இந்தியாவில் என்றைக்கு கல்வி என்பது தனியார் கைகளுக்குச் சென்று வணிகமயம் ஆனதோ, குறிப்பாக தமிழகத்தில் அன்றையிலிருந்து இன்று வரை கல்வி என்பது ஏழைமக்களுக்கு எட்டாத உயரத்திற்கு சென்றுவிட்டது. இன்றைக்கு கல்வி என்பது தனியார் கல்வி நிறுவனங்களில் விற்கக்கூடிய கடைச்சரக்காக மாறிவிட்டது. ஆயிரக்கணக்கில் - லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி வாங்கவேண்டி இருக்கிறது. ஆங்கில மொழிக்கல்வி, நுனிநாக்கில் ஆங்கில உரையாடல், கணினி முறைக்கல்வி இப்படி பலவகையான கவர்ச்சிகளை காட்டித்தான் பெற்றோர்களை ஈர்க்கிறார்கள். கல்விக் கட்டணக் கொள்ளை என்பது நிறையப் பெற்றோர்களின் கழுத்தை நெரித்து விழி பிதுங்கச் செய்கிறது என்பது தான் நம் கண் எதிரே நடக்கும் உண்மையாகும்.
சென்ற வாரம், கோவையில் தன் மகனின் பள்ளிக் கட்டணமே ஒரு தாயின் உயிரை பலி வாங்கி இருக்கிறது என்பது ஓர் அதிர்ச்சியான செய்தி. கோவை மசக்காளிபாளையம் பகுதியில் தன் மகன் ஒன்றாம் வகுப்பு படிக்க பணம் கட்ட முடியவில்லையே என்று மனம் உடைந்த ஒரு தாய் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது தான் அந்த அதிர்ச்சியானச் செய்தி. காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு வசித்து வந்த பஞ்சு குடோனில் சுமைதூக்கும் தொழிலாளியான தர்மராஜ் மற்றும் கட்டடத்தொழிலாளியான இவரது மனைவி சங்கீதா தர்மராஜ் இருவரும் தங்கள் மகன் தர்ஷன் என்ற ஐந்து வயது குழந்தையை உப்பிளிபாளையத்தில் உள்ள பெர்க்ஸ் பள்ளியில் பணம் கட்டி படிக்கவைத்திருக்கின்றனர். அவர்கள் மகன் எல். கே. ஜி., - யு. கே. ஜி படிக்கும் போதே இவர்களின் வருமானத்தின் பெரும் பகுதியை பள்ளிக்கு கட்டணம் செலுத்துவதிலேயே செலவழித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு அவர்கள் மகனை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கு ரூ.12 ஆயிரம் கட்டணமாக பள்ளி நிர்வாகம் கேட்டிருக்கிறது. . அதில் ரூ.5 ஆயிரத்தை கஷ்டப்பட்டு பள்ளியில் கட்டியிருக்கிறார்கள். மீதிப் பணத்தை கட்டுவதற்கு வழித் தெரியாமல் தான் தாய் சங்கீதா இந்த முடிவை தேடியிருக்கிறார். இது அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது, காவல் துறையினரிடம் சங்கீதா அளித்த மரணவாக்குமூலம் ஆகும்.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க - தனியார்ப் பள்ளி கட்டணத்தை வரைமுறைப் படுத்த ஏற்படுத்தப் பட்ட நீதிபதி கோவிந்தராஜன் குழு அளித்த கட்டண நிர்ணய பரிந்துரையின் படி உப்பிலிபாளையம் பெர்க்ஸ் பள்ளிக்கு ஒன்றாம் வகுப்புக்கு ரூ.4190 என்றே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பள்ளியோ நிர்ணயம் செய்த தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக கேட்டிருக்கிறது என்பது கண்டிக்கத்தக்கது. நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயம் செய்தக் கட்டணத்தை தான் அந்தந்தப் பள்ளிகளும் கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று சென்ற தி மு க அரசும் கண்டிப்புடன் நடந்துகொள்ளவில்லை.
புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் செல்வி ஜெயலலிதா அரசும், சென்ற ஆட்சியில் உருவான புதிய சட்டமன்றக் கட்டிடத்தையும் சமச்சீர்க் கல்விமுறையையும் தூக்கி எறிந்தது போல் நீதிபதி கோவிந்தராஜன் குழுப் பரிந்துரையையும் தூக்கி எறிந்துவிடாமல் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவேண்டும்.அப்போது தான் பெற்றோர்களால் நிம்மதியாய் வாழமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக