செவ்வாய், 22 நவம்பர், 2011

ஜெயலலிதாவின் முதலைக் கண்ணீர்..!

ஆடு நனையுதே என்று.....  

              முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்ற மத்திய அரசு எந்தவித உதவியும் செய்யலையாம்.   அந்த பொதுத்துறை  நிறுவனங்கள் முற்றிலும் செயலற்றுப் போகாமல் காப்பாற்றப்பட வேண்டுமேன்னு துடிச்சிப்பூட்டான்கலாம்.  அதனால  தான்  வேறு வழியே இல்லாமல்   அரசு - பால், பஸ், மின்சார  கட்டண உயர்வு முடிவை எடுத்ததாம்.  இப்படியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கட்டண உயர்வை நியாயப்படுத்தியிருக்கிறார்.  எப்போதுமே... ''என் தலைமையிலான அரசு'' என்றும், ''என் அரசு.. நான்...'' என்றெல்லாம் கூசாமல் தன்னைப்பற்றியே பெருமையடித்துக்கொள்ளும் ஜெயலலிதா, இந்த கட்டணங்களின் உயர்வை அறிவிக்கும் போது மட்டும்  தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல், தனக்கு சம்பந்தமில்லாத வேறு அரசு செய்வது போன்று சொல்வதை கவனித்தீர்களா...?
                பொது மக்களின் பயன்பாட்டிற்காக உருவாகப்பட்டு, இன்றைக்கு  திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை உயிர்ப்பிப்பதற்கும், இந்த நிறுவனங்கள் மக்களுக்கு தொடர்ந்து தங்களது சேவையை ஆற்றிடுவதற்கும்  தான் கட்டணத்தை உயர்த்தியதாக மிகுந்த வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. 
               ஆடு நனையுதே என்று ஜெயலலிதா வருத்தப்படுவது என்பது ஒன்றும் விசித்திரமானது அல்ல...
                            இந்தப் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு  ஜெயலலிதா மத்திய அரசை எதிர்த்து போராடவேண்டியது தானே நியாயமானது. அதை விடுத்து மக்களை தாக்குவது என்பது எந்தவகையில் நியாயமானது. பொது   மக்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்வார்கள் என்ற நினைப்புத் தானே ஜெயலலிதாவிற்கு இந்த தைரியத்தைக்கொடுத்தது. 


                இதைப் பார்க்கும் போது எனக்கு ஒரு கதை தான் ஞாபத்திற்கு வருது...
அது என்னன்னா...? 


               ஒருத்தர் ஒரு கழுதைய வளர்க்கிறாரு... அந்த கழுதைய அவர் எப்போதும் அடிச்சிகிட்டே இருப்பாரு... நின்னா அடிப்பாரு... உக்காந்தா அடிப்பாரு... சாப்டா அடிப்பாரு... பொதி சுமந்து போனா அடிப்பாரு.. எறக்கி வெச்சா அடிப்பாரு... தூங்கினா அடிப்பாரு... இப்படியே எப்போதும் அடிச்சிகிட்டே இருப்பாரு...
               பக்கத்து வீட்டுல ஒரு கழுதை இருந்துது.... ஒரு நாள் இந்த கழுதை.. அந்தக் கழுதையைப் பார்த்து... என்ன உன் மொதலாளி எப்பப்பாரு உன்ன அடிச்சிகிட்டே இருக்காரு.. வெளியில போகும் போது அறுத்துகிட்டு ஓடிட வேண்டியது தானே...ன்னு கேட்டுச்சு...
              அதற்கு அந்தக் கழுதை இந்தக் கழுதையிடம், நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் கேனையன் கெடையாது. என் மொதலாளிக்கு ஒரு அழகான பொண்ணு இருக்கா... அந்த பொண்ணுக்கு ஒரு முறைப் பையன் இருக்கான்... ஒரு நாள் அந்தப் பையன் மொதலாளிகிட்ட பொண்ணு கேட்டான். 
              மொதலாளிக்கு கோபம் வந்துடுத்து. இந்தக் கழுதைக்கு கட்டிக் கொடுத்தாலும் கட்டிக்கொடுப்பேன்.... ஆனா உனக்கு கட்டித் தரமாட்டேன்னு சொல்லிட்டார்... அதனால தான் அவரு எவ்வளவு அடிச்சாலும் வாங்கிட்டே இருக்கேன்னு சொல்லுச்சாம்.


                 அழகான பொண்ணுக்கு ஆசைப்பட்ட கழுதையைப்போல, இன்றைக்கு  தமிழக மக்கள் இலவசப்பொருட்களுக்கு ஆசைப்பட்டுக்கொண்டு  அரசு எவ்வளவு அடித்தாலும், வாங்கிக் கொள்கிறார்கள். முன்பெல்லாம், ஆட்சியாளர்கள் மக்களின்  தலையில் அடித்தார்கள். முதுகில் அடித்தார்கள். இப்போது வயிற்றில் அடிக்கிறார்கள்... இந்த மக்கள் அதையும் சந்தோஷமாக வாங்கிக்கொள்கிறார்கள் என்பது தான் வயிற்றெரிச்சல் ஆன விஷயமாகும். ஒருத்தராவது போராட வருகிறார்களா...?  எல்லாம் இலவசங்கள் செய்யும் மாயம் தான்... இந்த மக்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்காகத் தான் அவர்களிடமே இப்படி கட்டண உயர்வின் மூலம் வசூல் செய்து அவர்களுக்கே இலவசங்களை அள்ளித் தருகிறார் ஜெயலலிதா என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்பது தான் வேதனையளிக்கக்கூடிய அம்சமாகும். 

                     இது எப்படி இருக்கிறது தெரியுமா...? நோஞ்சான்  நாய்க்கு, அதன் வாலையே வெட்டி, அதுக்கே சூப்  வெச்சி கொடுத்த கதையா இல்ல  இருக்கு.    

கருத்துகள் இல்லை: