ஞாயிறு, 8 ஜனவரி, 2012

மாட்டிறைச்சி உண்பது கேவலமா....?

                 பொதுவாக பத்திரிக்கையின் விற்பனை குறைந்து போனாலோ அல்லது விற்பனையை உயர்த்த வேண்டுமென்றாலோ அந்த பத்திரிக்கை   விளம்பரத்துக்காகவும், விற்பனைக்காகவும் மக்களை ஈர்க்கக்கூடிய ஏதாவது பரபரப்பானத்  தகவல்களை பிரசுரிப்பது,  அதன் மூலம் தங்கள் விற்பனையை உயர்த்திக்கொள்வது  என்பது  பத்திரிக்கைகளின் வழக்கமான ஒன்றாகும். 
            தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப்பின் பெரும்பாலான வார இருமுறை இதழ்களுக்கு எழுதுவதற்கு பரபரப்பான தகவல்களே இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டுகளும், ஊழல் வழக்கு - விசாரணைகளும் புளித்துப்போய்விட்டது. இனிமேல் அதில் ஈர்ப்பு இருக்காது. சமீபத்தில் ஜெயலலிதா - சசிகலா பிரச்சனை ஒன்று பத்திரிக்கைகளுக்கு கிடைத்து. பத்திரிக்கைகளும் இந்த பிரச்சனை நீண்டுகொண்டே போகும் என்று தான் எதிர்ப்பார்த்தார்கள். அந்த பிரச்சனையில் எந்த விளைவுகளும் இல்லாமல் சப்பென்று போய்விட்டது. அண்மையில் வந்த ''தானே'' புயல். அதில் ஒன்றும் எதிர்ப்பார்த்தது போல் காசுபன்ன முடியவில்லை. பிரேமானந்தா, நித்தியானதா போன்று  சாமியார்களைப் பற்றியும் தகவல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. சந்தன வீரப்பனும் இன்று உயிரோடு இல்லை. வீரப்பனின் சாகசங்களையும் எழுதுவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.  
                 என்ன செய்வார்கள் பாவம்...?  அதனால் தான் நக்கீரன் பத்திரிக்கை ஆட்டைக்கடித்து... மாட்டைக் கடித்திருக்கிறது.
                தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாட்டிறைச்சி சாப்பிடுகிறார் என்ற நாட்டிற்கு முக்கியமான செய்தியை வெளியிட்டிருக்கிறது. ஏதோ மாட்டிறைச்சி என்பது சாப்பிடக்கூட மாமிசம் போலவும் அல்லது மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது காட்டுமிராண்டித்தனம் போலவும் அல்லது  இதுவரை மனிதர்களே சாப்பிடாத மாட்டிறைச்சியை அதிசயமாக தமிழக முதலமைச்சர் மட்டுமே சாப்பிடுவது போலவும் விஷமத்தனமாக நக்கீரன் பத்திரிக்கை குறிப்பிட்டிருப்பதை எதிர்த்து நேற்று ஆளும் கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் நக்கீரன் அலுவலகத்தின் முன்பும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தினார்கள்.
                  நக்கீரன் ஆசிரியர்க்கும் அதிமுகவினர்க்கும் ஒரு கேள்வி... மாட்டிறைச்சி என்பது மனிதர்கள் சாப்பிடக்கூடாத மாமிசமா...? முன்பெல்லாம் உகாண்டா நாட்டின் அதிபர் இடி அமின் ''மனித மாமிசத்தை'' சாப்பிட்டதைப்  போல் இதை ஏன் பெரிதுபடுத்தவேண்டும்....?
       உலகளவில் மாட்டிறைச்சி என்பது ஒரு முக்கிய உணவு ஆகும். குறிப்பாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மாட்டிறைச்சி என்பது விரும்பி உண்ணப்படுகின்றது. இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் மக்கள் மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள், உழைப்பாளி மக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் என பல்வேறு தரப்பு மக்களும் உண்ணப்படும் உணவு மாட்டிறைச்சி. இது இந்த நாட்டு மக்களின் பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம்   சம்பந்தப்பட்டது.  அப்படிப்பட்ட இவர்களெல்லாம் உண்ணக்கூடிய மாட்டிறைச்சியை உண்ணுவது கேவலமானது என்று நக்கீரன் பத்திரிக்கை நினைக்கிறதா...? அல்லது அப்படி சாப்பிடுவதாக எழுதியதால் முதல்வரின் கவுரவம் குறைந்துவிட்டதா...? 
                 முதலமைச்சரும் அதிமுகவினரும் பெருமைப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இங்கிலாந்து மகாராணி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையில் மாட்டிறைச்சி தான் சமைக்கப்படுகிறது. மகாராணியும், அவரது கணவரும் அதைத்தான் விரும்பி உண்ணுவார்களாம்.  அதனால் அதிமுகவினர் இதை பெரிது படுத்தியிருக்கவேண்டாம்.
                அதே சமயத்தில், நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. பத்திரிக்கை சுதந்திரம் என்பது அடுத்தவரை விமர்சனம்செய்யும் போது அவரின் மூக்கு நுனி வரை தான் அந்த சுதந்திரம் என்பது நீளவேண்டும் என்பதை நக்கீரன் அடிக்கடி மறந்துவிடுவதுண்டு. தனிப்பட்டவரின் சொந்த விஷயங்களை விமர்சனம் செய்யும்  போது குறிப்பாக பெண்களைப்பற்றி விமர்சனம் செய்யும் போது  பத்திரிக்கை தர்மத்தையும், எல்லையையும் மீறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படி தனிப்பட்டவர்களின் சொந்தவிஷயங்களை கிளறி எழுதும் போது  அது பத்திரிக்கைக்கு விளம்பரத்தை தேடித் தராது. அதிகமான விற்பனையையும் உயர்த்தித் தராது. மாறாக படிப்பவருக்கு அருவருப்பையே உண்டுபண்ணிவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.  

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

மனிதனையே சுரனையில்லாமழு ஆக்குகிறார்கள். தேவையென்றால் அவனை கலட்டியும் விட்டுவிடுவார்கள், இல்லையென்றால் கதையை முடித்துவிடுவார்கள். ஆனால் வெளி உலகுக்கு தான் ஒரு மாமிசம் திங்காத மாமி என்பதைப்போல காட்டுவார்கள். இவர்கள் கதை தெரியாதா.. பார்ப்பனர்கள் என்று முட்டையை வெஜ் என்று சொன்னார்களோ அன்றே எல்லாம் முடிந்து விட்டது. துபாய் வண்டு பாருங்கள். எல்லா ஐயனும், ஆட்டுக்குட்டியும் முட்டியிளிருந்து நாட்டு சரக்கு வரை அடிக்கிறார்கள். ஆதாரம் வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள்.. ...AZIFAIR-SIRKALI.blogspot.காம்

veligalukkuappaal சொன்னது…

1)கோமாதாவின் கறியா? ஐயோ குடிமுழுகி போச்சே என்று கும்மரிச்சம் போடுபவர்கள் கேரளாவுக்கு போகட்டும், அங்கே இறைச்சி என்றால் மாட்டிறைச்சிதான், ஆட்டுக்கறியின் பயன்பாடு குறைவே. புரியவில்லையா? அங்குள்ள இந்துக்களின் பெரும்பான்மையோர் உண்பது மாட்டுக்கறிதான். கேரள அரசு அலுவலக கேண்டீன்களிலும் மாட்டுக்கறி உண்டு! கேரளா! Gods Own Country! அதாவது கடவுளர்களின் தேசம் என்பதறிக!
2)இந்தியர்களாகிய நாம் உபயோகிக்கும் அத்தியாவசிய உபகரணங்கள் அனைத்தும் மாட்டுக்கறி சாப்பிடும் வெளிநாட்டுக்காரன் கண்டுபிடித்தவைதான்...மின்சாரம்,மின்சாரபல்பு,கார்,சைக்கிள்,ரயில்,ஆகாயவிமானம்,வானொலி,தொலைக்காட்சி... போக்ரானில் வெடிக்கப்பட்ட 2 அணுசக்தி (சோதனை), தற்போது ‘வேணுமா வேண்டாமா’ என்று பேசப்படும் அணுசக்தி,கார்கிலில் பாரத்மாதா கீ ஜே என்று முழங்கும்போது நமது வீரர்களின் கையில் இருந்த துப்பாக்கி...இன்னபிற சமாச்சாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்! மன்மோஹன் சிங், சிதம்பரம் கும்பல் தினசரி காலையில் வழிபடும் அமெரிக்க அதிபர் மாட்டுக்கறி சாப்பிடுபவர்தான்!
3)நாங்க சுத்த்த்த்த சைவம், காய்கறி மட்டும்தான் சாப்டுவோம் என்று சொல்லிக்கொண்டே மனிதர்களை நடுவீதிகளில் கத்திகளால் கட்டாரிகளால் பிளந்து உயிரை எடுப்பவர்கள் மனிதர்களா? மாட்டுக்கறியும் சாப்பிட்டுக்கொண்டு சகமனிதர்களின் துயரம் கண்டு வருந்தி கசிபவர்கள் மனிதர்களா?

4)இறுதியாக:ஹரியானாவில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்த தலித்துக்களை உயிரோடு கொளுத்தியவர்கள் சைவமா அசைவமா?
...இக்பால்

agnisivakumar சொன்னது…

நக்கீரனை கொளுத்துவதில் எந்த தவறும் இல்லை காரணம் நாட்டில் எத்தனியோ பிரச்சனை இருக்கும் போது ,சோறு தின்னும் செய்தியை எழுதி காசு பர்க்கனைப்பதை விட நிறைய தொழில் இருக்கிறது பேசாமல் நக்கீரன் கோபால் அதுமாதிரி முயற்ச்சிக்கலாம் நல்லாவே கல்லாக் கட்டலாம்

tamilan சொன்னது…

பசுவின் புத்திரர்கள்!
பசுவை நாம் தெய்வமென்று மதிக்கிறோம். முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் குடி கொண்டிருப்பதை நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.
நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால் நமது நாட்டில் இன்று மாமிசத்திற்காக தினசரி ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொல்லப்படுகின்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசு துணிச்சலாக பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்தப் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டில் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் பசுக்களைக் கொல்வோர்க்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.

பசுக்களைக் கொல்வதற்காக வாகனங்களில் ஏற்றிச் செல்வோர்; பசுக்களை வாங்கி விற்கும் ஏஜெண்ட் உள்ளிட்ட அனைவருமே குற்றவாளிகளாகக் கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. மத்தியப் பிரதேச அரசை மனமாரப் பாராட்டுகிறோம் - இப்படி ஒரு தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம் (27.1.2012) எழுதுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

பசுவின் உடலில் உறையாத கடவுள்களே கிடையாதாம். அது கோமாதாவாம். அதனால் கொல்லக் கூடாதாம்.
இதன் மூலம் இந்து மதவாதச் சிந்தனையுடன்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது வெளிப்படை! பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் இந்துத்துவாவின் தாண்டவம்தான் நடக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

உணவுப் பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் அரசு தலையிடுவது என்பது தவறானது.
உலகம் முழுவதும் மாட்டுக்கறி உணவு முதன்மையான இடம் பெற்றுள்ளது. கிடைக்கும் சத்துள்ள உணவில் ஓரளவு மலிவானது மாட்டுக்கறியே!
சாதாரண மக்கள் அதைப் பயன்படுத்தி வருவதைத் தட்டிப் பறிக்க இவர்கள் யார்?
செத்துப் போன பசு மாட்டின் தோலை உரித்த அரியானாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட தோழர்களைப் படுகொலை செய்தவர்கள் இந்தச் சங்பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
மனிதர்களைவிட செத்துப்போன பசுவின் புனிதம் இவர்களுக்கு முக்கியமானது என்பதிலிருந்தே - இவர்களுக்கு மனிதப் பண்பு அறவே கிடையாது என்பது விளங்கிடவில்லையா?


பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?

மாடுகளில் அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை? காளை மாடு சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா?
எருமைக் கிடா எமனின் வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிடலாமா?
சேவல் முருகனின் வாகனமாயிற்றே - அதன் கறியை உண்ணக் கூடாது என்று போராட்டம் நடத்திட முன் வருவார்களா?

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார். அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர். நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார். மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!
பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக் கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று மடக்கினார் விவேகானந்தர். ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே என்றார் பிரச்சாரகர். அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்? என்று கேலியாகச் சொன்னார்.


மாட்டுக்குப் பிறந்தவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மத்தியப் பிரதேச சட்டத்தைப் பார்த்தால் தெரிகிறதே!
------------------- "விடுதலை” தலையங்கம் 21-1-2012