நாட்டைச் ''சீர்திருத்த'' வேண்டிய சரியான நேரம் இது என்று கூறி சாதாரண
மக்களின் மீது இடிகளை இறக்கி, முதலாளிகளுக்கு சேவை செய்து வரும் காங்கிரஸ்
கட்சி ஆட்சி நடத்தி வரும் ராஜஸ்தானில் கல்வியின் நிலை மிக மோசமாக உள்ளது.
ராஜஸ்தானின் மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில்
கழிப்பிட வசதிகள் இன்மையால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக
குறைந்துள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பொருளாதாரம் மற்றும்
புள்ளியியல் ஆணையகம் ராஜஸ்தானில் தனி ஆய்வு ஒன்றை நடத்தியது. இதற்காக
அம்மாநிலத்தில் உள்ள சுரு, துங்கர்பூர் மற்றும் ஜல்வார் ஆகிய மாவட்டங்களில்
உள்ள 401 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்தது. இப்பள்ளிகளில்
கடந்த 2010-11 ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில், பல்வேறு
தகவல்கள் தெரியவந்துள்ளன.இந்த மூன்று மாவட்டங்களிலும் 2010 - 11ம்
கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. 2009 - 10ம்
ஆண்டில் 1000 மாணவர்களுக்கு 857 மாணவிகள் என்றிருந்த எண்ணிக்கை, 2010 -
11ம் ஆண்டில் 1000 மாணவர்களுக்கு 538 மாணவிகள் என்று சுமார் 45 சதவிகித
அளவிற்கு வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது,
இப்பள்ளிகளில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி கழிப்பிட வசதிகள்
இல்லாததே. மொத்தமுள்ள 401 பள்ளிகளில் 25 சதவிகித அரசு பள்ளிகளிலும், 29
சதவிகித தனியார் பள்ளிகளிலும் பெண்களுக்கென தனி கழிவறை இல்லை. இதனால்,
பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப
மறுக்கின்றனர். மாணவிகளின் எண்ணிக்கை குறைந்ததுபோல், ஒட்டுமொத்த பள்ளிகளின்
சேர்க்கை விகிதமும் குறைந்துள்ளது. இதனால் நடுநிலைப்பள்ளிகளின் மாணவர்
சேர்க்கை எண்ணிக்கை 2010 - 11ம் கல்வியாண்டில் 43 ஆயிரத்து 141 ஆக
குறைந்துள்ளது. இது அதற்கு முந்தைய 2009 - 10ம் கல்வியாண்டில் 44 ஆயிரத்து
392 ஆக இருந்தது.மாணவர்களின் நிலை இதுவென்றால், ஆசிரியர்களின் நிலையோ
மிகவும் மோசமாகவுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள மொத்தப் பள்ளிகளில்
78 சதவிகித அரசுப் பள்ளிகளிலும், 59 சதவிகித தனியார் பள்ளிகளிலும்
ஆசிரியர்களுக்கும், பணியாளருக்கும் கூட தனித்தனி கழிவறைகள் இல்லை.
இந்தியாவில் சுகாதாரமற்ற கழிவறைகளால் பல்வேறு நோய்கள் ஏற்படும்
என்று பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி
என்ற திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், பெரும்பாலான
பள்ளிகளில் அடிப்படைக் கணினிக் கல்வியைப் பெறுவதற்குக்கூட வாய்ப்புகள்
வழங்கப்படுவதில்லை. இங்குள்ள 82 சதவிகித அரசுப் பள்ளிகளில் கணினிக் கல்வி
என்பதே இல்லை. அதேபோல், 58 சதவிகித தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான
கணினி வசதிகள் என்பதே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பு
என்பது பொருளியல் மற்றும் புள்ளியியல் ஆணையரகத்தால் எடுக்கப்பட்ட
தனிப்பட்ட கணக்கெடுப்பாகும். பிறகு, இந்தக் கணக்கெடுப்பு மாவட்ட கல்வித்
தகவல் மையத்தின் தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
இதில்,
இரண்டிற்குமிடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2011ம்
ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி, அனைத்து பள்ளிகளுக்கும் குடிநீர்,
தனித்தனி கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என்று
மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,
ஒராண்டாகியும் மத்திய, மாநில அரசுகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்த
தீவிர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இது ராஜஸ்தானின் நிலை மட்டுமல்ல,
இந்தியாவின் ஒட்டுமொத்த நிலையும் இதுவே.
இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு
முன்பு, 6 மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை
வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீண்டும்
உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உறுதிசெய்து
அறிக்கை தாக்கல் செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளது. உலகத்தில் உள்ள அனைத்துப்
பிரச்சனைகளையும் அலசி ஆராயும் திறனை வழங்குவதே கல்வியறிவு. ஆனால், இன்று
கல்வியே மிகவும் சீர்குலையும் நிலையில் உள்ளது எதிர்காலத்தை
கேள்விக்குறியாக்குகிறது.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக