தமிழருவி மணியன்,
வழக்கறிஞர், எழுத்தாளர், காந்திய சிந்தனையாளர்
வழக்கறிஞர், எழுத்தாளர், காந்திய சிந்தனையாளர்
உண்மையான ஒரு கம்யூனிஸ்ட்டாக உலகில் வலம் வருவது ஓர் அரிய தவத்துக்கு
ஒப்பானது. அடையாள அட்டைகள் வைத்திருப்பவர் எல்லாம் கம்யூனிஸ்ட்
ஆகிவிடுவது இல்லை. மக்கள் நலனுக்காக வாழ்வை முற்றாக அர்ப்பணித்து, எள்
மூக்கின் முனை அளவும் சுயநலமின்றி, தனிச் சொத்துடைமை துறந்து, எளிமை சார்ந்த
வாழ்க்கையை மேற்கொண்டு, வர்க்க பேதமற்ற சுரண்டலற்ற சமுதாயத்தைச்
சமைப்பதற்குப் போர்க்குணத்துடன் புரட்சிக்கான களம் அமைப்பவரே ஓர் உண்மையான
கம்யூனிஸ்ட்டாக உருப்பெற முடியும். இன்று, கம்யூனிஸ்ட் கட்சிகளிலேயே
கலப்படம் நிகழ்ந்துவிட்டது. நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே
தமிழகத்தில் மார்க்சியத்தின் எச்சமாக நம் முன் நடமாடுகின்றனர். இத்தகைய
சூழலில்தான் ''நானும் ஒரு கம்யூனிஸ்ட்'' என்கிறார் கலைஞர் கருணாநிதி. “ஐந்து
தலைமுறை முதலமைச்சராக இருந்த எனக்கு ஒரேயொரு ‘தெரு வீடு’ தவிர வேறெந்த
வீடும் இல்லை. அதையும் மக்களுக்குத் தானமாக எழுதிவைத்து விட்டேன்’ என்று
கலைஞர் வழங்கியிருக்கும் வாக்குமூலத்தில் உண்மை சிலுவையில்
அறையப்பட்டுவிட்டதை அறியாத தமிழர் யாராவது உண்டா? ஆலமரத்தின் விழுதுகள்
போன்று பரவிப் படர்ந்திருக்கும் கலைஞரின் குடும்ப உறவுகளின் சொத்துப்
பட்டியலை விரிவாக எழுத முயன்றால், விரல்கள் வலிக்குமே.
அவ்வளவு
சொத்தும் அறம் சார்ந்த வழிகளிலா வந்து சேர்ந்தது? கலைஞரைப் போல 90 வயதைத்
தொட்டவர்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்வை வேள்வியாக நடத்தியவர்கள்,
ஆயிரம் இன்னல்களைத் தலைமறைவு வாழ்க்கையில் சந்தித்தவர்கள், மாநில முதல்வராக இருந்தவர்கள். செப்புக் காசும் தமக்கென்று சேர்க்காமல் இறுதிவரை
வாழ்ந்து செத்தவர்கள், ‘தெரு வீடு’ கூட இல்லாதவர்கள் இருவரைப் பற்றி
இன்றைய இளையதலைமுறை அறிவதன் மூலம் ''கலைஞர் ஒரு கம்யூனிஸ்ட்டா?'' என்ற
கேள்விக்கு எளிதில் விடை காணக் கூடும். மகாத்மா காந்தி காண விரும்பிய பொது
வாழ்க்கைப் பேரேட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய புனிதப்
பெயர்கள் இரண்டு. 1. நிருபன் சக்ரபர்த்தி, 2. ஈ.எம்.எஸ். நம்பூதிபாட்.
இருவருமே காந்தியால் கவரப்பட்டு,தேச விடுதலைப் போரில் தியாகம் புரிந்து,
மார்க்ஸியப் பொருளாதாரத்தில் மனம் ஒன்றிக் கலந்து கம்யூனிஸ்ட்டுகளாக
மாறியவர்கள்; தாங்கள் பிறந்த மண்ணில் தவ வாழ்க்கை நடத்தி, மார்க்ஸியத்திடம்
மக்களைத் திருப்பி, கம்யூனிஸ ஆட்சியை அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர்கள்;
அகத்திலும் புறத்திலும் பொய்யின் நிழல் படாமலும், ஊழலின் மாசு படியாமலும்
நம்மால் நம்ப முடியாதபடி வாழ்ந்து மறைந்தவர்கள். நிருபன் சக்ரபர்த்தி, தன்
கல்லூரிப் படிப்பைத் துறந்து, காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்தில்
ஈடுபட்டவர், கற்றறிந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தபோதும், ஏழைகளின்
தோழனாய் தன்னைச் செதுக்கிக் கொண்டவர்; சணல் ஆலைத் தொழிலாளியாய்,
கூலியாளாய், ரிக்ஷா இழுப்பவராய், மலைவாழ் மக்களின் ஆசிரியராய்,
கல்கத்தாவின் புகழ் பூத்த இதழான ‘அமிர்தபஜார்’ பத்திரிகையாளராய் பல்துறை
அனுபவங்களை அடைந்தவர். 1978 முதல் 1988 வரை கம்யூனிஸ்ட் முதல்வராக 10
ஆண்டுகள் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றிய நிருபன் ஓர் அதிசய மனிதர்.
முதல்வராகப்
பொறுப்பேற்றதும் ஒரு தகரப் பெட்டியுடன் அரசு வீட்டில் அடியெடுத்து
வைத்தவர், 10 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி நடத்தி முடித்தபிறகு, அதே தகரப்
பெட்டியுடன் ஒரு ரிக்ஷாவில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு
வந்து சேர்ந்தார் நிருபன். அவருடைய தகரப் பெட்டியில் சில ஆடை களும்
சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகங்களும் மட்டும் தான் இருந்தன. ‘தெரு
வீடு’ கூட இல்லாத துறவி நிருபன் ஏழ்மையும் எளிமையும் அழகு தரும் அணிகலன்களாய்ப் பூண்டு ஓர் உன்னதமான மார்க்ஸியராய் வாழ்ந்தார். இரண்டாவது முறை
தொடர்ந்து நிருபன் திரிபுரா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வாழ்த்த
வந்தவர்களிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். ‘இன்னமும் 60 சதவிகித
மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்று வரை
ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கவில்லை. இவற்றுக்காக என் மக்களிடம் நான்
மன்னிப்பு கேட்க வேண்டியவன். எனக்கு வாழ்த்தும் பாராட்டும் பெறும் தகுதி
இல்லை’ என்றவர் நிருபன். ஆனால், நம் கலைஞர் புகழுரைக்கும்
விளம்பரத்துக்கும் வரவேற்பு வாழ்த்தொலிக்கும் ஏங்கி நிற்கும் இயல்பு கொண்
டவர். ‘என்னிடம் பற்றும் அன்பும் கொண்ட தோழர்கள் எனக்கு விழா
எடுக்கிறார்கள். அதுகண்டு வக்கற்றோர் வயிற்றெரிச்சல் படுவதா?’ என்று
பொங்கும் கலைஞர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்டாக முடியும்? ''எங்களில் எவரும்
வெகுஜனப் புகழைத் தூசியளவுகூட மதித்ததில்லை. பல நாடுகளில் இருந்து எண்ணற்ற
பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு. நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத்தால், அந்தப் பாராட்டுகளில் ஒன்றைக் கூட விளம்பரமாகப் பயன்படுத்துவதற்கு
நான் அனுமதித்தது இல்லை'' என்று, மார்க்ஸ் தனது எழுத்தில் பதிவு செய்திருப்பதை நிருபன் அறிந்து வைத்திருந்தார். ஆனால், கலைஞர் அதை அறிந்திருக்க நியாயமில்லை. காரணம், அவர் எந்த வகையிலும் கம்யூனிஸ்ட்
இல்லை. இந்தியாவில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்த, ஜனநாயக முறையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிர்வகித்த அரிய வரலாற்று
