அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தலைவர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நேற்று மே 16 அன்று தமிழகத்தின் பதினேழாவது முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரையும் அவரது அமைச்சர் பெருமக்களையும் "ஆயுத எழுத்து" வலைப்பூ நெஞ்சார வாழ்த்துகிறது.. பாராட்டுகிறது..
நேற்றுவரை ஆளுங்கட்சியாயிருந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் மிகவும் சிரமப்பட்டே முப்பத்தொரு இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ஆனால் அதிமுக கூட்டணி தமிழக மக்களின் இமாலய நம்பிக்கையோடு பெருவாரியான வாக்குகளைப்பெற்று 203 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது என்பது எதை காட்டுகிறது என்றால் மக்களுக்கு சென்ற ஆட்சியின் மீதுள்ள கோபத்தையும் அதிமுக மீதுள்ள நம்பிக்கையையும் காட்டுகிறது. இதை முதல்வர் ஜெயலலிதா சரியாக புரிந்துகொள்ளவேண்டும். மத்திய மாநில அரசுகளின் மக்கள்விரோதக் கொள்கைகளினால் தமிழக மக்கள் திக்கு முக்காடிப் போயிருக்கிறார்கள். அவர்களின் கண்களிலும், நெஞ்சங்களிலும் ஏகப்பட்ட ஏக்கங்களும், எதிர்பார்ப்புகள் தெரிகின்றன.
நீங்கள் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, சீர்குலைந்திருக்கும் சட்டம் - ஒழுங்கு, மின்வெட்டால் இருண்டிருக்கும் தமிழகம் இவைகளை சரி செய்வதும், அத்தியாவசிப் பொருட்களின் விலைகளை குறைப்பதும் தான் எங்கள் அரசின் முதல் பணியாக இருக்குமென்று சொன்னது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.
நேற்று முதல்வராய் பதவி ஏற்று, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மக்கள் நலன் சார்ந்த அம்சங்களுக்கு தாங்கள் கையெழுத்திட்டு முதல்வர் பணியைத் துவக்கியதை பார்த்த தமிழக மக்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. தமிழக முதல்வரே ! பல்வேறு வகையான தாக்குதல்களினால் அல்லல்பட்டு க்கொண்டிருக்கும் மக்கள், தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது.
முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு சில ஆலோசனைகள்:
# நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குகிற நண்பர்களையும் அதிகாரிகளையும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
# வழக்கம் போல் ஆடம்பர விளம்பரங்களுக்கும், பாராட்டு விழாக்களுக்கும் ஆசைப்படாதீர்கள். அதில் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.
# கூட்டணி கட்சிகளையும் எதிர்கட்சியையும் மதித்து நடந்துகொள்ளுங்கள். அவர்களின் ஆலோசனைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்புக்கொடுங்கள்.
# உங்கள் தோழி மற்றும் தோழியின் குடும்ப ஆதிக்கம் என்பது எந்த துறைகளிலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதேப்போல் ஆட்சியிலும் அவர்களின் தலையீடு என்பது இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
# பழிவாங்கும் நடவடிக்கைகள், அவர்கள் வைத்த சிலைகளை அகற்றுவது, இடிப்பது போன்ற சீர்குலைவு வேலைகளை கைவிடுங்கள்.
# மக்களுக்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளி மேலும் மேலும் அதிகமாகிக்கொண்டே தான் போகிறது. தங்கள் கட்சிக்காரர்களிடம் கூட நீங்கள் நெருங்குவதில்லை. எப்போதும் வீட்டிலேயே முடங்கிக்கிடக்காமல், வெளியே வாருங்கள். கட்சித்தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் பழகுங்கள். அவர்களை அடிக்கடி சந்தியுங்கள். குறைகளை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதை அவர்கள் எதிரிலேயே நிவர்த்தி செய்யுங்கள். அப்போது தான் மக்களின் எண்ண ஓட்டங்களை அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். அதற்கேற்றாற்போல் ஆட்சி செய்யமுடியும். மக்களின் மனதில் நிலைத்திருக்க முடியும்.
# நிறைய தேர்தல் வாக்குறுதிகளை தந்திருக்கிறீர்கள். அவைகளை எல்லாம் பதினெட்டு மாதங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.
இலவசங்களையே அதிகம் அள்ளித்தராமல், வேலைவாய்ப்பை அதிகப்படுத்துங்கள். அரசு ஊழியர்களுக்கும், தனியார் நிறுவன மற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நியாயமான - தேவைக்கேற்ற ஊதியம் கிடைப்பதற்கு வழி செய்யுங்கள். மக்களுக்கு வேலைவாய்ப்பையும், தேவையான ஊதியத்தையும் கொடுத்துவிட்டால், நீங்கள் இலவசமாகத் தரும் அனைத்துப் பொருள்களையும் அவர்களே காசுக்கொடுத்து வாங்கிக்கொள்வார்கள். கிராமப்புற மக்களின் - நகர்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள்.
# அன்றாடம் தங்கள் வருகைக்காக போக்குவரத்தை மணிக்கணக்காக நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும்.
# தங்களின் சென்ற ஆட்சியில் செய்த அதே தவறுகளையும், சென்ற திமுக ஆட்சி செய்த அதே தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள். ஊழலற்ற-திறமையான- மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை உத்திரவாதப்படுத்துங்கள்.
# தூய்மையான அரசியல் - நேர்மையான ஆட்சி - உண்மையான மக்கள் சேவை இவைகள் தான் உங்களை மக்கள் மனதிலிருந்து நீங்காமல் வைத்திருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். இதைத் தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்.. இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்.. தங்களின் ஆட்சி சிறக்க மீண்டும் "ஆயுத எழுத்து" நெஞ்சார வாழ்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக