தொடர்ந்து இனிக்க இனிக்க விருந்து கொடுத்தால் திகட்டத்தான் செய்யும். திகட்டுகிறது என்பதற்காக யாராவது விஷத்தைக் குடிப்பார்களா. அப்படித்தான் மேற்கு வங்க மக்கள் செய்திருக்கிறார்கள். கஷ்டமே இல்லாத நிம்மதியான வாழ்க்கை சுவைக்காது போலும். அப்படி நினைத்து தான், கடந்த ஏழு முறை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணியை தேர்ந்தெடுத்த மேற்கு வங்க மக்கள் முப்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் - காங்கிரஸ் - மாவோயிஸ்ட் கூட்டணியை மேற்கு வங்கத்தை ஆள்வதற்கு தேர்ந்தெடுத்திருப்பது என்பது தற்கொலைக்கு சமமானது.
தமிழகத்தில் கெடுபிடியை காட்டிய தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் கையைக் கட்டி வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது மம்தாவிற்கு பணத்தை இரைப்பதற்கு வசதியாய்ப் போனது. அதுமட்டுமல்ல அங்கே திரிணாமுல் - காங்கிரஸ் - மாவோயிஸ்ட் இவர்களுடன் இந்திய பெருமுதலாளிகள், கார்ப்பரேட் கம்பெனிகள், பத்திரிகைகள், தொலைகாட்சிகள், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கொடுங்கோல் ஆட்சியை கண்டிராத - அனுபவித்திராத முதன்முறையாய் வாக்களித்த இளையத்தலைமுறையினர் மற்றும்
இனிப்பை மட்டுமே சாப்பிட்டு திகட்டிபோய் மாற்றம் விரும்பியவர்கள் - இப்படி மிகப்பெரிய கூட்டணி அமைத்து களத்தில் இறங்கினார் மம்தா பானர்ஜி.
" மாற்றம்" என்கிற கவர்ச்சியான வார்த்தையைத் தவிர வேறு ஒன்றும்
மம்தா பானர்ஜி மக்களிடம் உச்சரிக்கவில்லை. இடது முன்னணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளோ, குடும்ப அரசியல் அராஜகமென்றோ, சொத்து சேர்ப்பு என்றோ, கடுமையான மின்வெட்டுகள் என்றோ, மக்களுக்கெதிரான - தொழிலாளர்களுக்கு எதிரான - விவசாயிகளுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி என்றோ குற்றச்சாட்டுகளை அடுக்கமுடியாத மேற்கு வங்க இடது முன்னணி ஆட்சி என்பதை வெறும் "மாற்றம்" என்ற வார்த்தையில் கவர்ந்து போய் ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமே மேற்கு வங்க மக்கள் மம்தா தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு "மாற்றத்திற்காக" மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க மக்கள் வாக்களித்திருக்கிறார்களே தவிர இடது முன்னணிக்கு "மாற்று" என்பதற்காக அல்ல.
26 டிசம்பர் 1991 அன்று சோவியத் யூனியன் உடைந்த போது உலக அமைதியை விரும்பிய - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த உலக மக்களின் மனநிலை எப்படி இருந்ததோ, அதே மனநிலையில் தான் இன்று முப்பத்துநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குவங்க மக்கள் இடது முன்னணிக்கு தோல்வியைத் தந்திருப்பதை பார்க்கும் போதும் இந்த தேசத்தின் மீது அக்கறையுள்ள - மக்களின் மீது அக்கறையுள்ள அனைவருக்கும் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக