பத்து நாட்களுக்கு முன் புத்தம்புது பிரதமர் மோடி
தலைமையிலான பிஜேபி அரசின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத்
தொடர்ந்து, ‘இப்படியே போனால், மன்மோகன் சிங் கடந்த இருபது ஆண்டுகளில்
சாதிக்க முடியாததை... இரண்டே ஆண்டில் நரேந்திர மோடி சாதித்து விடுவார்
என்றே தோன்றுகிறது. அட, இந்தியாவை வெளிநாட்டுக்காரர்களிடம் மொத்தமாக விலை
பேசுவதைத்தான் சொல்கிறேன்' என்று எழுதியிருந்தேன்.
அந்நிய முதலீட்டு மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்த
மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் அரசுகூட இத்தனை வேகமெடுக்கவில்லை.
பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறை, ரயில்வே துறை என்று அனைத்திலும்
அதிரடியாக அந்நிய முதலீட்டை நோக்கி மோடி அரசு, அசுர
வேகமெடுத்திருப்பதைத்தான் அதில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
‘தொழில்வளர்ச்சி' என்கிற பெயரில் விவசாயத்துக்கு
ஒட்டுமொத்தமாக வேட்டு வைக்கும் வேலையை மன்மோகன் சிங் ஆரம்பித்து வைத்தார்,
தற்போது அதை படுவேகமாக முடித்து வைக்கும் வேலை மோடி சிரமேற்கொண்டுவிட்டார்
என்பதைத்தான் அதில் சுட்டிக் காட்டியிருந்தேன்.
இதற்கு பின்னூட்டம் போட்ட நண்பர்களில் சிலர், நான்
என்னவோ மோடிக்கு எதிரி போலவும், 'வளர்ச்சி'க்கு எதிரி போலவும்
சித்தரித்தார்கள். சிலரோ... மோடி இப்போதுதானே வந்திருக்கிறார் என்று
வக்காலத்தும் வாங்கியிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம், 'வந்த
வேகத்திலேயே பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளின் உத்தரவுகளை
நிறைவேற்றி முடித்துவிட வேண்டும்' என்று மோடி காட்டி வரும் வேகம் துளிகூட
புரியவில்லையா... அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லையா என்று எனக்குப்
புரியவில்லை.
நண்பர்களே... நான் எந்த சார்பும் இல்லாமல், இயற்கை
சார்பு, உயிரின சார்பு ஆகிய நிலைகளை மட்டுமே எடுத்துக் கொண்டுதான்
இதையெல்லாம் எழுதுகிறேன் என்பதை முதலில் தங்களுக்குத் தெளிவுபடுத்திக்
கொள்கிறேன்.
எனக்கு காவி, கதர், கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை
என்று எந்தக் கலரும் இல்லை. நான்... பச்சை, மஞ்ச, ஒயிட், ரோஸ், சிவப்பு,
பிங்க இப்படி எந்தத் தமிழனும் இல்லை. இந்த பூமியில் வசிக்கும் ஏதோ ஒரு
ஜந்து என்பதோடு முடித்துக் கொள்ளுங்கள்.
இதை எதற்காக வலிந்து சொல்கிறேன் என்றால், சொல்கிற
விஷயத்தில் இருக்கும் உண்மையை மட்டுமே பாருங்கள். இவனுடைய பின்னணி என்ன...
இவன் எதற்காக இதைச் சொல்கிறான்... இவன் இந்தக் கலர் ஆளாக இருப்பானோ...
என்றெல்லாம் மூளையைத் திருப்பி சிந்திக்க ஆரம்பித்து, முக்கியமாக சிந்திக்க
வேண்டிய விஷயத்தை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் விவசாயம் மற்றும்
விவசாயிகளுக்கு எதிராக ஆயிரம் அநியாயங்களை செய்திருந்தாலும், நிலம்
கையகப்படுத்துதல் சட்ட திருத்தம் என்கிற ஒன்றின் மூலமாக... ஓரளவுக்கு
விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைப்பதை உறுதிப்படுத்தவே செய்தார்
மன்மோகன் சிங்.
'விவசாய நிலங்களை தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சிப்
பணிகளுக்காக கையகப்படுத்தும்போது, கிராமப்புறங்களில் சந்தை விலையில் 4
மடங்கும்... நகர்ப்புறங்களில் 2 மடங்கும் விலையாகக் கொடுக்கப்பட வேண்டும்'
என்பதுதான் அந்த உத்தரவு. 'இதை உடைத்தே தீருவது' என்று பன்னாட்டு மற்றும்
இந்நாட்டு பெரும் தொழிலதிபர் கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு அப்போதே
திரிந்தது. ஆனால், விவசாயிகளின் ஓட்டு வங்கி மீதான அன்பு காரணமாக,
தொழிலதிபர்களின் நெருக்கடிக்கு பணியாமல் போக்குக் காட்டினார் மன்மோகன்
சிங்.
தற்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக
வந்தமர்ந்திருக்கும் நிதின் கட்கரி, மூச்சுக்கு முந்நூறு தடவை இந்த
சட்டத்தை திருத்துவோம்... என்றே பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது, இதில்
விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கும் அம்சங்களை எல்லாம் நீக்கிவிட்டு,
பன்னாட்டு... இந்நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான திருத்தங்களைச் செய்வதுதான்
அவருடைய ஒரே குறிக்கோள். இதற்கான வேலைகளில் படுமும்முரமாக இருக்கிறார்
நிதின் கட்கரி.
இதுவாவது, விவசாயிகளின் வாழ்க்கையைத்தான் அழிக்கும்.
ஆனால், இந்திய விவசாயத்தையே அழிக்கக் கூடிய வேலைக்கு இன்றைய தினம் அனுமதியை
அள்ளி வழங்கிவிட்டது 'வளர்ச்சி நாயகன்' நரேந்திர மோடியின் அரசு.
ஆம், பி.டி எனும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
பரிசோதனைக்கு இத்தனை காலமாக நீடித்த தடைகளையெல்லாம் மீறி, தற்போது 15
விதமான உணவுப் பயிர்களில் இந்தப் பரிசோதனையைச் செய்வதற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
உணவுப் பயிரில்லாத பருத்தியில் மட்டுமே இதுநாள் வரை
இந்தியாவில் பி.டி.ரகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரகத்தை
குஜராத் மாநிலத்தில்தான் அதிகம் விளைவிக்கிறார்கள். இந்த பருத்தியைப்
போட்டால், பொன்னே விளையும் என்றெல்லாம் புளுகிப் புளுகித்தான் விவசாயிகளின்
தலையில் கட்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்க நிறுவனமான மான்சான்டோ. இதற்கு
அந்த மாநிலத்தை ஆண்ட மோடியும் ஏக சப்போர்ட். இதேபோலத்தான் இந்தியா
முழுக்கவே பல்வேறு மாநில அரசுகளும் ஆதரவளித்துக் கொண்டுள்ளன. ஆனால், இந்த
பி.டி பருத்தி பல் இளிக்க ஆரம்பித்துவிட்ட சங்கதி குஜராத்திலிருந்தே சில
மாதங்களுக்கு முன் வெடித்து வெளிர ஆரம்பித்தது. பி.டி பயிருக்கு ஜால்ரா
தட்டிக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளால்கூட இதை மறைக்க முடியவில்லை.
மீடியாக்களில் இந்த விஷயம் வெளிச்சம் போடப்பட்டது.
இந்நிலையில், அரிசி, கத்திரிக்காய், கடுகு உள்பட 18
விதமான உணவுப் பயிர்களுக்கு அனுமதியை வழங்கியிருக்கிறது மோடி அரசு.
பருத்தியாவது, பஞ்சாக மாறி ஆடையாக வந்து தோலில்தான் அமரும். ஆனால், உணவுப்
பயிர்கள்? இதுகாலம் வரை இங்கே உரம், பூச்சிக்கொல்லி என்று தெளிக்கப்பட்ட
ரசாயனங்களில் விளைந்ததைத் தின்றதற்கே... புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு
நோய்களால் இந்த மனிதகுலம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த
லட்சணத்தில், உணவுப்பயிர்களின் விதைக்குள்ளேயே பூச்சிகளுக்கு எதிரான விஷ
மரபணுவைப் புகுத்தும் தொழில்நுட்பத்தில் விளைந்த மரபணுமாற்று விதைகளில்
விளையும் உணவுப் பயிர்கள் வந்தால்... நாம் என்னென்ன கதிக்கு ஆளாகப்
போகிறோமோ?!
இந்த பயத்தால்தான் ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்த மரபணு
மாற்று உணவுப் பயிர் உற்பத்திக்கு தங்கள் நாடுகளில் தடைவிதித்துள்ளன என்பதை
மறந்துவிட் வேண்டாம்.
'கேட்டால்... கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசு போட்டு
வைத்திருந்ததைத்தான் நாங்கள் அமல்படுத்தியிருக்கிறோம்' என்று ரயில் கட்டண
உயர்வு, இந்தித் திணிப்பு போன்ற விவகாரங்களில் பல்டி அடித்தது போலவே
இதிலும் மோடி பல்டி அடிப்பார். கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசுதான் மரபணு
மாற்று உணவுப் பயிர்களுக்கு அடிபோட்டு வைத்தது உண்மைதான். ஆனால், சூழல்
ஆதரவாளர்கள், இயற்கை விவசாயிகளின் எதிர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின்
கடுமையான உத்தரவுகளை அடுத்து காங்கிரஸ் அரசு கொஞ்சம் அடங்கியே இருந்தது.
'இந்தியாவில் போதுமான பாதுகாப்புகளை உறுதிப்படுத்திக் கொண்டுதான் மரபணு
மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் கறாராகக்
கூறியிருக்கிறது.
இதுமட்டுமா, கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தால்
அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விவசாயக் குழு கூட,
'இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்கள் தேவையே இல்லை. இதை பரிசோதிப்பதற்கு
போதுமான ஆய்வகங்களோ... ஆய்வாளர்களோ இங்கில்லை' என்றே அறிக்கை
கொடுத்திருக்கிறது.
ஆகக்கூடி, ஒரு எமனை இழுத்து வருவதற்குத்தான் காங்கிரஸ்
அரசு கடந்த காலத்தில் அத்தனை பிரயத்தனம் செய்தது. 'காங்கிரஸ் செய்த
தவறுகளைச் செய்ய மாட்டோம். அதற்கு தீர்வுகளைக் காண்போம்' என்று சூளுரைத்த
மோடி, பிறகு எதற்காக காங்கிஸ் அரசு செய்த அதே தில்லுமுல்லு
திருகுதாளங்களைச் செய்ய வேண்டும்?
உண்மையில் கதர் கால அநியாயங்களைத் துடைக்க வேண்டும் என
நினைத்தால், ஓயாமல் இந்திய பாரம்பர்யம் பற்றி வாய்கிழிய பேசிக்
கொண்டிருக்கும் பிஜேபியும், அதன் பிரதமர் மோடியும் என்ன செய்திருக்க
வேண்டும். இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டியிருக்க
வேண்டும். நம்முடைய பாரம்பரிய விதைகளின் மூலமே பன்னாட்டு வீரிய விதைகளை
மிஞ்சிய மகசூலை அள்ளும் விவசாயிகள் இப்போது பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய நாட்டு மாடுகள் மூலமாகவே போதுமான இயற்கை உரத்தைப் பெற முடியும்
என்பதை நிருபித்துக் கொண்டுள்ளனர். இந்த விவசாயிகளையெல்லாம் பார்த்து
பாடம்படித்து, எங்களுக்கு அந்நிய தொழில்நுட்பமான மரபணு மாற்று விதைகள்
தேவையில்லை என்று பாரம்பரிய விதைகளை உயர்த்திப் பிடித்திருக்க வேண்டும்.
பன்னாட்டு மாடுகள் தேவையில்லை, உள்நாட்டு மாடுகளே போதும் என்று அவற்றை
பெருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லையே!
கேட்டால், '120 கோடி இந்தியர்களுக்கு உணவு புகட்ட,
பாரம்பரிய விவசாயத்தால் முடியாது' என்று பசுமைப் புரட்சியின் அப்பாக்களும்
அம்மாக்களும் முப்பது நாற்பது ஆண்டுகளாக எடுத்துக் கொண்டிருக்கும் அதே
வாந்தியை மறுபடி மறுபடி எடுக்கிறார்கள், விஞ்ஞானிகள் என்கிற பெயரில்
திரியும் அஞ்ஞானிகள் சிலர்.
இங்கே திருமணங்களிலும், கேளிக்கை நிகழ்வுகளிலும்,
நட்சத்திர உணவு விடுதிகளிலும், லட்சக்கணக்கான உணவு விடுதிகளிலும் தினம்
தினம் சமைக்கப்பட்டு, உண்ணாமல் வீணடிக்கப்படும் உணவைக் கணக்கிட்டால்,
இன்னும் ஒன்பது இந்தியாவுக்கு உணவிட முடியும். இப்படி வீணடிப்பதைக்
கட்டுப்படுத்தினால், வெட்டிச் செலவுகளும் மட்டுப்படும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு, இப்படி மன்மோகன் சிங் செய்து
வந்த அதே விஷயங்களை கையில் எடுத்து, அமெரிக்காவின் உத்தரவுகளை சிரமேற்று
நிறைவேற்றுவதற்கு எதற்காக மோடி பிரதமராகியிருக்க வேண்டும். இதைவிட தெரிந்த
பிசாசே மேல் என்று இருந்திருக்கலாமோ!
இப்படி மன்மோகன் சிங் செய்து வந்த அதே விஷயங்களை கையில்
எடுத்து, அமெரிக்காவின் உத்தரவுகளை சிரமேற்று நிறைவேற்றுவதற்கு எதற்காக
மோடி பிரதமராகியிருக்க வேண்டும். இதைவிட தெரிந்த பிசாசே மேல் என்று
இருந்திருக்கலாமோ!
வாலு போய் கதி வந்தது...டும் டும் டும்...
பிசாசு போய், பேய் வந்தது... டும் டும் டும்!
பின்குறிப்பு:
இன்னுமொரு இடியையும் இறக்கியிருக்கிறது மோடி அரசு.
'அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கு இதுநாள் வரை ஊக்கத் தொகையை தந்து
கொண்டிருந்த மாநில அரசுகள் இனி கொடுக்கக் கூடாது' என்பதுதான் அந்த உத்தரவு.
அரிசி, கோதுமைக்கு... மத்திய அரசின் விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகை
கொடுக்கப்படுவதற்குக் காரணமே... நாட்டுக்கே உணவை உற்பத்தி செய்யும்
விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றத்தான். இதுவும்கூட சொற்பமே.
இதையும்கூட கொடுக்கக் கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டுவிட்டார் மோடி.
'இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளை
ஒரேயடியாக ஒழித்துவிட்டு, பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளிடம்
நிலங்களை மொத்தமாக அடகு வை' என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் மறைமுக
உத்தரவு. இதை கடைசி வரை மன்மோகன் சிங் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால்,
அறுதிப் பெரும்பான்மையுடன் இதைக் கையில் எடுத்துவிட்டார் மோடி.
-ஜூனியர் கோவணாண்டி
நன்றி : ''பசுமை விகடன்''
தேர்தலுக்கு முன்பு மோடியை ஆதரித்த விகடன் உள்ளிட்ட பத்திரிகைகள் இப்போது தான் உண்மையை உணர்ந்து எழுதுகிறார்கள்.