செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஒரு சிறைப்பறவையின் வெற்றி - மியான்மரில் ஜனநாயகத்தின் குரல் ஒலிக்கவேண்டும்...!


                ஜனநாயகத்தின் விடியலுக்காக காத்திருந்த மியான்மர் மக்களுக்கு நேற்று இனிமையாய் விடிந்தது என்று தான் சொல்லவேண்டும். ஜனநாயகத்தின்  வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்டில் பரவுவதற்கான  அறிகுறி கொஞ்சம் கொஞ்சமாக தெரியத் தொடங்கியிருக்கிறது. மியான்மர் நாட்டில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.   22  ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப்பின்  ஆங் சான் சூகி, கவ்மு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதாலும்,  இந்த இடைத்தேர்தல் முடிவுகளால் மியான்மரில் ஆட்சிமாற்றம் உடனடியாக ஏற்படப் போவதில்லை என்றாலும், அந்நாட்டில் நடைபெற்றுவரும் இராணுவ சர்வாதிகார பின்னணி கொண்ட ஆட்சியினால் மக்கள் வெறுப்படைந்து போயிருக்கிறார்கள் என்பதாலும்,  45 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 44   தொகுதிகளில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி பெற்ற வெற்றியின் மூலம் ஜனநாயகத்தை விரும்பும் மியான்மர் மக்கள் நாடெங்கும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
                மியான்மர் நாட்டு   இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளும் செய்து வரும் உலக ரௌடி அமெரிக்கா நிலைமை சீர்குலைக்க கட்டப்பஞ்சாயத்து செய்யாமல் இருந்தால் சரி.
                சென்ற 1990 - ஆம் ஆண்டிலேயே  நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சிக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைத்திருந்தது. ஆனால், ராணுவ ஆட்சியாளர்கள் அந்த முடிவை ஏற்க மறுத்ததோடு, பெண் என்றும் பாராமல்  சூகியை சிறைக்குள் தள்ளினர். தன்னுடைய பொது வாழ்வில் 22 ஆண்டுகளை சிறையில் சூகி கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனவெறிக்கு எதிராக பல ஆண்டுகள் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலாவைப் போன்று, ஜனநாயகத்தின் விடியலுக்காக   சிறையிலிருந்த சூகியின் பெயரும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. 

1 கருத்து:

kumaresan சொன்னது…

பர்மாவில் முந்தைய தேர்தல்களின் வரலாற்றைப் பார்த்தால் ராணுவக் கும்பல் அரசு அத்தனை எளிதாக ஜனநாயக இயக்கத்தின் வெற்றியை ஏற்றுக்கொண்டு ஆட்சி மாற்றத்திற்கு வழிவிடுமா என்ற ஐயமே மிஞ்சுகிறது. உலகத்தின் மனசாட்சி பர்மா மக்களுக்கு பெரும் பலமாக வந்து நிற்க வேண்டும்.