வியாழன், 30 ஜூன், 2011

இந்தியாவிற்கு சாத்தான் அளித்த பொருளாதார தர சான்றிதழ்..!

                    “சரிவிகிதப் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதில் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இந்தியா திகழ்கிறது. பரந்துபட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றால் அதற்கு இந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்”. இப்படி இந்தியாவைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியவர்  அமெரிக்க நிதி அமைச்சர் திமோத்தி கெய்த்னர் என்பதை தான் உற்று நோக்கவேண்டும்.
                      அமெரிக்க- இந்திய பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு மாநாடு வாஷிங்டனில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியதை யொட்டி வாசிக்கப்பட்டதே இந்தப் பாராட்டு . இந்த மாநாட்டின் நோக்கம், பொருளாதாரக் கொள்கையில் அமெரிக்காவுக்கு சாதகமாக இந்தியா மேலும் வளைந்து கொடுக்க வகை செய்வதே ஆகும். அமெரிக்க மீதான  அடிமை விசுவாசம் மேலும் பலம் பெற செய்யவே இந்த மாநாடு. 

ஆனால் இந்தியா இன்று..?

              இந்தியாவில் சரிவிகித பொருளாதார வளர்ச்சி என்பது எங்கே இருக்கிறது ?  இப்போது இல்லையே. இன்றைக்கு இந்தியா இரண்டு இந்தியாவாக தானே இருக்கிறது. ஒன்று.... வசதி படைத்தவர்களின் இந்தியா. இன்னொன்று... வயிறு பசித்தவர்களின் இந்தியா. இந்த பணக்கார இந்தியாவிற்கும் ஏழை இந்தியாவிற்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளியாக உள்ளது. இந்தக் கைப்புண்ணை அறிய பெரிய ஸ்கேன் ரிப்போர்ட் எதுவும் தேவையில்லை. நம் வாழ்க்கையின் அன்றாட அனுபவங்களே சாட்சியாக இருக்கிறது. தாராளமயம், உலகமயம், தனியார்மயம் நடைமுறைக்கு வந்த  பின்பு, கடன் தொல்லை தாங்காமல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். வறுமை மேலும் மேலும் அதிகரித்துகொண்டே வருகிறது. விலை ஏற்றம் தாங்க முடியாத அளவிற்கு எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில் விவசாயம் கட்டுப்படி ஆக வில்லை என்பதாலும், போதுமான வேளாண்பணி கிடைக்கவில்லை என்பதாலும்  கிராமத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு  படை எடுப்போர்களின் எண்ணிக்கை பலமடங்குகளாக பெருகி வருகிறது.  நகர்ப்புற வறுமை கிராமப்புற வறுமையைப் போல் பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. இன்றைக்கு பல்வேறு சமூகக் குற்றங்களுக்கு இதுவே களமாக அமைகிறது என்பது தான் உண்மை. இப்படி சிதிலமடைந்து கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தைத்தான் “சரிநிகர்ப் பொருளாதார  வளர்ச்சி” என்றும் "பரந்துபட்ட வளர்ச்சி" என்றும் அமெரிக்கா இந்தியாவிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

எஜமானர்களுக்கு  நம் அடிமை அளித்த வாக்குறுதி..! 

               இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை மேலும் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும், வங்கிகள், இன்சூரன்ஸ், ஓய்வூதியம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் மட்டுமின்றி வரிச்சீர்திருத்தம் உள்பட அனைத்து துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டை தாராளமாக அனுமதிக்கும் விதத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு செயல்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்க பெருமுதலாளிகளின் பிரதிநிதிகளிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார். அமெரிக்கா இந்த தேசத்தை கொள்ளை அடிப்பதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்து தருகிறோமென்று இந்திய நிதி அமைச்சர் உறுதியளித்திருப்பது  என்பது  நமக்கு கொபமளிக்கக்கூடிய விஷயமாகும்.
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ.. நாங்கள் சாகவோ.. என்கிற பாரதியின் கவிதை வரிகள் தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

திங்கள், 27 ஜூன், 2011

தேர்தல் ஊதாரிச் செலவுகளை தவிர்த்த கேரளா எம் எல் ஏ - க்கள்...!

         கேரளா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையம் அனுமதியளித்த தொகையை விட குறைவாகவே தேர்தல் செலவினை செய்து மற்ற மாநில அரசியல்வாதிகளுக்கேல்லாம் முன்னுதாரணமாக விளங்குகிறார்கள்.அவர்கள் அனைவரும் சேர்ந்தே சராசரியாக ரூ.9 லட்சம் மட்டுமே தேர்தலுக் கென்று  செலவு செய்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம் தான். ஏனென்றால், தேர்தல் ஆணையமோ அவர்கள் செலவு செய்ய அனுமதித்த தொகையோ ரூ.16 லட்சமாகும். 
                    கட்சிவாரியாக பார்க்கும் பொது, 19 முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களும் சராசரியாக ரூ.10.54 லட்சமும், 34 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் சராசரியாக ரூ.10.04 லட்சமும், 13 சி பி ஐ கட்சி உறுப்பினர்களும் சராசரியாக ரூ. 8.91 லட்சமும், 45 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சராசரியாக ரூ. 8.12 லட்சமும் தேர்தலுக்காக செலவு செய்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகளின் அரசியல் கலாச்சாரம் என்பது நம்மை முகம் சுளிக்க வைக்கிறது.
                    தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் மிகக் குறைந்த அளவே தேர்தல் செலவுகளை செய்தவர் என்ற பெருமைக்குரியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர். கே. குன்னிராமன் ஆவார். இவர் செய்த தேர்தல் செலவு  வெறும் ரூ. 2,49,667  என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 25 ஜூன், 2011

முற்றும் துறந்த சாமியார்கள் அறையைத் திறந்தால்... மகா கேவலம்...!

                 இன்றைக்கு   நாட்டில் சாமியார்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது அதீதமானது.  ஏராளமான மக்கள் - குறிப்பாக படித்த மக்களேக் கூட சாமியார்கள்  செய்யும் சித்து விளையாட்டுகளில் மயங்கி அவர்களது காலடியிலேயே விழுந்து கிடக்கின்றனர். இப்படியாக மாயஜால வித்தைகளை காட்டி அப்பாவி மக்களின் பணங்களையும், சொத்துக்களையும் அபகரிக்கும் சாமியார்களை தான் நாம் இப்போது நம் கண் எதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படித்தான் பல லட்சம் கோடி சொத்துக்களை இந்த சாமியார்கள் சேர்த்துவிடுகிறார்கள். இன்றைக்கு இந்தியாவில் மூலதனமே இல்லாமல் பல லட்சம் கோடிகளை சம்பாதிக்கும் தொழில்களில் ஒன்று இந்த சாமியார் தொழில் என்பது தான் உண்மை. ஆட்சியாளர்களின் துணை இருப்பதால்  இப்படி சம்பாதிக்கும் பணத்திற்கு கணக்கு வழக்கு கிடையாது. வருமானவரி கட்டத் தேவை இல்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள் மற்றும் பெரும்பணக்காரர்கள் என மேல்தட்டு குடிமக்கள்  முதல் சாதாரண குடிமக்கள் வரை  இவரது பக்தகோடிகளாக இருக்கிறார்கள். அதனால் அரசு இவர்களது வருமானத்தைப் பற்றியோ, வளர்ச்சிகளை பற்றியோ  கண்டுகொள்வதே இல்லை. பெரிய, பெரிய சாமியார்களின் (அதிகாரப்பூர்வ) சொத்து விபரங்களைப்  பார்த்தால் மலைப்பூட்டும் அளவிற்கு சொத்துக்கள் மலையாய் குவிந்த்திருக்கிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பல முற்போக்குச் சிந்தனையாளர்களும், பகுத்தறிவாதிகளும் சாமியார்களின் சித்து விளையாட்டுகளை பற்றியும், ஏமாற்று வேலைகளை பற்றியும் எவ்வளவோ எடுத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால்  இப்போது தான் இந்த சாமியார்களெல்லாம்  ஒரு மோசடி சாமியார்கள் என்பதை  மக்கள்  ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்திருக்கிறார்கள்.          
 
புட்டபர்த்தி சாய்பாபா : 

             அண்மையில் மரணமடைந்த புட்டபர்த்தி சாய் பாபா பயன்படுத்தி வந்த அவரது சொந்த அறையை திறந்து பார்த்திருக்கிறார்கள். அங்கு அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி தான் காத்திருந்தது.  அந்த சாமியாரின்  ஆசிரமத்தில் கட்டுக்கட்டாக பல கோடி பணம் ( சுமார் 12 கோடி ரூபாய் ), கட்டிக்  கட்டியாகத் தங்கம் ( சுமார் 22 கோடி ரூபாய் ), வெள்ளி வகைகள் ( சுமார் 1.64 கோடி ரூபாய் ) மற்றும் வைரக்குவியல்கள் - வகை வகையான  தங்கச் சிலைகள்  என்று  அரை முழுதும் தாராளமாகக் கொட்டிக் கிடந்தன என்று சொல்கிறார்கள்.. புட்டபர்த்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணம் இரண்டு இடங்களில் பிடிபட்டிருக்கிறது. வோல்வோ பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் மற்றும் மற்றொரு வாகனத்தில் 35 லட்சம் ரூபாய் ஆகியவை ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

 வேலூர் ஜூனியர் சாமியார் நாராயணி : 

                வேலூரில் வெகு அண்மைக்காலத்தில் திடிரென சாமியாராக தோன்றிய சிறு பையன்,  நாராயணி என்ற பெயரில் கண்ணுக்கு நேரிலேயே மூக்கில் கையை வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சி. வேலூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் கொஞ்ச கொஞ்சமாக நிலங்களை ஆக்கிரமித்து, அந்த பகுதிக்கு ஸ்ரீபுரம் என்று பெயர் வைத்து, மிக சமீபத்தில் அங்கே ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான  தங்கத்தை பயன்படுத்தி மிகப்பெரிய "பொற்கோயிலை" கட்டி, பார்ப்போர் வியக்கும் அளவிற்கு  பிரமிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார். அந்த பகுதியே இன்று சுற்றுலா ஸ்தலமாக மாறிவிட்டது. ஒரு பொற்கோயிலை கட்டுமளவிற்கு ஒரு சிறுவனுக்கு கோடிக்கணக்கான பணம் எப்படி கிடைத்தது என்பது தான் அந்த கோயிலை பார்போருக்கு எழும் கேள்வியாகும். சாதாரண மக்களுக்கே அப்படிப்பட்ட கேள்வி எழும் போது, ஏன் ஆட்சியாளர்களுக்கு மட்டும் அப்படிப்பட்ட கேள்வியோ - சந்தேகமோ எழவில்லை என்பது தான் நமது கேள்வியாகும்.  



மாதா அமிர்தானந்தமயி:

           இவர்தான் இந்தியாவிலேயே பணக்கார சாமியாரினியாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. மிகவும் குறைவாக மதிப்பிட்டால்கூட அவரது  அமிர்தானந்தமயி டிரஸ்டின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். தனது பதின்பருவ வயதிலேயே சாமியாரினியாக மாறிவிட்ட அமிர்தானந்தமயியின் சொந்த ஊரான வள்ளிக்காவு என்ற தீவில் அவரது ஆசிரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது பல  அடுக்குமாடிக் கட்டிடமாகும். அவரது பக்தகோடிகளிடமிருந்து வரும் நன்கொடைகள் ஒருபுறம் குவிகிறது. மற்றொரு புறம், அவர் நடத்தும்  கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளை லாபம்.  தனியார் கல்விச் சந்தையில் வசூலிக்கும்  கட்டணங்களையே அவர்களும் வசூலிக்கிறார்கள். இதோடு ஒரு மருத்துவமனை, தொலைக்காட்சி நிறுவனம் என்று பணம் கொட்டுகிறது.


ஆஷாராம் பாபு:

           இந்திய சாமியார்களில் அதிகமான அளவு சர்ச்சைகளில் அடிபட்டவர்களில்  இந்த ஆஷாராம் பாபு என்ற சாமியாரும் ஒருவர். . ஏராளமான நில ஆக்கிரமிப்பு புகார்கள் இவரின் ஆசிரமங்கள் மீது உள்ளன.   2009 - ஆம் ஆண்டில், இவருடைய ஆசிரமங்கள் கிட்டத்தட்ட 67 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான நிலங்களை ஆக்கிரமித்துள்ளன என்று நரேந்திர மோடி அரசு சட்டமன்றத்திலேயே அறிவித்தது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 350க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை ஆஷாராம் பாபு அமைத்துள்ளார். அமெரிக்காவில் நியூஜெர்சி உள்ளிட்ட பல இடங்களில் இவரது  ஆசிரமங்கள் உள்ளன.


ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் :

                 151 நாடுகளில் 30 கோடி பக்தர்கள் அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, சாமியார்கள் காவி உடுத்துவதை வாடிக்கையாகக் கொள்வார்கள். இவர் மட்டும் வெள்ளை உடையை உடுத்துபவர். 1980களின் துவக்கம் வரை அவர் யார் என்றே வெளியுலகிற்கு தெரியாமல் இருந்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பில் அவரது சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.  தமிழகத்தின் பாபநாசத்தில் அவர் பிறந்தார். பெங்களூருவில் வாழும் கலை மையத்தை அவர் அமைத்தார். அவரது மையம் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக உருவானது. பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 15 ஏக்கர் நிலத்தை ரவிசங்கரின் ஆசிரமம் கபளீகரம் செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியரான பால் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த சர்ச்சை மறைக்கப்பட்டது.


பாபா ராம்தேவ் :

           ராம் கிருஷ்ண யாதவ் என்ற இயற்பெயரைக் கொண்ட ராம்தேவின் சொத்து மதிப்பு 1,100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஹரித்துவாரின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த இவர், ஏழாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடத்தில் பயின்றிருக்கிறார். பின்னர் சமஸ்கிருதம் மற்றும் யோகா பயின்றார். பின்னர், உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்வதாக அறிவித்தார். பின்னர், திவ்யா யோக மந்திர் டிரஸ்டு ஒன்றைத் துவங்கினார்.

           இப்படியாக நம் நாட்டில்  நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக சாமியார்கள் எண்ணிக்கையும் அவர்கள் சேர்க்கும் சொத்துக்களும் உயர்ந்துகொண்டே தான் போகிறது. ஆனால் ஆட்சியாளர்களோ சாமியார்கள் சேர்க்கும் சொத்துகளுக்கு ஒரு கட்டுப்பாடோ, விதிமுறைகளையோ விதிப்பதில்லை. ஆட்சியாளர்கள் கவனம் தங்கள் பக்கம் திரும்பாத அளவிற்கு ஆட்சியாளர்களை சாமியார்கள் ''கவனித்து'' விடுகிறார்கள்.
           மேலே சொன்ன அத்தனை சாமியார்களும் இலவச மருத்துவமனைகளை நடத்தி அப்பாவி மக்களின் கண்களையும் கட்டிவிடுகிறார்கள் என்பது தான் உண்மை. 

டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு விலையேற்றம் - மக்கள் ஒரு நாள் பொங்கி எழுவார்கள்

                     மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்யும் "சிறப்பு அதிகாரம்" பெற்ற குழுவின் கூட்டம் நேற்று இரவு கூடி,  டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 - ஆகவும் , மண்ணெண்ணையின் விலையை லிட்டருக்கு ரூ. 2 -ஆகவும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ.50 - ஆகவும்  உயர்த்துவது எனவும், இந்த விலை உயர்வு என்பது உடனடியாக நள்ளிரவு முதலே அமலுக்கு வரும் எனவும்  முடிவெடுத்து அறிவித்தது. ஒரு மாதத்துக்கு முன்பு தான் பெட்ரோலின் விலையை ரூ.5 - ஆக உயர்த்தப்பட்ட சூழ்நிலையில், இப்போது இந்த உயர்வு என்பது மக்களால்  தாங்கிக்கொள்ள முடியாதே என்கிற உணர்வு கூட இல்லாமல் மத்திய அரசு தான்தோன்றித்தனமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
               ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வினால் நொந்து போயிருக்கிற மக்களால்  இந்த விலை உயர்வை எப்படி தாங்கிக்கொள்ள முடியும் என்கிற ஒரு அடிப்படை சிந்தனைக் கூட - ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் தான்தோன்றித்தனமாக  மத்திய அரசு செயல்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மக்கள் அத்தியாவசிய பொருட்களின் தாறுமாறான விலை உயர்வால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். இப்படி கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டே போகும் விலையை கட்டுப்படுத்த திராணியில்லாத - வக்கில்லாத - லாயக்கில்லாத மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுக்கு  மக்களை மேலும் தாக்கக்கூடிய இந்த எரிபொருளின் விலையை உயர்த்தும்   துணிச்சல் என்பது  எப்படி வந்தது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால், உணவு, குடி நீர், உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகளைத் தேடித்தேடி அலைந்து தேய்ந்து போன இந்த மக்கள் - பலம் இழந்து போன இந்த அப்பாவி மக்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்கிற தைரியம் தான் மத்திய அரசின் துணிச்சலான இந்த விலை உயர்வுக்கான காரணம் என்பது தான் உண்மை. 
                    எகிப்த்து மற்றும்  லிபியா நாடுகளை போல் மக்கள் எழுகிற நாள் விரைவில் வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.     

திங்கள், 20 ஜூன், 2011

இந்த வயதிலும் உலகத்தைப் பற்றிய அக்கறை...

உலகத்தின் மாபெரும் தலைவனாக விளங்கிவரும் பிடல் காஸ்ட்ரோ இன்றும் உலகத்தைப் பற்றிய சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். வயதோ என்பத்தி எட்டு.. உடல் நலமோ பாதிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் சென்ற ஜூன் 8 - ஆம் தேதி வெனிசுலா அதிபர் சாவேஸ் -உடன் உலக அரசியல் - அமெரிக்க ஏகாதிபத்தியம் இவைகளைப் பற்றி ஆலோசனை நடத்தி இருக்கிறார். பிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் கியூபா உலகத்திற்கே வழிகாட்டுகிறது.

ஞாயிறு, 19 ஜூன், 2011

தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் கல்வி....

  தனியார் பள்ளிகளில்  தடையற்ற கட்டணக்கொள்ளை : 
            தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம் பெற்றோர்களை மிகப்பெரும் அளவிற்கு பாதித்துள்ளது. இதனால் மாநிலத்தில் ஆங்காங்கே கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்திட, நீதிபதி கோவிந்தராஜன் குழு அமைக்கப்பட்டு, கட்டண விகிதம் தீர்மானிக்கப்பட்டது. அதுவே அதிகமாக  இருந்ததாக பெற்றோர்கள் கஷ்டப்பட்டனர். மறுப்பக்கம், இக்கட்டணம் தங்களுக்கு போதாது என 6400 பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்தனர். அதனால் அன்றைய  திமுக அரசு கட்டணத்தை மறுபரிசீலனை செய்திட நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவை புதிதாக நியமித்தது.

       இந்தக்குழு ஆறுமாத கால அவகாசத்தை எடுத்துக்கொண்டும் கூட, இந்தாண்டு பள்ளிகள் திறக்கும் வரையிலும் கட்டண விபரங்களை அறிவிக்கவில்லை. இதற்கிடையில் அக்குழுவின் தலைவராக இருந்த  நீதிபதி  ரவிராஜபாண்டியன் ராஜினாமா செய்துவிட்டார். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதியக் கல்விக் கட்டணமோ  முந்தைய கட்டணத்தை விட மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சென்னை எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளியின் 11வது வகுப்பிற்கான கட்டணம் ரூ.11 ஆயிரம் என்பதை ரூ.25 ஆயிரம் என உயர்த்தி அறிவித்துள்ளது. கட்டண உயர்வைக் கண்டித்து பெற்றோர்கள் போராடினால், தனியார்ப் பள்ளி கட்டண வசூலில் அரசு தலையிடாது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு சி. வி. சண்முகம் பொறுப்பில்லாமல் சொல்கிறார்.

         புதிய கட்டணம் குறித்த விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில்  அரசு வெளியிடாததால், பெற்றோர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.  பள்ளி நிர்வாகங்களோ புதிய கட்டண விபரங்களை  ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் விருப்பத்திற்கேற்ப  கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதற்கும் மேலாக சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள் கட்டணத்தை சம்பந்தப்பட்ட       பள்ளிகளே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று தடையற்ற கொள்ளைக்கும் இந்தக் குழு  வாய்ப்பளித்துள்ளது. மக்களை மிக மோசமாக பாதிக்கும் நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவின் கல்விக் கட்டண அறிவிப்பில் அரசு தலையிடுவதில் சட்டக்குறுக்கீடுகள் இருக்குமானால், அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தம் கொண்டு வந்து, அரசு தலையிட்டு திரும்பப் பெற வேண் டும். கடந்த ஆண்டின் கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டும் அமல்படுத்திட வேண்டும். வங்கிக் காசோலைகள், வரைவோலைகள் மூலம் மட்டுமே கட்டணம் பெறுவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்பதே கல்வியின் மீது அக்கறை உள்ளவர்களின் எதிர்பார்ப்பாகும். 

 காற்றில்  பறக்கும் கல்வி உரிமைச்சட்டம் : 

          அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010 - ம் ஆண்டு ஏப்ரலில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.       இச்சட்டம் ஏழைகளுக்கு கல்வி    தருவதற்கு   சில   திட்டங்களை                          உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, அனைத்து மட்ட தனியார் கல்வி நிறுவனங்களிலும் 25 சதவிகித இடங்களை இலவச கல்விக்கு ஒதுக்கிட வேண்டும் என இச்சட்டம் குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட அதற்கான விதிகள் தமிழகத்தில் இதுகாறும் உருவாக்கப்படவில்லை. காலதாமதமின்றி விதிகளை உருவாக்கி, இச்சட்டப் பயன்கள் தமிழகக் குழந்தைகளுக்கு  கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கேள்விக்குறியாகும் சமச்சீர்க் கல்வி : 

          சமச்சீர் கல்வி திட்டத்தில் பொதுப் பாடத்திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தி வைப்பது என்ற அதிமுக அரசின் முடிவு பொருத்தமானது அல்ல என்று ஆரம்பம் முதலே பல கல்விச் சிந்தனையாளர்களும்,  பல கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். இப்பிரச்சனை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே உள்ள பொதுப் பாடத்திட்டத்தை அமலாக்க வேண்டும் என்றும்,  10 வரையிலான இதர வகுப்புகளுக்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, குழு அளிக்கும் பரிந்துரைகளைப் பெற்று மூன்று வாரங்களுக்குள் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன் படி   தமிழக அரசு நிபுணர் குழுவை நியமித்தது.  அந்தக் குழுவில் கல்வியாளர்கள் என்றப் பெயரில்  இரண்டு தனியார் பள்ளி உரிமையாளர்களை அறிவித்துள்ளது என்பது  ஏற்கக்கூடியதல்ல. சமூக அக்கறையுள்ள பொருத்தமான கல்வியாளர்கள் தான்  இக்குழுவில் இணைக்கப்பட  வேண்டும்.  கடந்த திமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல்வேறு  அம்சங்களை அமலாக்காத சூழ்நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளோடு அனைவரது ஆதரவோடு அமைந்த  புதிய அதிமுக அரசு   . ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொதுப்பாடத்திட்டம் என்ற முதல் படியை இந்தாண்டு அமுலாக்கிக் கொண்டே, அதிலுள்ள குறைகளை நீக்கி சமச்சீர் கல்வியை  அமலாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்பது தான் தமிழக மக்களின் - பெற்றோர்களின் - மாணவ-மாணவியரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஆகும்.

பெருமுதலாளிகளின் கொள்ளைகளுக்கு துணைப்போகும் மன்மோகன் சிங் !

            அம்பானி சகோதரர்களின் சொத்துச்சண்டையை தீர்ப்பது முதல், அவர்களது கொள்ளை லாபத்திற்கு தாராளமாக வழிவகை செய்து கொடுப்பதுவரை முழுமையாக துணை நின்றவர்கள் இந்த தேசத்தின்  பிரதமர் மன்மோகன் சிங்கும், அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும்தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

      கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தியுள்ள எரிவாயு ஊழல் தொடர்பாக மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி வரைவு செய்து கொடுத்துள்ள  அறிக்கை என்பது, கடலில் மூழ்கியுள்ள மிகப்பெரும் பனிமலையின் சிறு நுனி முனைப்பகுதி மட்டுமே ஆகும். இந்த ஊழலுக்கு உறுதுணையாக இருந்ததில் - இந்த மாபெரும் கொள்ளைக்கு துணைப் போனதில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மிகப்பெரிய  பொறுப்புண்டு என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.  மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் கொள்ளை லாபம் பெறுவதற்கு  திட்டமிட்டு உயர்த்தப்பட்ட எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்பதும்  சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி மீண்டும் மீண்டும் எரிவாயு விலையை உயர்த்துவதை  கைவிட்டு, பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி முன்பு அரசிடம்  வைத்த ஆலோசனைகளை பரிசீலிக்க வேண்டுமென்பதும்  விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட இந்த தேசத்தின் அப்பாவி மக்களின்  எதிர்பார்ப்பாகும்.

வெள்ளி, 17 ஜூன், 2011

எடுத்துக்காட்டாய் ஒரு மாவட்டக் கலெக்டர் - பாராட்டுகிறோம்

         இன்றைக்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார்ப் பள்ளியில் தான் சேர்த்து பெருமைபடுகிறார்கள். இதில் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. அவர்களுக்கே தங்கள் பணியில் - கற்பித்தலில் நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களும் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று அக்கறைக் காட்டுவதில்லை.    ஆனால் வசதியில்லாத, கிராமப்புறக் குழந்தைகள் வேறுவழியில்லாமல் அரசுப் பள்ளியில் தான் சேருகிறார்கள். காரணம் இலவசக் கல்வி மட்டுமல்ல. அவர்கள் அரசுப் பள்ளிக்குச் செல்வது என்பது இலவச மதிய உணவுக்காகத் தான் என்பது தான் உண்மையானக் காரணமாகும்.
                அப்படிப்பட்டப் பள்ளியில் தான் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆர். ஆனந்தகுமார் தனது ஆறு வயது பெண் குழந்தை கோபிகாவை குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய  அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்திருக்கிறார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும். அவர் அதோடு மட்டும் விடவில்லை. தன குழந்தைக்கு இலவச சீருடை வழங்க முடியுமா என்று அப்பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரோ, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்க முடியும் என்று சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட ஆட்சித்தலைவர், என் குழந்தையும் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து பள்ளி சீருடை வழங்குங்கள் என்று தலைமையாசிரியரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். 
                 இப்படிப்பட்ட  சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருப்பது நமக்கு பெருமையாய் இருக்கிறது. அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கையை வைத்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவரையும், அவரது இந்த முடிவுக்கு அனுமதியளித்த அவரது மனைவியையும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்.  

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொடரும் ஊழல்களின் அணிவகுப்பு......

கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை  ரிலையன்ஸ் எரிவாயு ஊழல்
            2 ஜி அலைக்கற்றை, விண்வெளி அலைக்கற்றை,  காமன்வெல்த் விளையாட்டு, பிரச்சார் பாரதி, மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு போன்றவற்றில் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தில் நட்டத்தை உண்டாக்கி, பெருமுதலாளிகளும், மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டுவதற்கு மன்மோகன் சிங் கண்டுகொள்ளாமல் வாய்ப்பளித்த விவரங்கள் ஒவ்வொன்றாக பூதம் போல் கிளம்பி வெளியே வருவதைப் பார்த்து இந்திய மக்களே அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

         சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக -  வரலாறு காணாத ஊழல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியே வர வர மன்மோகன் ஆட்சியின் லட்சணம் மக்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. இன்றைக்கு ஊழல்களின் அணிவகுப்பில் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்திய அரசின் கருவூலத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கு மிகப்பெரும் இழப்பை 
ஏற்படுத்தி அம்பானியின் ரிலையன்ஸ் கம்பெனி நடத்தியுள்ள மிகப்பெரும் எரிவாயு ஊழலிலும் சிக்கியுள்ளது.

        மன்மோகன் சிங் அரசின் பெட்ரோலியத்துறை அதிகாரிகளும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சட்டத்தை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கும் அதிகமாக மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையகம் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது.
       நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த அனைத்து ஊழல்கள் தொடர்பாகவும் தொடர்ந்து மவுனம் காக்கும் பிரதமர் மன்மோகன் சிங், ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தியுள்ள எரிவாயு ஊழல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவசியம் பதில் சொல்லியே தீரவேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

          ஆந்திரா-ஒரிசா எல்லையை யொட்டி கிருஷ்ணா-கோதாவரி ஆறுகளின் கழிமுகப்பகுதியில் மிகப்பெரும் பெட்ரோலியம்- இயற்கை எரிவாயு வளம் குவிந்திருக்கிறது. இந்த பகுதியில் அரசு பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், உள்நாட்டில் கிடைக்கும் இந்த மகத்தான வளத்தை கொள்ளையடித்து தனது லாபத்தை பெருக்க, பெரும் முதலாளியான முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இந்த பொதுச்சொத்தை பயன்படுத்துவதில் முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் இடையே மோதல் கூட ஏற்பட்டது. முதலாளிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும் ஓடோடிச்சென்று தீர்த்து வைக்க முற்பட்டார்கள் என்பது வெட்கக்கேடான தனிக்கதை.

       இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா - கோதாவரி இயற்கை எரிவாயு தளத்தில் (கேஜி கேஸ் பேசின்) மிகப்பெரிய 18 எரிவாயுக்கிணறுகளை, அரசிடம் ஒப்பந்தம் போட்டு பயன்படுத்தத் துவங்கியது. ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத்திவிட்டு-அதிலிருந்து பெட்ரோலியத்தையும் இயற்கை எரிவாயுவையும் எடுத்து 
கொள்ளை லாபம் பார்த்துவிட்டு- பின்னர் இந்தக்கிணறுகளில் பெட்ரோலியமோ அல்லது இயற்கை எரிவாயுவோ கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறியது. அதைத்தொடர்ந்து இதில் பெருமளவில் மூலதனச் செலவு செய்துவிட்டதாகக் கூறி, பெட்ரோலியத்துறை யிடமிருந்து மிகப்பெருமளவிலான தொகையை கறந்து விட்டது. இந்தத்தொகையின் அளவு ரூ.45 ஆயிரம் கோடி என்று அதிர்ச்சிதரத்தக்க அறிக்கை ஒன்றை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையகம் தயாரித்துள்ளது.

          193 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின்படி, கிருஷ்ணா கோதாவரி எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளில் உற்பத்தியை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும், பெட்ரோலிய அமைச்சகத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், சம்பந்தப்பட்ட எரிவாயு கிணறுகளை மீண்டும் அரசிடம் ஒப்படைக்காமல், ஒப்பந்தக்காலம் முடிந்த பின்னர் அதே கிணறுகளில் தனது தந்தை பெயரில் திருபாய் 1 மற்றும் திருபாய் 3 என சுத்திகரிப்பு ஆலைகளை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்தது. எண்ணெய் வளம் கொழிக்கும் கேஜி - டி6 பிளாக் எனப்படும் தளத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றியே ரிலையன்ஸ் நிறுவனம் தனது சொந்த ஆலைகளை அமைத் தது. இப்படிச் செய்ததன் மூலம் அரசு நிறுவனங்களுக்கு 117 சதவீதம் அளவிற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது.

     ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த சட்டவிரோத செயல்களை சட்டப்பூர்வமாக ‘மாற்றியதில்’ காங்கிரஸ் தலைமையிலான அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் முனைப்புடன் செயல்பட்டது. 
பெட்ரோலியத்துறையில் இயற்கை எரிவாயு தளங்களுக்கு பொறுப்பான ‘ஹைட்ரோ கார்பன் பொது இயக்குநரக’த்தைச் சேர்ந்த மிக முக்கிய அதிகாரி கள் பெருமளவில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக வேலை செய்திருக்கிறார்கள்.

             இந்த இயற்கை எரிவாயு தளங்களில் பணியைத்துவக்கிய போது தனது மூலதனச் செலவு என்று 2.39 பில்லியன் டாலர்களை கணக்குக்காட்டிய 
ரிலையன்ஸ் நிறுவனம், பின்னர் மூலதனச்செலவினம் 8.8 பில்லியன் டாலர் என்று கணக்கை மாற்றி, அரசிடமிருந்து ரூ.45 ஆயிரம் கோடியை சுருட்டிவிட்டது. இதுதொடர்பான ஏராளமான விவரங்கள் மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

       நாட்டை உலுக்கியுள்ள இந்த ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் 2006க்கும் 2011க்கும் இடையில் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 
பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தவர் முரளி தியோரா ஆவார். இவர் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கெல்லாம் ஏஜெண்டாக செயல்பட்ட ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

          அதிர்ச்சிதரத்தக்க இந்த விவரங்கள் கடந்த 2 நாட்களாக மன்மோகன் சிங் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சர்களுடன் அவசரமாக கலந்தாலோசனைகள் நடத்தி வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசா, தயாநிதிமாறன் போன்ற மத்திய அமைச்சர்களின் வரிசையில் முரளி தியோராவும் சிக்குகிறார். இவர்கள் அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறார்.

வியாழன், 16 ஜூன், 2011

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்...!

பெண்களுக்கு எதிரான கொடுமைகள்: இந்தியாவுக்கு 4வது இடம்

            உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத வரிசையில் இந்தியா நான்காவது இடத்தை வகிக்கிறது. பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை இந்தியாவில் அதிகம் நிகழ்வதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

          லண்டனில் இயங்கி வரும் ''டிரஸ்ட்லா'' என்ற நிறுவனம் உலக அளவில் பெண்கள் நிலைமை குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது இடத்தில் காங்கோவும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும், நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன என்று தெரியவந்துள்ளது. ஐந்தாவது இடத்தில் சோமாலியா உள்ளது.

             பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் மூன்று நாடுகள் தெற்காசிய நாடுகளாக உள்ளன. பாலியல் கொடுமைகள், சுகாதாரச் சீர்கேடு, பாலின பாகுபாடு, பண்பாட்டு ரீதியிலான சித்ரவதைகள், மூட நம்பிக்கை அடிப்படையிலான கொடுமைகள், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகம் நடைபெறுகின்றன என்று அந்த ஆய்வு கூறுகிறது.

         இந்தியாவை பொறுத்தவரை பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமான அளவில்  நடைபெறுகின்றன என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் இந்தியாவில் ஒரு கோடி குழந்தைகள் கடத்தப்பட்டதாக மத்திய உள் துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவிற்குள்ளும், 10 சதவீதம் வெளிநாட்டிற்கும் கடத்தப்பட்டதாகும். இந்தியாவில் 30 லட்சம் பெண் குழந்தைகள் கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் மத்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

            பெண்களை இளம் வயதிலேயே கட்டாயப்படுத்தி மணம் செய்து வைப்பது, கவுரவக்கொலைகள் ஆகியவையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளாக இந்தியாவில் அன்றாடம் நிகழ்கின்றன. பாலின சமத்துவ மின்மையும் அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆண் - பெண் வகிதம் 1000: 914 என்ற விகிதத்திலேயே 
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பெண்கள் சுகாதாரம் - மருத்துவம்  பற்றிய ஆய்வு : 

                உலக சுகாதார நிறுவனம் உலகத்தில் உள்ள 135 நாடுகளில் நடத்திய ஆய்வின் படி,  பெண்கள் சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் அக்கறை காட்டும் நாடுகளில் இந்தியா 133 - வது இடத்தில் உள்ளது என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும். இதில் இலங்கை  16 -வது இடத்திலும்,
பங்களாதேஷ்  33 - வது  இடத்திலும் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, இந்தியப் பெண்களில் 51 சதவீதத்திற்கும் அதிகமானோர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகக் கொடுமையானது. 


 ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு :                      

             சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கடந்தும் பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெணகளுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா  இன்னும் நிறைவேற்றப் படாமல் இருப்பது பெண்களுக்கெதிரான ஆட்சியாளர்களின் ஆணாதிக்கச் சிந்தனையை தான் காட்டுகிறது.

                  இனியாவது  "தையலை உயர்வு செய்"  என்ற பாரதியின் கட்டளையை ஏற்று நடப்போம்.   

உலகத்தை நேசித்தவனை உலகம் கொண்டாடுகிறது....

“உணர்வுகளோடு கலந்து நின்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு” -  83வது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் சேகுவேராவுக்கு புகழாரம்

       சேகுவேராவின் 83-வது பிறந்தநாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இந்தக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக
நடந்திருக்கின்றன. இந்தக் கொண்டாட்டங்கள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதனதன் தன்மைக்கேற்றபடி அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு ஆசியாவில் மக்கள் எழுச்சி நடைபெற்று வரும் நாடுகளில் ''சே'' படம் உள்ள பெரிய, பெரிய அட்டைகளோடு போராட்டக்காரர்கள் வீதிகளில் வலம் வந்துள்ளனர். வெனிசுலா, பொலிவியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் விடுதலையைப் பாதுகாப்போம் என்ற முழக்கங்களை மக்கள் எழுப்பினர்.
            கியூபாவில் சான்க்டி ஸ்பிரிட்டஸ் என்ற இடத்தில் சே குவேராவின் பிறந்தநாள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. கியூபாவின் மத்தியப் பகுதியில் உள்ள இந்த மாகாணத்தில் நடந்த பல்வேறு நடவடிக்கைகளில் சேகுவேரா முன்னின்றார். ஃபோமென்டோ என்ற நகரில் சேகுவேராவைக் கவுரவிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் கொண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.  இந்த ஃபோமென்டோ நகர்தான் கியூபாப் புரட்சியாளர்களால் விடுவிக்கப்பட்ட முதல் பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்கண்காட்சியை நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்து பார்வை யிட்டனர். வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வண்ணம் அந்தக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

                சேகுவேராவின் பிறந்தநாளை நினைவுகூரும் வண்ணம் கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான கிரான்மா குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. தனது வாழ்நாளில் எந்த கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்தாரோ, அதற்கு விசுவாசமாக அவர் உள்ளார். உறுதியான மனநிலை, அசாதாரணமான தைரியம், உயர்ந்த மனிதாபிமானம் கொண்டவர். தனது நாட்டிற்காகக் கடைசிவரை போராட வேண்டும் என்ற உறுதி அவரிடம் இருந்தது. அவரது செயல்கள், சாகசங்கள் மற்றும் செயல்திறன் ஆகியவை புரட்சிகர மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளோடு கலந்திருந்ததால் நியாயமான விஷயங்களுக்காக அவரைப் போராட வைத்தது. இவ்வாறு கிரான்மா குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

            பொலிவியாவின் லாஹிகுரா நகரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கியூபாவுக்கான பொலிவியத் தூதர் ரபேல் டவுசா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அமெரிக்காவின் தாக்குதல்களை மீறி கியூபா, வெனிசுலா மற்றும் பொலிவியப் புரட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதற்காகவே சே குவேராவின் பிறந்தநாளை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டார். அப்போது பேசிய பலரும், கியூபா, வெனிசுலாவைத் தொடர்ந்து, மக்கள் நலக் கொள்கைகளை நோக்கி நடைபெறும் அரசை பொலிவியாவில் மக்கள் கொண்டு வந்ததற்கு சேகுவேரா போன்ற புரட்சியாளர்களின் அர்ப்பணிப்பு செயல்களும் காரணம் என்று குறிப்பிட்டனர்.

          ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் சே குவேராவின் ஆவணப்படங்களைத் திரையிட்டு பிறந்தநாளைநினைவு கூர்ந்துள்ளனர். வெனிசுலாவில் நாடாளுமன்றக்கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஒரு நாள் கூட்டத்தில் கிட்டத்தட்ட பாதி நேரத்தை சேகுவேரா நினைவைக் கொண்டாட ஒதுக்கி விட்டார்கள். இடுப்பில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால் ஓய்வு பெற்று வரும் வெனிசுலா ஜனாதிபதி சாவேசால் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இயலவில்லை. மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை அவர் அனுப்பினார்.


                 உத்வேகம் அளிக்கும் சே : ஏமன் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எழுச்சிகரமான போராட்டம் நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் சமரசப் பாதையில் சென்ற

போதும் தங்கள் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. இதனால் தங்கள் போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்க சேகுவேராவின் படங்கள் அடங்கிய அட்டைகளோடு வீதிகளில் வலம் வருகிறார்கள். அரபு லீக் அளித்த சமரசத்திட்டத்தில் சலேவுக்கு மன்னிப்பு வழங்கும் அம்சம் இருந்தது. இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டாலும் எழுச்சியோடு போராடி வரும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். ஆட்சி மாற்றத்தோடு கொள்கை மாற்றம் வேண்டும் என்பது மக்களின் கருத்தாகும்.


நாட்குறிப்பு வெளியீடு :

இதுவரை வெளிவராத சேகுவேராவின் டைரிக்குறிப்புகள் நூல் வடிவத்தில் வெளியாகியுள்ளது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் சே-யின் பிறந்தநாளான ஜூன் 14 ஆம் தேதியன்று ‘வீரனின் டைரி’ என்ற தலைப்பில் அந்த நூல் வெளியிடப்பட்டது. 1956 டிசம்பர் 2, அன்று கிரான்மாவிற்குச் சென்று மற்ற போராளிகளோடு இணைந்து கொண்ட திலிருந்து, அப்போதிருந்து மூன்று ஆண்டுகள் நடைபெற்ற ஆயுதந்தாங்கிய போர் முடியும் வரையிலான டைரிக்குறிப்புகள்தான் தற்போது வெளியாகியுள்ளன. இந்த நூலை வாங்குவதற்கு ஏராளமான நபர்கள் வரிசையில் காத்திருந்தனர். வெளியானவுடன் பல நூறு பிரதிகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் இந்த நூல் குறிப்பிடத்தக்க தாக்கத் தை ஏற்படுத்தும் என்று வெளியீட்டு விழாவில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

புதன், 15 ஜூன், 2011

நாட்டின் சொத்துக்களை சூறையாடும் கேடி பிரதர்ஸ் & களவாணிச் சகோதரர்கள்

                    இன்றைக்கு டாப் - 10  உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் தங்களையும் இணைத்துக் கொண்டு பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகளாக முன்னேறிக்கொண்டிருப்பவர்கள்  வட இந்தியாவைச் சேர்ந்த   முகேஷ் அம்பானி - அணில் அம்பானி என்ற KD பிரதர்சும், தென்னிந்தியாவைச் சேர்ந்த  கலாநிதி மாறன் - தயாநிதி மாறன் என்ற கலவாணிச்  சகோதரர்களும் மிக முக்கியமானவர்கள். இந்தியாவில் இவர்கள் சம்பாதித்த இந்த சொத்துகள் என்பது மூட்டைத் தூக்கி வியர்வை சிந்தி சம்பாதித்தச் சொத்துகள் அல்ல. இந்த  நாட்டின் சொத்துக்களை சூறையாடி - அப்பாவி மக்களை ஏய்த்து -  அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்புச் செய்து சட்டவிரோதமான முறையில் - ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையாக இருந்துகொண்டு அவர்கள் முறையற்ற வகையில் அளிக்கும் வரிச் சலுகைகள் மற்றும் மானியங்களைப் பெற்று - என இப்படியாக பல லட்சம் கோடிகளாக சேர்ந்த சொத்துகள் தான் அவர்களுடைய சொத்துக்கள் என்றால் அது மிகையாகாது.  இவர்கள் ஒன்றும் பரம்பரைக் கோடீஸ்வரர்கள் கிடையாது. இப்படியாக பணம் சேர்த்து தான் உலக பணக்காரர்களாக மாறினார்கள் என்பது தான் உண்மை.
                 இந்தியாவில் பல்வேறு துறைகளில்  இன்று  இந்த இரண்டு ஜோடி அபூர்வ சகோதரர்கள் ஈடுபட்டு மக்களின் பணத்தை அவர்கள் பாக்கெட்டில் இருந்தே உருவி விடுகிறார்கள். இவர்கள் நவீனக் கொள்ளைக்காரர்கள்.  இன்றைக்கு இந்தியாவில் இவர்கள் செய்யாதத் தொழில்களே கிடையாது.   எந்தத் தொழிலில் லாபம் கொழிக்கிறதோ அந்தத் தொழிலில் இவர்கள் நுழைந்து  விடுவார்கள்.  அதனால் பரம்பரைப் பரம்பரையாக - குடும்பம் குடும்பமாக பிழைப்புக்காக தொழில் செய்தவர்களின் கதி அதோ கதியாகிவிட்டது. இவர்கள் செய்யாத தொழில் என்பது ஒன்றொன்று தான். அது பிச்சை எடுக்கும் தொழில். அதில் லாபம் கிடைக்கும் என்று தெரிந்தால் அதைக்கூட செய்ய இவர்கள் தயங்கமாட்டார்கள். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த கார்ட்டூன் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு பிச்சைக்காரன் ஓவென்று அழுகிறான்.  அவனை மற்றொரு பிச்சைக்காரன் ஏனப்பா அழுகிறாய் என்று கேட்கிறான். அதற்கு அந்த பிச்சைக்காரன், " போகிறபோக்கைப் பார்த்தால் நம்பத் தொழிலிலேயும் இந்த அம்பானிச் சகோதரர்களும் மாறன் சகோதரர்களும் நுழைந்துடுவார்களோன்னு பயமா இருக்கு.. அதான் அழறேன்". இது நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையிலும் உண்மை தான்.  

சொத்துக்காக குடும்பச் சண்டை :
  
           அம்பானி சகோதரர்கள் நாட்டின் சொத்துகளை கூறுபோடுவதில் கூசாமல் சண்டைப் போட்டுக்கொண்டதை நாடே பார்த்தது. அரசாங்கமே எடுத்து நடத்தவேண்டிய இயற்கை வளமான கிருஷ்ணா - கோதாவரி படுகையிலுள்ள எண்ணெய் மற்றும்  எரிவாயு கம்பெனியை தாங்களே ஏற்று நடத்துவதற்கு தான் இவர்கள் சண்டைப் போட்டுக்கொண்டார்கள். உடனே பிரதமர் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் தலையிட்டு  கட்டப் பஞ்சாயத்து செய்து இருவர் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து எண்ணெய் வளங்களை முகேஷ் அம்பானிக்கும், தொலைத்தொடர்பு  வளங்களை அணில் அம்பானிக்கும் கொடுத்து சமரசம் செய்து வைத்தார்கள் என்பது ஒரு வெட்கக்கேடான விஷயமாகும். 
                 இங்கே தமிழகத்தில் இந்த கலவாணிச் சகோதரர்களில் ஒருவரான தயாநிதி மாறனுக்கு திமுக தலைமையின் மீது ஒரு பார்வை இருந்தது. அதனால் தன சொந்த நாளேட்டிலும், தொலைக்காட்சியிலும் தானே தயாரித்த கருத்துக் கணிப்பை வெளியிட அது பூதாகரமாக அந்த கலவாணிச் சகோதரர்களுக்கே எதிராக அமைந்துவிட்டது. கருணாநிதியின் கேடிப்பிள்ளைகளில்  ஒருவரான  அஞ்சாநெஞ்சன் அழகிரி விஸ்வரூபம் எடுக்க ஏகப்பட்ட களேபரங்கள் தமிழ்நாட்டில் நடந்தேறியது. இந்த தேசப் பிரச்சனையில் கருணாநிதியின் குடும்பமும் கலவாணிச் சகோதரர்களின் குடும்பமும் பிரிந்துவிட்டது. ஆனால் இந்தப் பிரிவு என்பது கொஞ்ச காலம் தான் நடந்தது. ஏனென்றால், இப்படியாக இரண்டு குடும்பங்களும் பிரிந்திருந்தால் நாம் "இத்தனை நாட்களாக கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகளும்" பிரிந்துவிடுமே  என்று கருணாநிதி சுதாரித்துக்கொண்டு சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் இரண்டு குடும்பங்களையும் இணைத்து வைத்தார் என்பதும் இந்த நாடே பார்த்த உண்மைகள்.                                                                                                                         

மற்றுமொரு ஊழல் பூதம் வெளியே கிளம்பியிருக்கிறது - மன்மோகன் சிங் ஆட்சியின் லட்சணம் பாரீர்...!

     மன்மோகன் சிங் அரசின் செயல் பாட்டால் இந்தியாவின் பெருமுதலாளியான முகேஷ் அம்பானியின்  நிறுவனம் ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைத்ததாகவும், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை கூறியுள்ளது.

           கிருஷ்ணா - கோதாவரி நதிப்படுகையில் சமையல் எரிவாயு எடுக்கும் பணியை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. இந்தப் பணியை பொதுத்துறை நிறுவனங்களே திறம்படச் செய்ய முடியும் என்றபோதும் அம்பானிக்கு நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க அனுமதி கொடுத்தது மன் மோகன் சிங் அரசு.

          இந்த தேசத்தின் சொத்தை பங்குபோட்டுக் கொள்வதில்  முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் தகராறு ஏற்பட்டபோது, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப. சிதம்பரம் இருவருமே  நேரடியாக கட்டப் பஞ்சாயத்து செய்தார்கள் என்பது நாம் மறந்திருக்க முடியாது.  அதன்  பிறகு தான் அவர்களுக்குள்  சமரசம் ஏற்பட்டது.

             கிருஷ்ணா - கோதாவரி நதிப்படுகையில் உற்பத்திப் பொருளை பகிர்ந்து கொள்வது தொடர்பான உடன்பாடு முழுக்க முழுக்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்தது என்றும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் மற்றும் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்றும் மத்திய தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

      அரசுக்கு ஏற்படும் இழப்பு குறித்து பிரதமர் அமைச்சகத்திற்கு தொடர்ச்சியாக பலமுறை எச்சரிக்கை செய்து கடிதம் எழுதினேன். ஆனால் பிரதமர் அமைச்சகம் இது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்று மத்திய அரசின் முன்னாள் வருவாய்த்துறை செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா குறிப்பிட்டுள்ளார்.

    முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஆர்ஐஎல் மற்றும் கெய்ரின் நிறுவனத்திற்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் உடன்பாடு அமைந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

         ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமருக்கு தெரிந்து தான் எல்லாம் நடந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா திரும்பத்திரும்ப கூறி வருகிறார். இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அநியாயமாக ஆதாயம் கிடைக்கும் வகையில் அமைந்த உடன்பாடு குறித்து பிரதமர் அமைச்சகம் கண்டுகொள்ளாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

      தேசத்தை உலுக்கி வரும் தொடர் ஊழல்களுக்கு மத்தியில் இந்த முறைகேடும் வெளியாகியுள்ளது. முழுமையாக விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

நன்றி : தீக்கதிர்  ( அரசியல் விழிப்புணர்வு பெற ''தீக்கதிர்'' நாளேட்டினை படியுங்கள் )

செவ்வாய், 14 ஜூன், 2011

ஊழலுக்கு எதிராக களம் இறங்குவோம்: பிரகாஷ் காரத்

                பெரு முதலாளிகள் - ஆளும் அரசியல்வாதிகள் - அதிகாரவர்க்கத்தினர் ஆகியோருக்கு இடையே நிலவும் மிக மோசமான தொடர்புகள் காரணமாக ஊழல் என்பது ஒரு நிறு வனமாகவே மாற்றப்பட்டுள்ளது என்றும், இந்த 
உறவின் விளைவே 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டினார்.

              மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் 
ஹைதராபாத்தில் ஜூன் 11, 12ம்தேதி களில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அரசின் உயர்மட்டங்களில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தியதிலும், அவற்றுக்கு எதிராக மிகப் பெரும் போராட்டங்களை நடத்தியதிலும் நாட்டிலேயே இடதுசாரி கட்சிகளுக்கே மகத்தான பங்கு உண்டு என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். நாட்டிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட் சிப் பொறுப்புக்கு வந்த இடதுசாரி பிரதிநிதிகள் மட்டுமே ஊழல் கறைபடியாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

                நவீன தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துவதன் விளைவாக பெருமுதலாளிகள் - அரசியல்வாதிகள் - அதிகார வர்க்கத்தினர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோசமான உறவு, ஊழலை ஒரு சட்டப்பூர்வமான நிறுவனமாக மாற்றிவிட்டது என்று சாடிய பிரகாஷ் காரத், ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய மாபெரும் இயக்கத்தை நடத்திட இடதுசாரிக் கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசித்து முடிவெடுக்கும் என்று குறிப்பிட்டார். ஊழலுக்கு எதிராக அமைக்கப்படும் இடது சாரி மேடை, தேர்தல் சீர்திருத்தங்களுக்காகவும், நீதித்துறை சீர்திருத்தங்களுக்காகவும் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தும் என்றும் தெரிவித்தார்.

                 ஊழல் மட்டுமின்றி கறுப்புப் பணத்திற்கு எதிராகவும் இடதுசாரிக் 
கட்சிகளோடு இணைந்து தீவிரமான போராட்டத்தை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி ; தீக்கதிர்   

திங்கள், 13 ஜூன், 2011

குழந்தைகள் உழைப்பில் உருவான கறுப்புப் பணம் - இந்திய நாட்டின் அவமானச் சின்னம்

               உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் என்பது நேற்றைய தினம்  ஜூன் 12 - ஆம் தேதி  எல்லா நாட்களையும்  போல்  - வழக்கம் போல் சம்பிரதாயச் சடங்கோடு முடிந்துவிட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடக்கின்ற ஒன்று தான். ஆனால் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை என்னவோ ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதைப்  பற்றிய அக்கறை இந்த ஆட்சியாளர்களுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ இருப்பதாக தெரியவில்லை. தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் தங்கள் பங்கிற்கு குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டு தாங்கள் மட்டுமே அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொண்டனர் என்று தான் சொல்லவேண்டும். அப்படி வந்த செய்திகளை இங்கு பார்ப்போம்...
          கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்  பணம் குறித்த கடுமையான விவாதங்கள் நடந்துவருகின்றன. 
இச்சூழலில் குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பில் மட்டுமே ரூ. 1.2 லட்சம் கோடி வரை கறுப்புப்  பணம்  உருவாகுவதாக குழந்தை உரிமைகளுக்கான அமைப்பு ( Bachpan Bachao Andolan - BBA) தெரிவித்துள்ளது.

         “உயர்மட்ட ஊழல் மற்றும் இந்திய தொழிலாளர்கள்” ( Capital Corruption: Child Labour in India ) பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்ட இப்புள்ளி 
விபரங்கள் வாயிலாக முறையற்ற வகையில் முதலாளிகள் திரட்டிய மூலதனம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

     முதலாளிகளின் அதிகளவு லாபவேட்கை காரணமாக இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில்  குறைந்த கூலியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குழந்தைத் தொழிலாளர் முறை, ஊழல் மற்றும் கறுப்புப்பணம் போன்றவற்றிற்கு இடையே ஒன்றுக்கொன்று தொடர்புகள் உள்ளன.   இந்தத்  தொடர்புகளால் இந்திய  முதலாளிகள் மற்றும் இடைத்தரகர்கள் அதிகளவு லாபம் சம்பாதிக்கின்றனர்.

             இந்தியாவில் ஆறு கோடிக்கும் மேல்  குழந்தைத் தொழிலாளர்கள் உள்ள நிலையில், சராசரியாக 200 நாட்கள் வரை வேலை நாட்களாக கணக்கிடப்பட்டாலும் சுமார் ரூ.18 ஆயிரம் கோடிகள் வரை கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது.

        தற்போது ஆறு கோடி குழந்தைத் தொழிலாளர்களுக்கு மாற்றாக பிற தொழிலாளர்களை பயன்படுத்தும் சூழலில், நாள் ஒன்றுக்கு ரூ.115 வரை சராசரி வருமானம் என கணக்கிடப்பட்டால் ரூ. 1லட்சத்து 38 ஆயிரம் கோடி வரை கறுப்புப்பணம் உருவாகிறது. தற்போது வழங்கப்படும் குழந்தைத் தொழிலாளர் ஊதியத்தை கழித்தால் ரூ.1.20 லட்சம் கோடி வரை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் முதலாளிகள் தங்களின் தவறான வருமானத்தை அரசுக்கு தெரிவிக்காத நிலையில், வரி செலுத்தாமல் மோசடியிலும்  ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

              இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பென்பது அதிக அளவில் சுரண்டப்படுகிறது என்பது தான் ஒரு கொடுமையான உண்மை ஆகும். படிக்கவேண்டிய வயதில் குழந்தைகள் உழைப்பென்பது இந்த தேசத்தின் அவமானச் சின்னம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

ஞாயிறு, 12 ஜூன், 2011

10,000 ஆண்டுகால பெருமை வாய்ந்த இந்திய வரலாறும் கச்சத் தீவு பிரச்சனைகளும்....

                உலகத்தில் உள்ள நாடுகளில் பத்தாயிரம் ஆண்டுகால வரலாற்றினைக் கொண்ட  பழமை வாய்ந்த நாடுகள் மூன்று - இந்தியா, சீனா, கிரேக்கம். அதில் இந்தியா  மட்டுமே வாய்மொழியாக அல்லாமல்  எழுத்துப்பூர்வமான வரலாற்றுப் பதிவுகளையும் ஆவணங்களையும்  கொண்ட நாடு என்றப் பெருமை பெற்றது. வல்லரசு என்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு என்றும்  தன்னைப் பற்றி பீற்றிக்கொள்ளும் அமெரிக்காவிற்கே கூட ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கிடையாது. அப்படி ஐநூறு ஆண்டுகளுக்குள்ளாகவே உள்ள அமெரிக்க வரலாற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பு - ஊடுருவல் - போர் - இரத்தவெறி- உயிரிழப்பு போன்ற கொடிய நிகழ்வுகளை மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறது.
                 பத்தாயிரம் ஆண்டு கால இந்திய வரலாற்றினை ஆய்வு செய்த பிரான்ஸ் நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் டேவிட் பிராலே ( David  Frawley ) என்பவர் தான் பத்தாயிரம் ஆண்டுகால இந்திய வரலாற்றினை முழுமையாக ஆய்வு செய்திருக்கிறேன். அந்த ஆய்வின் அவர்  "கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இந்தியா ஒருமுறை கூட அண்டை நாட்டிலுள்ள ஒரு அங்குல  இடத்திற்குக் கூட ஆசைப்பட்டதில்லை ( India never wanted to invade any country even for an inch of land in Her past 10,000 years of history)" என்று  குறிப்பிட்டதைப் படிக்கும் போது பெருமையாகவும், மெய்  சிலிர்ப்பாகவும் இருக்கிறது. 
                   கடந்த 10000 ஆண்டுகளில் இந்தியா எப்படி அண்டை நாடுகளின் ஒரு அங்குல நிலத்திற்காக கூட ஆசைப்பட்டதில்லையோ -  அண்டை நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிப்பது நியாயமற்றது என்று எப்படி இந்தியா நினைத்ததோ - அதேப்போல் தான் இந்த தேசத்திற்கு சொந்தமான நிலத்தை அபகரிப்பதை அனுமதிப்பதும் - மக்கள் தொகையில் அதிகமாகவுள்ள இந்த தேசத்திற்கு சொந்தமான நிலத்தை வேற்று நாட்டுக்கு தானமாகவோ அல்லது பரிசாகவோ கொடுப்பதும் கூடாத செயலாகும்.

கச்சத் தீவு பிரச்சனை :

             நம் தேசத்திற்குச் சொந்தமான கச்சத் தீவு பிரச்சனையையும் அப்படித்தான் நாம் பார்க்கவேண்டும்.
            பிரிட்டிஷாரின் ஆவணங்களில், கச்சத் தீவு என்பது ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமானது என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான ஒன்பது தீவுகளில் கச்சத் தீவும் ஒன்று என்று தான் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. அப்படித் தான் கடந்த 1974 - ஆம் ஆண்டு வரையில் கச்சத் தீவு இந்தியா வசம் தான் இருந்தது. அது வரையில் இந்தியாவிலிருந்து கச்சத்தீவிலுள்ள அந்தோனியார் கோயிலுக்கு இந்திய மக்கள் சென்று வருவதும், இந்திய மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை அங்கு சென்று உலர்த்துவதும் வாடிக்கையாக வைத்திருந்தனர். இதற்கிடையில் 1956 - ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை வீரர்களுக்கு கச்சத்தீவில் பயிற்சியளித்த போதே பெரும்  பிரச்சனை எழுந்தது. இருப்பினும் அன்றைய இந்தியப் பிரதமர் நேரு அந்த பிரச்னையை பெரிது படுத்த விரும்பவில்லை. 
                இந்த சூழ்நிலையில் தான், 1974 - லில் இந்திரா காந்தி   தலைமையிலான மத்திய அரசு அணுகுண்டு சோதனை நடத்திய போது, ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய நாட்டின் மீது கண்டனத் தீர்மானத்தை கொண்டுவர பாகிஸ்தான் முயற்சி  செய்தது. அப்போது ஐ. நா.- வில் முக்கிய பதவியை வகித்த இலங்கையின் மூலம் அந்த கண்டனத் தீர்மானம் முறியடிக்கப்பட்டது. அதற்கு நன்றிக்கடனாகத் தான் இந்திரா காந்தி அம்மையார் இலங்கைக்கு கச்சத்தீவை பரிசாக வழங்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.  1974, 1976 ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவின் எல்லையிலிருந்து பிரிக்கப்பட்டு இலங்கையோடு  சேர்க்கப்பட்டிருக்கிறது.  நியாயமாகப் பார்த்தால்,  இந்திய அரசு  இத்தீவை இலங்கை அரசுக்குக் குத்தகைக்கு விட்டிருக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கே சொந்தமாக்கியிருக்கக்கூடாது என்பது தேசத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, இத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் போது அதை எதிர்த்திருக்கவேண்டிய தமிழக அரசோ கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. அப்போதும் தமிழக முதல்வராக இருந்தவர் இன்றைய மு.கருணாநிதி தான் என்பது தான் வேடிக்கையானது.
             அதுமட்டுமல்ல, கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோயிலுக்குச் சென்று வருவதும், இந்திய  மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை உலர்த்துவதும் எப்போதும்போல, இலங்கை அரசின் அனுமதியோ, விசாவோ இல்லாமல் நடைபெறலாம் என்று அன்றைய அந்த  ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், இது வெறும் எழுத்தில் இருக்கிறதே தவிர, நடைமுறையில் இல்லை. இந்திய மீனவர்கள் அங்கு சென்றால் இலங்கைக் கடற்படை பயங்கர கெடுபிடிகளை செய்து வருவது என்பது இந்திய மக்களின் மனதில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதும், மீன்பிடி வலைகள் உலர்த்தவும்கூட அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்படுவதும்இந்திய மக்களுக்கு வேதனையை அளித்து வருகிறது என்பது தான் உண்மை.   இந்த நிலையிலும் கடந்த திமுக அரசு இந்தப் பிரச்சனையில் அக்கறைக் காட்டாமல், பிரதமருக்கு கடிதம் எழுதியே காலத்தை ஒட்டியது. 
  .             நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் தீவை இலங்கைக்கு வழங்கியது செல்லாது என்று தன்னுடைய  முந்தைய ஆட்சியின் போது, செல்வி.ஜெயலலிதா தொடுத்த வழக்கில், தமிழக அரசு தன்னையும் சேர்த்துக்கொண்டு இருந்தாலும்கூட,  இந்நேரம் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் போனதற்கு,  அரசியல் கருத்துமாறுபாடு காரணமாக இந்த வழக்கை திமுக தலைமையிலான  தமிழக அரசு கண்டும் காணாமலும்  இருந்துவிட்டது தான் காரணம்.  அதிலும் குறிப்பாக, மத்திய கூட்டணி அரசில் மிக முக்கிய இடம்பெற்றிருந்தும்கூட, திமுக ஏனோ இதில் அதிக அக்கறை காட்டவில்லை. ஆனால் தற்போதைய  தமிழக அரசு, இந்த வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதன் மூலம், ஏற்கெனவே உள்ள வழக்கு வலிமை பெறும் என்ற நம்பிக்கைப் பிறந்திருக்கிறது.

வியாழன், 9 ஜூன், 2011

வண்ணங்களுக்கு உயிர் ஊட்டிய அற்புதக் கலைஞன் மறைந்தார் - தூரிகை ஓய்வுபெற்றது.

"இந்தியாவின் பிகாசோ" என்று ஓவியக் கலை வல்லுனர்களால் அன்புடன் அழைக்கப்படும் அற்புதமான ஓவியக் கலைஞர் எம்.எப். ஹுசைன் இன்று 
( ஜூன் 9 - வியாழக்கிழமை ) காலை லண்டனில் காலமானார். 
பலவண்ண ஓவியங்களை இந்த உலகத்திற்கு தந்தவர். அதேப்போல் பல இளம் ஓவியர்களை உருவாக்கியவர். இவரது கலைத்திறனைப் பாராட்டி 
இந்திய அரசு  இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற உயரிய விருதுகளை அளித்து கௌரவப்படுத்தியிருக்கிறது. நாட்டில் பலபேர் இவருக்கு "பாரதரத்னா" விருது வழங்கவேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். கலை உலகத்தில் இந்தியாவின் அடையாளமாகவே மதிக்கப்பட்டார். ஓவியக்கலையில் அவரது எண்ணங்களும் ரசனைகளும்  இறுதிவரை இளமைக்குறையாத 95 வயது கிழவர்.  
இவர் ஒரு இஸ்லாமியர் என்பதால், இந்து மதவெறி கூட்டத்தினர்  இவர் வரைந்த சரஸ்வதி ஓவியத்தில் குற்றம் கண்டுபிடித்து இவருக்கு  இடைஞ்சல்கள் கொடுத்தனர். இவர் திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். 
தன இறுதி காலத்தில் நாடற்றவராக வாழ்ந்த போது கத்தார் நாடு தான் அவரை பெருமனதுடன் தன் நாட்டுப் பிரஜையாக ஏற்றுக்கொண்டது. 
“நான் என் தாய் நாடான இந் தியாவை நேசிக்கிறேன். ஆனால் என் தாய்க்கு நான் வேண்டாதவனாகிவிட்டேன். 
எனக்காகக் குரல் கொடுக்க அங்கு யாரும் இல்லை" என  வருத்தப்பட்டார்.
இப்படிப்பட்ட உன்னதமான கலைஞனின் மரணம் என்பது கலைத்துறையில் ஒரு வெற்றிடத்தை தான் உருவாக்கி இருக்கிறது. இவரது இறப்பு என்பது கலை உலகத்திற்கு குறிப்பாக இந்தியாவிற்கு  ஒரு பேரிழப்பாகும். வண்ணங்களுக்கு உயிர் ஊட்டிய அற்புதமான கலைஞனின் மூச்சுக்காற்று நின்று போய்விட்டது. எப்போதும் அவர்  கையிலிருக்கும்  தூரிகை இன்று ஓய்வு பெற்றுவிட்டது.

புதுச்சேரி : குழப்பத்தின் உச்சத்தில் முதலமைச்சர் ரங்கசாமி

                அண்மையில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. தேர்தல் முடிவு என்பது ரங்கசாமி தலைமையிலான என். ஆர். காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு சாதகமாகவே அமைந்தது. என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களிலும் அதிமுக 5 இடங்களிலும் என கூட்டணி மொத்தம் 20 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த வெற்றிக்கான  நான்கு முக்கிய காரணங்கள் : # கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவிதமான செயல்பாடுகளும் இல்லாத - மக்களைப்பற்றியே சிந்தனையில்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த வைத்தியலிங்கம் தலையிலான  காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள். # தமிழ்நாட்டைப் போலவே  ஊழல் பெருச்சாளி  திமுக எதிர்ப்பு அலை இங்கும் இருந்தது. # அரசின் நிதிநிலையைப் பற்றிக் கவலைப் படாமல் மக்களுக்கு இலவசங்களாகவே அள்ளி வீசியவர் என்ற அபிப்பிராயமும் ரங்கசாமிக்கு சாதகமாய் இருந்தது. # அதிமுக கூட்டணியும் அதன் தலைவர் செல்வி. ஜெயலலிதா புதுவையில் செய்த பிரச்சாரம். காங்கிரஸ் கட்சியே இவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயங்கிய சூழ்நிலையில், ரங்கசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவித்து செல்வி. ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.இவைகள் அத்தனையும் தான் ரங்கசாமியை முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைத்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
                 ஆனால் கடந்த 2008 - ஆம் ஆண்டு   காங்கிரஸ் தலைமையினாலேயே முதலமைச்சர் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்ட காலத்திலிருந்தே ரங்கசாமி ஒரு குழப்பவாதியாகவே இருந்துவருகிறார். அன்றையிலிருந்து இன்று வரை இவர் முடிவுகள் எடுப்பதில் மிக மிக காலதாமதம் செய்கிறார். இவரைச் சுற்றி இருப்பவர்களும் மக்களும் பொறுமையையே இழந்துவிடுவார்கள். அப்படியொரு ஆமை வேகம். ரங்கசாமி எந்த முடிவெடுப்பதானாலும் எப்படி எல்லாம் குழம்பிபோகிறார் என்பதை பாப்போம்.  
              # 2008-இல் தன்னை முதல்வர் பொறுப்பிலிருந்து இறக்கிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கே யோசித்தார்... யோசித்தார்... மூன்று ஆண்டுகள் யோசித்தார்.  அந்த மூன்று ஆண்டுகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் இல்லை.
             #  தேர்தல் அறிவித்த பிறகு தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
அப்படி விலகினவர் தனிக் கட்சி தொடங்குவார்  என்கிற   எதிர்பார்ப்பை மக்களிடம் உருவாக்கினார். அனால் தேர்தல் நாளுக்கு ஒரு மாதம் முன்னர் தான்  தன்னுடைய தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் என்கிற கட்சியை தொடங்குவதாக அறிவிக்கிறார்.
              # வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இவர் அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணிப் பற்றி பேசாமல் காலம் கடத்தினார். கூட்டணி முடிவாகாமலேயே அனைத்து தொகுதிக்கும் தன கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். பிறகு கூட்டணி முடிவாகி கூட்டணிக்கட்சி தொகுதிகளில் தன கட்சி வேட்பாளர்களை திரும்பப் பெறுகிறார்.
              # இவர் கதிர்காமம் மற்றும் இந்திரா நகர் ஆகியத் தொகுதியில் போட்டியிட்டதன் மூலம்,   தன் மீதான  - தன் வெற்றியின் மீதான  - ஏன்.. மக்களின் மீதான நம்பிக்கையிலேயே குழம்பிப் போயிருக்கிறார் என்று தான் பொருள்.
              # தன் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன்  வெற்றிபெற்றதும் கூட்டணி கட்சியோடு ஆலோசிக்கவில்லை. மாறாக  சேலத்தில் சமாதியாகி இருக்கும் அப்பாசாமி பைத்தியம் என்ற சாமியாரிடம் ஆசிபெற சென்றுவிட்டார். அந்த அப்பாசாமி பைத்தியம் சாமியார் மீது இவருக்கு பைத்தியமாம். இங்கே மக்களெல்லாம் கூட்டணி மந்திரி சபை அமையுமா என்றெல்லாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 
              # ஆனால் திடிரென்று ஆளுனரை சந்தித்தார்.  தன் கட்சியை சேர்ந்த வெற்றிபெற்ற எம் எல் ஏ - க்கள் 14 பேரை  ( இவரையும் சேர்த்து ) மட்டுமல்லாமல் காரைக்காலில் வெற்றிபெற்ற வி. எம்.சி. சிவகுமார் என்ற சுயேச்சை எம்.எல்.ஏ.-வையும் அழைத்துச் சென்று தான் ஆட்சியமைக்க தனக்கு 16 சட்டமன்ற   உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக காட்டி  உரிமைகோரிய போது தான் கூட்டணிக்கட்சியான அதிமுக-வை தூக்கி எறிந்துவிட்டு தனியே ஆட்சிச் செய்ய நினைக்கும் இவரது தில்லா லங்காடித்தனம் புதுவை மக்களுக்கு புரிந்தது.
              #  பிறகு பதவி ஏற்பு எப்போது என்றே தெரியாமல் மக்கள் குழம்பிக்கொண்டிருந்த சூழ்நிலையில் திடிரென ஒரு நாள் மாலை தான் மட்டுமே முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்கிறார். மற்ற அமைச்சர்களைப் பற்றி வழக்கம் போல் குழப்பம். பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பிதழெல்லாம் அடித்து யாரும் அழைக்கப்படவில்லை. தொலைபேசி மூலம் பழைய காங்கிரஸ் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். கூட்டணிக்கட்சிகளைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இப்படியாக ஒரு குழப்பமாகவே முதலமைச்சர் பதவி ஏற்பு நடைபெற்றது.
                #  மற்ற அமைச்சர்களை தேர்ந்தெடுப்பதில் குழப்பம். இவருக்கு யார் மீதும் நம்பிக்கையும் இல்லை. இவரது எம். எல். ஏ -க்களில் பெரும்பாலானோர் "மக்கள் சேவகர்" அன்று தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு மக்களுக்காக "உழைத்து" தேர்தலில் வெற்றிபெற்றவர்கள். இவர்கள் அதனைப் பேரும் மந்திரியாக வேண்டும் என்று துடித்து ரங்கசாமியை நச்சரித்தார்கள். சுயேச்சையாக வெற்றிபெற்றவர்க்கும் மந்திரியாக வேண்டுமென்ற ஆசை வேறு ரங்கசாமியை நெருக்கியது. வழக்கம் போல் ரங்கசாமி ரொம்பவே குழம்பிப் போய் சேலம் ஓடினார். அப்பா சாமி பைத்தியத்தை போய்  பார்த்தார். திருச்செந்தூர் சென்றார். முருகன் சந்நிதியில் சீட்டுக் குலுக்கிப்போட்டு பார்த்தார். எல்லா எம்.எல். ஏ - க்களின் ஜாதகத்தையும்  வாங்கி, யார் தனக்கு சாதகமாய் இருப்பார்கள்  என்று பார்த்தார். குழப்பம் தீரவில்லை. பைத்தியமாய் அலைந்தார். 
               # ஒரு வழியாக பதினைந்து நாட்கள் கழித்து,  ஜூன் 8 - ஆம் தேதி புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள் என்று அறிவித்தார். இம்முறை அழைப்பிதழும் அச்சிடப்பட்டுவிட்டது. ஆனால் பதவி ஏற்கப்போகும் அமைச்சர்கள் பெயர் இடம்பெறவில்லை. அதுவரைக்கூட அறிவிக்கப்படவில்லை. முதல் நாள் இரவு வரைக்கூட முடிவாகவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளேயே குழப்பம். பத்திரிக்கையாளர்களும் வழக்கம் போல் குழம்பிப்போனார்கள்.
              # பதவி ஏற்பு நாளன்று காலை கூட அமைச்சர்கள் யார் என்று தெரியவில்லை. முடிவாகவும் வில்லை. பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் - மேடை அலங்காரங்கள்  செய்து முடிக்கப்பட்டுவிட்டன. ஆளுநர் கூட மாட்டிய ஆடை அலங்காரங்களை கலைக்கமுடியாமல் ஆளுநர் மாளிகை வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஆனால், அதுவரையில்   "மாப்பிள்ளைகள்" தயாராகவில்லை. ஒரே குழப்பம். பதவி ஏற்பு நேரமோ  ஒரு ஒரு மணி நேரமாக ஒத்திபோடப்பட்டது.
              # பிறகு திடிரென்று ஒருவழியாக அன்று மாலை ஐந்து அமைச்சர்கள் பதவி ஏற்புக்குப் பதிலாக நான்கு பேர்கள் மட்டுமே பதவி ஏற்றார்கள். மற்ற ஒருவரைப் பற்றிய குழப்பம் இன்னும் நீடிக்கிறது. 
             # அதுமட்டுமல்ல, இன்று வரை  பதவி ஏற்ற அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்குவதிலும் குழப்பம் நிலவி வருகிறது. 
             # ஆக மொத்தம், ஆரம்பத்திலிருந்தே ரங்கசாமி குழம்பிக் குழம்பியே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். இப்படியாகத்தான் வரும் ஐந்து ஆண்டுகளையும் தானும் குழம்பி மக்களையும் குழப்பி ஆட்சி செய்வார் என்பது நமக்கு குழப்பம் இல்லாமல் தெரிகிறது. இப்படியே போனால் ரங்கசாமி அப்பாசாமி பைத்தியத்தை சேலம்  சென்று தான் பார்க்கவேண்டிய அவசியமில்லை. புதுவையிலே பார்த்துக்கொள்ளலாம். எதிர்காலத்தில் புதுவையில் நிறைய அப்பாசாமி பைத்தியங்களையும், அம்மாசாமி பைத்தியங்களையும் உருவாக்கிவிடுவார் என்பதிலும் நமக்கு குழப்பமில்லை.

பொருளாதாரத் தடையும் மனித உரிமைகளுக்கு எதிரானதே....

                 "பொருளாதாரத் தடை" என்கிற வார்த்தையை, சோவியெத் யூனியன்  சிதறுண்டு போனபிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைத்தூக்க ஆரம்பித்த நாளிலிருந்து தான் நாம் கேள்விப்படுகிறோம். 
                எந்த ஒரு நாடாவது தனக்கு அடங்கி நடக்கவில்லை என்றால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்து  அந்த  நாட்டையே  சின்னாபின்னமாக்கி சீரழித்துவிடும். இது தான் உலகின் கடந்தகால வரலாறு. பொருளாதாரத் தடை என்பதும் ஒருவகை பயங்கரவாதம் தான். மனித உயிர்களை பலி வாங்குகிற - பழி வாங்குகிற பயங்கரவாதம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. பொருளாதாரத் தடை என்பது அமெரிக்காவிற்கே உரித்தான காட்டுமிராண்டித்தனமான  நடவடிக்கை என்பது  தான் உண்மை.  பொருளாதாரத் தடை விதித்தால் அந்த நாட்டில் என்னென்ன பாதிப்புகள் நடக்குமென்றால்... அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். அதனால் பசி - பட்டினி - வறுமை அதிகமாகும். குழந்தைகளுக்கு ரொட்டிப் பால் கூட கிடைக்காது. உயிர்காக்கும் மருந்துகள் கிடைக்காமல் போகும். வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவம் என்பது எட்டாக் கனியாக போய்விடும். வேலை இழப்பும், வேலை இன்மையும் அதிகருக்கும், அதனால் அந்த நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியாலும், நோயினாலும் வீழ்ந்து மடிவார்கள். இது தான் பொருளாதாரத் தடையால் அந்த நாட்டின் குடிமக்கள் சந்திக்கும் கொடுமைகள்.பொருளாதாரத் தடை என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு மறைமுகப் போர் என்பது தான் உண்மை.
                   சமீப  காலங்களில் இது போன்ற பொருளாதாரத் தடையால் பாதிக்கப் பட்ட நாடுகள் பல உண்டு. அதே சமயத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை சவாலாக எதிர்கொண்டு வளர்ந்து வரும் கியூபா போன்ற நாடுகளும் உண்டு.  அப்படி நாசமாய் போன நாடுகளில் மிக முக்கியமான நாடு இராக்  என்பதை நாம் கண் கூடாகப் பார்த்தது என்பது இன்றைக்கும் நம் நெஞ்சைவிட்டு நீங்காதது.
                   இராக் நாட்டின் அதிபர் சதாம் ஹுசைன் தனக்கு அடங்கி நடக்கவில்லை என்ற காரணத்திற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது. இதன் காரணமாக அந்த நாடு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு  கொடுமைகளை அனுபவித்தது. உணவு, குடி நீர் மற்றும்  உயிர்காக்கும் மருந்துகள் கூட அங்குள்ள மக்களுக்கு கிடைக்காமல் தடை செய்யப்பட்டது. இதனால் கடந்த இருபது ஆண்டுகளில் லட்சக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இறந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மாண்டு பொய் இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய பயங்கரம். அதனால் தான் இன்றைக்கு இராக்கில் 20 - 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதே இல்லாமல் போய்விட்டார்கள் என்பதும் மற்றுமொரு பயங்கரம். 
                  எப்போதுமே ஆட்சியாளர்களை பழித்தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு செய்யப்படும் பொருளாதாரத் தடை என்பது அந்த ஆட்சியாளர்களை தாக்குவதற்குப் பதிலாக அப்பாவி மக்களையும், குழந்தைகளையும் தான் தாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. 
                  போர் என்பது நேரடியான ஆயுதத் தாக்குதல் - பொருளாதாரத் தடை என்பது ஆயுதமில்லாத -  மறைமுகமான தாக்குதல். இரண்டுமே மனிதகுலத்திற்கு எதிரானது. மனிதகுலத்தை  அழிக்கக்கூடியது. மனித உரிமைக்கு எதிரானது. இதில் நாம் நம்பிக்கை வைக்கவேண்டாம். 
                  அதனால், இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க.. வாழ உரிமைகள் கிடைக்க..  நேரடியான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த மத்திய அரசை நிர்பந்தம் செய்வோம். அதேப்போல், போர்குற்றங்கள் புரிந்த, தமிழ் மக்களை கொன்றுக் குவித்த இலங்கை அரசுக்கெதிரான விசாரணையை நடத்துவதற்கு ஐ. நா. சபையையும் நிர்பந்தம் செய்வோம். மாறாக, பொருளாதாரத் தடை விதித்தால் அப்பாவி தமிழ் மக்கள் தான் மீண்டும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.