மனிதர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட். தன்னுடைய சிந்தனையாலும் செயல் திறனாலும்
கேரள மக்களின் சமூக வாழ்வியலை மடைமாற்றம் செய்த மகாபுருஷர். இளமையில்
காந்தியோடு இணைந்து, காங்கிரஸில் கலந்து, சோஷலிஸ்ட்டாக மலர்ந்து, இறுதிநாள்
வரை மார்க்ஸியராக மணம் பரப்பியவர் ஈ.எம்.எஸ். ஒரு கம்யூனிஸ்ட்டாக
நீண்ட நாள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி 1947ல் வெளிப்பட்ட நம்பூதிரிபாட் தன்
குடும்பத்தின் திரண்ட சொத்துக்களை விற்று அதைக் கம்யூனிஸ்ட்
இயக்கத்துக்குக் காணிக்கையாக்கினார். பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட
‘தேசாபிமானி’ வார இதழ், அந்தப் பணத்தில் தான் நாளிதழ் ஆனது. அந்த இதழின்
ஆசிரியராகப் பொறுப்பேற்ற நம்பூதிரிபாட் தன்னுடைய 89-
ஆவது வயதில் மரணத்தைத்
தழுவிய நாளில் கூட மதச்சார்பின்மையின் அவசியம் குறித்து அந்த இதழுக்காக
உதவியாளர் துணையுடன் கட்டுரை வடித்தார்.
ஏராளமாக எழுதிக் குவித்த
அவர் தன் எழுத்தின் மூலம் கிடைத்த பணத்தையும் இயக்கத்துக்கே
அர்ப்பணித்தார். தான் பிறந்த மண்ணை 26 ஆண்டுகள் திரும்பிப் பார்க்க
நேரமின்றி ஏழைக்கும் பாழைக்கும் ஓயாமல் உழைத்த அந்த மனிதர், தள்ளாத
வயதிலும் தன் ஆடையைத் தன் கையால் துவைத்து அணிந்தவர். தோழர் நல்லகண்ணு
இன்றும் தன் துணியைத் தானே துவைப்பவர். அவர்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள்.
நம் கலைஞரோ கழகத் தளபதிகளின் கறைபடிந்த அரசியல் பயணத்தில் தலைமை ஏற்று
வழி நடத்துபவர். மாணிக்கங்களையும் கூழாங்கற்களையும் ஒரே கூடையில் அடுக்குவது அழகாகுமா? சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத்தைக் குடும்பச்
சொத்தாகக் கூறு போட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அரவணைத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வீர வரவேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங்களை
ஆக்கிரமித்தவர்களைத் தானே தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத்தமிழர்
அழிந்த போதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர்
குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை
விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப்பவர், சில்லரை வணிகத்தில் அந்நிய வர்த்தக
முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம்
நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி
மத்தியாசை நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துக் கடுமையாகக்
களப்பணி ஆற்றியவர், ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார். கேழ்வரகில் நெய்
என்றால் கேட்பவர்க்கா புத்தியில்லை? நம்பூதிரிபாட் ஒருமுறைசொன்னார்:
‘நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு தனி மனிதன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ளும் தருணத்தில் தலைவனாக உயர்ந்து விடுகிறான். தன் சுகங்களுக்காகவும் தேவைகளுக்காகவும், கொள்கையில், லட்சியத்தில் சமரசம் கொள்ளும்
தருணத்தில் தலைவன் என்ற தகுதியை இழந்துவிடுகிறான். ஓ... அதுதான் எவ்வளவு
ஆழ்ந்த அர்த்தமுள்ள பொது வாழ்க்கைப் பிரகடனம்!
1 கருத்து:
mikavum arumai ayya, oru communist epdi iruka vendum endru saatai adiyil solli irukirar.....
கருத்துரையிடுக