எச்சரிக்கை... எச்சரிக்கை... எச்சரிக்கை... செய்கின்றோம்...
நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் மேலும் தீவிரமாக அமலாக்கி வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 2 அரசுக்கு, நேற்று பிப்ரவரி 28 - ஆம் தேதி வரலாறு காணாத வேலை நிறுத்தத்தின் மூலமாக இந்தியத் தொழிலாளி வர்க்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சி வேறுபாடின்றி, சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் இந்த மகத்தான வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர்.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கூட்டாக விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதிலும் 10 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றனர். ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், எச்எம்எஸ், ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, தொமுச, சேவா ஆகிய மத்திய தொழிற்சங்கங்களும் பல்வேறு மாநிலங்களில் இயங்கும் பிராந்திய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தின.
தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக, முதலாளித்துவத்தின் தாக்குதல்களுக்கு எதிராக உலகெங்கிலும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் உச்சத்தை எட்டிவரும் நிலையில், இந்தியாவிலும் வரலாற்றில் முதல்முறையாக அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு நின்று, தொழிலாளர் உரிமைகளுக்காக உரத்து முழக்கமிட்டுள்ளன.
இந்திய பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக நிலக்கரி, இரும்பு, பெட்ரோலியம், தொலைதொடர்பு, பாதுகாப்பு, வங்கிகள், இன்சூரன்ஸ், மின்சாரம், போக்குவரத்து, துறைமுகம், ஏற்றுமதி-இறக்குமதி, அங்கன்வாடி, கட்டு மானம், செங்கல் சூளைகள், பீடித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான துறைகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் என 10 கோடிக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் இந்த மகத்தான வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்று வெற்றிபெறச் செய்துள்ளனர்.
இந்த மகத்தான வேலைநிறுத்தப் போராட்டம் விலைவாசி உயர்வை கண்டித்தும், பொதுவினியோக முறையை விரிவுப்படுத்தவும், தொழிலாளர் சட்டங்களை கறாராக அமலாக்கவும், முறைசாரா தொழிலாளருக்கான சமூக பாதுகாப்புக்கான நிதியம் உருவாக்கவும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என தீர்மானிக்கவும், புதிய பென்சன் திட்டத்தை கைவிடவும், போனஸ், பணிக் கொடை போன்ற பணப்பயன்களுக்கான வருமான வரம்புகளை நீக்கவும், உலகதொழிலாளர் ஸ்தாபனத்தின் இணக்க விதிகளான தொழிற்சங்க உரிமை, கூட்டுபேர உரிமையை நிலைநிறுத்தவும் வலியுறுத்தி முழக்கமிட்டது.
இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான பொது வேலைநிறுத்தப் போராட்டம் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறது. இந்திய வரலாற்றில் இத்தனை பெரும் பொது வேலைநிறுத்தம் இதுகாறும் நடந்ததில்லை. இன்னும் குறிப்பாக ஆளும் கட்சி தொழிற்சங்கமும், பிரதான எதிர்க்கட்சியின் தொழிற்சங்கமும், இடதுசாரி தொழிற்சங்கங்களும், பிராந்திய முதலாளித்துவக்கட்சிகளின் தொழிற்சங்கங்களும் ஒரே குரலில், முதல்முறையாக பொது வேலை நிறுத்தத்தை நடத்தியுள்ளன என்பதை பார்க்கும் போது இந்த அரசின் மக்கள் விரோத - தேச விரோத போக்கு என்பது மக்களை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது - வாட்டியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.