வெள்ளி, 6 ஏப்ரல், 2012

குடியரசுத்தலைவர் பதவிக்கு நல்ல மனிதரை தேர்ந்தெடுங்கள்...!

 அர்ப்பணிப்பு உணர்வுள்ள தலைவர்கள் தேவை...!

                        எல்லா வளங்களும் மிகுதியாய் உள்ள நம் நாட்டில், நல்ல தலைவர்கள் இல்லை என்பது தான் இந்த நாட்டின் துரதஷ்டமான நிலையாகும்.  தற்போதைய குடியரசுத்தலைவர் திருமதி. பிரதீபா பாட்டில் அவர்களின் ஐந்தாண்டுப் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிவடையும் சூழ்நிலையில் அந்த உயர்ந்தப்பதவியை அடைவதற்கு இப்போதே காங்கிரஸ் கட்சியிலும், பாரதீய ஜனதா கட்சியிலேயும் ஏகப்பட்ட போட்டாப்போட்டி கிளம்பியிருக்கிறது. 

                இந்த இருக்கட்சிகளுக்கும் தனிப்பட்ட வெற்றி வாய்ப்பு என்பது கேள்விக்குறியாக இருப்பதால், குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத்துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளையும்   இவ்விருக்கட்சிகளும் ஆளுக்கொன்றாக பிரித்துக்கொண்டு தங்களது கட்சிகளைச்சேர்ந்த ஒருவரை அந்தப்பதவிகளுக்கு நியமிப்பது போன்ற பேரங்களும் ஒருப்பக்கம் திரைமறைவில் நடந்தவண்ணம் இருக்கின்றன.  இன்னொருப்பக்கம் அதிக வாக்குகளை வைத்திருக்கும் மாநிலக்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவதுமான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 
               இது மாதிரி நிகழ்வுகளெல்லாம் நடப்பது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களெல்லாம்  புதிய குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளவர்கள் யாரென்பதை இப்போதே ஊகமாக வெளியிட்டு மக்களுக்கு மூளைச்சலவை செய்ய ஆரம்பித்திருப்பது தான் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. அதுமட்டுமல்ல அந்த பெயர்களை படிக்கும் போது நமக்கெல்லாம்  குலைநடுங்குகிறது என்பது தான் உண்மை. 
                   புதிய குடியரசுத்தலைவராக காங்கிரஸ் கட்சி பரிசீலிப்பதாக சொல்லப்படும் பெயர்கள் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகிய இந்த ''தன்னலமில்லாத'' மாமனிதர்களைத் தான் என்று கேள்விப்படும்போது உண்மையிலேயே குலை நடுங்குதடா சாமீ. மக்கள் வாக்களித்து ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதற்காக, மக்கள் நேரிடையாக வாக்களிக்க வாய்ப்பில்லாத குடியரசுத்தலைவர் பதவியை தன்னிச்சையாக எடுத்துக்கொள்ள  அதற்கு கடுகளவும் லாயக்கில்லாதவர்கள்   எல்லாம் ஆசைப்படுகிறார்கள்.
             நல்லத் தலைவர்கள் இல்லாமல் இந்த தேசம் எப்படியெல்லாம் தவிக்கிறது என்பதை இப்போதாவது நம் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.   தேசபக்தியுள்ள... நேர்மையான... தூய்மையான.... மக்கள் நலனில் அக்கறையுள்ள... அநீதிகளை கண்டு கோபப்படுகிற... தன்னலமற்ற தலைவர்கள் என்பதே நம் நாட்டில் அரிதாகிவிட்டது என்பது ஒரு வேதனையான விஷயமாகும் என்ற உண்மையை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
               காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தன் மகன் ராகுல் காந்திக்கு பிரதமாராக பட்டாபிஷேகம் செய்து பார்க்கவேண்டும் என்பதற்காகவும், 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மீண்டும் மன்மோகன் சிங்கின் முகத்தைக் காட்டி ஓட்டுக்கேட்டால்,  வரலாறு   காணாத  ஊழல் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் மன்மோகன் சிங்கை குடியரசுத்தலைவராக்கி விடலாம் என்று சோனியா காந்தி யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
                 காங்கிரஸ் கட்சி யோசித்துள்ள மன்மோகன் சிங்கோ... பிரணாப் முகர்ஜியோ... ப.சிதம்பரமோ... இவர்கள் மூன்று பேருமே எந்த வகையில் குடியரசுத் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இவர்கள் இந்த தேசத்தை கூறுபோட்டு விற்கத்  துடிப்பவர்கள்.   கொஞ்சம் கூட தேசப்பக்தியோ... மக்களைப்பற்றிய சிந்தனையோ இல்லாதவர்கள். நீதி, நேர்மை, தூய்மை இவைகளெல்லாம் என்ன விலை என்று கேட்கக்கூடியவர்கள். தன் குடும்பம் - தன் மக்கள் என்று தன்னலத்துடன், தவறான முறையில் சொத்து சேர்க்கத் துடிப்பவர்கள்.
               மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் கே. ஆர். நாராயணன் போன்றவர்களெல்லாம் பணியாற்றிப் பெருமை சேர்த்த குடியரசுத்தலைவர் பதவியில், மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் -  இவர்களைப்போன்றவர்கள் அமர்ந்தால் குடியரசுத்தலைவர் பதவியும், குடியரசுத்தலைவர் மாளிகையும் மாசுபடிந்து நாறிவிடும். 

            எனவே, இந்திய மக்களே... குடியரசுத்தலைவர் பதவிக்கு நல்ல மனிதரை தேர்ந்தெடுக்க குரல் கொடுங்கள்.


கருத்துகள் இல்லை: