ஞாயிறு, 6 ஜனவரி, 2013

புத்திசாலித்தனமாக யோசிக்கும் புதுச்சேரி கல்வித்துறை...!

        புதுச்சேரியில் புத்தாண்டுத்தினத்தன்று ஒரு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து இங்கே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், முற்போக்கு அமைப்புகளும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கேட்டும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை கோரியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், இன்று புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தில் பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் ஒன்று கல்வித்துறையை கவனிக்கும் சுற்றுலா துறை அமைச்சர் ( இங்கே சென்டிமென்டா கல்வி அமைச்சர்ன்னு சொல்லக்கூடாதாம் ) தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிபுத்திசாலித்தனமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  
            பள்ளி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி பேருந்துகளை இயக்குவது என்றும், பள்ளி மாணவிகள் மேலாடையாக சால்வை அணியக்கூடாது என்றும், இனி  மேல்-அங்கி (overcoat) தான் அணிய வேண்டும் என்றும், (நல்ல வேலை பள்ளி ஆசிரியைகளுக்கு சொல்லவில்லை)  மாணவர்களும், மாணவிகளும் ஒருவரோடு ஒரூவர் உரையாடிக்கொள்வது தடை செய்யப்படும் என்றும், பள்ளிகளில் செல்போன்கள் உபயோகிப்பதை தடை செய்யப்படும் என்றும் அக்கூட்டத்தில் முடிவெடுத்து  நாங்களும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம் என்று காட்டிக்கொண்டார்கள். இவைகள் அனைத்தும் வெறும் ஆண்கள் மட்டுமே எடுத்த முடிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
            முதலில் இது போன்ற குற்றங்களுக்கு எதிரான முடிவுகளை  அமைச்சரும், தலைமையாசிரியர்களும் மட்டுமே மூடிய அறைக்குள் கூடி எடுப்பது என்பது சரியாக இருக்காது. இது சமூகம் சம்பந்தபட்ட பிரச்சனை. பள்ளிக்கூடப் பிரச்சனை அல்ல. அண்மையில் புதுவையில் நடந்த சம்பவம் என்பது பள்ளிக்கூடத்தில் நடந்த சம்பவம் அல்ல. பள்ளி விடுமுறை நாளில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பள்ளிக்கு வெளியில் தனி வகுப்புக்கு சென்ற போது நடந்த சம்பவம். அப்படியென்றால், அந்த பெண் பள்ளிக்கு வெளியில் தனி வகுப்பிற்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது...? அதைப் பற்றியல்லவா அந்த அறிவு ஜீவிகளின் கூட்டத்தில் பேசியிருக்கவேண்டும். ''நீங்க பள்ளிக்கூடத்துல பாடத்தை ஒழுங்கா சொல்லிக்கொடுத்திருந்தா அந்தப் பொண்ணு ஏன் வெளியில தனி வகுப்பிற்கு செல்லவேண்டும்'' என்ற கேள்வியை அந்த கல்வி அமைச்சர் என்று சொல்லக்கூடியவர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமையாசிரியர்களை நறுக்கென்று கேட்டிருக்க வேண்டாமா...? பள்ளிக்காவது பெண்கள் கூட்டமாக வருகிறார்கள், கூட்டமாக செல்கிறார்கள். ஆனால் தனி வகுப்பிற்கு அப்படி இல்லையே. அப்படியென்றால் உண்மையிலேயே பெண்கள் மீது அக்கறையுள்ள அரசாக இருந்தால் பள்ளிக்கு வெளியே நடத்தப்படும் தனி வகுப்புகளை தடை செய்திருக்க வேண்டாமா...? அப்படி நடத்தப்படும் தனி வகுப்பிகள் தடை செய்யப்படும் என்று சொல்லுகிற தைரியம் அரசிற்கு இருக்கிறதா...? பள்ளியில் பாடத்தை சரியாக நடத்தாமல், வெளியே தனி வகுப்புகளை நடத்தி கொள்ளையடிக்கும் ஆசிரியர்களை வீட்டிற்கு அனுப்பவேண்டாமா...? அப்படி அனுப்புகிற தைரியம் தான் அமைச்சருக்கு இருக்கிறதா...? இனியாவது ஆசிரியர்கள் எல்லோரும் உண்மையாகவும், நேர்மையாகவும், சீரியமுறையிலும் மாணவ - மாணவியர்களுக்கு சொல்லிகொடுங்கள் என்று ஆசிரியர்களிடம் கை நீட்டி கட்டளையிடும் தைரியம் புதுச்சேரி அரசிற்கு இருக்கிறதா...? என்று சிந்தித்துப் பாருங்கள்.
          பள்ளிக் குழந்தைகள் மட்டும் உடம்பை மூடிக்கொண்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா...? இன்றைக்கு திரைப்படங்களிளும், தொலைக்காட்சிகளிலும், விளம்பரங்களிலும் கொள்ளை இலாபம் பெறுவதற்காக அதில் நடிக்கும் பெண்களின்  ஆடைகளை குறைத்துக் காட்டுகிறார்களே.  இது போன்ற காட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று ஏன் முடிவெடுக்கவில்லை. அதுமட்டுமல்ல மேல் அங்கி போட்டால் இது போன்ற குற்றங்கள் குறைந்து விடுமா...? பாலியல் வன்கொடுமை என்பது பள்ளி மாணவிகளுக்கு மட்டும் நடப்பதில்லை. வீட்டிலிருக்கும் சிறுகுழந்தைகளுக்கும், வயதான பெண்மணிகளுக்கும் நடைபெறுகிறதே அதற்கு என்ன செய்வது...? பிறந்த சிறு பெண் குழந்தை முதல் வயதான பெண்மணிகள் வரை  இனி தலை முதல் பாதம் வரை உடலை  மறைத்து ஆடை அணிய வேண்டும் என்று அரசு சொல்லுமா..?
          குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கே மேலும் பாதிப்பை உண்டுபண்ணுகிற வேலையைத் தான் அரசு செய்கிறது. 
           புதுச்சேரி அரசு இத்தனை முடிவுகளை எடுத்ததற்கு பதிலாக சிம்பிளா ஒரே ஒரு முடிவை மட்டும் எடுத்திருக்கலாம். இனி மாணவர்கள் (ஆண்கள் மட்டும்) டிரஸ் பண்ணிக்கிட்டு, ஸ்கூல் பேக்கை தோளில் மாட்டிகிட்டு, செருப்பை காலில் போட்டுக்கிட்டு வீட்டிலிருந்து கிளம்பும் போதே கருப்புத் துணியால கண்ணைக் கட்டிவிட்டு, ரெண்டு கையையும் பின்னால கட்டிவிட்டுட்டு  தினமும் பள்ளிக்கு வந்துட்டுப் போக வேண்டியது என்று சொல்லியிருக்கலாம். 
            நல்லாத் தான் சிந்திக்கிறாங்கைய்யா நம்ப ஆளுங்க....!
           
      புதுச்சேரி கல்வி அமைச்சருக்கும், கல்வியாளர்களுக்கும் சில ஆலோசனைகளை முன் வைக்கிறேன்.

1. பள்ளி அல்லது கல்லூரிப் பெண்களை ''மூடி'' வைக்கும் சிந்தனையை முதலில் ஒழித்துக்    
    காட்டுங்கள்.

2. திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களில் பெண்களை போகப்பொருளாக  
    காட்டுவதற்கு  பெண்கள் மீது திணிக்கப்படும் ஆடை குறைப்பை தடை செய்யுங்கள்.  

3. பள்ளிப் பாடங்களில் பெண் விடுதலை மற்றும் பெண்ணுரிமை பற்றியும் அதற்காக 
   போராடியவர்கள் பற்றியும்  கட்டாயமாக  இணைத்திடுங்கள்.

4. இன்று வரையில் பாடப் புத்தகத்திலிருக்கும் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் 
   ஐம்பெரும்  காப்பியங்களை நீக்கி விடுங்கள். அதன் பெருமைகளை பேசுவதை  
   நிறுத்திக்கொள்ளுங்கள்.

5. பாரதியார் மற்றும் பாரதிதாசன் போன்ற அண்மைக்கால கவிஞர்கள் பெண்களை போற்றி 
    எழுதிய     பாடல்களையும் கட்டுரைகளையும் பாடத்திட்டத்தில் சேருங்கள்.

6. கல்வி வணிகமயத்தால் பள்ளிக்கூடத்திலிருந்து ஒழித்துக்கட்டப்பட்ட ''நற்போதனை 
    வகுப்பு''     (moral class) மீண்டும் பள்ளிக்கூடத்தில் மாணவ - மாணவியர்களுக்கு  
    அளித்திடுங்கள்.     அந்த பள்ளிக்கூட நாட்களில் நடத்தப்படும் அந்த வகுப்புகள் 
    தான் மாணவர்களிடையே      தனிமனித ஒழுக்கத்தையும்,     நல்லப்     
    பண்புகளையும் வளர்க்கும். இந்த வகுப்பு தற்சமயம் பள்ளிக்கூடங்களில்
    பார்க்க முடியாததால் தான் இது போன்ற தனிமனித ஒழுக்கமில்லாத மனிதர்களை  
    பார்க்கவேண்டியிருக்கிறது.    பள்ளிக்கூடங்கள்  பாடங்களைத் தவிர நல்ல  
    போதனைகளை  தராததால் தான் பையன்கள் பெண்களை  பலாத்காரம்
    செய்கிறார்கள்   அல்லது ஆசிரியர்களுக்கு எதிராக கத்தியை தூக்குகிறார்கள்.

7. இது ஆடைகளை சீர்படுத்துவதற்கு பதிலாக பள்ளிகளையும், பாடங்களையும் 
    சீர்ப்படுத்துங்கள்.     மாணவர்கள் தானாக நல்லொழுக்கத்துடனும், நற்பண்புகளுடனும் 
    வளரூவார்கள். ஒரே பள்ளியில் படித்தாலும்,     ஒரே பேருந்தில் சென்றாலும்,  
    பக்கத்திலேயே உட்கார்ந்து சென்றாலும் வித்தியாசமின்றியும் விரசமின்றியும்
    பழகுவார்கள்.

8. கடைசியாக ஒரு ஆலோசனை அரசு எந்த முடிவை எடுத்தாலும், கல்வியாளர்களை மட்டும் 
    கலந்தாலோசிக்காமல்,     முற்போக்கு சிந்தனையாளர்களையும், உளவியல்  
    ஆலோசகர்களையும், சட்ட நிபுணர்களையும், பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்களையும் 
    இணைத்த ஒரு குழு  அமைத்து அவர்கள்     தரும் ஆலோசனைப்படி முடிவெடுப்பது என்பது
    நல்லது. இல்லையென்றால்    பாதிக்கப்பட்டவர்களே      மேலும் பாதிப்படைவார்கள்
    என்பதை அரசு முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

4 கருத்துகள்:

தருமி சொன்னது…

//அந்த கல்வி அமைச்சர் என்று சொல்லக்கூடியவர்.//

யாரு இவரு? இப்போ ஒரு தேர்விலே என்னமோ ஃப்ராடு பண்ணினாரே .. அவரா இல்ல ,.. வேற ஆளா?!

தருமி சொன்னது…

கல்வி அமைச்சர்களின் தரம் எப்படி என்பதற்காகத்தான் முந்திய பின்னூட்டம் இட்டேன்.

அருணா செல்வம் சொன்னது…

ஐயா.... உங்களின் எட்டு ஆலோசனைகளுடன் ஒன்பதாவதாகவாவது... “பெண்களிடமும் இது குறித்து ஆலோசனை செய்யுங்கள்“ என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி.

Narmi சொன்னது…

They can also invoke the parents in taking decisions