திங்கள், 30 மே, 2011

இலாபவெறி பிடித்து அலையும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

             இந்திய இளைஞர்களின் நேரத்தை - பணத்தை - படிப்பை விரையமாக்கும் - வீணடிக்கும்,  பணம் கொழிக்கும் - இலாபம் கொழிக்கும் விளையாட்டான கிரிக்கெட்டில், இந்திய முன்னணி வீரர்கள்  அபரிதமான  வருமானம் இருந்தால் மட்டுமே விளையாடுகின்றனர். சர்வதேச கிரிக்கெட் தர வரிசையில் இந்தியாவை முதல் இடத்தில் அழைத்துச் செல்லக்கூடிய - முன்னிலையில் வரக்கூடிய போட்டிகளில் கலந்துகொள்ள அக்கறை காட்டுவதில்லை. இப்போட்டிகளில்  வருமானம் குறைவாக உள்ளதால் இதுபோன்ற  போட்டிகளில் இந்த வீரர்கள் கலந்துகொள்ள மறுக்கின்றனர்  என்பது தான் உண்மை.  சமீப காலச் சம்பவங்கள் இந்த உண்மைகளை தெளிவாகவே வெளிப்படுத்துகின்றன. 
       மேற்கு இந்தியத் தீவுகளில் மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் முக்கியமான ஆட்டக்காரர்களான சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், கவுதம் காம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இடம் பெறவில்லை.
           தொடர்ந்து 90 நாட்கள் விளையாடியதால் சேவாக் மற்றும் காம்பீருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தாங்களாகவே விலகிக் கொண்டுள்ளனர். இதில் சச்சின் டெண்டுல்கர், தான் களைப்படைந்து விட்டதாகக் கூறியுள்ளார். முதலில் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என்று கூறிய இவர், டெஸ்ட் போட்டிகளுக்கும் கைவிரித்து விட்டார். சர்வதேச டுவென்டி - 20 போட்டிகளில் பங்கேற்காத டெண்டுல்கர் பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடினார். இதனால் தேச அணியில் இடம் பெற முடியாது என்று கூறிவிட்டார். 
              யுவராஜ் சிங், தனக்கு மூச்சு விடுவதில் திணறல் இருப்பதாகக் கூறி ஒதுங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது மட்டும் எந்தத்திணறலும் இல்லாமல் தனது புனே வாரியர்ஸ் அணி பங்கேற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஆடினார்.
          கவுதம் காம்பீரோ, தனக்கு தோள்பட்டையில் இருந்த காயத்தை மறைத்து ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகளுடனான ஒருநாள் போட்டிக்கு தன்னை கேப்டனாக அறிவித்தபோதும் காயம் பற்றித் தெரிவிக்கவில்லை. ஐபிஎல் முடிந்தவுடன் தான் காயம் பட்டுவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்தக்காயம் உலகக்கோப்பைப் போட்டியின்போதே இருந்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் ஆண்ட்ரூ லெய்பஸ் கூறியுள்ளார்.
          45 நாட்களுக்கு உலகக்கோப்பைப் போட்டி நடந்தது. ஆறு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு 51 நாட்களுக்கு ஐபிஎல் போட்டி நடந்துள்ளது. இதனால்தான் மூத்த ஆட்டக்காரர்கள் களைப்படைந்துள்ளனர்.

மேற்கு இந்தியத் தீவில் விளையாடப்போகும் டெஸ்ட் அணி:

தோனி(கேப்டன்), விவிஎஸ் லட்சுமண்(துணை கேப்டன்), முரளி விஜய், அபினவ் முகுந்த், ராகுல் டிராவிட், விராட் கோலி, எஸ்.பத்ரிநாத், ஹர்பஜன்சிங், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், அமித் மிஸ்ரா, பிரக்ஞன் ஓஜா, ஜாகீர்
கான், முனாப் படேல், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல்.

ஞாயிறு, 29 மே, 2011

மத்திய அரசின் அலட்சியம் : தடுப்பூசிப் போடப்பட்ட குழந்தைகள் மரணம் அதிகரிப்பு

              சமீபகாலமாக, குறிப்பாக 2008 - ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவில் தடுப்பூசி போட்டதன் காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது நமக்கெல்லாம் ஒரு  அதிர்ச்சியான  தகவல்.    அண்மையில் கேரள மாநிலம் கண்ணுரைச் சேர்ந்த கே. வி. பாபு என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டக் கேள்விக்கு மத்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் கொடுத்த தகவல் தான் இது என்பது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. 
               AEFI - Adverse Effect From Immunisation என்று சொல்லக்கூடிய தடுப்பூசி போடப்பட்டதால் ஏற்பட்ட குழந்தைகள் மரணம் என்பது, 2001- ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை 136 எனவும், அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் 2008 முதல் 2010 வரை 355 குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள் என்கிற உண்மை மத்திய அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது.
               மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மேலும் 2001 முதல் 2010  வரை தடுப்பூசி  போடப்பட்டதால் மரணமடைந்த குழந்தைகளின் எண்ணிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. 2001 - ஆண்டு அப்படிப்பட்ட குழந்தை மரணம் இல்லை. அதே சமயத்தில் 2002 - ஆம் ஆண்டு ஆறு குழந்தைகளும், 2003 - ஆம் ஆண்டு 13 குழந்தைகளும், 2004 - ஆம் ஆண்டு 23 குழந்தைகளும், 2005 - ஆம் ஆண்டு 18 குழந்தைகளும், 2006 - ஆம் ஆண்டு 54 குழந்தைகளும்,  2007 - ஆம் ஆண்டு 32 குழந்தைகளும், 2008 - ஆம் ஆண்டு 111 குழந்தைகளும், 2009 - ஆம் ஆண்டு 116 குழந்தைகளும், 2010 - ஆம் ஆண்டு 128 குழந்தைகளும் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது  அரசே தரும் தகவல் என்றால் உண்மையான மரண எண்ணிக்கை நிச்சயம் அதிகமாக இருக்கும். 
                 தடுப்பூசியால் உண்டாகும் குழந்தைகள் மரணத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் : 
               ஒன்று - இடதுசாரிகள் ஆதரவு பெற்ற  சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 1 - இன் ஆட்சிகாலத்தில் - இடதுசாரிகளின் கண்காணிப்பில் ஆட்சி நடந்தபோதே அன்புமணி ராமதாஸ் போன்ற சுயநலக்காரர்கள் மத்திய அமைச்சர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படித்தான் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது   மத்திய அரசுக்கு   சொந்தமான இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த  103 -  ஆண்டுகள் வயதான  Central Research Institute (CRI ), தமிழ்நாட்டிலுள்ள குன்னூரில் இருக்கும் நூறு ஆண்டுகளைக்  கடந்த Pasteur Institute of India ( PII ), சென்னையிலிருக்கும்  அறுபது  ஆண்டுகளைக்  கடந்த          BCG Vaccine Laboratory ( BCGVL ) போன்ற தடுப்பூசி நிறுவனங்களை 2008 -ஆம் ஆண்டு தன்னிச்சையாக மூடிவிட்டார் என்பது மட்டுமல்ல அதன் பிறகு தனியார் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளையே குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தியதால் தான் 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டுக்குப் பிறகு மூடப்பட்ட அந்த நிறுவனங்கள் இன்றைக்கு திறக்கப்பட்டிருக்கிறது.
               இரண்டு - முன்பெல்லாம் ஒரு நாடு தடுப்பூசிகளோ,  மருந்துகளோ புதிதாக கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அந்த கண்டுபிடிப்புகளை குரங்கு, எலி போன்றவற்றிற்கு செலுத்தி சோதனை செய்தபிறகு தான் அதன் வெற்றியை பொறுத்து மக்களுக்கு செலுத்துவார்கள். அப்படி செய்தால் மக்களுக்கு பாதிப்புகளோ உயிரிழப்புகளோ இருக்காது. ஆனால், இன்றைக்கோ  அமெரிக்கா மற்றும் அதை சார்ந்த நாடுகள் புதிய தடுப்பூசிகளோ  அல்லது புதிய மருந்துகளோ கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அதை குரங்கு - எலி போன்றவற்றிற்கு செலுத்தி சோதனைச் செய்வதில்லை. நேரடியாக மனிதர்களுக்கே போட்டே சோதனை செய்கிறார்கள். அந்த மனிதர்கள் வேறு யாருமல்ல - இந்தியர்கள். அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில் - சேரிகளில் வாழும் தலித் மக்களைத்  தான் இன்றைக்கு சோதனை எலிகளாக பயன்படுத்துகிறார்கள். இந்த வகையான சோதனை என்பது மத்திய அரசின் அனுமதியில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இப்படித்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் புதுடெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன மருத்துவமனை ( AIIMS ) -யில்   தனியார் தயாரித்த புதியவகை தடுப்பூசி போடப்பட்டதால் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள் என்பதும் மறைக்க முடியாத உண்மை.
                அண்மையில் சென்ற ஆண்டு, பெண்களுக்கு விலா எலும்பில் வரக்கூடிய cervical cancer என்கிற புதிய வகை புற்றுநோய்க்கு தடுப்பூசி புதிதாக கண்டுபிடிக்கப் பட்டிருகிறது. அது ஒரு அமெரிக்க நிறுவனம் என்றும் சொல்லபடுகிறது. அப்படி கண்டுபிடிக்கப் பட்ட புதுவகை தடுப்பூசியை ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கிராமங்களில் வாழும் பத்து வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட தலித் பெண் குழந்தைகளுக்கு போட்டு சோதனை செய்தார்கள். அதில் ஆறு பெண் குழந்தைகள் மரணமடைந்தார்கள். பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது. அன்றைய தினம், பாராளுமன்ற மாநிலங்களவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் பிருந்தா காரத்  இந்த பிரச்சனையை எழுப்பி கண்டித்துப் பேசியதுமட்டுமல்லாமல், பெண் குழந்தைகளுக்கு அந்த புதிய வகை  தடுப்பூசி போடுவதை நிறுத்தவும் செய்தார்.
                 மேற்குறிப்பிட்ட இரண்டு தகவல்களும், நம் நாட்டு குழந்தைகள் மீதான மத்திய அரசின் அலட்சியத்தையும் , பொறுப்பின்மையையும் தான் காட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு காட்டுகிற அதீத விசுவாசம் நம் நாட்டுக் குழந்தைகளை பலி வாங்குகிறது என்பது தான் உண்மை.  

தகவல்கள் : The Hindu / 29-05-2011

சனி, 28 மே, 2011

பெண் உரிமைகளை தடை செய்யும் பழமைவாதம்

பெண்களுக்கு கல்வி கற்பித்ததால் ஆப்கனில்  தலைமை ஆசிரியை சுட்டுக்கொலை

                அண்மையில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி கற்பித்ததால் தலைமை ஆசிரியை ஒருவர் தாலிபான் பிற்போக்குவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். எங்களின் எச்சரிக்கையை மீறி பெண்கள் கல்வி கற்றால் இதே போல் சுட்டு கொலை செய்வோம் என்று கல்வி பயின்ற அந்தப் பெண்களையும் எச்சரித்துள்ளனர்.
                ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகில் உள்ள லோகர் என்ற இடத்தில் பெண்கள் பள்ளி ஒன்று உள்ளது. இதில் தலைமை ஆசிரியையாக கான்முகமது பணியாற்றி வந்தார். அங்குள்ள தாலிபான்கள் இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் கல்வி கற்பதும், பெண்களுக்கு கல்வி கற்பிப்பதும் கூடாது என்று முரண்டுபிடிக்கிறார்கள்.  இதையும் மீறி பெண்களுக்கு கல்வி கற்றுத்தந்ததால் அந்த தலைமை ஆசிரியையை தாலிபான்கள் தொடர்ந்து மிரட்டிவந்துள்ளனர். ஆனாலும் கான்முகமது அதைப் பொருட்படுத்தாமல், கல்வி கற்றுக் கொடுத்து பெண்களை முன்னேற்றச் செய்யவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன் கல்வி கற்பிக்கும் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார்.
               இந்நிலையில் கடந்த 25 - ஆம் தேதி அன்று,  கான்முகமது தனது வீட்டிலிருந்து பள்ளிக்குச்  செல்ல வெளியே வந்த போது தாலிபான் பயங்கரவாதிகள் அவரைச் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றனர்.
               ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில்வதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. பழைமைவாதிகள் பெண்கள் பள்ளிகள் மீது தொடர் தாக்குதலை நடத்திவருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் பெண்கள் மீது ஆசிட் வீசுதல், பள்ளிகளை தீக்கிரையாக்குதல், பெண்கள் பள்ளிக்கட்டடங்களுக்குள் விஷவாயுவை செலுத்துதல் உள்ளிட்ட வன்முறைகளில் பழைமைவாதிகள் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக ஆப்கனில் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்பது வருந்ததற்குரியது.

தடையை மீறி வாகனம் ஒட்டிய பெண் ஒருவர் சவூதியில் கைது

             சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி வாகனம் ஓட்ட முயன்ற பெண் ஒருவர் சவூதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தான் வாகனத்தை ஓட்டும் முயற்சியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் நாட்டின் மற்றப் பெண்களையும் வாகனம் ஓட்டச் செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார் என்றும் மனால் அல் ஷெரீப் என்கிற அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிலமணிநேரத்தில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த  சிலமணி நேரங்களில்  மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பேஸ்புக் மற்றும் யூ டியூப் மூலம், சவூதி பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமையை அரசு தரவேண்டும் என்ற பிரச்சாரத்தையும் செய்தார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. இந்நிகழ்ச்சி பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த பல பெண்கள் தடையை மீறி வாகனம் ஓட்டும் வீடியோக் காட்சிகளை இணைய தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கும் பெண்கள் திட்டமிட்டுள்ளனர்.
                   மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் பெண் உரிமைக்கெதிரான பழமைவாதத்தின் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது.
                   இந்தியாவில் ஒழித்துக்கட்டப்பட்ட   பழக்கமான, கணவர் இறந்த பிறகு உடன்கட்டை ஏறும் பழக்கம் மீண்டும் வரவேண்டும் என்று கூறிய  முந்தைய பிரதமர் வாஜ்பாயி, கணவன் இறந்த பிறகு பெண்கள் உயிர் வாழ்வது வீண் என்று பேசிய சம்பவமும்....
                   கணவன் இறந்தபிறகு பெண்கள் களர் நிலம் , அதனால்  உடன்கட்டை ஏறும் பழக்கம் மீண்டும் வரவேண்டும் என்று தன்னை இந்து மதத்தின் தலைவனாகக் காட்டிக்கொள்ளும் சங்கராச்சாரியார் பேசிய சம்பவமும்... இப்போது என் நினைவுக்கு வருகிறது.
                   மதத்தின் பேரால் பெண் உரிமைக்கெதிரான  பழமைவாதம்  நாட்டின் உள்ளே நுழைந்தால், அதை அனுமதிக்க முடியாது. முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

உணவு பாதுகாப்புச் சட்டம் : ஏமாற்றும் மத்திய அரசும் திட்டக் கமிஷனும்

             தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ( NFSA -National Food Security Act ) கொண்டுவரப்படும் என்று ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் அறிவித்து ஈராண்டுகள் ஓடிவிட்டன. குடியரசுத் தலைவர் 15 - ஆவது மக்களவைத் தேர்த லுக்குப்பின் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப் பினர்களின் கூட்டு அமர்வில் தன் முதல் உரையை நிகழ்த்துகையில், ‘தன்னுடைய அரசாங்கம்’ அடுத்த முதல் நூறு நாட்களுக்குள் அத்தகையதோர் சட்டத்தை நிறைவேற்றும் என்று அறிவித்திருந்தார். நம் நாட் டில் நிலவும் வறுமையின் கொடுமை குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த போதிலும், இத்தகையதோர் சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசுத்தரப்பில் தொடர்ந்து சாக்குப்போக்குகள் சொல்லப்படுகின்றன.

              இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள பொது நல மனு ஒன் றில் திட்டக் கமிஷன் தன்னையும் ஒரு பிரதிவாதியாக இணைத்துக் கொண்டு, ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அதில், நகர்ப் புறத்தில் இருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு 20 ரூபாயும், கிராமப்புறத்தில் இருப்பவர்- களுக்கு 15 ரூபாயும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக அளிக்கப்படுமாயின், அவர்களை வறுமையிலிருந்து அகற்றிட அது போதுமானது என்று குறிப்பிட்டிருக்கிறது. இதன் உட்பொருள் என்னவெனில், கொண்டுவரப்பட இருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிற தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் இதற்கு மேல் வருமானம் உடைய எவரும் வரமாட்டார்கள் என்பதாகும்.

              திட்டக் கமிஷனின் அபிப்பிராயத்தின்படி, நகரங்களில் வாழ்பவர்களில் எவரேனும் மாதத்திற்கு 578 ரூபாய் வருமானம் உடையவர்களாக இருந்தால், அவர்கள் ஏழைகள் என்று அதிகாரபூர்வமாகக் கருதப்படமாட் டார்கள். அதன் அறிக்கையின்படி, இந்தத் தொகையில் அவர்கள் வாடகை மற்றும் பயணச் செலவிற்காக அளித்திடும் 31 ரூபாய், அவர்கள் கல்விக்காகச் செலவிடும்         18 ரூபாய், மருந்துகள் வாங்குவதற்காகச் செலவிடும் 25 ரூபாய், மற்றும் காய்கறிகளுக்காகச் செலவிடும் 36.5 ரூபாயும் அடக்கம். ஏளனம் செய்கிறார்களா? அல்லது ஏமாற்றுகிறார்களா? உண்மையில், இரண்டையுமே தான் செய்கிறார்கள்.

               திட்டக் கமிஷன் அளித்துள்ள மேற்படி புள்ளிவிவரங்களை, அது அளித்துள்ள மற்றொரு புள்ளி விவரத்திலிருந்தே எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஒருவர் உயிர்வாழ்வதற்கு நாள்தோறும் குறைந்தபட்சம் 2,400 கலோரி கள் உணவு உட்கொள்ள வேண்டும் என்று வரையறுத்திருக்கிறது. இதற்கு ஒவ்வொரு வரும் நாளொன்றுக்கு 44 ரூபாய் செலவிட வேண்டும். இந்தச் செலவினத்தில் அவர்க ளின் உறைவிடம், உடை, கல்வி, போக்குவரத்துச் செலவினங்கள் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

              திட்டக் கமிஷன், தன்னுடைய ஆய்வின் அடிப்படையில், நம் மக்கள் தொகையில் வறுமை விகிதம் 33 விழுக்காடு என்று முடிவு செய்திருக்கிறது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் ( National Advisory Council ) வறுமை விகிதம் 46 விழுக்காடு என்று பரிந்துரைத்திருக்கிறது. ‘‘நம் நாட்டின் மக்கள் தொகையில்  77 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட வருமானம் இன்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்கிற அர்ஜுன் சென்குப்தா மதிப்பீட்டைவிட இவ்விரண்டு மதிப்பீடுகளுமே மிகவும் குறைவானவைகளாகும்.

             இத்தகைய பாசாங்குத்தனமான வரை யறைகள் நம் நாட்டில் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்கிற அரசின் பொறுப்பை எள்ளி நகையாடுவதோடு மட்டுமல்லாமல், உண்மையில் அவை அரசாங்கம் மூர்க்கத்தனமாகப் பின்பற்றும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் உண்மையான நோக்கத்தினையும் மூடி மறைக்கின்றன. அதாவது இரு வேறு இந்தியர்களுக்கும் இடைவெளி மேலும் அதிகமாகி இருக்கிறது. நாட்டில் பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட் டிருக்கிறார்கள்.

              இதேசமயத்தில், சென்ற வாரம் கூடிய மத்திய அமைச்சரவையானது நாட்டின் ஒட்டு மொத்த மக்கள்தொகையையும் அதன் பொருளாதாரம், சாதி மற்றும் மத அடிப்படைகளின் பின்னணியில் தேசிய அளவில் சர்வே செய்திட ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்தியப் பதிவுத் தலைவர் ( Registrar General of India ) அவர்களிடம், மக்களின் சாதி மற்றும் மதப் பின்னணி குறித்துக் கணக்கெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில், கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்துடன் இணைந்து, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பினை மேற்கொள்ள ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

                  கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் குறித்த கணக்கு சென்ற முறை 2002-இல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தடவை இதில் நகர்ப்புறங்களும் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறது. நகர்ப்புறங் களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களைக் கண்டறிய மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொள்ளுமாறு அடையாளம் காட்டப்- பட்டிருக்கின்றன. அதாவது, முதலாவது காரணியாக இருப்பிடத்தையும், இரண்டாவது காரணியாக கல்வியின்மை, நீண்டகாலம் நீடித்திருக்கிற இயலாமை, குடும்பத்தலைவராகப் பெண் இருத்தல் முதலான சமூகப்              பலவீனங்களையும் மூன்றாவது காரணியாக முறைசாராச் தொழில், நிரந்தரமற்ற தொழில், குறைந்த ஊதியம் உடைய தொழில் போன்ற வேலைவாய்ப்புக் குறைபாடுகளையும் எடுத் துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது.

                  கிராமப்புறங்களில் வறுமையைக் கண்ட றியும் பணி வேறு விதத்தில் செய்யப்பட இருக்கிறது. கிராமப்புறங்களில் மக்கள்தொகை மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட இருக்கின் றன. (தொலைபேசி இணைப்புகள், குளிர் பதன சாதனங்கள் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் உடையவர்கள் போன்ற) உயர் பணக்காரக் குடும்பங்கள் ஒதுக்கப்பட்டு விடும். புராதனப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், ஆதரவற்றவர்கள், மலம் சுமப்பவர்கள் போன்று அடிமட்டத்தில் உள்ளவர்கள் இயல்பாகவே இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இரண்டுக்கும் இடைப்பட்டவர் களைப் பொறுத்துத்தான் பிரச்சனை. இவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று கருதப்பட வேண்டுமானால் ஏழு விதமான இயலாமையைப் பெற்றிருக்கவேண் டும். இந்த ‘‘ஏழு விதமான இயலாமை’’       ( seven deprivation Indicator ) குறித்துத்தான் குறிப்பிடத்தக்க அளவில் குழப்பங்கள் இருந்து வருகின்றன.

              நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய தகவல்களின்படி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கணக்கிடும் முறையின்படி, ஓர் ஐந்துபேர் கொண்ட குடும்பம் ஒன்று, ஓராண் டிற்கு 27 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமா னம் ஈட்டும் என்றால், அது தானாகவே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பப் பட்டியலிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது எனக் கருதப்படும். அதாவது மாதத் திற்கு 447 ரூபாய்க்கும் மேல் வருமானம் உடைய குடும்பம் ஏழைகளின் பட்டியலி லிருந்து நீக்கப்படப் போதுமானது. ‘கிராமப் புறங்களில் ஒரு நாளைக்கு 15 ரூபாய் வருமா னம் உடையவர் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழ்பவர் என்று மதிப்பிடப் போதுமானது’ என் கிற திட்டக் கமிஷனின் மதிப்பீட்டுடன் இது மிகச் சரியாக ஒத்துப்போகிறது.
               நம் நாட்டில் உருப்படியான முறையில் உணவுப் பாதுகாப்பு எதுவும் ஏற்படுத்த முடியுமானால் அது, பொது விநியோக முறையை வலுப்படுத்தி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் (அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தாலும் சரி அல்லது வறுமைக் கோட்டுக்கு மேல் இருந்தாலும் சரி) மாதம் ஒன்றுக்கு 35 கிலோ கிராம் உணவு தானியங்களை கிலோ 2 ரூபாய் வீதம் அளிப்பதை உத்தரவாதம் செய்வதில்தான் இருக்கிறது. இதற்குப் பதிலாக, இவ்வாறு மோசடியான கணக்குகளை மத்திய அரசு கூறுமானால், அது மக்களை மோசடி செய்கிறது என் றே அர்த்தம். மேலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு அளிக்கக்கூடிய அள விற்கு நாட்டில் போதிய அளவிற்கு வளங்கள் இல்லை என்று ஒரு வாதம் முன் வைக்கப் படுகிறது. இதுவும் மோசடியான ஒன்றேயா கும். நாட்டில் நடைபெற்றுள்ள மற்றெல்லா ஊழல்களையும் விட்டுவிடுங்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பணம் மட்டுமே நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஓர் அர்த்தமுள்ள உணவுப் பாதுகாப்பினை அளிப்பதற்குப் போதுமானதை விட அதிகமாகும்.

இவ்வாறு மிகப் பிரம்மாண்டமான முறை யில் ஆட்சியில் உள்ளவர்கள் கொள்ளை யடித்த பணத்தை மீண்டும் கைப்பற்றி, அவற்றை மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன் னேற்றுவதற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில், வலுவான மக்கள் கிளர்ச்சிகள் நடத்தி, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்திற்கு    வலுவான நிர்ப்பந்தங்களை அளித்திட வேண்டும்.
தகவல் : பீப்பிள்ஸ் டெமாக்கரசி
தமிழில்: ச.வீரமணி
நன்றி : தீக்கதிர் 

வெள்ளி, 27 மே, 2011

இந்திய இளம் பெண்ணின் மீது அமெரிக்க போலீஸ் காட்டுமிராண்டித்தனம்

இந்திய தூதரக அதிகாரி மகள் கண்ணீர்....
    இந்திய பெண் என்பதால் புகார் மீது உரிய விசாரணை கூட செய்யாமல் அமெரிக்க போலீசார் கையில் விலங்கிட்டு காட்டுமிராண்டித்தனமாக  சிறையில் அடைத்து அவமானப்படுத்தியுள்ளனர் என்பது நமக்கெல்லாம் அதிர்ச்சி தரும் தகவலாகும்.
               அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் இந்திய தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு துணைத்தூதரக அதிகாரியாக தேபாஷிஷ் பிஸ்வாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். பதினெட்டே வயதான  இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் ஜான் ப்ரௌன்  பள்ளியில் கணித பாடப்பிரிவில்  படித்து வருகிறார்.
       கிருத்திகா பயிலும் பள்ளி மற்றும்  ஆசிரியர்கள் குறித்து தரக்குறைவான வாசகங்களுடன் கிருத்திகா பெயரில்  இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மீது  போலீசில்  புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை விசாரித்த அமெரிக்க போலீசார் தூதரக அதிகாரியின் மகள் கிருத்திகா மீது சந்தேகப்பட்டனர். ஆனால் அமெரிக்க போலீசோ  கிருத்திகாவை தூதரக அதிகாரியின் மகள் என்கிற முறையிலும் - ஒரு இளம் பெண் என்கிற முறையிலும் முறையாக  உரிய விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல்,  உடனடியாக கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் மகள் கைது செய்யப்பட்டிருக்கும்  தகவலை கூட அவரது தந்தை தேபாஷிஷ் பிஸ்வாஸ்க்கு  தெரியப்படுத்தவில்லை. 24 மணி நேரம் சிறையில் இருந்த பின்னர் தரக்குறைவான இ.மெயில் அனுப்பியது வேறு ஒருவர் என்பது தெரிய வந்ததும்  உடனே கிருத்திகாவை அமெரிக்கா போலீசார் விடுதலை செய்துவிட்டனர். ஆனால் கிருத்திகா பயின்ற குயின்ஸ் ஜான் ப்ரௌன்  பள்ளி நிர்வாகம் கிருத்திகாவை ஒரு மாதம் இடை நீக்கம் செய்திருந்தது. பின்னர் புகாரில் உண்மையில்லை என தெரிந்தவுடன், பள்ளி நிர்வாகம் கிருத்திகாவை இடைநீக்கம் செய்ததை வாபஸ் பெற்றதாக கிருத்திகாவுக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டிளித்த கிருத்திகா கூறியதாவது:
         எனக்கு தூதரக அதிகாரி மகள் என்கிற முறையில்  அதிகார பாதுகாப்பு உள்ளது. ஆனால் அதனை அமெரிக்க போலீசார் மதிக்கவில்லை. விசாரணையின் போது என்னை “பாத்ரூம்” செல்லக்கூட அனுமதிக்கவில்லை. சக கைதிகள் முன்னிலையிலேயே  செல்லச்சொல்லி கட்டாயப்படுத்தி  கொடுமை படுத்தினார்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பாலியியல் தொழில் செய்து கைது செய்யப்பட்ட பெண்களோடும், HIV நோயால் பாதிக்கப்பட்ட பெண்களோடும் அடைத்து விடுவோம் என்று மிரட்டினார்கள். எனது உணர்வுகளை அவர்கள் ஒருபொருட்டாக கூட மதிக்கவில்லை. தர்ம சங்கடத்துக்குள்ளாகியதாக கூறியவாறே கண்ணீர் விட்டு அழுதார்.
     உடனே அருகில் இருந்த அவரது வழக்கறிஞர் ரவி பத்ரா செய்தியாளர்களிடம் கைது சம்பவம் குறித்து விளக்கினார். அப்போது அவர், கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி நடந்த இந்த கொடுமையான சம்பவம் என்பது சர்வதேச தூதரகச் சட்டங்களையெல்லாம் மீறப் பட்ட செயலாகும். அவர் கைது செய்யப்பட்ட தகவல்   அவரது தந்தைக்கோ அல்லது இந்திய தூதர் பிரபு தயாளுக்கோ கூட தெரிவிக்கப்படவில்லை. கிருத்திகாவுக்கு கைவிலங்கிட்டு சிறையில் அடைத்தது தூதரக மரபுகளை மீறிய செயலாகும். உள்நோக்கத்தோடு, வேண்டுமென்றே கிருத்திகா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடைய வேதனைக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் நியூயார்க் நகர மேயர், தனது பொறுப்பை கிருத்திகாவுக்கு வழங்கி சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் வேண்டுமென்றே எந்தவிதமான குற்றமும் செய்யாத  கிருத்திகாவை கைது செய்து சட்டவிரோதமாக சிறையில்  வைத்ததற்காக நஷ்டஈடாக ரூ.7 கோடி வழங்க வேண்டும் என்றும்  நியூயார்க் நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கிருத்திகா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும்  கூறினார்.
                 ஒரு அண்டை நாட்டு தூதரக அதிகாரியின் பெண் என்றும் பார்க்காமல், பள்ளியில் பயிலும் இளம் பெண் என்று கூட பார்க்காமல் காட்டுமிராண்டித்- தனமாக அமெரிக்க போலீஸ் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. இந்திய அரசும் இதைக் கண்டித்து தூதரக முறையிலான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

சர்ச்சைக்குள்ளாகிய சன் பிக்சர்ஸ் படம்!

             தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன், பிராந்திய மொழிப்படங்களுக்குத்தான், அதிலும் தமிழ் மொழிப்படங்களுக்கு ஏராளமான விருதுகள் என்றவுடன் தமிழ் திரைப்பட ரசிகர்கள் அதைஇன்பஅதிர்ச்சியாகவே எடுத்துக் கொண்டனர்.அந்தப் பெருமையைப் பெற்றது ‘ஆடுகளம்’ என்பது பெரும்பாலான திரைப்பட ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது.
சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என்று 58 - வது தேசிய திரைப்பட விழாவுக்கான குழுவினர் அள்ளித்தந்து விட்டார்கள். இப்படத்தின் குழுவினர் கூட இவ்வளவு விருதுகளை எதிர்பார்க்கவில்லை என்பது ஒருபுறம். மறுபுறத்தில் விருது வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலகட்டத்தில் வெளியான அங்காடித்தெரு, மைனா, மதராசப்பட்டிணம் உள்ளிட்ட பல படங்களுக்கு
எதுவுமே இல்லை என்பது பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

            அங்காடித்தெரு, மைனா மற்றும் மதராசப்பட்டிணம் போன்ற படங்கள் ஒவ்வொரு வகையில் பல தரப்பட்ட ரசிகர்களைக் கட்டிப்போட்ட படங்களாகும். இருட்டில் மறைந்துகிடந்த சாமானிய தொழிலாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது அங்காடித்தெரு. ஆனால் இந்தப்படங்கள் எல்லாம் விருது பெறத் தகுதியில்லை என்று தீர்மானிக்கப்பட்டதற்கு இப்படங்களை தயாரித்ததோ அல்லது வெளியிட்டதோ ஆட்சி அதிகாரத்தில் இருந்த, மத்தியில் தற்போது இருக்கிற குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதுதான் காரணமா என்று பரபரப்பாக திரையுலகத்தினர்  விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

               மைனா படத்தைப் பார்த்தபிறகு, தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும். நான் நிம்மதியாகத் தூங்குவேன் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.  இத்தகைய படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதே என்று ரஜினிகாந்த் வருத்தப்பட்டார். இவ்வளவு ஈர்ப்பை ஏற்படுத்திய இப்படத்திற்கு ஒரு விருது மட்டும்ஆறுதல் பரிசு போல கொடுத்திருக்கிறார்கள்.

                இந்தப்படங்கள் எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லையா அல்லது திட்டமிட்ட முறையில் ஒருதலைப்பட்சமாக விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விகள் திரையுலகத்தினரைக் குடைந்து கொண்டிருக்கின்றன. எது எப்படியோ, நல்ல
திரைப்படங்களில் பல விருதுகளைத் தவற விட்டுவிட்டன என்பதுதான் துயரத்திலும் துயரம்.

நன்றி : தீக்கதிர் 

சாலை விபத்தும் மனிதகுலத்தை அழிக்கும் அணுகுண்டுக்கு இணையானது

சாலை விபத்துகள்: கொலைக்கான அனுமதியா?
-ரகு
   சமீப காலமாக இந்தியாவில் சாலை விபத்துகளால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு ஒரு விபத்து. நான்கு நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றார். சாலை விபத்துகளால் பலியாகிறவர்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது. விபத்துக்களில், குறைந்த 
வருவாய் உடையவர்கள் மரணமடைவதும் அதிகரித்து வருகின்றது.

     "2011-2020 ம் ஆண்டு வரை சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கான பத்து  ஆண்டுகள்" என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது. "பெருமளவிலான மக்கள் உயிரிழப்பதற்கு சாலைவிபத்துகளே உலகளாவிய காரணமாக அமையும்" என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

           சாலைவிபத்துகள் காரணமாக ஆண்டொன்றுக்கு 2 லட்சம் மக்கள் 
உயிரிழக்கின்றனர். 5 லட்சம் மக்கள் காயமடைகின்றனர். 90 சதவீதமான விபத்துக்கள், குறைவான மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளில் நடைபெறுகிறது. சாலைவிபத்துகளின் காரணமாக ஏற்படும் இழப்புகள் நாடுகளின் முன்னேற்றப்பணிகளை மிகவும் தீவிரமாகப் பாதிக்கிறது. சாலை விபத்துகளால் ஏற்படும் நஷ்டம் ஒரு வருடத்திற்கு  சுமார் 51800 கோடி டாலர்களாகும்.

              இத்தொகை, இந்திய மக்களின் கல்விக்கு அல்லது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படுவதை விட அதிகமாகும் என்று திட்டக்கமிஷன் தெரிவிக்கிறது. மேலும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் தீவிரமான காயம், அதற்கான மருத்துவச்செலவு, மறுவாழ்விற்கான செலவுகள் போன்ற அளவுக்கதிகமான சுமையைச் சுமக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

      இந்த ‘நவீன’க் கொள்ளை நோய்க்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக இந்தியா இந்த விஷயத்தில் மிகவும் மோசமான உதாரணமாக உள்ளது. மேலும், பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலைமை மேலும் மேலும் சீரழிந்து வருகிறது. சாலை விபத்துகளை அரசும் கண்டுகொள் வதில்லை; மக்களும் கண்டுகொள்வதில்லை என்ற நிலைமைதான் உள்ளது. சாலைவிபத்துகளை மக்கள் மிகவும் சகஜமாக ஏற்றுக்கொண்டுவிட்டனர். விதி என்று சுலபமாகச் சொல்லி விடுகின்றனர். ஆனால் உண்மையில் அப்படியல்ல. பெரும்பாலான விபத்துகள் ஏதோ ஒன்றாலோ, யாரோ ஒருவராலோ ஏற் படுத்தப்படுகிறது. இவை நிர்வாகத்தில் புரையோடிப் போயுள்ள சீரழிவை சமூக நடத்தையில் தனது பங்கையும் சுட்டிக் காட்டுகிறது.

இந்தியாவில் உயிரிழப்புகள்:

   கடந்த ஆண்டு சாலைவிபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 1.6 லட்சமாகும். 2009ம் ஆண்டு 1.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஓராண்டில் 28 சதவீதம் அதிகரிப்பு என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். ஐ.நா. சபை அறிவிப்பின்படி சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவை யான ஒரு அறிக்கையை சுகாதார அமைச்சகமும் சாலைப்போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து தயாரித்துக் கொண்டிருக்கின்றன.

          5-44 வயதுடைய பிரிவினரின் மர ணத்திற்கான முக்கியமான மூன்று  காரணங்களில் விபத்து மிக முக்கியமானதாகும். பிற நாடுகளில் விபத்தில் மரணம் 5வது காரணியாக உள்ளது. 0-4வயதுள்ள குழந்தைகள் விபத்தில் மரணமடைவது வாகனங்களின் அடர்த்தியை விட அதிக மாக உள்ளது. சில நாடுகளின் விபத்து குறித்த புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும் போது இந்தியா படுமோசமான நிலைமையில் உள்ளது. வளரும் நாடுகளைப் பொறுத்தவரை சரியான புள்ளிவிவரங்கள் கிடைப்பதில்லை. கிடைக்கும் புள்ளி விவரங்களும் தவறான வழிகாட்டக் கூடியவையாக உள்ளன.

          சாலை விபத்துகளில் பலியாபவர் களில் 13 சதவீதம் பேர் பாதசாரி-  களாவார்கள், 20 சதவீதம் பேர் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள், 7 சதவீதம் பேர் 3 சக்கர வாகனங்களில், 22 சதவீதம் பேர் லாரிகளில், 8 சதவீதம் பேர் பேருந்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் வாக னங்கள் உள்ளன. இவற்றுள் இரு சக்கர வாகனங்கள் 70 சதவீதமாகும். எனவே, விபத்து சதவீதம் அதிகரிப்பது ஆச்சரியமில்லை. ஆனால் தரைவழிப் போக்குவரத்துத்துறை அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கரவாகனங்கள் மற்றும் கார்கள், லாரிகள், பேருந்துகள் ஏற்படுத்தும் சாலை விபத்துகளின் சதவீதம் தலைகீழ்விகிதமாக உள்ளன. அதாவது, சைக்கிளில் செல்பவர்களே அதிகம் விபத்தில் உயிரிழக்கின்றனர்.

        நகர்ப்புறங்களை விட கிராமப்புறத்தில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. அதாவது 62 சதவீத விபத்துகள் கிராமப்புறத்திலேயே நடை பெறுகின்றன. அதற்கான காரணங்கள் வருமாறு, முதலாவதாக ஒரேயொரு வாகனம் மட்டுமே செல்ல ஏதுவான சாலைகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடவோ ஒதுங்கிச்செல்லவோ இயலாத நிலைமை, போக்குவரத்து குறைவாக உள்ளதால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வது முதலியவை ஆகும்.

         அடுத்ததாக நடைபெறும் விபத்துக ளில் பாதிக்கும் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.

        மேலும் விபத்து நடைபெற்றதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதில் சரியான அணுகுமுறை இல்லை. விபத்தை ஏற்படுத்தியவர்களுக்குத்   தண்டனை வாங்கிக் கொடுப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வாங்கிக் கொடுப்பதோடு, போக்குவரத்துக் காவல் துறையின் பணி முடிவடைந்து விடுகிறது.

          80 சதவீத சாலைவிபத்துகள், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் செல்வதால் ஏற்படுகிறது. இவற்றுள் 10 சதவீதம் மரணத்தில் முடிவடைகிறது. இப்புள்ளிவிவரங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தெளிவாக இல்லை. மேலும் பல இடங்களில் இப்புள்ளிவிவரங்கள் உண்மை என்று நம்பப்படுகின்றன.

       உண்மையான சாலைவிபத்துகள் மிகவும் குறைவாகவே நடைபெறு- கின்றன. குறுக்கே வரும் விலங்குகள் / மனிதர்கள் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக வேறுபக்கம் வாகனத்தைத் திருப்பும் போது பிறர் மீது மோதுவது. ஆனால் பெரும்பாலான சாலை விபத்துகள் எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்வதனால் ஏற்படுகின்றன.

     ஒரு மணி நேரத்தில் ஒருகிலோமீட்டர் (கேஎம்பிஹெச்) வேகத்தை அதிகப்படுத்துவதனால் மரணமடைவதற்கான வாய்ப்புகள் 3 சதவீதம் அதிகரிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்கிறது. உதாரணமாக, 10 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் சிக்குவதற்கும் 70 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் சிக்கும்போது மரணத்திற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 22 மே 2011)
தமிழில்: எஸ். சுப்ரமணியன் 
நன்றி : தீக்கதிர்

திங்கள், 23 மே, 2011

குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள்.

முதல் கோணல் : ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவு 

              நேற்று மே 22 ஞாயிற்றுக்கிழமை தமிழக அமைச்சரவையின் முறைப்படியான முதலாவது கூட்டம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் கூடியது.  இந்தக் கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கு பெருவாரியான இடங்களை அள்ளித் தந்து தன்னை முதலமைச்சர் நாற்காலியில் அமரச்செய்த தமிழக மக்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அன்பாக பரிசினை அள்ளிக்கொடுத்திருக்கிறார்.                    
                  முதல் கூட்டத்திலேயே அதிரடி நடவடிக்கையாக, இந்த கல்வியாண்டிலிருந்து அமலாகும் என்று பெற்றோர்களும் மாணவ - மாணவியரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த சமச்சீர்க்கல்வி திட்டத்தை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்தார்கள். அமைச்சரவையின் தான்தோன்றித்தனமான முடிவு என்பது அரசியல் காழ்ப்புணர்வைத் தான் வெளிப்படுத்துகிறது. ஆட்சி இழந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த அத்துணை காரியங்களும் - அத்துணை திட்டங்களும் சரியானது என்றோ, உள்நோக்கம் இல்லாதது என்றோ, குறைபாடுகள் இல்லாதது என்றோ  சொல்லவில்லை. அந்த திட்டங்களை நடைமுறைப் படுத்திக்கொண்டே அதில் உள்ள குறைகளை நீக்க வேண்டுமேத் தவிர, இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுத்து நடந்துகொண்டால்  மக்களின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் கோபத்திற்கும்  ஆளாகவேண்டிவரும். 
                  பள்ளிக் கட்டணக்  கொள்ளையில் சிக்கித்தவிக்கும் பெரும்பாலான பெற்றோர்கள்,  ஒரே மாதிரியான கல்வி முறைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் கிராமப்புற மாணவ - மாணவியர், சமச்சீரான கல்விக்காக பலகாலமாய் போராடி வெற்றிபெற்ற இந்திய மாணவர்கள் சங்கம் மற்றும்  சமூக சிந்தனையாளர்கள் மத்தியில் அரசின் இந்த முடிவு அதிர்ச்சியை தந்திருக்கிறது. இன்றைக்கு பல பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலிருந்து தேர்ச்சிபெற்று  பத்தாம் வகுப்புக்குச்  சென்ற பிள்ளைகளெல்லாம் ஒரு மாத காலமாக காலாண்டு வரையிலான பாடங்களை படித்து முடித்திருக்கிறார்கள். 
சமச்சீர்க்கல்வி படங்களோடு பழகிவிட்டனர். கிராமப்புற பிள்ளைகளும் புதிய பாடத்திட்ட புத்தகத்திற்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படிப்பட்டச் சூழ்நிலையில் அரசின் இந்த முடிவு என்பது அந்த குழந்தைகளுக்கெல்லாம் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இந்த செயல் என்பது அந்தக் குழந்தைகளுக்கு மன உளைச்சலையும், மனஇறுக்கத்தையும் தான் அளிக்கும் என்பதை தமிழக அரசு மறந்துவிடக்கூடாது. 
                 அது மட்டுமல்ல, இந்த சமச்சீர்க்கல்வி முறை என்பது தங்களின் கட்டணக் கொள்ளைகளுக்கு எதிரானது என்று நீதிமன்றம் சென்றிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இந்த முடிவு என்பது கொண்டாட்டத்தைக் கொடுக்கும்.
                   கடந்த காலங்களில் சமச்சீர்க் கல்விக்காக போராடிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொறுப்பாளர்  ப்ரின்ஸ் கஜேந்திர பாபு அரசின் இந்த முடிவைப்பற்றிக் கூறுகையில்,   “அமைச்சரவையின் முடிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் துரதிர்ஷ்டவசமான முடிவு இது. கல்வியாளர் அடங்கிய வல்லுனர் குழு ஆராய்ந்து அளித்த அறிக்கையை, அரசு குப்பையில் போட்டுள்ளது வேதனையானது. இப்போது உள்ள பாடத் திட்டத்தில் தவறுகள் இருக்கலாம். அந்தக் தவறுகளுக்கு திருத்தத்தை அச்சடித்து அனுப்புவதில் சிரமமே இருக்காது. மேலும் சீர் செய்ய வேண்டும் என்று அரசு கருதினால், அடுத்த ஆண்டு பாடப் புத்தகங்களை தாராளமாக மாற்றலாமே.. இந்த சமச்சீர் கல்வியை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற, மெட்ரிகுலேஷன் லாபியினர் மகிழும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இது வெறும் பண நட்டம், பொருளாதாரம் மட்டும் சம்பந்தப்பட்ட முடிவு அல்ல. மாணவர்களின் உளவியல் சம்பந்தப் பட்டது. இரண்டு மாதகாலமாக 10ம் வகுப்பு பாடத்தை படித்து வரும் மாணவனுக்கு, புதிய பாடம் என்றால் எப்படி இருக்கும் ? இது மாணவர்களுக்கு கடும் மன உளைச்சலை தரும். ஜெயலலிதா அரசு, பெருந்தன்மையோடு, இந்த முடிவை மாற்றும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
                  குறிப்பிட்ட தேதியில் கட்டாய ஹெல்மெட் என்று உத்தரவு வந்த போது, உண்மையோ இல்லையோ, கருணாநிதி அரசு ஹெல்மெட் தயாரிப்பாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்று விட்டதென்று  அப்போது பேச்சு எழுந்தது.
                   அதேப்போல் இப்போதும், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர்களிடமிருந்து லஞ்சம் பெற்றுத் தான் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுவதற்கான வாய்ப்பை செல்வி  ஜெயலலிதாவின் இந்த முடிவு ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் உண்மை. அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலேயே இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, அன்றாடம் லஞ்சம் - ஊழல் என்கிறச் செய்திகளிலேயே ஊறிப்போன மக்களுக்கு அத்தகைய சந்தேகம்  எழுவதை தவிர்க்க முடியாது.
                 எனவே தமிழக அரசு எடுத்த இந்த முடிவை மறுபரிசீலனைச் செய்து,  தொடங்கப்பட்ட சமச்சீர்கல்வி முறையை நடைமுறைப்படுத்திக் கொண்டே அதில் உள்ளக் குறைகளை களைவதற்கு ஏற்பாடுகள் செய்யலாம் என்பது தான் தமிழக மக்களின் உடனடி வேண்டுகோளாகும்.

ஞாயிறு, 22 மே, 2011

உண்மையிலேயே பெண்கள் இவரைத்தான் வழிபடவேண்டும்..

அவர் தொடங்கிய பயணம் முடியவில்லை...
        "பிரிட்டிஷாரின் வரவு இந்தியருக்கு கடவுள் தந்த பரிசு” என்று மனம் திறந்து கூறிய வரை “நவீன இந்தியாவின் விடிவெள்ளி” என வரலாறு பதிவு செய்தது. வெளிப்பார்வைக்கு இது முரண்பாடு போல் தோன்றக்கூடும். ஆனால், அவரின் செயல்பாடுகள் மிகுந்த பொருள் மிக்கவை. அதனால் தான் “நாட்டைப் பிடித்துள்ள நோய் களுக்கு நிவாரணம் செய்யப் பிறந்த ஆயுர்வேத வைத்தியர்” எனவும் “இந்நாட்டு மாதர்களின் அபிவிருத்திக்கு பாடுபட்ட மகான்” எனவும் பாரதியார் புகழாரம் சூட்டினார். இந்த பெருமைக்குரியவர் ராஜாராம் மோகன்ராய் ஆவார்.

        இன்றைக்கு 240 ஆண்டுகளுக்கு முன்பு 1772ஆம் ஆண்டு மே 22ம் நாள் மேற்கு வங்க மாநிலம் பர்தமான் மாவட் டத்தில் ராதா நகர்கிராமத்தில் ராமா காந்த் ராய் - தாரணி தேவிக்கும் மகனாகப் பிறந்தவர்தான் ராம்மோகன் ராய். இவரது தந்தைக்கு மூன்று மனைவிகள். இவர் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே வங்காளி, பிரெஞ்ச் மொழிகளில் வல்லமைப் பெற்றார். 10 வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. குழந்தைப் பருவத்திலேயே மனைவியும் இறந்துவிட்டார்.

              இவருடைய அண்ணன் இறந்தபோது அவரது மனைவி கட்டாயமாக 
உடன்கட்டை ஏற்றப்படுவதை பார்த்துப் பதறினார். தடுக்கக்கோரி தந்தையிடம் மண்டியிட்டார். ஆனால், அன்றைய சமூக வழக்கம் என்றுக் கூறி இவர் கண்ணெதிரே அண்ணி உயிரோடு உடன் கட்டையில் எரிக்கப்பட்டதை கண்டு பதறினார். அது இவர் நெஞ்சில் ஆழமான வடுவை ஏற்படுத்தி யது. இதற்கு எதிராக இவரது  இளமனது கொதித்தது.

     இதன்பிறகு பாட்னாவில் உயர்கல்வி முடித்தார். வாரணாசியில் சமஸ்கிருத மொழியையும் வேத நூல்களையும் கற்றுத் தெளிந்தார். அதன்பிறகு இவர் இந்து மதத்தை சீர்திருத்த வேண்டியதன் அவ சியம் குறித்து வலுவாகப் பேசத் தொடங்கினார். மூடநம்பிக்கைகளை சாடினார். சதி எனும் உடன்கட்டை பழக்கத்தை, குழந்தைத் திருமணத்தை கடுமையாக எதிர்த்தார். பெண் விடுதலைக்கு உரக்கக் குரல் கொடுத்தார்.

      இதற்கிடையில் கிழக்கிந்திய கம்பெ னியில் பணிபுரியலானார். அந்த சந்தர்ப்பத்தில் ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொண்டார். அதன் மூலம் உலகம் முழுவதும் நடப்பதை அறிந்து கொண் டார். இந்தப் பின்னணியில் இவர் அரபி மற்றும் பெர்சிய மொழிகளில் எழுதிய, “ஒரே கடவுளின் பரிசு” என்ற நூல் பெரும் பரபரப்பை உருவாக்கியது. கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

          “சாதி வேறுபாடுகள், கணக்கற்ற அதன் உட்பிரிவுகள் அனைத்தும் மக்களி டையே தேசபக்த உணர்வு மலரத் தடை யாக உள்ளன. ஆகவே, மதத்தில் ஏதா வது மாறுதல் நிகழ்த்த வேண்டும். அது வும் அரசியல் சமூக நலன்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.” என ராஜாராம் மோகன்ராய் கருதினார். இதற்கு ஆங்கிலக் கல்வி அவசியம் என உணரலானார். அதனை வலியுறுத்தவும் தயங்கவில்லை. இன்றைய நவீனக் கல்விக்கு ஒருவகையில் அவர் அன்று நடைமுறை யில் வித்திட்டார். இந்தச் சூழலில்தான் பிரிட்டிஷாரின் வரவு கடவுள் தந்த பரிசு என்றார். இதுகுறித்து ஈஸ்வரதத் கூறும் போது “அவர் அவ்வாறு ஏன் கூறினா ரெனில் ராம்மோகன்ராயின் இளமை நாட்கள் இந்திய சரித்திரத்தில் புதுமை தொடங்காத இருண்ட நாட்களாகும். பழமைச் சமுதாயம் அழிந்து ஒழிய வேண்டிய நிலையிலும் புதிய சமுதாயம் மலரத் தொடங்காத நிலையிலும், நாடு இருந்தது. சமய சமுதாயத் துறைகளும் விவசாயமும் தொழிலும் ஒரு குழப்பச்சூழலில் இருந்தது.” பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப்போர் உருவாகாத காலம். காங்கிரஸ் கட்சி இவர் மரணத்திற்குப் பிறகுதான் உருவானது என்பதும், சிப்பாய் கலகம் என்கிற முதல் விடுதலைப் போரும் இவர் மரணத்திற்குப் பின்னரே என்கிற உண்மையையும் மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.

            இவர் தொடர்ந்து சமூக சீர்திருத்த கருத்துக்களை எழுதிவரலானார். இவருடைய ஆங்கில எழுத்து வன்மையை பாராட்டிய பென்தெம் என்கிற ஆங்கில அதிகாரி “உங்கள் புத்தகத்தில் ஆசிரியரின் பெயர் இந்துப் பெயராக இல்லாவிட்டால் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எழுதியதாகத்தான் நினைத்திருப்பேன்” என்று பாராட்டினார். கிருத்துவமதத்தை பரப்பும் நோக்குடன் கொல்கத்தா வந்த வித்யபாகிஷ் என்கிற கிருத்துவ அறிஞ ரோடு ஏற்பட்ட உறவு இவரது ஆன்மீக ஞானத்தை உரசிப்பார்க்க வாய்ப்பானது. இவர் பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தும், சிலை வழிபாடு மற்றும் சடங்கு களை எதிர்த்ததும், பெண்கல்விக்கு குரல் கொடுத்ததும் பலருக்கு இவர் மீது கோபத்தை உருவாக்கியது. இவரை கொல்லுவதற்குக்கூட பெருமுயற்சி எடுத்தனர்.

           வேதங்கள் ஒரே கடவுளைத்தான் கூறுகின்றன. மூடநம்பிக்கைகளையும் சடங்குகளையும், சாதியையும், பெண்ணடி மைத்தனத்தையும் அவை கூறவில்லை. இதனை வேதக் கல்வியின் மூலமாக உணர்ந்த ராஜாராம் மோகன்ராய் அதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல ‘வேதங்களின் சாரம்’ என்ற நூலை வங்க மொழியில் எழுதினார். இது ஒரு பகுதி மக்கள் விழிப்புணர்வு அடைய ஏது வானது. தாய்மொழிக் கல்வியை வலி யுறுத்தினார். அதே சமயம் ஆங்கிலக் கல்வி மூலமே உலக ஞானம் பெற முடி யும் என துணிந்துக் கூறினார். கல்லூரிகள் துவங்க அடித்தளம் அமைத்தார்.

          இவர் உருவாக்கிய பிரம்மசமாஜம் சமயங்களின் சபையாக இல்லாமல் சீர்திருத்த சபையாக இருந்தது. இவர் சாதிய வெறியை எதிர்த்தார். பெண்ணடி மைத்தனத்தை சாடினார். கணவன் இறந்தவுடன் மனைவியை உடன் எரிப்பது கொலையே, இதற்கும் மத நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை என்றார். இந்த கொடிய சதி பழக்கத்திற்கு எதிராக ஆவே சமிக்க அறிவுப்பூர்வமான கருத்துப்பிரச்சாரத்தை மேற்கொண்டார். கிருத்துவத்தை பயின்றார். இஸ்லாமை பயின்றார். ஆனால், ஒரே கடவுள் என்ற குறிக்கோ ளைப் பற்றி நின்றார். ஏராளமான புத்தகங் கள் எழுதினார். பல்வேறு பத்திரிகை களுக்கு ஆசிரியராக செயல்பட்டார். எதைப் பேசினாலும் எழுதினாலும் அது சமூக சீர்திருத்தம் சார்ந்ததாகவே இருந்தது.

             இவருடைய கடும் முயற்சியின் பலனாக 1829ம் ஆண்டு டிசம்பர் 4ம் நாள் ‘சதி’ எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கம் வங்க மாநிலத்தில் தடைசெய்யப்பட்டது. அதை எதிர்த்து பழமைவாதிகள் லண்டனில் உள்ள ப்ரிவ்யூ கவுன்சில் எனப்படுகிற உயர்மன்றத்தை அணுகி னர். ராஜாராம் மோகன்ராய் லண்டனில் வாதாடச் சென்றார். 1832ம் ஆண்டு லண்டன் ப்ரிவ்யூ கவுன்சிலும் சதியை தடை செய்தது நியாயமே என்று தீர்ப் பளித்தது. அந்தச் சமயத்திலும் இந்தியாவில் ஜெய்பூர் உட்பட பிற இடங்களில் சதி அமலில் இருந்தது. 1846ல்தான் இந்தியா முழுவதும் சதி தடை செய்யப்பட்டது. இதற்கிடையில் 1833ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி லண்டனில் அவர் காலமானார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவருடைய சிலை அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கம்பீரமாய் எழுப் பப்பட்டது. (அதனை நீங்கள் படத்தில் காணலாம்).

ராஜாராம் மோகன்ராய் கனவு கண்ட பெண் விடுதலையின் சில கூறுகள் 
சட்டப்பூர்வமாக விடுதலை இந்தியாவில் மெல்ல மெல்ல கிடைத்தது. ஆயினும் முழுமையாகவில்லை. சட்டமன்றங்க ளில், நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு இன்னும் பேச்சோடு நிற்கிறது. பெண் விடுதலையில் நாம் போக வேண்டியது இன்னும் நெடும்தூரம். ராஜாராம் மோகன் ராய் 250வது பிறந்தநாளைக் காண இன்னும் பத்தாண்டுகளே உள்ளன. இந்தப் பத்தாண்டுகளையாவது பெண் விடுதலைக்காக உண்மை- யாக அர்ப்பணித்தால்தான் அது ராஜா ராம்மோகன் ராய்க்கு நாம் செலுத்துகிற உண்மையான அஞ்சலியாக அமையும்..
நன்றி : தீக்கதிர்  

சனி, 21 மே, 2011

இளைஞர்களை காவுவாங்கும் பன்னாட்டு நிறுவன பணிக்கலாச்சாரம் !


எழுதுகிறேன்...




மகனின் பள்ளிக்கட்டணம் தாயின் உயிரை பலி வாங்கியது

              இந்தியாவில் என்றைக்கு கல்வி என்பது தனியார் கைகளுக்குச் சென்று வணிகமயம் ஆனதோ, குறிப்பாக தமிழகத்தில் அன்றையிலிருந்து இன்று வரை கல்வி என்பது ஏழைமக்களுக்கு எட்டாத உயரத்திற்கு சென்றுவிட்டது. இன்றைக்கு கல்வி என்பது தனியார் கல்வி நிறுவனங்களில் விற்கக்கூடிய கடைச்சரக்காக மாறிவிட்டது. ஆயிரக்கணக்கில் - லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி வாங்கவேண்டி இருக்கிறது. ஆங்கில  மொழிக்கல்வி, நுனிநாக்கில் ஆங்கில உரையாடல், கணினி முறைக்கல்வி இப்படி பலவகையான கவர்ச்சிகளை காட்டித்தான் பெற்றோர்களை ஈர்க்கிறார்கள். கல்விக் கட்டணக்  கொள்ளை  என்பது நிறையப் பெற்றோர்களின் கழுத்தை நெரித்து விழி பிதுங்கச் செய்கிறது என்பது தான் நம் கண் எதிரே நடக்கும் உண்மையாகும்.
                 சென்ற வாரம், கோவையில் தன் மகனின் பள்ளிக் கட்டணமே ஒரு தாயின் உயிரை பலி வாங்கி இருக்கிறது என்பது ஓர் அதிர்ச்சியான செய்தி. கோவை மசக்காளிபாளையம் பகுதியில் தன் மகன் ஒன்றாம் வகுப்பு படிக்க பணம் கட்ட முடியவில்லையே என்று மனம் உடைந்த ஒரு தாய் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது தான் அந்த அதிர்ச்சியானச் செய்தி.  காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு வசித்து வந்த  பஞ்சு குடோனில் சுமைதூக்கும் தொழிலாளியான தர்மராஜ் மற்றும்  கட்டடத்தொழிலாளியான இவரது மனைவி  சங்கீதா தர்மராஜ் இருவரும் தங்கள் மகன் தர்ஷன் என்ற ஐந்து வயது குழந்தையை உப்பிளிபாளையத்தில் உள்ள பெர்க்ஸ் பள்ளியில் பணம் கட்டி படிக்கவைத்திருக்கின்றனர். அவர்கள் மகன் எல். கே. ஜி., - யு. கே. ஜி  படிக்கும் போதே இவர்களின் வருமானத்தின்  பெரும் பகுதியை பள்ளிக்கு கட்டணம் செலுத்துவதிலேயே  செலவழித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு அவர்கள் மகனை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கு ரூ.12 ஆயிரம் கட்டணமாக பள்ளி நிர்வாகம் கேட்டிருக்கிறது. . அதில் ரூ.5 ஆயிரத்தை கஷ்டப்பட்டு பள்ளியில் கட்டியிருக்கிறார்கள். மீதிப் பணத்தை கட்டுவதற்கு வழித் தெரியாமல் தான் தாய் சங்கீதா இந்த முடிவை தேடியிருக்கிறார். இது அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது, காவல் துறையினரிடம் சங்கீதா அளித்த மரணவாக்குமூலம் ஆகும்.
               தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க - தனியார்ப் பள்ளி கட்டணத்தை வரைமுறைப் படுத்த ஏற்படுத்தப் பட்ட நீதிபதி கோவிந்தராஜன் குழு அளித்த கட்டண நிர்ணய பரிந்துரையின் படி உப்பிலிபாளையம்   பெர்க்ஸ் பள்ளிக்கு ஒன்றாம் வகுப்புக்கு ரூ.4190 என்றே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பள்ளியோ நிர்ணயம் செய்த தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக கேட்டிருக்கிறது என்பது கண்டிக்கத்தக்கது. நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயம் செய்தக் கட்டணத்தை தான் அந்தந்தப் பள்ளிகளும் கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று சென்ற தி மு க அரசும் கண்டிப்புடன் நடந்துகொள்ளவில்லை.  
                 புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் செல்வி ஜெயலலிதா அரசும், சென்ற ஆட்சியில் உருவான புதிய சட்டமன்றக் கட்டிடத்தையும் சமச்சீர்க் கல்விமுறையையும் தூக்கி எறிந்தது போல்  நீதிபதி கோவிந்தராஜன் குழுப் பரிந்துரையையும் தூக்கி எறிந்துவிடாமல் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவேண்டும்.அப்போது தான் பெற்றோர்களால்  நிம்மதியாய் வாழமுடியும்.

துப்புக்கெட்ட சிதம்பரம் பதவி விலகவேண்டும் !

                  இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும் ஐம்பது தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார்கள். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அண்மையில் ஐம்பது பேர் கொண்ட தீவிரவாதிகளின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியிருந்தார். 
                  இதில் என்ன வெட்கக்கேடான விஷயம் இருக்கிறது என்றால்,  இந்தியாவிற்கு அனுப்பிவைக்கும்படி கேட்ட ஐம்பது பயங்கரவாதிகளில் இருவர் ஏற்கனவே இந்தியாவில் தான் இருக்கின்றனர் என்பதும் இருவரில் ஒருவர் மும்பை சிறையில் இருப்பதும், மற்றொருவர் மும்பையில் தங்கியிருப்பதும் இந்திய உள்துறை அமைச்சருக்கே தெரியவில்லை என்பது தான் வெட்ககேடான விஷயமாக இருக்கிறது. இது தெரிந்த பிறகு, துப்புகெட்ட சிதம்பரம் தவறு தன் மீது இருக்க, பழியை மத்திய புலனாய்வுக் கழகமான     சி.பி. ஐ. மீதே போட்டதுமட்டுமில்லாமல், அந்த பட்டியலை தயாரித்த சி பி ஐ அதிகாரிகளில் சிலரை பதவிநீக்கம் செய்தும், சிலரை பணி மாற்றம் செய்தும் இருப்பதென்பது, சிதம்பரத்தின் செய்யும் வெட்கக்கேடான செயல்களுக்கு மற்றுமொரு உதாரணம். 
                 நடைபெற்ற தவறுகளில் ப. சிதம்பரத்திற்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதிகாரிகள் மீது பழியைப்  போட்டு இவர் தப்பித்துக்கொள்ள முடியாது. அண்டை நாடு சம்பந்தப்பட்ட அரசு  விவகாரங்களில் - இரு நாட்டு அரசுகளின்  பரிமாற்றங்களில் விழிப்போடும், எச்சரிக்கையோடும்  வழிமுறைகளை கடைபிடிக்காத உள்துறை அமைச்சரின் அலட்சிய போக்கையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் துப்புக்கெட்ட சிதம்பரம் நியாயமாக பதவி விலகி இருக்கவேண்டும். இதை தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வெள்ளி, 20 மே, 2011

சட்டம் தன் கடமையை செய்கிறது !

                 அரசியலில் நேர்மையும் பொது வாழ்க்கையில் தூய்மையும் இல்லாத பல இந்தியத் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். தன்னுடைய நா வன்மையாலும், தமிழ் நடையாலும், கைதேர்ந்த எழுத்துக்களாலும் தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு ஒரு மாற்று இல்லாத தலைவராக தொண்டர்கள் மத்தியிலும் மக்களின் மத்தியிலும் இதுவரை உலாவந்து கொண்டிருப்பவர். அடிக்கடி தன்னை ஒரு யோக்கியனைப்போல் வெளியுலகத்திற்குக் காட்டிக்கொள்வார். முதிர்ந்த வயது பெரியவர் - இந்திய நாட்டின் மூத்த தலைவர் என்ற போர்வையில் தான்தோன்றித்தனமான வேலைகளை செய்து கொண்டும், அவரையும் அவரது தான்தோன்றித்தனமான வேலைகளையும்  போற்றிப்பாடுவதற்கு வைரமுத்து, வாலி, விஜய் உள்ளிட்டக்  கவிஞர்கள், அவரை குஜால் படுத்த நடனம் ஆடுவதற்கு நமிதா, குஷ்பூ, ரம்பா  இன்னும் பல நடிகைகள், புகழ்ந்து பேசி சந்தொஷப்படுத்துவதற்கு ரஜினி, கமல், பிரபு என்ற நடிகர்கள் பட்டாளம் - இப்படியாக கலைநிகழ்ச்சிகளையும் பாராட்டுவிழாக்களையும் நடத்தச் செய்து ஒரு மகாராஜாவைப் போல் வலம் வந்துகொண்டிருப்பவர்.. 
                  இதையெல்லாம் தொலைக்காட்சிகளில் காட்டி மக்களையும் புத்திசாலித்தனமாகத்  திசைதிருப்பி விடுவார்.  இவர் செய்யும் எந்தத் தில்லுமுல்லுகளும் மக்களுக்குத் தெரியாமல் இருக்க வழக்கமாக செய்வது போல் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விடலாம் என்று நினைத்து தான் உச்சக்கட்டமாக 2 ஜி - ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டு வகையாக மாட்டிக்கொண்டார். அவரது இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு தப்புகளை மாட்டிக்கொள்ளாமல் செய்து தப்பித்துக்கொள்ளும் திறமைசாலியான கருணாநிதி, உச்சக்கட்டமாக அலைக்கற்றை ஊழலில் தான் மட்டுமே  சிக்கிக்கொள்ளாமல்  தன் மனைவி தயாளு அம்மாள், துணைவி ராசாத்தி அம்மாள், செல்ல மகள் கனிமொழி, தன்னை நம்பி அமைச்சர் பொறுப்பேற்ற  ஆ. ராசா, தன் சொந்த தொலைக்காட்சியின்  இயக்குனர் சரத்குமார் என்ற படித்த இளைஞர் என அனைவரையும் சிக்கவைத்தது தான் அவரது திறமைக்கு சவாலாய் அமைந்து விட்டது.   
                    பல நாள் திருடன் ஒருநாள் சிறையில்....!     தவறுகள் செய்யும் நம் நாட்டுத் தலைவர்களுக்கு இது ஒரு பாடம் ஆகும்.

வியாழன், 19 மே, 2011

இடதுசாரிகள் இன்றி பயணம் நிறைவுபெறாது! -சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,

                               சட்டமன்றத் தேர்தல்களில் இடதுசாரி களின் தோல்வியினை சிலர் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.அவர்களது குதூகலத்தின் மீது பெட்ரோல் விலை உயர்வு பேரிடியாக இறங்கியிருக்கிறது. இடது சாரிகளின் தோல்வியினைக் கொண்டாடுகிற வேளையில், வலுவான இடதுசாரி அரசியலின் தேவையினை உணர்த்துகிற முரண்பட்ட சூழ்நிலையல்லவா இது? தேசத்தின் தார்மீக மனச்சாட்சியின் காவலர்களாக மட்டுமல்லாது, சாமானிய மக்களின் மீது சுமத்தப்படும் பொருளாதாரச் சுமையினை எதிர்த்துப் போராடும் களப்போராளிகளாகவும் செயலாற்றும் இடதுசாரிகளின் தேவையைத் தான் இந்த முரண்பட்ட சூழ்நிலை உணர்த் தியிருக்கிறது.

தேர்தல்களில் சில கட்சிகள் வெற்றிபெறு வதும், சில தோல்வியடைவதும் ஜனநாயகத் தில் சகஜமானதேயாகும். ஆனால் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆட்சியிலிருந்ததால்தான் அவர்களது தோல்வி இன்று பெருமளவு பேசப்படுகிறது. ஏழுமுறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு முதல் முறையாக தோல்வி என்பதால்தான் இது பரபரப்புச் செய்தியாக மாறியிருக்கிறது.

கேரளாவில்..
.

         கேரளாவில், கடந்த நாற்பது ஆண்டுகால மாக மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும்போதெல்லாம் ஆட்சி மாற்றமும் தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால், இம் முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெற்றிருக்கும் பெரும்பான்மை, அண்மைக்கால வரலாற்றில் மிகக் குறுகிய பெரும்பான்மை ஆகும். 10 கட்சிகளின் கூட்டணியான ஐ.ஜ.முன்னணி அரசு பெற்றிருக்கும் 2 சீட் மட்டுமேயான பெரும்பான்மை, இயல்பாகவே ஒரு உள்ளார்ந்த நிலையற்ற தன்மையினை உருவாக்கியிருக்கிறது. மலையைக் கெல்லி எலியைப் பிடிப் பது என்பார்களே அத்தகைய வெற்றிதான் போலும் இது. ஆட்சிக்கெதிரான உணர்வுகள் எதுவுமில்லாத நிலையில் இடதுஜனநாயகமுன்னணி 45 சதவீத வாக்குகளைப் பெற்றி ருக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணி பெற் றிருக்கும் சதவீதத்துடன் ஒப்பிடும்போது, இடைவெளி 1 சதவீதத்திற்கும் குறைவானதே- யாகும். வாக்குகளின் எண்ணிக்கையில் கூறப்போனால், வெற்றி பெற்றிருக்கும் ஐ.ஜ. முன்னணியை விட 1.55 லட்சம் வாக்குகள் மட்டுமே குறைவு.

மேற்கு வங்கத்தில்...

மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி 41 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இடது முன்னணி இதுவரை பெற்றிருப்பதில் இதுவே மிகக்குறைந்த சதவீதம். வேட்பாளர் வெற்றிகளின் அடிப்படையிலான தேர்தல் முறை யின் காரணமாக, பெற்றிருக்கும் வாக்குகள் சதவீதத்திற்கும் இணையாக சட்டமன்ற இடங்கள் கிடைப்பது சாத்தியமல்ல. இன்னும் கூட சொல்லப்போனால், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இடது முன்னணிக்கு வாக்களித்தவர்களைவிட, இந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் கூடுதலாக 11 லட்சம் பேர் வாக்களித்திருக்கின்றனர்.

அதேபோன்று 2006 சட்டமன்றத் தேர்த லில் இடதுமுன்னணி பெற்ற வாக்குகள் 1.98 கோடி. இந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 1.96 கோடி. அதாவது 2006 தேர்தலில் பெற்றதைவிட இந்த தேர்தலில் பெற்றது 2 லட்சம் வாக்குகள் மட்டுமே குறைவு. ஆனால் 2006ல் பெற்ற இடங்கள் 294க்கு 235. இப்போது கிடைத்திருப்பது 294க்கு 61 இடங்கள் மட்டுமே.

இந்த முரண்பாட்டிற்கு முக்கியக்காரணம் 2006ல் எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபட்டி ருந்தன. அது இடதுமுன்னணிக்கு பயன்பட் டது. ஆனால் 2011ல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாக அமைந்தது. அதாவது, 2006 தேர்தலுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய அதே எண்ணிக்கை வாக்குகளை இம்முறையும் பெற்றிருப்பினும், பெற்ற இடங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி, 2009க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் 48 லட்சம் பேர் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர். இதில் 37 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வங்கத்தில் இடதுமுன்னணி ஆட்சி அமைந்த பின்னர் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 48 லட்சம் புதிய வாக்காளர்களில் 10 லட்சம் பேருக்கு மேல் இடதுமுன்னணிக்கும், 34 லட்சம் பேருக்கு மேல் ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கின்றனர் எனக்கொள்ளலாம். இந்தத் தகவல்கள் தேர்தல் முடிவுகளை பெருமளவு விளக்குவதாக உள்ளன.

41 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கும் இடதுமுன்னணியின் வாக்காளர் பலம், பல மாநிலங்களிலுள்ள ஆளும் கட்சிகளின் வாக் காளர் பலத்தைவிட அதிகம். ஆந்திரப்பிரதே சம், மகாராஷ்டிரா, ஏன் இன்று எடுத்துக் காட்டாக பேசப்படும் நிதிஷ் குமாரின் பீகார் உள்ளிட்ட அனைத்து மாநில ஆளும் கட்சி களின் வாக்காளர் பலமும், மேற்குவங்க இடது முன்னணியின் வாக்காளர் பலத்தைவிடக் குறைவானதே ஆகும்.

இரத்தத்திலேயே இடதுசாரி எதிர்ப்புத் தன்மை கொண்டவர்களை விட்டுத் தள்ளுங் கள். இடதுசாரிகளின் எதிர்காலம் குறித்து உண்மையிலேயே அக்கறையுள்ளவர்களின் கவலை புரிந்துகொள்ளக்கூடியதே. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்த பின் வந்த 1967 தேர்தல்களில், மக்களவையில் பெற்ற இடங்கள் 19; இன்று நாம் பெற்றிருப்பது 16 இடங்கள். அதே போன்று கேரளம் மற்றும் மேற்குவங்கத்தில் முறையே 52 மற்றும் 43 சட்டமன்ற இடங்கள்; இன்று நாம் பெற்றிருப் பது 45 மற்றும் 40 இடங்கள்.

எது அளவுகோல்?


             ஆனால் நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் இடதுசாரிகள் செலுத்திய செல்வாக்கினை, தேர்தல் வெற்றிகளுக்கு உட்படுத்தியோ அல்லது அதை அளவுகோலாக வைத்தோ மட்டும் மதிப்பிட முடியாது. தேச விடுதலைப் போராட்ட காலத்தில் நாட்டின் எதிர்காலம் குறித்து மூன்று காட்சிகள் முன் நின்றன. ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா என்பது காங்கிரசின் நோக்கமாக இருந்தது. அத்தகைய இலக்கோடு சேர்த்து, அரசியல் 
சுதந்திரத்தினை பொருளாதார சுதந்திரமாகவும் மாற்ற வேண்டும் என்பது இடதுசாரிகளின் இலக் காக இருந்தது. இத்தகைய இரண்டு இலக்கு களும் இடதுசாரிகளுக்கு இருந்ததால்தான், இந்து மதவெறியும் இஸ்லாமிய மதவெறியும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கக் கூடி யவை என்ற மூன்றாவது காட்சியினையும் அவர்களால் எளிதில் காணமுடிந்தது. நவீன இந்தியா என நாம் அறிந்திருக்கும் இன்றைய இந்தியாவின் உருவாக்கத்திலும், மக்களது மன உணர்வுகளைச் செம்மைப்படுத்துவதி லும் இடதுசாரிகளின் பங்கு மகத்தானது. இவையெல்லாம் அவர்களின் தேர்தல் வெற்றி- தோல்விகளை தாண்டி நிற்பவையாகும்.

இரண்டாவது- நிலப்பிரபுத்துவக் கொடு மைக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய தீரமிக்க பல்வேறு போராட்டங்கள் குறித்த அம் சங்கள். ஜமீன்தாரி ஒழிப்பு உள்ளிட்ட நில உடைமை அமைப்பினைத் தகர்க்கும் ஆலோ சனைகளை நாட்டின் மையமான விவாதத் திற்கு ஆளாக்கிய பெருமை கம்யூனிஸ்ட்டு களையே சாரும். இதன் விளைவாக கிராமப் புறங்களிலிருந்த பெருந்திரள் மக்கள், இந்தியா வின் ஜனநாயகப் பெரு நீரோட்டத்திற்குள் ஈர்க் கப்பட்டனர் என்பதெல்லாம் வரலாறு.

மூன்றாவது- சுதந்திர இந்தியாவில் மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப் பிற்கான போராட்டங்கள். விசால ஆந்திரா, சம் யுக்த மகாராஷ்டிரா, ஐக்கிய கேரளம் ஆகிய வற்றில் இடதுசாரிகள் ஆற்றிய பங்கு, இந்திய அரசியல் வரைபடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கேரளாவிலும், மேற்குவங்கத்திலும் நிலச்சீர்திருத்தங்களின் அமலாக்கத்திற்கான போராட்டங்கள். மறுபுறத்தில் ஜனநாய கத்தினை அடிமட்டம் வரை கொண்டு செல் லும் பஞ்சாயத் ராஜ் திட்டத்திற்கான 
அரசி யல் சாசன திருத்தங்களுக்கு வித்திட்டதிலும் இடதுசாரிகளுக்கு பெரும் பங்கு உண்டு. அனைத்தையும் இழந்து வாழ்க்கையில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் பலரை ஜனநாயகப் பெருநீரோட்டத்திற்குள் ஈர்ப்பதற்கு இவையெல்லாம் உதவின.

பயணம் தொடரும்!


        நவீன - தாராளமயக் கொள்கைகள் இன்று இரண்டு இந்தியாக்களை உருவாக்கி வருகின்றன. இந்திய நாட்டினையும், இந்திய மக்களின் வாழ்வாதாரங்களையும் சூறையாடுகின்ற மெகா ஊழல்கள் இன்று பெருகிவருகின்றன. இதில் எந்தத் தொடர்புமில்லாமல் நேர்மையுடன் நெஞ்சு நிமிர்த்தி நிற்பவர்கள் இடதுசாரிகள். அவர்களது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் சிற்சில தவறுகள் நடந்திருக்கக்கூடும்.

        தவறுகள் அடையாளம் காணப்படவேண்டும்; அவை களையப்பட வேண்டும்; அவை திரும்ப நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதுவே இடதுசாரிகளின் தொடர்ந்த நிலைப் பாடு. இது ஒரு கடுமையான போராட்டம். இதில் ஏற்கெனவே கடந்த 48 மணி நேரத் தில் மேற்குவங்கத்தில் இரண்டு உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்.

   ஒரு உண்மையான நாகரீகமான சமுதாயத்தினை உருவாக்குவதற்கும், மேம்பட்ட இந்தியாவினை படைப்பதற்குமான நீண்ட நெடிய பயணம் தொடர்கிறது. இடதுசாரி களைப் புறந்தள்ளிவிட்டு இந்தப் பயணத்தினை எவராலும் நிறைவு செய்ய இயலாது என்பது உறுதி.

தமிழில் :  தோழர். இ.எம். ஜோசப்
நன்றி : தீக்கதிர் 

புதன், 18 மே, 2011

மம்தாவின் வளர்ச்சியும் வெற்றியும் : நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது

                            
               இந்திய விடுதலைக்கு முன் சுதந்திரப்போராட்டக் காலத்தில் தனக்கு இணையான போராட்ட இயக்கத்தையோ அல்லது போராட்டத் தலைவர்களையோ பொறுத்துக்கொள்ள முடியாத ஏற்றுக்கொள்ளமுடியாத காங்கிரஸ் கட்சி -  இந்திய விடுதலைக்கு தான் மட்டுமே ரொம்பக் கிழித்ததாகக்  காட்டிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, சுதந்திர இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றிய நாளிலிருந்து, எந்த  மாநிலத்திலாவது  தனக்கு ஆதரவு குறைகிறது என்றாலோ அல்லது  எந்த மாநிலத்திலாவது கம்யூனிஸ்ட் இயக்கம் வளருகிறது என்றாலோ அந்த மாநிலத்தில் பிரிவினைவாதத்தையும், தீவிரவாதத்தையும் உருவாக்கி, தேவையான நிதி மற்றும் ஆயுதங்களை அளித்து,  தீனிப் போட்டு வளர்த்து அந்த மாநிலத்தில் குழப்பத்தை உண்டு பண்ணும் வேலையைத் தான் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் ஆளும் மத்திய அரசும்  இதுவரையில் செய்துவந்திருக்கின்றன. ஜம்மு -காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், பீஹார், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் இப்படியாக காங்கிரஸ் கட்சியின் சாதனைப் பட்டியல் நீண்டுகொண்டேப்போகும். பக்கத்து நாடான  இலங்கையில் கூட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழர்களின் அமைப்புகளை உருவாக்கி, அதற்கு நிதியையும் ஆயுதத்தையும் அளித்து பிரிவினையையும் தீவிரவாதத்தையும் கிளப்பி விட்டு இன்றைக்கு அமைதியை குலைக்கச் செய்ததில் காங்கிரசுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. தன சுயநலத்திற்காக காங்கிரஸ் கட்சி  எதையும் செய்யத் துணியும் என்பது வரலாறு.
                அதேப்போல், மேற்குவங்கத்தில் மக்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சியை தூக்கிஎறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி அரசை  ஆட்சியில் அமர்த்திய  நாளிலிருந்து அங்கு ஏதாவது குழப்பங்களை உண்டுபண்ணி மீண்டும் தான் ஆட்சிக்கு வர காங்கிரஸ் கட்சி  துடித்துக் கொண்டே இருந்தது. அதற்கு பலவேறு அந்நிய பிரிவினைவாத சக்திகளின் உதவியோடும் , உள்நாட்டு மதவாத சக்திகளின் - பிரிவினைவாத சக்திகளின் உதவியோடும் ஆரம்பக் காலத்திலிருந்தே பல்வேறு குழப்பங்களை மேற்குவங்கத்தில் செய்துவந்திருக்கிறார்கள். புருலியாவில் விமானத்திலிருந்து  ஆயுதங்களை பொழிந்ததே காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆளும் மததிய அரசின் நாசகரக் கொள்கைக்கு உதாரணமாகும். 
 
                           அதன் தொடர்ச்சியாகத்தான் காங்கிரஸ் கட்சியின் வாரிசான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் மம்தா பானர்ஜியும் இறுதியாக மாவோயிஸ்ட்டுகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் தீவிரவாத - பிரிவினைவாத இயக்கத்தோடு கைகோர்த்தனர். ஆயுதங்களை ஏந்திய மாவோயிஸ்ட்டுகள் அப்பாவி மக்களை மிரட்டி பணத்தை பிடுங்கி நிதி சேர்ப்பதும், அண்டை நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதும், தனக்கு அடங்கி நடக்காத அப்பாவி மக்களை சுட்டுக்கொல்வதும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதும், அரசியல் பணிகளைச் செய்யும் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களை சுட்டுக்கொல்வதும் போன்ற பல்வேறு நாசகார வேலைகளையும் குழப்பங்களையுமே மேற்குவங்கத்தில் மம்தாவின் ஆதரவுடனும், துணையுடனும் மாவோயிஸ்ட்டுகள் செய்துவந்தனர். அதுமட்டுமல்ல, கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலிலும் வாக்காளர்களை மிரட்டியே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போட செய்திருக்கின்றனர். இப்படித் தான் முப்பத்துநான்கு ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி செய்த இடது முன்னணி அரசை வீழ்த்தி  வெற்றி பெற்று  இன்றைக்கு மம்தா பானர்ஜி ஆட்சிக்குவந்திருக்கிரர்கள் என்பது தான் உண்மை. எனவே மம்தாவிற்குப்  பின்னால் இருப்பவர்கள் - திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்குப் பின்னால் இருப்பவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்கிற தீவிரவாத அமைப்பு தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. தீவிரவாத அமைப்போடு கைகோர்த்து தான் மம்தா பானர்ஜி ஆட்சியில் அமர்கிறார் என்பதையும்  அவர்கள் துணையோடும் வழிகாட்டுதலோடும் தான் ஆட்சி நடத்துவார் என்பதையும் மறுக்கமுடியாது.    
                 இப்போதே தேர்தல் முடிவுக்குப் பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்   மாவோயிஸ்ட்கள் துணையுடன் பல்வேறு அட்டூழியங்களையும் அராஜகங்களையும் வன்முறைகளையும்  கட்டவிழ்த்து விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன.
மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டனர். பலத் தோழர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். பெண்கள் - குழந்தைகளைக் கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் துப்பாக்கி முனையில் அவர்களது வீட்டிலிருந்து விரட்டப்படுகின்றனர். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப் படுகின்றனர்.
                    ஜம்மு-காஷ்மீர், ஆந்திர பிரதேசம், பீகார், சத்தீஷ்கர், ஜார்கண்ட், அஸ்ஸாம்  போன்ற மாநிலங்களில் பிரிவினைவாதிகள் - தீவிரவாதிகளின் போராட்டங்களை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வுகண்டு அந்த மாநிலங்களில் அமைதியை ஏற்படுத்த துப்பில்லாத மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப்பின் நடைபெற்றுவரும் வன்முறைகளைக் கண்டு கவலைப்படுகிறார். இடது முன்னணி ஆட்சியிலிருந்த போதே மம்தா - மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை வெறியாட்டங்களை கண்டுகொள்ளாமல் இடது முன்னணி அரசையே குறைகூறி வந்ததுமில்லாமல், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அரசின் மீதே புழுதியை வீசியவர் தான் இந்த ப. சிதம்பரம் என்பதை மறந்துவிடக்கூடாது.
                  இப்படியாக, மேற்கு வங்கத்தில் வளர்ந்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் - மாவோயிஸ்ட்டுகள் வன்முறைக் கலாச்சாரப்போக்கு என்பதும், மத்திய அரசாங்கம் அதை கண்டுகொள்ளாமல் வளர்த்து வருவதும் எதிர்காலத்தில் மேற்கு வங்கத்திற்கு மட்டுமல்ல நாட்டின் பாதுகாப்பிற்கே பேராபத்தாக முடியும் என்பதை மனதில் வைத்து மத்திய அரசு செயல் படவேண்டும்.
                                                     

செவ்வாய், 17 மே, 2011

தமிழக சட்டமன்றத்தில் 20 இடதுசாரி எம்.எல்.ஏ -க்கள் - பெருமையாக இருக்கிறது.

              சமீப சட்டமன்றங்களில் இல்லாத அளவிற்கு இம்முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில்  இருபது இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்த தமிழ்க் மக்களை நெஞ்சார பாராட்டவேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பத்து சட்டமன்ற உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்பது பேரும், பார்வர்ட்  ப்ளாக் கட்சியின் சார்பில் ஒருவரும் சட்டமன்றத்திற்கு செல்கிறார்கள். 
                 சட்டமன்றமும் பாராளுமன்றமும் இடதுசாரிகளுக்கு பதவியையும் சுகபோகத்தையும் அனுபவிக்கும் அரண்மனை அல்ல.   சட்டமன்றமோ பாராளுமன்றமோ இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் அவைகளும் மக்களுக்காகப் போராடும் போராட்டக்களம் தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்து உறுப்பினர்கள் உட்பட்ட இருபது இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களின் சட்டமன்ற மக்கள் பணி சிறப்படைய , வெற்றியடைய "ஆயுத எழுத்து" வலைப்பூ நெஞ்சார வாழ்த்துகிறது.
 

தேர்தல் முடிவு : இடதுசாரிகளின் ஆதரவு தளம் சரிந்துவிடவில்லை

               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு          கூட்டம் புதுதில்லியில் மே 16ம் தேதி திங் களன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேர்தல் முடிவுகள் குறித்து:            

              வரலாற்றுச் சாதனையாக 34 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் இடது முன்னணி ஆட்சி செய்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் பெரும்           தோல்வியைச் சந்தித்துள்ளது. தேர்தல் முடிவு குறித்து விரிவான ஆய்வு செய்வதன் மூலம் பொருத்தமான முடிவுக்கு வருவது என்றும் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து களைவது என்றும் கட்சியின் அரசியல் தலைமைக் குழு முடிவு செய்துள்ளது.
            30 ஆண்டு கால ஆட்சியில் இடதுமுன்னணி அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இருந்தபோதும் அரசியல் ரீதியாகவும் அரசு நிர்வாக ரீதியாகவும் கட்சி அமைப்பு ரீதியாகவும் சில குறைபாடுகள் இருந்துள்ளன. மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் என்ற மன நிலை உருவாகியதற்கான சூழல் குறித்து முறையான மதிப்பீடு செய்யப்படும். கட்சி இதுகுறித்து கவனமாக பரிசீலனை செய்து, மக்களிடமிருந்து தனிமைப்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதை சரி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். 
            தேர்தல் முடிவால் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுமுன்னணியின் தளம் சரிந்துவிட்டது என்று எழுதுபவர்கள் மிகப்பெரிய தவறு செய்கிறார்கள் என்பதோடு மட்டுமின்றி இந்த மதிப்பீடு தவறு என்று நிரூபிக்கப்படும். தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டபோதும், இடதுமுன்னணிக்கு ஆதரவாக         96 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 41 சதவீதவாக்குகளை இடதுமுன்னணி பெற்றுள்ளது. ஆதரவுத் தளத்தை விஸ்தரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுமுன்னணியும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றும். சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உழைக்கும் மக்களுக்கான போராட்டத்தையும், மக்கள் நலன் காப்பதற்கான போராட்டத்தையும் கட்சி மற்றும் இடதுமுன்னணி உறுதியுடன் நடத்தும்.

கேரளம் :

             கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி மூன்று இடங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இடது ஜனநாயக முன்னணி அரசின் பணிகளுக்கு மக்கள் பரவலான அங்கீகாரத்தை அளித்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவு உணர்த்துகிறது. இடது ஜனநாயக முன்னணிக்கு 45.13 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது ஐக்கிய ஜன நாயக முன்னணிக்கு கிடைத்த வாக்குகளை விட 0.89 சதவீதம் மட்டுமே குறைவாகும். மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை பாதுகாக்கவும் உழைக்கும் மக்களின் நலன்களை முன்னெடுத்துச்செல்லவும் இடதுஜனநாயக முன்னணி இடையறாது பணியாற்றும்.

                மேற்குவங்கத்தில் இடதுமுன்னணிக்கு ஆதரவாகவும் கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணிக்கு ஆதரவாகவும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணி ஊழியர்களுக்கு அரசியல் தலைமைக்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

நன்றி :தீக்கதிர்

தமிழக முதல்வரே..! மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்..

                       அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தலைவர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நேற்று மே 16 அன்று தமிழகத்தின் பதினேழாவது முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரையும் அவரது அமைச்சர் பெருமக்களையும் "ஆயுத எழுத்து" வலைப்பூ நெஞ்சார வாழ்த்துகிறது.. பாராட்டுகிறது.. 
              நேற்றுவரை ஆளுங்கட்சியாயிருந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் மிகவும் சிரமப்பட்டே முப்பத்தொரு இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ஆனால் அதிமுக கூட்டணி தமிழக மக்களின் இமாலய நம்பிக்கையோடு பெருவாரியான வாக்குகளைப்பெற்று 203 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது என்பது எதை காட்டுகிறது என்றால் மக்களுக்கு சென்ற ஆட்சியின் மீதுள்ள கோபத்தையும் அதிமுக மீதுள்ள நம்பிக்கையையும் காட்டுகிறது. இதை முதல்வர் ஜெயலலிதா சரியாக புரிந்துகொள்ளவேண்டும். மத்திய மாநில அரசுகளின் மக்கள்விரோதக் கொள்கைகளினால் தமிழக மக்கள் திக்கு முக்காடிப் போயிருக்கிறார்கள். அவர்களின் கண்களிலும், நெஞ்சங்களிலும் ஏகப்பட்ட ஏக்கங்களும், எதிர்பார்ப்புகள் தெரிகின்றன.
                நீங்கள் முதல்வராக பதவி ஏற்பதற்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, சீர்குலைந்திருக்கும் சட்டம் - ஒழுங்கு, மின்வெட்டால் இருண்டிருக்கும் தமிழகம் இவைகளை சரி செய்வதும், அத்தியாவசிப் பொருட்களின் விலைகளை குறைப்பதும்  தான் எங்கள் அரசின் முதல் பணியாக இருக்குமென்று சொன்னது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது. 
              நேற்று முதல்வராய் பதவி ஏற்று, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மக்கள் நலன் சார்ந்த அம்சங்களுக்கு  தாங்கள்  கையெழுத்திட்டு முதல்வர் பணியைத் துவக்கியதை பார்த்த தமிழக மக்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. தமிழக முதல்வரே ! பல்வேறு வகையான தாக்குதல்களினால் அல்லல்பட்டு க்கொண்டிருக்கும்   மக்கள்,  தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது.

முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு சில ஆலோசனைகள்:

         #  நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குகிற நண்பர்களையும் அதிகாரிகளையும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். 
         #  வழக்கம் போல் ஆடம்பர விளம்பரங்களுக்கும், பாராட்டு விழாக்களுக்கும் ஆசைப்படாதீர்கள். அதில் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.
         கூட்டணி கட்சிகளையும் எதிர்கட்சியையும் மதித்து நடந்துகொள்ளுங்கள். அவர்களின் ஆலோசனைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்புக்கொடுங்கள்.
         # உங்கள் தோழி மற்றும் தோழியின் குடும்ப ஆதிக்கம் என்பது எந்த துறைகளிலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதேப்போல் ஆட்சியிலும் அவர்களின் தலையீடு என்பது  இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
         # பழிவாங்கும் நடவடிக்கைகள், அவர்கள் வைத்த சிலைகளை அகற்றுவது, இடிப்பது போன்ற சீர்குலைவு வேலைகளை கைவிடுங்கள்.
         # மக்களுக்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளி மேலும் மேலும் அதிகமாகிக்கொண்டே தான் போகிறது. தங்கள் கட்சிக்காரர்களிடம் கூட நீங்கள் நெருங்குவதில்லை. எப்போதும் வீட்டிலேயே முடங்கிக்கிடக்காமல், வெளியே  வாருங்கள். கட்சித்தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் பழகுங்கள். அவர்களை அடிக்கடி சந்தியுங்கள். குறைகளை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதை அவர்கள் எதிரிலேயே நிவர்த்தி செய்யுங்கள். அப்போது தான் மக்களின் எண்ண ஓட்டங்களை அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். அதற்கேற்றாற்போல் ஆட்சி செய்யமுடியும். மக்களின் மனதில் நிலைத்திருக்க முடியும். 
        # நிறைய தேர்தல் வாக்குறுதிகளை தந்திருக்கிறீர்கள். அவைகளை எல்லாம் பதினெட்டு மாதங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.
                இலவசங்களையே அதிகம் அள்ளித்தராமல், வேலைவாய்ப்பை அதிகப்படுத்துங்கள். அரசு ஊழியர்களுக்கும், தனியார் நிறுவன மற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நியாயமான - தேவைக்கேற்ற ஊதியம் கிடைப்பதற்கு வழி செய்யுங்கள். மக்களுக்கு வேலைவாய்ப்பையும், தேவையான ஊதியத்தையும் கொடுத்துவிட்டால், நீங்கள் இலவசமாகத் தரும் அனைத்துப் பொருள்களையும் அவர்களே காசுக்கொடுத்து  வாங்கிக்கொள்வார்கள். கிராமப்புற மக்களின் - நகர்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள்.
        #  அன்றாடம் தங்கள் வருகைக்காக போக்குவரத்தை மணிக்கணக்காக நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும்.
        # தங்களின் சென்ற ஆட்சியில் செய்த அதே தவறுகளையும், சென்ற திமுக ஆட்சி செய்த அதே தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள். ஊழலற்ற-திறமையான- மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை உத்திரவாதப்படுத்துங்கள்.
        # தூய்மையான அரசியல் - நேர்மையான ஆட்சி - உண்மையான மக்கள் சேவை இவைகள் தான் உங்களை மக்கள் மனதிலிருந்து நீங்காமல் வைத்திருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். இதைத் தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
           எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்.. இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்.. தங்களின் ஆட்சி சிறக்க மீண்டும் "ஆயுத எழுத்து" நெஞ்சார வாழ்த்துகிறது.