ஞாயிறு, 6 நவம்பர், 2011

''மண்ணு'' மோகன் சிங்கின் திமிர்பிடித்த பேச்சைக் கேட்டு கோபம் வரவில்லையா..?

               பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி - 20 உச்சிமாநாடு சென்ற வெள்ளியன்று முடிவடைந்தது. இம்மாநாட்டின் நிறைவுக்குப் பின் பிரதமர் ''மண்ணு'' மோகன் சிங்கு பத்திரிக்கையாளர்களிடம் உதிர்த்த வார்த்தைகளை கேட்டால் நமக்கெல்லாம் கோபம் பொங்கி வரும். எப்படி  ஒரு நாட்டின் பிரதமர் அந்த நாட்டின் மக்களுக்கு எதிராக இவ்வளவு தைரியமாக பேசுகிறார் என்ற கேள்வி தான் எழுகிறது.  வெளிநாட்டில் தானே பேசுகிறோம் என்ற தைரியமா அவருக்கு...?                                                
            அப்படி  என்ன பேசிவிட்டார் அவர்...?
            பொதுமக்கள் பயன்படுத்தும் எரிபொருள்களுக்கு இனியும் மானியம் வழங்கிக்கொண்டிருக்க முடியாதாம். மக்கள் தமது வாய்ப்புகளுக்கு மேல் வாழ்வதற்கு ஆசைப்படக்கூடாதாம். அரசு மக்களுக்கு மானியம் வழங்குவதற்கு பணம் என்ன மரத்திலா காய்க்கிறது..? என்று பிரதமர் ''மண்ணு'' மோகன் பேசியிருப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
               அதுமட்டுமல்ல இன்னும் என்னன்ன பேசியிருக்காருன்னு பாருங்க...!  பொதுமக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களுக்கு இனியும் மானியம் வழங்க முடியாது என்பது மட்டுமல்ல... பெட்ரோலின் விலையை எப்படி தனியார் எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்  கொள்கிறார்களோ அதேப்போல் இனி டீசல், சமையல் கேஸ் போன்ற மற்ற எரிபொருள்களின் விலையையும் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்வார்கள் அல்லது தன் விருப்பத்துக்கு அவ்வப்போது உயர்த்திக்கொள்வார்கள் என்று நா கூசாமல் - மக்கள் கொதித்தெழுவார்கள் என்ற அச்சமில்லாமல் இந்த நாட்டின் பிரதமர் பேசுகின்றார் என்றால்.. பெட்ரோல் விலையை உயர்த்தியதை நியாயப்படுத்தியது மட்டுமின்றி டீசல் - சமையல் கேஸ் போன்ற மற்ற எரிபொருட்களின் விலைகளையும் தங்குதடையின்றி தாறுமாறாக உயர்த்தவேண்டும் என்று இந்த நாட்டின் பிரதமர் பேசுகின்றார் என்றால்... இவர் யாருக்காக ஆட்சி செய்கிறார் என்றே தெரியவில்லை. 
        பெருமுதலாளிக்கும், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் மானியங்களையும் வரிச்சலுகைகளையும் வாரிவாரி கொடுத்துவிட்டு சாதாரண - ஏழை - எளிய மக்களுக்கு மட்டும் மானியங்களை வெட்டவேண்டும் என்று இந்த நாட்டின் பிரதமர் துடிக்கின்றார் என்றால் இவர் யாருக்காக வேலை செய்கிறார் என்று தெரியவில்லை..
              இந்திய மக்களே..! இதைக்கேட்டுமா உங்களுக்கு கோபம் வரவில்லை....? கோபம் கொள்ளுங்கள்.. கோபப்பட்டால் தான் மனிதன்.. அநியாயங்களை கண்டு கோபப்படுங்கள். இந்த தேசம் கொள்ளைகொண்டு போகிறது...!

கருத்துகள் இல்லை: