தன்மையுடைய போராட்டத்தை நடத்தக்கூடியவர்கள். மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இருந்த அரசுகள், திரிபுராவில் தற்போதுள்ள அரசு ஆகியவை உயர்மட்ட ஊழல்கள் இல்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
மதவெறி பாஜக
நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு மற்றும் மதிப்பீடுகளுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலோடு இந்துத்துவா சக்திகள் அலைகின்றன. பாஜக ஆட்சியில் இருக்கும் கர்நாடகம், மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினர் தாக்குதலை எதிர்நோக்குகிறார்கள். இதை வைத்து உழைக்கும் மக்களைப் பிரிக்கிறார்கள். வலதுசாரி நவீன-தாராளமயக் கொள்கைகளுக்கு வலு சேர்க்கிறார்கள். சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் போராடுவதில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிற்கிறது. அதே வேளையில், சிறுபான்மையினருக்கும் இருக்கும் மதவெறி மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றிற்கு எதிராகக் குரலும் கொடுக்கிறது.
அமெரிக்காவுக்குச் சாதகமான வெளியுறவுக் கொள்கையை மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கிறது. இது நாட்டு நலனுக்கு எதிராக உள்ளது. ஈரானிலிருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் அளவு குறைகிறது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சிரியாவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அமெரிக்காவுடனான கூட்டு, உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளையும் தீர்மானிக்கிறது. இந்தியாவில் வால்மார்ட் கடைகள் அனுமதிக்கப்படவேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து கோரி வருகிறது. அமெரிக்காவுட னான போர்க்கூட்டணி உத்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக எதிர்த்து நிற்கும். மேற்கு வங்கத்தில் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. கடந்த மூன்றாண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி மீது கடுமையான தாக்குதல் நடக்கிறது. கடந்த கட்சிக் காங்கிரசுக்குப் பிறகு 570 - க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்குப்பிறகு இது அதிகரித்துவிட்டது. மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சனைகளில் மக்களிடம் சென்று அவர்களைத் திரட்டும் பணியை மார்க்சிஸ்ட் கட்சி செய்கிறது.
ஒரே முகம்தான்
பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை, காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுமே நவீன-தாராளமயத்தை ஆதரிக்கின்றன. ஊழலைப் பொறுத்த வரையில், இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வது என்பது சாத்தியமில்லை. கனிமக் கொள்ளையரோடு கர்நாடகத்தில் பாஜகவினர் கூடிக்குலாவும் மோசடிகள் அரங்கேறுகின்றன. உயர் மட்ட ஊழலில் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசின் 2ஜி அலைக்கற்றை போன்ற உயர்மட்ட ஊழல்கள் போலவே பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஊழல்கள் நடக்கின்றன. அண்மையில் நடந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய இரண்டுமே தோல்வியுற்றதைக் காட் டின.
நம்மைப் பொறுத்த வரை, இடது மற்றும் ஜனநாயக சக்திகளால்தான் மாற்றைத் தர முடியும். இதைக் கட்டுவதற்கு, முதலில் நமது கட்சியைப் பலப்படுத்த வேண்டும். வலுவான மார்க்சிஸ்ட் கட்சி என்பது, இடதுசாரி ஒற்றுமையைப் பலப்படுத்தும் மற்றும் பிற ஜனநாயக சக்திகளையும் நமது பக்கம் கொண்டு வரும். இதைச் செய்ய, உழைக்கும் மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர்கள் மற்றும் பிறரின் பிரச்சனைகளைக் கட்சி கையில் எடுக்கும். தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரச்சனைகளுக்காக சளைக்காமல் போராடும். புரட்சிகரப் பாதையைத் தீர்மானிக்க இந்தியாவில் உள்ள திட்டவட்ட நிலைமைகளுக்கேற்ப மார்க்சியம் -லெனினியத்தை பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. வெளிநாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளை நாம் ஒருபோதும் காப்பியடிக்க முயற்சித்ததில்லை. தத்துவார்த்தப் புரிதலை தொடர்ந்து நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முன் எழும் சவால்களைச் சந்திக்க நம்மை நாமே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சியின் 20வது மாநாடு இந்தப்பணியைச் செய்யும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக