மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசாங்கம் அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளது. இந்த மாற்றம் மூலம் மக்களிடம்
ஏற்பட்டுள்ள அவப்பெயரை அகற்ற முடியும் என கணக்குப் போடுகிறது காங்கிரஸ்
அரசு. தலையணையை மாற்றினால் தலைவலி தீராது என்பார்கள். என்னதான் அமைச்சரவை
மாற்றம் எனும் சாகச செயல்களை செய்தாலும் மக்களின் கோபத்தை திசை திருப்ப
முடியாது. எனினும் ஒரு அமைச்சரின் மாற்றம் சில விவாதங்களை கிளப்பியுள்ளது.
பெட்ரோலிய அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியின் மாற்றம் தான் அது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஜெய்பால் ரெட்டியிடமிருந்து பெட்ரோலிய அமைச்சகம் பறிக்கப்பட்டதாக செய்திகள்
கூறுகின்றன. இதற்கு முன்பு மணிசங்கர அய்யரிடமிருந்து பெட்ரோலிய அமைச்சகத்தை பறித்த பொழுதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன. அவர் ஈரான் எண்ணெய்
குழாய்கள் மூலம் இந்தியாவிற்கு எண்ணெய் வாங்கிட முனைப்பாக இருந்ததாகவும்
அதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இறுதியில் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் வென்றது. மணிசங்கர அய்யர் பெட்ரோலிய
அமைச்சகத்தை இழந்தார். அன்று வெளிநாட்டு நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்த
மன்மோகன் அரசாங்கம் இன்று உள்நாட்டு பெரும் முதலாளிக்கு அடிபணிந்துள்ளதாக
செய்திகள் தெரிவிக்கின்றன.
தான் நினைத்தபடியெல்லம் பெட்ரோலிய அமைச்சகத்தை ஆட்டுவித்த ரிலையன்ஸ்
நிறுவனத்தின் செல்வாக்கை கட்டுப்படுத்தினார். அரசிடமிருந்து ரிலையன்ஸ்
நிறுவனம் பெற்ற எண்ணெய் வயல்களில் ஒப்பந்தப்படி இல்லாமல் எண்ணெய்
உற்பத்தி குறைந்தது. இதனால் 2011-12ம் நிதியாண்டில், திட்டமிட்டு ரூ.
20,000 கோடி நட்டம் அரசுக்கு ஏற்படுத்தப்பட்டது. 2012-13ம் ஆண்டில் இந்த
நட்டம் ரூ.45,000 கோடியாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இது பற்றி கேள்வி
எழுப்பினார் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி. தான் கொள்ளை லாபம் அடிக்க இயற்கை
எரிவாயுவின் விலையை உயர்த்திட ரிலையன்ஸ் நிறுவனம், பெட்ரோலிய அமைச்சகத்தின்
மீது நிர்ப்பந்தம் செலுத்தியது. ஒப்பந்தப்படி 2014 - ஆம் ஆண்டுதான் விலை
உயர்வு பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு
கொள்ளை லாபம் உடனே வேண்டும். அவ்வாறு விலை உயர்த்தினால் சுமார் ரூ. 35,000
கோடி அளவிற்கு மக்கள் மீது சுமை ஏற்றப்படும். அந்த அளவிற்கு
ரிலையன்சுக்கு லாபம் ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக ரிலையன்ஸ்
நிறுவனத்தின் செயல்பாடுகளை தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளரின் ஆய்வுக்கு
உட்படுத்தினார் ஜெய்பால் ரெட்டி. தான் ஒரு தனியார் நிறுவனம், தனது
செயல்பாடுகளை ஆய்வு செய்திட தலைமை தணிக்கையாளருக்கு உரிமை இல்லை என
ரிலையன்ஸ் வாதிட்டது. ஆனால் எண்ணெய் உற்பத்தி அளவு குறித்து அரசுடன்
ஒப்பந்தம் இருப்பதால் ரிலையன்ஸ் செயல்பாடுகளை தலைமை தணிக்கையாளர் ஆய்வு
செய்வதில் தவறு இல்லை என ஜெய்பால்ரெட்டி கூறினார்.
ரிலையன்ஸ் செய்த
தகிடு தத்தங்களை தலைமைத் தணிக்கையாளர் அம்பலப்படுத்தினார். இவையெல்லாம்
ரிலையன்சுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின. தான் ஒரு ஏகபோக நிறுவனம்;
அதுவும் மன்மோகன்சிங் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் ஒரு
நிறுவனத்தை கேள்வி கேட்பது எனில் எவ்வளவு தைரியம் ஜெய்பால் ரெட்டிக்கு?
இதனை எப்படி ஏற்றுக் கொள்வது? எனவே, ஜெய்பால் ரெட்டியை மாற்றியே
தீரவேண்டும் என ரிலை யன்ஸ் நிறுவனம் மன்மோகன் அர சாங்கத்திற்கு
நிர்ப்பந்தம் அளித்தது.இதன் விளைவாகவே ஜெய்பால் ரெட்டியிடமிருந்து
பெட்ரோலிய அமைச்சகம் பறிக்கப்பட்டது. தொலைத்தொடர்புத் துறைக்கு யார்
அமைச்சராக இருக்க வேண்டும் என மிட்டல் குழுமமும் டாடா குழுமமும்
கார்ப்பரேட் போரில் ஈடுபட்டன என்பது பழைய செய்தி. இப்பொழுது ஜெய்பால்
ரெட்டி மாற்றம் என்பது மன்மோகன்சிங் அரசாங்கம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிபணிந்து போகிறது என்பதை மீண்டும் ஒரு முறை
நிரூபித்துள்ளது. மன்மோகன்சிங் அரசாங்கம் செயல்படுவது மக்களுக்காக அல்ல!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே என்பதையே
இந்த மாற்றம் பறைசாற்றுகிறது.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக