திங்கள், 31 அக்டோபர், 2011

7 - ஆம் அறிவு - ஆறாம் அறிவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்...!

               பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால் சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்கள் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. வெறும் ஆபாசங்களை  மட்டுமே வியாபாரமாக்கி  வருமானத்தையும் லாபத்தையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த தமிழ்த் திரைப்படங்கள் இப்போது தான் சமூகத்தை எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. சமூகத்திலிருக்கும் அவலங்களையும் படம் பிடித்து காட்டத் தொடங்கியிருக்கின்றன. காதலில் ஆபாசத்தை கலந்து  கொச்சைப்படுத்தி வந்த திரைப்படங்கள் இன்று, காதலைக்கூட மென்மையாக, அழகாக, தரமானதாக காட்டத்தொடங்கியிருக்கின்றன.   அதற்கு காரணம் இப்போது வருகிற இளையத்தலைமுறை இயக்குனர்களின் சிந்தனையும், பார்வையும், அவர்கள் கற்ற பாடமும்  தான். 
              இப்படிப்பட்ட சூழலில் தான், சமீபத்தில் தீபாவளியன்று வெளியான இரண்டு தமிழ்ப் படங்களில் ஒன்று,  இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் மூளையில்   உதித்த ''ஏழாம் அறிவு'' என்ற திரைப்படம். வரலாற்று ஆராய்ச்சி - அறிவியல் ஆராய்ச்சி என பல ஆராய்ச்சிகளை  செய்து எடுக்கப்பட்ட திரைப்படமாக விளம்பரம் செய்யப்பட்டு, இளைஞர்களிடையே  பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை உண்டுபண்ணி திரையிடப்பட்ட  திரைப்படம் தான் இது.  அதனால் இளைஞர் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் படம் முழுதும் ஒரு ''உடான்ஸ்'' படமாக போனதில் இளைஞர்களுக்கு  ஒரு ஏமாற்றம் தான். வழக்கம் போல் காதில் பூ சுற்றுகிற வேலையை தான் இந்த படமும் செய்திருக்கின்றது.  
            இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், ''உண்மைக் கதை'' என்ற பெயரில் ''ஆறாம் அறிவு'' கூட  இல்லாமல் எடுக்கப்பட்டது இந்த ''ஏழாம் அறிவு'' திரைப்படம்.
                 எப்போதோ மன்னர்கள் ஆட்சி காலத்துல,  இந்தியாவிலேயே  பொறந்து ஆட்சி செஞ்சிகினு  வந்த போதிதர்மன் என்ற பல்லவ மன்னன்னு  ஒருத்தன்,  சீனாவுல  கொடிய உயிர்கொல்லி நோயினால  பாதிச்ச ஜெனங்களுக்கு  தன்னுடைய மருத்துவ திறனால் சீன மக்களை குணமாக்கியட்டாராமா..! இவனுடைய மருத்துவம் திரும்பவும்  இந்தாயாவுக்கே போயிடக்கூடாதுன்னு  சீனர்களே அவனுக்கு விஷம் கொடுத்து கொன்று  சீனாவிலேயே புதைச்சிட்டாங்களாம். இப்படி தானுங்க     அந்த ''கதை''  ஆரம்பமாவுது.
             பிறகு போதிதர்மனின் மரபணு சோதனைங்கறாங்க.. அந்த போதிதர்மனின் வாரிசான இன்றைய நூற்றாண்டு இளைஞன் ஒருத்தன கண்டுபிடிக்கறாங்க. அந்த பையன் கூட ஒப்புரான போதிதர்மன் மாதிரியே இருக்கானுங்க. இதெல்லாம்  நான் மெய்மறந்து பாத்துகிட்டு இருந்தேனுங்களா..! என் காத கவனிக்காம விட்டுட்டேனுங்க... திடீர்னு காதுல பார்த்தா... அய்யோ எவ்வளவோ பெரிய பூ என் காதுல சுத்தி வெச்சிருக்காங்க.. நான் பயந்து போயி பக்கத்துல இருக்கிறவங்கல பாத்தா  அவங்க காதிலேயும் அப்படி தான் பூவா சுத்தியிருக்காங்க...!
            இநதியாவுல  ஏதோ ஒரு மூலையில் இந்த பையன கண்டுபிடிச்ச விஷயம்  எப்படியோ  சீனாவுல  தெரிஞ்சு போயிடுதாம்.  அங்கிருந்து அவனை கொன்று சாகடிக்க ஒரு வில்லனை   அனுப்புராங்கலாம். அப்படி வருபவன் சீனாவிலிருந்து சும்மா வரவில்லை. இந்தியாவில் கொடிய விஷநோயைப் பரப்புவதற்கு கூடவே நோயை பரப்பும் வைரசையும்  கொண்டு வருகிறானாம்.
அந்த வைரசை ரோட்டில் திரியும் நாய்க்கு செலுத்துகிறானாம். இதுக்கு பேர் தான் Bio-war - உயிரியல் போராம். 
              இதை அப்படியே ஒரு சினிமாத்தனமாக - முட்டாள்தனமாக பார்க்கமுடியாது. இந்த திரைப்படத்தில் இல்லாத ஒன்றை சீனாவோடு சம்பந்தப்படுத்தி சீனாவை வம்புக்கு இழுப்பானேன். 
           ஏற்கனவே அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய மக்களை சீனாவிற்கு எதிராக திருப்பிவிடும் வேலையில் இறங்கியிருக்கிறது. அதற்கு பத்திரிகை மற்றும்  தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களை பயன்படுத்தி சீனாவிற்கு எதிரான பொய்ப்  பிரச்சாரத்தை செய்து வருகிறது. மக்களும் அதை உண்மை என்று நம்பும்படியாகத் தான் செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான், சீனாவைப்பற்றி தவறான தகவல்களை இந்தப் படம் தருகிறது.
            அறிவுப்பூர்வமான சிந்தனை இல்லாத அறிவியல் நுணுக்கங்களும், விளைவுகளை எண்ணாத வரலாற்று திரிபுகளும் எதிர்மறையாக அமைந்துவிடும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.  அவைகளை  யாராலும் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது.
             பயோ - வார் என்கிற உயிரியல் போர் என்பது இன்றைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்துகொண்டிருக்கிற வேலை என்பதை முதலில் அந்த திரைப்படத்தை தயாரித்தவர்களும், இயக்குனரும், கதாநாயகனும் தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு நாட்டைப்பற்றியோ அல்லது ஒரு பொருளைப் பற்றியோ எழுதுகிறோம் என்றால் முதலில் அதைப்பற்றிய தகவல்களை தேடவேண்டும். நிறைய படிக்கவேண்டும். பிறகு தான் அதைப்பற்றியான சரியான முடிவுக்கு வரமுடியும்.
             அப்படியெல்லாம் செய்யாமல் எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு அரை வேக்காடு தான். ''7 - ஆம் அறிவை'' எடுப்பதற்கு முன் ஆறாம் அறிவை பயன் படுத்தி இருக்கவேண்டும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
( பயோ-வாரைப் பற்றி பிறகு எழுதுகிறேன்..)

ஜெயலலிதா காட்டும் விசுவாசம்...!


விசுவாசம் : ஒன்று                                   

           மறைந்த முத்துராமலிங்கதேவர் பிறந்த நாளையொட்டி நேற்று  சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு  தமிழக முதல்வர் ஜெயலலிதா  மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முதல்வரின் தோழி சசிகலா,  அமைச்சர் பெருமக்கள், சென்னை மேயர் மற்றும் பெருவாரியான அதிமுக தொண்டர்கள் புடைசூழ நடைபெற்றது.
                  இதே சமயத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் பத்து பேர் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். இந்த பத்து பேரும் மக்கள் பணத்தை செலவு செய்து அங்கு சென்று அஞ்சலி செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். 
              ஜெயலலிதாவின் இந்த செயலை பார்த்து முத்துராமலிங்கதேவர் ஒன்றும் மனம் குளிரப்போவதில்லை. ஆனால்   யாரை குளிரவைக்கிற  வேலை இது..?  யாருக்கு காட்டுகிற விசுவாசம் இது...? 
                   பரமக்குடியில் இமானுவேல் சேகருக்கு அஞ்சலி செய்ய இந்த அமைச்சர்கள் போகாததேன்..? அஞ்சலி செய்ய அமைதியாக கூடிய மக்களை கலவரப்படுத்தி, ஏழு பேரை சுட்டுக் கொன்றது  ஏன்..?  யாருக்கு காட்டுகிற விசுவாசம் இது..?
                இது ஓட்டுக்கான விசுவாசமா...? அல்லது  தன் தோழி சசிகலாவுக்கு காட்டுகிற விசுவாசமா...?
         விசுவாசமாக ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா  விசுவாசம் காட்டப்போவது  எப்போது...? இதை நான் கேட்கவில்லை மக்கள் கேட்கிறார்கள். பதில் சொல்வாரா ஜெயலலிதா...?

விசுவாசம் : இரண்டு                                

               இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஊழலை பக்கத்துல வெச்சிகிட்டே ஊழலை ஒழிக்கப் போறேன்னு ஒரு ஆசாமி ரதத்தை கெளப்பி விட்டுட்டு இவரு மட்டும் விமானத்துல ஏறிப் பறந்து போகவேண்டிய ஊருக்கு போயிடுவாராம். அந்த ரதம் மட்டும் பாவம் தனியா அந்த ஊருக்கு வந்து சேர்ந்துடுமாம். இந்த ஆசாமி வழியில கைய காட்டி ரதத்தை நிறுத்தி ஏறிக்குவாராம்.  ஊருக்குள்ள வரும் போது கைய ஆட்டிகிட்டே போவாராம்.  ஆசாமி மட்டும் விமானத்துல பறந்துடுராருங்க... அந்த ஆசாமி வேறு யாருமில்லை.. பிரதமர் பதவிக்கு அலைஞ்சிகிட்டு இருக்கிற அத்வானி தான்..  ஆனா ரதம் மட்டுமே இந்தியா முழுதும் சுத்திகிட்டு இருக்கிறதா சொல்லுறாங்க...
              அந்த ரதம் தான் சென்ற வாரம் தமிழகத்தில் மதுரைக்கு வந்தது. அத்வானியும் விமானத்தில் மதுரை வந்து சேர்ந்தார். பின் மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் போது திருமங்கலம் அருகே   வழக்கம் போல் வெடிகுண்டு ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். தமிழகத்திற்கு அத்வானி வருகிறார் என்றால் அவருக்கு முன்னாடியே  வெடிகுண்டும் வந்து உட்கார்ந்துவிடும். அதுபோல் தான் இம்முறையும் அவர் போகும் பாதையில் பாலத்திற்கு அடியில் வைக்கப்பட்டதாக ஒரு பைப் வெடிகுண்டினை கண்டெடுத்திருக்கிறார்கள்.
               அதை பார்த்த பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கூட கண்டுகொள்ளவில்லை. ஆனால் தமிழக முதல்வர்  ஜெயலலிதா மட்டும் பதறிவிட்டார். உடனே விசாரணைக்கு உத்திரவு இட்டார்.
               அதுமட்டுமல்ல, அந்த பாலத்திற்கு அடியிலிருந்து பைப் வெடிகுண்டை கண்டுபிடித்த இரண்டு அதிபுத்திசாலிகள் அதிமுகவை சேர்ந்தவர்களாம். உடனே தன் குழந்தைகள் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார்கள் என்று அம்மா அவர்களை அள்ளி உச்சி முகர்ந்திருக்கிறார். இன்று அவர்களை சென்னைக்கு அழைத்து இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
                  இன்றையிலிருந்து அதிமுக புத்திசாலிகள் எல்லாம் மூலைமுடுக்கெல்லாம் வெடிகுண்டை தேட ஆரம்பித்துவிடுவார்கள். இனி மேல் தமிழ்நாட்டுல  வெடிகுண்டா கெடைக்கப்போவுது பாருங்க...
           அது சரி... ஜெயலலிதாவின் இந்த செயலும் யாரை திருப்பிப்படுத்த..? ஏற்கனவே காவிக்கட்சியின் பக்கம் இவருக்கு ஒரு தனி விசுவாசம் உண்டு..  அந்த விசுவாசம் தானோ இது..? அந்த குண்டு வெடிக்கக்கூட இல்லை. அதற்குள் இவ்வளவு ஆர்ப்பாட்டம்.. பரமக்குடியில் ஏழு அப்பாவிகளை போலீஸ்காரர்களின் குண்டுகள் துளைத்தனவே, அந்த போலீஸ்காரர்கள் மீது ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார்...? அது யாருக்கு காட்டுகிற விசுவாசம்..?  இது யாருக்கு காட்டுகிற விசுவாசம்..? இதை  நான் கேட்கவில்லை... மக்கள் கேட்கிறார்கள்...! பதில் சொல்லுவாரா ஜெயலலிதா...?

வெள்ளி, 28 அக்டோபர், 2011

13 - வது உலக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சி மாநாடு...!

                        13 - ஆவது சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சி மாநாடு வருகிற டிசம்பர் 9 முதல் 11 - ஆம் தேதி வரை கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்சில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. உலகத்திற்கே கலங்கரைவிளக்காய் விளங்கிய சோவித் யூனியன் சிதறுண்டு இருபது ஆண்டுகள் கழிந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் முதலாளித்துவத்துக்கு எதிரான மக்களின் எழுச்சி தானாக ஓங்கி ஒலிக்கும் சூழ்நிலையில்  இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதிலும் ''சோசலிசமே எதிர்காலம்'' என்ற முழக்கத்தோடு  இந்த மாநாடு  நடத்தப்படுவது என்பது தற்போதைய சூழ்நிலைக்கு மிகப்பொருத்தமானதாகும்.
                 இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, மாநாட்டின் செயற்குழுக் கூட்டம்  சென்ற அக்டோபர் 22 - 23 தேதிகளில் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ருட்டில் நடைபெற்றது. லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி தான் இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் லெபனான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும், கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி, ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி, பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, போர்ச்சுகீசியக் கம்யூனிஸ்ட் கட்சி, தென்னாப்பிரிக்கா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிரியா கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களோடு இந்தியாவிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீதாராம் யெச்சூரியும் கலந்துகொண்டார். 
              மாநாட்டின் சிறப்பான ஏற்பாடுகளைப் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 
             இந்த மாநாடு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான... உலகமயத்திற்கு எதிரான... முதலாளித்துவத்துக்கு எதிரான உலக மக்களின் சக்திகளை திரட்டுவதற்கும், உலக மக்களை சோசலிசப் பாதையில் அழைத்துச்செல்வதற்கும் சரியான முறையில் வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.

உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை - இது அரசே செய்யும் பயங்கரவாதம்...!

                   ஒரு நாட்டின் சுகாதாரம் - மருத்துவம் என்பது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. இந்த அத்தியாவசியத் தேவைகளை ஏற்பாடு செய்ய வேண்டியது  அரசின் கடமையாகும். இதைத்தான் ஐநா சபையின் 1948  - ஆம் ஆண்டு மனித உரிமை பிரகடனம் வலியுறுத்துகிறது. 
                 ஆனால் நமது நாட்டில் நடப்பது என்ன...? தாராளமயம் - தனியார்மயம் -  உலகமயம் காரணமாக, அவைகளை அமெரிக்க எஜமான விசுவாசத்தோடு நமது ஆட்சியாளர்கள் பின்பற்றுவதால் இன்றைக்கு நம் நாட்டில் நடப்பது என்ன..? அந்நிய - உள்நாட்டு தனியார் மருந்து கம்பெனி முதலாளிகளும், தனியார் மருத்துவமனை முதலாளிகளும் கொள்ளை இலாபம் அடிப்பதற்கான ஏற்பாட்டினை அரசே செய்து தருகிறது என்பது தான் இன்றைக்கு நம் நாட்டில் நடக்கின்ற உண்மையாகும். அரசாங்கம் உயிர்காக்கும் மருந்து விஷயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை பாருங்கள்...!
       
தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்பனை :
   
            தடைசெய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

உயிர்காக்கும் மருந்துகள் மீது வரி விதிப்பு :

தடுப்பூசி மற்றும் மருந்துகள் தயாரிக்கும் அரசு நிறுவனங்கள் மூடல் :

அனுமதி பெறாத மருந்து தயாரிக்கும் கம்பெனிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது :

அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் 
மருந்துகளின் பற்றாக்குறை :

 புதிய மருந்துகள் - தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு - 
சோதனை எலிகளாக இந்தியர்கள் :

இதன் காரணமாக கோடிக்கணக்கான இந்தியர்கள் 
கொல்லப்படுவார்கள். இதுவும்  ஒருவகை பயங்கரவாதச் செயலே... 
பயங்கரவாதிகளால் வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்து 
கொல்லப்படுவதை விட இந்த செயல் மிக மோசமானது.
எனவே இதுவும் பயங்கரவாதச் செயலே.. 
இது அரசே செய்யும் பயங்கரவாதச் செயல் என்பது தான் 
மக்கள் நினைத்துப் பார்த்திராத பயங்கரம்...

இன்னும் எழுதுகிறேன்...

திங்கள், 24 அக்டோபர், 2011

கருணாநிதி - ஜெயலலிதாவிற்கு மாற்று அவசியம் - தமிழ்நாடு என்ன இவர்களின் குத்துகை நிலமா...?

               1967  - ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தை பிடித்து ஆட்டிப்படைப்பது இந்த திராவிடக்கட்சிகள் தான். அண்ணாவில் தொடங்கி கருணாநிதி, எம்ஜிஆர்., ஜானகி, ஜெயலலிதா வரை முதலமைச்சர்களாக தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் இவர்கள் சிறிது நேரம் இளைப்பாறிய போது, நெடுஞ்செழியன், ஓ. பன்னிர்செல்வம் போன்றவர்கள் இவர்கள் சார்பில் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். ஆக திராவிடக்கட்சிகளின்  ஆதிக்கம் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழக மக்கள் தங்களுக்கான முதலமைச்சரை சினிமா கொட்டகையில் தான் தேடுகிறார்கள் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.
                சிறிது காலம் தான் ஆட்சி செய்தார் என்பதனால் அண்ணாதுரையைத் தவிர மற்ற அனைவரும் லஞ்ச - ஊழலில் கைதேர்ந்தவர்கள் தான். அதிலும், எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு இன்று வரை பார்த்தால், மிகப்பெரிய அளவில் ஊழல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் மாறி மாறி ஐந்தாண்டுகொரு முறை முதலமைச்சர்களாக வந்து போகிறார்கள். ஒவ்வொரு முறையும் இவர்களின் ஊழல் அட்டகாசங்கள் அதிகரித்துக்கொண்டு தான் போகிறது.
               ''திருடரா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது...'' கருணாநிதியோ ஜெயலலிதாவோ   திருந்தமாட்டார்கள். ஆனால் இவர்களை தேர்ந்தெடுக்கும் தமிழக மக்களாவது திருந்துவார்களா என்றால் அவர்களும் திருந்த முடியாமல் இருக்கிறார்களே என்பது தான் வருத்தமாக இருக்கிறது. ''மாற்று சிந்தனை'' என்பது இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிக மிக அவசியமானது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
                திராவிட இயக்கம் என்பது  ஆரம்பத்தில் இந்தி எதிர்ப்பு உணர்வை கிளப்பிவிட்டு அரசியல் நடத்தி ஆட்சிக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது...? தமிழ்.. தமிழ்.. என்று கூப்பாடு போட்ட இவர்களின் ஆட்சியில் தானே தமிழகம் முழுதும் அந்நிய மொழியான ஆங்கிலம்  வளர்ச்சியடைந்திருக்கிறது. தாய்மொழிக் கல்விக்கு பதிலாக ஆங்கிலவழி கல்வி என்பது இவர்கள் ஆட்சியில் தான் செழுமைபெற்றது. இன்றைய இளையத்தலைமுறையினருக்கு தாய் மொழி மறந்து போனதற்கு இந்த திராவிடக்கட்சிகளே காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இவர்கள் ஆட்சியில் தான் ஆங்கிலம் வாழ்கிறது. தமிழ்  செத்துக்கொண்டிருக்கிறது. தாய் மொழி அழிந்து போனால் அந்த சமூகம் அழிந்து போகும். தமிழகம் அழிந்து போகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
              திராவிட இயக்க ஆட்சிக்காலத்தில் தான், தங்களை  மாமன்னர்களைப் போல நினைத்துக்கொண்டு,  குடும்ப உறுப்பினர்களை  எல்லாம் ஆட்சியில் பங்கெடுக்கச் செய்வது. குறுநில மன்னர்களைப் போல் தமிழகத்தைப் பங்கு போட்டுக்கொள்வது. கூட்டுக்கொள்ளை அடிப்பது. ஆனாலும்  கூச்சப்படாமல் மக்களோடு  நடமாடுவது. இது தான் கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிகளின் கலாச்சாரமாகவும், பண்பாடாகவும் இருந்துவருகிறது.
               தங்களின் ஆட்சிக்கும், கூட்டுக்கொள்ளைக்கும் பங்கம் வராமல் திமுகவும்  அதிமுகவும் தங்களுக்குள் ஒரு ரகசிய உடன்பாட்டோடு தான் தமிழகத்தில் அரசியல் நடத்துகிறார்கள். இந்த இருவருக்கும் மாற்று அவசியம் தேவை என்பதை தமிழக மக்கள் உணரவில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த மக்களின் கோவணத்தை  உருவி அம்மணமாய் நிற்கவைத்தாலும்  கைத்தட்டி கும்மாளம் போடும் மக்கள் தான் இவர்கள்.
                 இந்த மாற்று சிந்தனையை மக்களிடம் உருவாக்கவேண்டும். அதற்கான காலம் கனிந்திருக்கிறது. நேற்று முன்தினம் தான் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக - அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாகவேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இவரின் இந்தக் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்களும் வரவேற்றிருக்கிறார்.
              அந்த அடிப்படையில், காங்கிரஸ் - பாரதீய ஜனதா கட்சி போன்ற தேசியக்கட்சியும், திமுக - அதிமுக போன்ற மாநிலக்கட்சியும் அல்லாத ஒரு  மாற்று அணியை உருவாக்கவேண்டும். அந்த மாற்று அணி என்பது இடதுசாரிகளின் வழிகாட்டுதலோடு நடைபெறவேண்டும். அப்போது தான் சுயநலமில்லாத - போராட்டகுணமிக்க அணியாக அது இருக்கும். அப்போது தான் சட்டமன்றத்திலும், சட்டமன்றத்தின் வெளியிலும் ஒரு ஆக்கபூர்வமான - பலமான எதிர்க்கட்சிகளைக்  கொண்ட மாற்று அணியாக மாறும். 
               இந்த மாற்று அணிக்கான மாற்று சிந்தனையை வைகோ, விஜயகாந்த், திருமாவளவன், தா. பாண்டியன் போன்றவர்களும் யோசிக்கவேண்டும். அப்போது தான், வெறும் கவர்ச்சி அரசியலிலேயே ஏமாந்து  போகும் தமிழகம்  இனிமேலாவது  ஒரு நல்ல திசை நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

எதிர்காலத்தில் மிகப்பரிய உணவு நெருக்கடி ஏற்படும்...!

                  உலகநாடுகளை சுரண்டி தான் மட்டுமே வளம்பெற்று, உலகமயம் - தாராளமயம் என்ற பெயர்களால் பல துருவ உலகத்தை, ஒரு துருவ உலகமாக மாற்றத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் காரணமாக உணவு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவருகிறது. 
         எதிர்காலத்தில் மிகப்பெரிய உணவு நெருக்கடி என்பதை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். அதே சமயத்தில், கீழ்கண்ட காரணங்களும் உணவு பற்றாக்குறைக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 
         (1)  மக்கள் தொகைப் பெருக்கம் -  1960இல் 3 பில்லியன் 
                                      2011இல் 7  பில்லியன்.
        (2)  மனிதர்கள் வாழும் சராசரி வயது - 1960இல் 53 வயது 
                                        2010இல் 69  வயது.
   (3) தொழிற்சாலைகள், வீட்டுமனைகள்  வளர்ச்சியால் 
                         சுருங்கி வரும் விளைநிலங்கள்.
   (4) உலகில் காடுகள் அழிப்பு மிகப் பெரிய அளவில் 
       நடைபெறுவதால் மழையளவு குறைந்து விளைச்சல் பாதிப்பு. 
   (5) கச்சா எண்ணெய் விலையேற்றம்உணவு 
       பொருட்களின் விலையை வெகுவாக பாதிக்கிறது. 
       இந்த விலையேற்றம் செயற்கையாக நிர்ணயக்கப்படுகிறது.
   (6) சொகுசு வாழ்க்கையின் காரணமாக  மோட்டார் 
       வாகன பயன்பாடு அதிகரித்து காற்று மாசுபாடு, 
       தொழில் வளர்ச்சியால்   நிலம், நீர்    மாசுபாடு 
       இதனால் சுற்றுச்சுழல் மாசடைந்து பருவநிலை மாற்றம் 
       ஏற்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை
   (7)  உணவு உற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவைகள் அனைத்தும்  
       ஏகாதிபத்தியத்தின் கையில்  உள்ளதால் தேவையான  அளவு   
       உணவு  உற்பத்தி இருந்தும் பட்டினியாக மக்கள்.  
       உச்ச நீதிமன்றம் வீணாகும் தானியங்களை 
       ஏழைகளுக்கு கொடுக்கச் சொல்லியும் நமது 
       பிரதமர் மன்மோகன் சிங் தரமறுத்து அழிச்சாட்டியம் 
       செய்ததை நாம் நன்கு அறிவோம்.
  (8)  ஆப்பிரிக்க நாடுகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் 
       ஏகாதிபத்திய நாடுகளுக்கு குத்தகை / விற்பனை செய்யப்பட்டு 
      பயோ-டீசல் உற்பத்தி செய்யப்படுவதும்,                    
      தென்அமெரிக்காவில்  உணவு  பண்டங்களிலிருந்து எத்தினால் 
       உற்பத்தி    செய்யப்படுவதும்...
  (9) முக்கியமான விதைகள், உரம், பூச்சிகொல்லி மருந்துகள்    
      போன்றவைகள் கொள்ளையடிக்கும் பன்னாட்டு கம்பெனிகள்

   (10 )  உலக வங்கி மற்றும்  பன்னாட்டு நிதி நிறுவனங்களின்  
      கேள்விகுறியாகும் நம்பகத் தன்மை.

   (11)  வளர்ந்த நாடுகள் விவசாயிகளுக்கு 70% மேல் மானியம் தந்து  
     அவர்களைக் காப்பாற்றி கொண்டு வருகையில்,  வளரும் நாடுகளை 
     மானியம் தர  கூடாது என வற்புறுத்தி தங்கள் நாட்டு உணவு 
     பொருட்களை குறைந்த விலையில் வளரும் நாடுகளில் விற்று 
     உள்ளூர் விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவது.  
     உதாரணமாக  ஹெய்தி (HAITI )  நாட்டின் நெல் விவசாயம் அமெரிக்க 
     அரிசி     இறக்குமதியில் சிக்கி நெல் விவசாயம் பாழடிக்கப்பட்டது. 
     இன்று      அரிசிக்காக அமெரிக்காவை நோக்கி இருக்கும் நிலைமை.

      (12)  விவசாயம் என்ற வாழ்வாதாரத்தை வணிகமாக்கி ஊகவணிகம், 
      பங்குசந்தைளில் செயற்கையாக விலையேற்றி  கொள்ளையடிக்கும் 
      ஸ்திரமற்ற பன்னாட்டு வங்கிகள் மற்றும் ஹெட்ச் பண்டுகள்.
     (13 )  எல்லாவற்றுக்கும் மேலாக  உலகமயம், தாராளமயம்  விவசாயத்தை
                வெகுவாக பாதித்துள்ளது.

        இவற்றையெல்லாம் பற்றி நன்கு அறிந்திருந்தும், நம் ஆட்சியாளர்கள்   நம்மை ஏமாற்றாமல் நம் வருங்கால குழந்தைகளை பட்டினியின்றி 
காப்பது அவர்களின் கடமையாகும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
     .
         உணவு பொருட்களை வீணாக்கும் உலகின் முதல் 17 நாடுகள் பற்றி தகவல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் காலனி ஆதிக்க நாடுகள் அதிகமாக இருந்தாலும் ஆசியா கண்டத்தில் ஜப்பான் மட்டுமே இருந்தது சற்று வியப்பை அளித்தது. என்றாலும்  அது 17 வது நாடாக தான் இருக்கிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஒருபுறம் வீணாகும் உணவு பொருட்கள் மறுபுறம் பஞ்சத்தால் பல லட்சம் மக்கள் இறக்கும் அவலம். நீலிக்கண்ணீர் வடிக்கும் மேற்கத்திய நாடுகள், தான் செய்யும் இந்த தவறை திருத்திக் கொள்ளுமா? இல்லை தொடருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதனை அந்தந்த நாட்டின் மக்கள் தொகையோடு  ஒப்பிட்டு பார்க்கையில் மனம் கனப்பது  உண்மை தான்.
     பல மைல்கள் நடந்து சென்று குடிநீர் எடுத்துவரும் ஆப்பிரிக்க பெண்மணிகள், அவர்கள் குடிநீருக்காக மட்டுமே பூமிக்கும் நிலாவிற்கும் இடையே ஆன தூரத்தை போல் பதினாறு மடங்கு நடக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. ஐ. நா சபை சொல்கிறது.
     இப்படி   வீணாக்கும் ஒவ்வொரு உணவு பொருட்களில்  மறைந்திருக்கும் நீர்” (Virtual Water) பற்றியும் கணக்கிட்டால் இன்னும் நம் நெஞ்சம் பதறும். இயற்கை நமக்கு தேவையான அனைத்தையும் தருகிறது ஆனால் ஒன்று நாம் அவைகளை கண்டுகொள்வதில்லை அல்லது அவைகளை தன் இலாபத்திற்கு ஏகாதிபத்தியம் சுரண்டிவிடுகிறது. இது  நம்     வருங்கால குழந்தைகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு அமைதியின்மையையும் ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் எப்படி ஒற்றுமையாய் ஒத்துப்போனார்கள்...?

                 தமிழக மக்களே... ஒன்றை கவனித்தீர்களா...? தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளவும்  இல்லை... கடித்துக்கொள்ளவும் இல்லை.... ஒருவரையொருவர் சேற்றைவாரி பூசிக்  கொள்ளவில்லை.  தேர்தல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இருவரும் ஒற்றுமையுடன் சமாதானமாகவே  சென்றது போலத்தான் இருந்தது.
               ''குரங்குகளும், குல்லா  வியாபாரியும்'' கதையில... அந்த குல்லா வியாபாரி தன் தலையில் இருந்த குல்லாவை கழட்டி தூக்கி எரிந்தவுடன் குரங்குகளும் தன் தலையில் இருந்த குல்லாவை கழட்டித் தூக்கி எரிந்து விடும். இந்த கதையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இந்தக் கதையை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டவர் கருணாநிதி தான்.  ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை உடைக்கவேண்டுமென்ற நோக்கத்துடன், கருணாநிதி வஞ்சகமாகவும், தந்திரமாகவும்  ''திமுக தனித்துப் போட்டி'' என்று அறிவித்து விட்டு, தன்னுடன் கூட்டணிக்கட்சிகளாக இருந்த காங்கிரஸ் போன்ற கட்சிகளை கழட்டித் தூக்கி எறிந்துவிட்டார். அதைப்பார்த்த ஜெயலலிதாவோ...    அதுவரையில் கூட்டணிப் பற்றி பேசுவதற்கு குழு அமைத்து, கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்ட சூழ்நிலையில், கருணாநிதி கூட்டணிக்கட்சிகளை கழட்டி தூக்கி எறிந்தது போல் இவரும் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் சத்தம் போடாமல் கூட்டணிக்கட்சிகளை கழட்டி தூக்கி எறிந்து விட்டு தனித்து நின்றார். இதில் எப்படி இருவருக்கும் இவ்வளவு ஒற்றுமை. குரங்கு குல்லா கதையை கருணாநிதி தான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.  இந்த குரங்கு குல்லா கதையை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் பொறுப்பில்லை. ஆமா... சொல்லிபுட்டேன்...
               விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அளவுக்கு உயர்ந்ததில் இந்த இருவருக்குமே  பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள்... விஜயகாந்த் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் ஒத்துப்போகிறார்கள்... ஐந்து ஆண்டுகளுக்குகொரு முறை தாங்களே மாறிமாறி வரவேண்டும். இவர்களுக்கிடையில் மூன்றாவதாக இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.
                      முடிந்துபோன   உள்ளாட்சித் தேர்தலில் கூட, தாங்கள்  வெற்றி பெறுவதற்கு, தமிழகம் முழுதும் அதிமுக வேட்பாளர்களும், திமுக வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், நிறைய பரிசுப் பொருட்கள் தருவதுமாகத் தான் இருந்தார்கள். அப்போது கூட ஒருவரையொருவர் குற்றம் சொல்லவில்லை. மாநில தேர்தல் ஆணையமும் இந்த இருவரையும் கண்டுகொள்ளாமல் தான் இருந்தது என்பதும் உண்மை. இந்த விஷயத்திலும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒற்றுமையாய் ஒத்துப்போயிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
      இப்படியாக பணத்தையும் பொருட்களையும் கொடுத்து தான் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்திலும் இவர்கள் இருவரும் வந்திருக்கிறார்கள் என்பது இவைகளை வாங்கிக்கொண்டு வாக்களித்த தமிழக மக்களின் மனசாட்சிக்கு நிச்சயம் தெரியும்.
               '' அம்மாவிற்கும் அப்பாவிற்கும் 
                 சண்டை... விவாகரத்து...
                 குழந்தை 
                 அம்மாவிடம் ஐந்து ஆண்டுகள்..
                 அப்பாவிடம் ஐந்து ஆண்டுகள்..
                 நீதிமன்றத் தீர்ப்பு... 
                குழந்தையின்  பெயர் தமிழ்நாடு...''    
என்று யாரோ எழுதிய புதுக்கவிதை தான் என் ஞாபகத்திற்கு வருகிறது.

சனி, 22 அக்டோபர், 2011

“முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை” - ஜூனியர் விகடன்

            வல்லரசு என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, இத்தனை காலமாகத் தனது நாட்டுக்குள் இருந்த ‘இன்னொரு அமெரிக்கா’வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது. அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்ற வர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங் களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது!
                         அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத் தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த10 ஆண்டுக ளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாததால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உருவெடுத்து வருகிறது.
                                       கடந்த 2007-08ல் அங்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அப்போது 1.5 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. பண நெருக்கடியில் சிக்கி, கடன்களை அடைக்க முடியாமல் திணறிய 50 லட்சம் பேரின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப்பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அன்றைய அதிபர் புஷ் அறிவித்தார். அது தங்களை முழுமையாகக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், தவறு இழைத்த நிதி நிறுவனங்களுக்கு 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைத்ததே, அந்தப் ‘பொருளாதார மீட்சி நடவடிக்கை’ யாக அமைந்தது. இதனால் ஏழை, மத்தியதர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்க வில்லை.
                                 அப்போதுதான், ‘நம்மால் முடியும்.. மாற்றம் நிச்சயம்’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத் திலேயே முடிந்தது. அமெரிக்கப் பாணியைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இதுதான் நிலை. மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்து வந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத்தொடங்கின. ஒபாமா காலத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஓடியது. இதுதான் கார்ப்பரேட் உலக தர்மமாக மாறியது.
                           பொறுத்துப்பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும்? அக்டோபர் 15ம் தேதி, இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. உலகப் பங்கு வர்த்தகத்தின் கோயிலாகக் கொண்டாடப்படும் ‘வால் ஸ்ட்ரீட்’டை எதிர்த்து இந்த மக்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்கினார்கள். ‘வால் ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கினர். அது கடந்த சனிக்கிழமை அன்று உலகம் தழுவிய அளவுக்கு மாறியதுதான் அதிரடியான மாற்றம். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையிலான அனைத்துக் கண்டங்களிலும் 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின் டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினின் மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பங்குச்சந்தை வீதி என்று எங்கெங் கும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு... கார்ப்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு கட்டுவது!
                         'முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை’, ‘பங்குச்சந்தைகளை முட மாக்குவோம்’ ‘சர்வதேசச் செலாவணி நிதி யத்தை இழுத்து மூடுவோம்’, ‘கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’ ‘ஏழை- பணக்காரர் பிரிவினைக்கு முடிவு கட்டுவோம்’ என்று கோஷங்கள் விண்ணைப்பிளக்கின்றன. தன்னெழுச்சியுடனும் சமூக வலைதளங்கள் உதவியுடனும் ஒன்று கூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
                        உலகம் முழுக்கப் பரவும் இந்தப் போராட் ங்களுக்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. இந்தப் போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழ் திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற ‘புரட்சி மட்டுமே தீர்வு’ என்று அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து விண் அதிர முழங்குகிறார்கள்.
                                முதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ, அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பார்த்து அனைத்து நாட்டு அரசாங்கங்களும் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

சமஸ்
நன்றி : ஜூனியர் விகடன் (23.10.2011)

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரைப் பற்களில் சிக்கிய கடாபி...!

                  கடந்த காலங்களில் உலகெங்கிலும், குறிப்பாக அரபு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி என்பது சரியான தலைமை இல்லாததால், அந்த மக்கள் எழுச்சியை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தவறாக வழிகாட்டப்படுகிறது என்பதற்கு நேற்று முன் தினம் லிபியாவில் நடந்த சம்பவம் என்பது இதற்கு ஒரு உதாரணமாகும். 
              எகிப்து நாட்டை தொடர்ந்து ஒன்றுபட்ட மக்கள் எழுச்சி என்பது லிபியா நாட்டிலும் தோன்றியது. நாற்பத்து இரண்டு ஆண்டுகால மும்மர் கடாபி ஆட்சியின் மீது வெறுப்புற்ற மக்கள் வெகுண்டெழுந்து போராடினர். இந்த மக்கள் போராட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது தலைமையிலான  நேட்டோ படைகளை மக்களுக்கு ஆதரவாக இறக்கி விட்டது. எகிப்து நாட்டின் அதிபர் முபாரக்கை நாட்டைவிட்டே விரட்டியடித்தது போல் லிபியாவை விட்டு கடாபியையும் விரட்டியடிக்கும் பொருட்டு கடாபியின் வீட்டின் மீது குண்டுகளை பொழிந்தனர். சாவிற்கு பயந்து கடாபி தன் சொந்த ஊரில் ஒரு குழாயில் பதுங்கி இருந்த லிபிய அதிபர் கடாபியை கொடூரமான முறையில் கொன்றனர் என்பதை உலகமே பார்த்தது.
              லிபிய ஜனாதிபதி மும்மர் கடாபியை, தனது தலைமையிலான நேட்டோ படை நடத்திய கொடிய போரின் மூலம் படுகொலை செய்துவிட்டது என்பது தான் உண்மை.
            இராக்கில் சதாம் உசேனைப் பிடித்து, விசாரணை நாடகம் நடத்தி, பின்னர் தூக்கில் போட்டுக் கொலை செய்த அமெரிக்கா, கடாபிக்கு அந்த வாய்ப்பைக்கூட கொடுக்காமல், கிளர்ச்சியாளர்கள் என்ற பெயரிலான தனது ஆதரவாளர்களைக் கொண்டு அவரது கதையை முடித்துவிட்டது.
             ஆப்கானிஸ்தானைப் போலவே, இராக்கைப் போலவே, லிபியாவையும் எந்த நோக்கத்திற்காக அமெரிக்காவும் நேட்டோ படைகளும் தாக்கினவோ, அந்த நோக்கத்தில்- அந்நாட்டின் எண்ணெய் வளத்தைக் கேள்வி கேட்பாரின்றிக் கபளீ கரம் செய்கிற நோக்கத்தில்  அமெரிக்க ஏகாதிபத்தியம் வெற்றிபெற்று விட்டது.
      நாற்பதாண்டுகளுக்கு மேலாக கடாபி நடத்திய ஆட்சிக்கு எதிராக மக்களிடையே எழுந்த உணர்வை, உலகிலேயே மிகவும் தூய்மையான - விலை மதிப்புமிக்க லிபியாவின் பெட்ரோலியத்தை கைப்பற்றும் சூழ்ச்சியோடு, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது அமெரிக்க நிர்வாகம் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

வியாழன், 20 அக்டோபர், 2011

''வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்'' - உலகெங்கும் பரவும் மக்கள் எழுச்சி

           
           அமெரிக்காவில் முதலாளித்துவத்திற்கு எதிராகக் கடந்த மாதம் 17 ஆம் தேதி துவங்கி, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்களில் 2 ஆயிரம் பேரை அந்நாட்டின் காவல்துறை கைது செய்துள்ளது.
               ''வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்'' என்று பங்குச்சந்தையை முன்னிறுத்தும் அமெரிக்காவின் முதலாளித்துவக்கொள்கையை எதிர்த்துத் துவங்கிய போராட்டம் தற்போது சுமார் 100 நாடுகளுக்குப் பரவியுள்ளது. போராட்டத்தின் வீச்சு அதிகரிக்க, அதிகரிக்க அடக்குமுறை நடவடிக்கைகளையும் அமெரிக்க மற்றும் ஐரோப்பியக் காவல்துறையினர் அதிகரித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க், சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் மற்றும் பாஸ்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்.
          நியூயார்க்கில்தான் இந்தப் போராட்டம் துவங்கியது. அங்கு தற்போது போராட்டக்களத்தில் இருக்கும் மக்கள், தங்கள் முழக்கங்களை விரிவுபடுத்தியுள்ளனர். மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், பெரு நிறுவன உயர்அதிகாரிகளுக்கு கூடுதல் போனஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் எழுப்பி வருகிறார்கள்.

கைக்கூலியினராய் காவல்துறையினர்...

       மக்களின் போராட்டத்தை சீர்குலைக்க காவல்துறைக்கு நிதி தர பெரு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பொருளாதார விமர்சகரும், பத்திரிகையாளருமான மேக்ஸ் கெய்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், போராட்டக்காரர்களை ஒடுக்கவும் 25 கோடி ரூபாயை ஜே.பி.மார்கன் சேஸ் நிறுவனத்தின் தலைவர் ஜேமி டிமோன் நியூயார்க் காவல்துறைக்கு தந்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
           போராட்டக்காரர்கள் மீது மிளகுத்தூள் தூவப்பட்டுள்ளது. போராட்டக்களத்தில் இருப்பவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சியிலும் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது. ஆனால், இது மாதிரியான எந்தவொரு அடக்குமுறை நடவடிக்கைக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். முகாமடித்துத் தங்கியுள்ளவர்கள் போராட்டம் வெல்லும்வரை நகர மாட்டோம் என்ற உறுதியோடு இருக்கிறார்கள்.

அனைத்து கண்டங்களிலும் போராட்டம் பரவுகிறது....
          உலகின் அனைத்து கண்டங்களிலும், சுமார் 951 நகரங்களில் இந்தப் போராட்டம் பரவியுள்ளது. ''அமெரிக்க எழுச்சி'' என்று அழைக்கப்படும் இந்தப் போராட்டத்திற்கு கருத்து ரீதியான தலைமை இல்லை என்றாலும், ஆட்சியாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரசியல் வல்லுநர்களில் ஒருவரான டெட் மார்கன் கூறுகையில், நாம் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் ஆகியவை இந்தப் போராட்டங்களால் நடுநடுங்கிக் கிடக்கின்றன என்கிறார்.

ஐரோப்பாவும்  குலுங்குகிறது....

          இத்தாலியின் ரோம் நகரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். லண்டனில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பலர் கைது செய்யப்பட்டார்கள். கைதானவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் சுமார் லட்சம் பேர் முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். பெர்லின் மற்றும் பிராங்க் பர்ட் ஆகிய இரண்டு நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் திரளாகப் பங்கேற்றனர்.    

புதன், 19 அக்டோபர், 2011

மம்தா பானர்ஜி - மாவோயிஸ்டுகள் தேன் நிலவு கசந்துவிட்டது - இப்போது என்ன செய்யப்போகிறார் மம்தா ?

            மம்தா பானர்ஜியின் பொய்களும் புனை சுருட்டுகளும் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழுகின்றன. அவரது நிஜமுகத்தை மேற்குவங்க மக்கள் பார்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.  மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி ஆட்சி நடந்தபோது, மாவோயிஸ்டுகள் என்று தங்களை கூறிக்கொள்ளும் கொலைகாரக் கூட்டத்துக்கு இவர் அரசியல் புகலிடம் அளித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் என்று யாருமே இல்லை. மார்க்சிஸ்டுகள்தான் அட்டூழியம் செய்கிறார்கள் என்று கொஞ்சம் கூட நா நடுங்காமல் பேசினார்.
          ஆனால் இன்றைக்கு இவர் முதலமைச்சரான பின்பு மாவோயிஸ்டுகளை கொலைகாரர்கள் என்றும், வன மாபியாக்கள் என்றும் வசைபாடத் துவங்கியிருக்கிறார். ஒருவார காலத்திற்குள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் விளைவு விபரீதமாகயிருக்கும் என்று கர்ஜிக்கிறார்.
         மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளே இல்லை என்று பேசிய வாய்தான், இன்று கெடு விதிக்கிறது. ஆட்சியைப் பிடிப்பதற்காக மாவோயிஸ்டுகளை இவர் பயன்படுத்திக் கொண்டார். சிங்கூர், நந்திகிராமம் ஆகிய இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ்காரர்களும் மாவோயிஸ்டுகளும் சேர்ந்து கூட்டாகக் கலகம் செய்தனர். இடது முன்னணி அரசு, மாவோயிஸ்டுகளை சமாளிக்க கூடுதலாக மத்திய அரசிடமிருந்து படைஅனுப்பக் கேட்டபோது, அதை ஆட்சேபித்தவர் மம்தா. ரயிலை கவிழ்த்து மாவோயிஸ்டுகள் அட்டூழியம் செய்தபோது கூட, இதற்குக் காரணம் மாவோயிஸ்டுகள் அல்ல என்று நற்சான்றிதழ் வழங்கியவர் இவர்.
         மம்தாவின் நோக்கம் நிறைவேறிவிட்டது. மம்தா கட்சியினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. மம்தா கட்சியினரையும் மாவோயிஸ்டுகள் கொலை செய்கின்றனர். இதனால் வேறு வழியின்றி கெடுவிதிக்கும் நிலைக்கு மம்தா தள்ளப்பட்டுள்ளார்.
      மாவோயிஸ்டுகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை தேசத்தின் பிரச்சனையாகக் கருதாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதாக கருதி, அவர்களுக்கு ஆயுத உதவி, பண உதவி உட்பட ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா, இன்றைக்கு அவர்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.
         இப்போது என்ன செய்யப்போகிறார் மம்தா பானர்ஜி? ஏற்கனவே நான் கூறியது பொய். மாவோயிஸ்டுகள் மேற்குவங்கத்தில் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கும் அரசியல் நேர்மை இவரிடம் உண்டா? மாற்றம் என்ற வார்த்தையை இவர் உச்சரித்தபோது, பின்பாட்டு பாடிய கார்ப்பரேட் ஊடகங்கள் இப்போது என்ன செய்யப் போகின்றன?
      மம்தா கூறியுள்ளபடி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லையென்றால், இவர் எடுக்கப் போகிற நடவடிக்கை என்ன? விடை தெரிய வேண்டிய கேள்விகள் இவை.     குறுகிய அரசியல் நலனுக்காக பயங்கரவாதத்தை வளர்த்துவிடுவது பெரும் ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்திய வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. இப்போது அந்தப் பட்டியலில் மேற்குவங்க அனுபவமும் சேர்ந்துள்ளது.

நன்றி  :  தீக்கதிர்   

செவ்வாய், 18 அக்டோபர், 2011

காங்கிரஸ் கட்சி இனி அழிந்துபோகும்..!



அன்றே காந்தி காங்கிரஸ் கட்சியைக் கலைக்க சொன்னாரு.... நாங்க தான் இப்ப காந்தி கண்டக் கனவை நனவாக்கப் போறோம்.. காங்கிரஸ் கட்சியை நாங்க தானே அழிக்கப்போறோம்... 


               ஹரியானா மாநிலம் ஹிசார் மக்களவைத் தொகுதிக்கும்  மற்றும் பீகார், ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த வாரம் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற முடியவில்லை என்பது காங்கிரஸ் கட்சி பரிதாபகரமான சூழ்நிலையில் இருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது. 
                அதிலும் ஹிசார் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது மட்டுமல்லாது, டெபாசிட் தொகையையும் இழந்துவிட்டு நிற்கிறது என்பது காங்கிரஸ் கட்சி ஒரு அழிவுப்பாதையை நோக்கி போகிறது என்கிற நிலையைத்தான் காட்டுகிறது.
                   காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விகளுக்கு அன்னா ஹசாரேவின் காங்கிரஸ் -கெதிரான பிரச்சாரம் தான் காரணமென்று பல வடநாட்டு ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. 
                 காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விகளுக்கு அன்னா ஹசாரே பிரச்சாரமோ அல்லது ஹசாரேவின் விளைவுகளோ - தத்துவங்களோ  அல்லது பாரதீய ஜனதா கட்சியின் மீதான ஈர்ப்போ அல்ல... காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத ஆட்சியே காரணம். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மந்திரிகளின்  தலைவரும் பிரதமரும் ஆன மன்மோகன் சிங்கும், கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆன சோனியா காந்தியும், ஏழை மக்களின் தோழனாக படம் காட்டிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தியும் தான் காரணம் என்பதை அவர்களே மறுக்கமுடியாது. 
                 நாடு இதுவரை பார்த்திராத மெகா ஊழல், வரலாறு காணாத விலைவாசி உயர்வு இவைகளே காங்கிரஸ் கட்சியின் அல்லது காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளாகும். இவைகளே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கும் காரணங்களாகும். காங்கிரஸ் கட்சியின் இந்த மக்கள் விரோத போக்கு - தேச விரோத போக்கு தொடருமானால் வரு 2014 - ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொலைந்து போகும். இனி மெல்ல அழிந்து போகும்.  

திங்கள், 17 அக்டோபர், 2011

தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் தேவை - தவறு செய்யும் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை வேண்டும்...!

                     ஜனநாயக நாட்டில் மக்கள் தான் எஜமானர்கள். தேர்தல் நேரங்களில் கை கட்டி, வாய் பொத்தி, வணக்கமாய் ஓட்டுக் கேட்பார்கள். வெற்றிபெற்ற பின்னே அவர்கள் எஜமானர்களாக மாறிவிடுவார்கள். அதன் பிறகு மக்கள் தான் அவர்களிடம், கை கட்டி, வாய் பொத்தி வணக்கமாய் நிக்கோணம். இது நம்ப நாட்டில் ஒரு பொதுவான அம்சம்.. நமக்கெல்லாம் பழகிப் போன விஷயம். ஐந்தாண்டுக்கொரு முறை இது போன்ற முறை என்பது மாறிமாறி வரும். இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பான்னு ஜெனங்களும் கண்டுக்காம போய்கிட்டே தான் இருக்காங்க..
                  ஆனால் இவர்கள் கையில் ''இரண்டு ஆயுதங்கள்'' இருக்கிறது என்கிற நினைப்பே இல்லாமல்  இருப்பது தான் வேதனையான விஷயமாகும். நமது இந்திய பாராளுமன்றம் நம் கைகளில்  இரண்டு ஆயுதங்களை கொடுத்திருக்கிறது. ''ஒன்று : தேர்தல் வாக்குச் சீட்டு. மற்றொன்று : தகவல் அறியும் உரிமை சட்டம்'' 
                   தவறான ஆட்சியாளர்களையும், தவறான மக்கள் பிரதிநிதிகளையும் விரட்டியடிப்பதற்கும், தூக்கி எரிவதற்கும் இந்த இரண்டு ஆயுதங்கள் நமக்குப் போதும். வேறு துப்பாக்கியோ, வெடிகுண்டோ, கத்தியோ தேவையில்லை. அவைகளின் மீது நமக்கு நம்பிக்கையும் இல்லை. இந்த இரண்டு ஆயுதங்களையும் நாம் சரியாகப் பயன்படுத்தினால், நாட்டில் ஊழல்களை ஒழித்துவிடமுடியும். அன்னா ஹசாரே  மற்றும் மோடி  போன்றவர்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டாம். அத்வானி போன்றவர்கள் ரதயாத்திரையும் நடத்தவேண்டாம்.
              ஆனால் அந்த இரண்டு ஆயுதங்களில் ஒன்றான ''வாக்குச்சீட்டு'' என்கிற ஆயுதம் தான் கூர் மழுங்கியிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அரசியலில் நேர்மையும், பொதுவாழ்க்கையில் தூய்மையும் இருக்க வேண்டுமென்றால்  ''வாக்குச்சீட்டு'' என்கிற ஆயுதத்தை கூர்மை படுத்தவேண்டும்.  அதற்கு தேர்தல் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவேண்டும். 
               பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் வலியுறுத்திவரும், ''தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமையும்'', ''தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையும்'' தேர்தல் விதிமுறைகளில் இணைக்கப்படவேண்டும் என்பது தான் இன்றைக்கு தேர்தல் ஆணையத்திடம் இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளாகும்.
               நேற்று முன் தினம், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு.எஸ்.ஒய்.குரேஷி ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில், வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமையையும் வழங்குவது என்பது ஆபத்தானது என்று கூறியிருக்கிறார். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் எடுபடாது என்றும் கூறியிருப்பது துரதஷ்டவசமானது.
                    மேலும் கருத்து தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர், இந்த உரிமைகளை  விதிமுறைகளில் சேர்ப்பது என்பது எதிர்காலத்தில் தொடர்ச்சியான தேர்தல்களுக்கு வழிவகுத்துவிடும் என்கிற அச்சத்தையும் தெரிவித்தார்.
              ஆனால், தேர்தல் விதிமுறைகளில் இது போன்ற மாற்றங்கள் தேவை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு நாட்டில் நடைபெறும் பல்வேறு வகையான ஊழல்களை பார்க்கும் போது, இது போன்ற மாற்றங்கள் தேவை என்பதை இந்திய தேர்தல் ஆணையம் முதலில் உணரவேண்டும். தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக நில்லாமல், நடுநிலைமையோடு இன்று இந்த இரு உரிமைகளையும் சட்டமாக்கி நடைமுறைப் படுத்தவேண்டும். 
              அப்போது தான் இந்திய தேசத்தில் நாம் இதுவரை பார்க்காத, அரசியலில் நேர்மையையும், பொதுவாழ்க்கையில் தூய்மையையும் பார்க்கமுடியும். இதை தான் இந்திய மக்களும் எதிர்ப்பார்க்கிறார்கள். இவைகள் பற்றிய கருத்துகளை மக்களிடமும், அனைத்துக்கட்சிகளிடமும் ஜனநாயக முறைப்படி  கேட்டறிய வேண்டும். நேர்மையான ஆட்சியாளர்களை உருவாக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. குரேஷி அவர்கள் தன்னுடைய பணிக்காலத்திலேயே அதற்கான முயற்சி எடுக்கவேண்டும்.
              மேலே குறிப்பிட்ட இரண்டு உரிமைகள் எதோ அன்னா ஹசாரேக்கு சொந்தமானது போலவும், அவர் மட்டும் தான் இந்த கோரிக்கையை வைத்து போலவும் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் பல காலமாக இடதுசாரிகள்  இதே கோரிக்கையை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்துவது என்பது மறைக்கப்பட்டு வருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

என்ன தான் அறிவியல் வளர்ந்தாலும் இன்னும் கடவுளை நம்பும் நம் நாட்டு விஞ்ஞானிகள் - நெஞ்சில் ஒரு நெருடல்

                 வழிபாடு என்பது ஒரு தனி மனிதன் சம்பந்தப்பட்டது தான்.. அது ஒரு தனி  மனிதனின் உரிமையும்  கூடத்தான்...
                 ஆனால் அண்மையில் நடந்த நிகழ்ச்சி... இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்  சாதனையாக, நான்கு செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி - சி - 18  என்ற ராக்கெட்டை கடந்த 12 - ஆம் தேதி  இந்திய  விஞ்ஞானிகள் வெற்றிகரமான செலுத்தினார்கள். இந்த வெற்றிக்குப் பின்னால்  பல்வேறு விஞ்ஞானிகளும், அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்களும், ஊழியர்களும், தொழிலாளர்களும்  இருக்கிறார்கள். அவர்களது கடுமையான உழைப்பும், சிந்தனையும், ஆராய்ச்சியும் அதில் நிரம்பிக் கிடக்கின்றன என்பது தான் உண்மை. 
             ஆனால், இஸ்ரோ - வின் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த ராக்கெட் செலுத்துவதற்கு முதல் நாள், ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தவேண்டும் என்று வேண்டிக்கொள்ள  திருப்பதி சென்று வழிபாடு செய்தார் என்பதும், வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின் நன்றி தெரிவித்து வழிபாடு செய்ய இன்று காலை திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டதும் பார்ப்பதற்கு நெஞ்சில் சற்று நெருடலாக தான் இருக்கிறது. 
             விஞ்ஞானமும், ஆராய்ச்சியும், கண்டுபிடிப்புகளும், அறிவியல் தொழில் நுட்பங்களும் எவ்வளவு தான் வளர்ந்தாலும், மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கையும், மூடபழக்கவழக்கங்களும் வளர்ந்துகொண்டு தான் இருக்கிறது. அறிவியல் வளர வளர, அதை விட வேகமாக இவைகள் வளர்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும். இதில் விஞ்ஞானிகளும் விதிவிலக்கல்ல என்பது தான் இஸ்ரோ தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும்  டாக்டர் மாதவன் நாயர் போன்றோர் செய்யும் செயல்களை பார்க்கும் பொது தோன்றுகிறது.

ஊழல் சகதியில் ஓடும் அத்வானியின் ''ரதயாத்திரை''..!


            இந்தியா சுதந்திரம் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ''ஊழல்'' என்பது ஆளும் கட்சிக்கு மட்டுமே சொந்தமானதாகவும், ஆட்சியாளர்கள் ஐந்தாண்டு கால ஆட்சிக்காலத்தில் தன் திறமைக்கேற்ப சொத்து சேர்ப்பதுமானதாகவும் தான் இருந்து வருகிறது. இந்த ''ஊழல்'' என்பது  காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல. மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வியுறும் காலங்களில் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி, திமுக, அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி  போன்ற கட்சிகளும் ஊழல் செய்து சொத்து சேர்ப்பதையே தங்கள் தொழிலாக இருந்துவருகின்றனர். இவர்கள் தேச நலனுக்காகவும், மக்களுக்கு சேவைக்காகவும் மட்டுமே ஆட்சி செய்யவேண்டும் என்கிற மனப்பான்மையில்லாமல், சொத்து சேர்ப்பதற்கே ஆட்சிக்கு வரவேண்டும் என்று எண்ணுபவர்கள் தான் நாம் மாற்றி மாற்றி வாக்களித்து தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்கள் என்பதை ஏனோ இந்த மக்கள் உணர்வதில்லை..?
               2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - காமன்வெல்த் விளையாட்டு ஊழல் - லட்சக்கணக்கான கோடிகளை சாப்பிட்டு ஏப்பம் விட்ட மன்மோகன் சிங் தலைமையிலான - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மெகா ஊழல் தான் இந்திய மக்களிடையே ஊழலுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 
               இந்த சூழ்நிலையில் தான், ஊழலுக்கெதிரான மக்களின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விளம்பரத்தைத் தேடிக்கொள்ளவும், பணம் பண்ணவும், ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சிகளான இடதுசாரி கட்சிகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பாமல் இருக்கவும் 
அன்னா ஹசாரே போன்றோர் அவதாரம் எடுத்தனர்.
              அந்த வரிசையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இந்திய பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மூன்று நாட்களுக்கு உண்ணாவிரதமிருந்து தன்னை முன்னிலை படுத்திக்கொண்டார். தன்னை பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டார். 
                காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிகிட்டு போய் விடுவானொன்னு பயந்து போய், கடந்த அக்டோபர் மாதம் 11 - ஆம் தேதி அன்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஒரு ரதத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ண பரமாத்மா போல கிளம்பிட்டாரு...
                என்னமோ.. ஊழல் என்றால் என்னன்னு அத்வானிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் தெரியாதது போலவும், ஊழலை ஒழிக்க இவர்கள் தான் அவதாரம் எடுத்திருப்பது  போலவும் காட்டிக்கொள்கிறார்கள்.
               ஊழலுக்கு பேர் போன ஆட்சியினை இவர்கள் தான் கர்நாடகாவில் நடத்துகிறார்கள் என்பதை அத்வானி மறந்துவிட்டார் போலும்.. இவர் கிளம்பிய நேரம், ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவி இழந்த கர்னாடக மாநிலத்தின் முன்னாள் முதலவர் எட்டியூரப்பா நேற்று கைதானத்தில் அத்வானியின் ''ஊழல் எதிர்ப்பு ரதம்'' சகதியில் சிக்கிக்கொண்டது போலிருக்கிறது.
                 அதுமட்டுமல்ல, நேற்று ரதயாத்திரை மத்திய பிரதேசம் சாத்னா பகுதிக்கு வந்த போது, அந்த நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிக்கையாளர்களுக்கு,  ரதயாத்திரையை பற்றி பிரமாதமாய் எழுதுவதற்கு ஆயிரம் ரூபாய் - ஐ கொடுக்கப்பட்டது என்பது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட இவர்கள் தான் ஊழலை ஒழிக்கப்போவதாக யாத்திரை போகிறார்கள். எதோ மக்கள் நித்திரையில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா சொன்ன ''அமைதிப்பூங்கா'' இது தானோ..?

                    தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்களைப் பார்க்கும் போது, தமிழக மக்கள் எவ்வளவு பாவப்பட்டவர்கள் என்று நமக்குத் தோன்றும். முன்னாள் - இந்நாள் முதலமைச்சர்களும் ஒருப்பக்கம் குழாயடி சண்டைப் போட்டுக்கொள்வது வேடிக்கையாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சரம் சரமாய் பூக்களை தமிழக மக்களின் காதுகளில் சுற்றுவதைப் பார்க்கும் போது தான் இந்த மக்கள் ரொம்ப பாவப்பட்டவர்கள் என்று தோன்றுகிறது. அவ்வளவு பூ சுத்துறாங்கப்பா... தாங்கல... ம்ம்ம்... முடியல... அழுதுடுவேன்... 
             ''இந்த ஜெனங்க ரொம்ப நல்லவங்க.. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க''..ன்னு இந்த ரெண்டு பேரும் சேர்ந்து இவ்வளவு போடு போடுறாங்க..
        ''சட்டம்  - ஒழுங்கைப் பொறுத்த வரையில், கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய ''காவல் துறை'' தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக, அமளிக் காடாக விளங்கிய தமிழகத்தை நான்கே மாதங்களில் அமைதிப் பூங்காவாக, மாற்றிக் காட்டி உள்ளேன்'' என்று உள்ளாட்சி தேர்தல் கூட்டங்களில்  வாய் கிழியப் பேசும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொன்ன அமைதிப்பூங்கா இது தானோ...?
                 அமைதிப்பூங்கா என்றால் இப்படித்தான் இருக்குமோ..?
   பரமக்குடியில் காவல் துறையினர், துப்பாக்கிச்  சூட்டில் மரணமடைந்த தன் நண்பனை ''அன்போடு'' தூக்கிவருகிறார்கள் 
''மக்களின் நண்பர்கள்'' தன் நண்பர்களை ''அன்பாய்'' துப்பாக்கியால் சுட்டு கிடத்தி வைத்திருக்கிறார்கள் 
முன்பு ரௌடிகளின் நண்பர்களாய் இருந்தவர்கள் இப்போது மக்களுக்கு எதிராக ரௌடிகளாய் மாறியிருக்கும் காவலர்கள் 
காவல் துறையினர் தன் நண்பர்களோடு ஓடிபிடித்து விளையாடுகிறார்கள்
தன் நண்பர்களை  துப்பாக்கி  குண்டுகளால் துளைத்து  ஆனந்தமாய் விளையாடுகிறார்கள்.

தன் நண்பர்களை லத்திக் கம்பால் விரட்டி விரட்டியடிக்கிறார்கள்

சேலத்தில் மூடப்பட்ட ஏழை மக்கள் பயன்படுத்தும்  மருத்துவமனையை திறக்கக்கோரி போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களை சினிமா வில்லனை போல் அடிக்கும் ''மக்களின் நண்பன்''
குற்றவாளிகளைக் கூட விட்டுவிடுவார்கள்.. ஆனால் போராளிகளின் கழுத்தை நெருக்குவார்கள் இந்த ''மக்களின் நண்பர்கள்''
                            கோவையில் வழக்கறிஞர் ஒருவரை ''மக்களின் நண்பர்களான'' காவல் துறையினர் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார்கள்  






































               அமைதிப்பூங்கா என்றால் ஜெயலலிதா அகராதியில் இது தான் அர்த்தமோ..?
               ஆட்சி மாறினாலும்... முதல்வர் மாறினாலும்... அமைச்சர்கள் மாறினாலும்... காவல் துறையின் குணம் மட்டும் மாறாது என்பதற்கு இந்நாள் - முன்னாள் முதல்வர்களின் ஆட்சிகளின் லட்சணமே ஒரு சான்றாகும்...