வியாழன், 26 ஏப்ரல், 2012

அடப்பாவிகளா... விவசாயிகளை கொல்லுவதற்காகவா ஆட்சி செய்கிறீர்கள்...?


                      அண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்பு,  மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா பகுதியில் 45 வயதான பருத்தி விவசாயி ஒருவர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்றும்,  தற்கொலை செய்துகொள்வதற்கு  முன்பு  அவர் எழுதிவைத்த கடிதத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியிருந்தன. கஜானந்த் கோத்தீகர் என்ற அந்த விவசாயி டிராக்டர் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஆனால் பருத்தி விலைகள் மிகவும் குறைவாக இருந்ததால் டிராக்டருக்காக வாங்கிய 1 லட்ச ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. தனது இளைய மகளுக்கான திருமண ஏற்பாடும் அவரை மேலும் கடனில் ஆழ்த்தியது. இதனால் கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. 
            இவர் பி.டி வகை பருத்தியை தான் பயிர் செய்திருந்தார். மான்சான்ட்டோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் மிகுந்த இலாபம் அடைவதற்காக,  அந்த கம்பெனிகள் பி. டி வகை விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால் விவசாயிகளிடம் சொல்லப்பட்டதோ இந்த பி. டி வகை விதைகளை பயிரிட்டால் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும் என்ற ஏமாற்று வார்த்தைகளைத் தான்.   மத்திய அரசு மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பசப்பு ஏமாற்று வார்த்தைகளை நம்பித்தான் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அப்பாவி விவசாயி பெருமக்கள் பி. டி. வகை விதைக்கு மாறினார்கள். ஆனால் மத்திய - மாநில அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் சொன்னது போல் இலாபம் கிடைக்கப்பெறாமல், குறிப்பாக பருத்தி விவசாயிகள் படுகுழியில் தள்ளப்பட்டனர். விவசாயத்திற்காக வாங்கிய கடன் அவர்களின் கழுத்தை நேருக்க ஆரம்பித்தது. கடன் தொல்லை தாங்கமாட்டாமல் விவசாயப் பெருமக்கள் தற்கொலை செய்துகொண்டு தங்களை தாங்களே உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். 
             மத்தியில் நரசிம்மராவ் -  மன்மோகன்சிங் கூட்டாளிகளின் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, மன்மோகன்சிங் - சரத் பவார் - சிதம்பரம் - பிரணாப் முகர்ஜி கூட்டாளிகளின் காங்கிரஸ் ஆட்சி வரை கடைபிடிக்கப்பட்டுவரும்   கடுமையான பொருளாதாரக் கொள்கை தான் இதுமாதிரியான விவசாயிகளின் தற்கொலைகளுக்கு பிரதான காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கடந்த 1995 - ஆம் ஆண்டிலிருந்து - கடந்த 17 ஆண்டுகளில்  இந்தியாவில் இதுவரையில் 2,50,000 - க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டுப்போயிருக்கிறார்கள் என்பது இந்த தேசம் வேதனையும் வெட்கமும் படவேண்டிய விஷயமாகும். கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி செய்த மேற்கு வங்கம் - கேரள மாநிலங்கள் மற்றும் தற்போது ஆட்சி செய்யும் திரிபுரா மாநிலங்கள் நீங்கலாக,   ஆந்திரா,  மகாராஷ்டிரா உட்பட நாட்டிலுள்ள 18 மாநிலங்களில் தான் இது போன்ற விவசாயிகளின் தற்கொலை என்பது வேதனையும் சாதனையுமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது மம்தா ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கு வங்கத்திலும் விவசாயிகள் தற்கொலை என்பது கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
              இந்தியாவில் 12 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது தான் இன்றைய ஆட்சியாளர்களின் மகத்தான சாதனையாகும்.
                இரண்டு நாட்களுக்கு முன்பு விதர்பாவில் தற்கொலை செய்துகொண்டு இறந்து போன பருத்தி விவசாயி, தனது தற்கொலை குறிப்பில் பருத்திக்கு நல்ல விலை கிடைக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் துயரம் குறித்து கவலைப்படாத காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசுக்கு அடுத்தமுறை வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.விதர்பா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 325 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை: