தமிழகத்திலேயே முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்தின் விருதினைப் பெறும் திருநங்கை என்ற பெருமையை பிரியா பாபு அவர்களை சேருகிறது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின்
சார்பில் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்கு தொண்டாற்றுபவர்களுக்கு
வழங்கப்படும் "பெரியார் விருது'' இந்த ஆண்டு பிரியா பாபுவுக்கு
வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ரூ. 50 ஆயிரம் ரொக்கம், சான்றிதழ் மற்றும் கேடயத்தை உள்ளடக்கியது.
"மூன்றாம் பாலின் முகம்'' என்ற இவரது நாவல், திருநங்கை ஒருவர் எழுதிய முதல் தமிழ் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. "அரவானிகள் சமூக வரைவியல்'', "தமிழ்நாட்டில் அரவானிகள் வரலாறு'', "பாலினச்
சிறுபான்மையினரின் அன்பு சார்ந்த ஆவணங்கள்'', "அரவானிகளின் சமூக உரிமைகள்''
போன்ற நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.
தனது எழுத்துக்கள் மூலமாக மட்டுமல்லாது, திருநங்கைகளுக்கென்று தனி அமைப்பை நடத்தியும் அவர்களின் சமூக அந்தஸ்துக்கும், உயர்வுக்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும் போராடி வருகிறார். அதுமட்டுமல்லாது, தானே அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாகவும், சிறந்த உதாரணமாகவும் இருந்துவருகிறார். பாராளுமன்றத்தில் திருநங்கைகளின் குரல் ஒலிப்பதற்கு, திருநங்கை ஒருவரை பாராளுமன்ற நியமன உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று போராடிவருபவர்.
''பெரியார் விருது'' பெறுவது குறித்து பிரியா பாபு "பெரியார்
பெயரால், பாரதிதாசன் பெயரைத் தாங்கிய ஒரு பல்கலைக்கழகம் அளிக்கும் விருது
என்பது பெரிய அங்கீகாரம். மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயம்'' மிகப்பெருமையாக கூறுகிறார்.
பல்கலைக்கழகத்தின் இந்த உயரிய விருது என்பது மூன்றாம் பாலினத்திற்கு கிடைத்த அங்கீகாரமும், பெருமையும் ஆகும். ''பெரியார் விருது'' பெறும் பிரியா பாபு அவர்களை நெஞ்சார பாராட்டுகிறோம்... வாழ்த்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக