வியாழன், 16 மே, 2013

இந்திய இளைஞர்களுடன் சீன நாட்டுப் பிரதமர் சந்திப்பு...!




 

                 உலகப் பொருளாதாரத்தை இயக்கும் என்ஜினாக மாறுவோம்

                                                                                         - சீனப் பிரதமர் லீ கேகியாங்
          இந்தியாவும் சீனாவும் கட்டாயம் கைகுலுக்கிக் கொள்ளவேண்டும் என்றும், உலக பொருளாதாரத்தை இயக்குகிற என்ஜினாக ஆசியாவை உருவாக்குவதற்கு இரு நாடுகளின் உறவும் மிக முக்கியமானது என்றும் சீனப் பிரதமர் லீ கேகியாங் கூறினார்.
              இந்தியாவிலிருந்து 100 இளைஞர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்று சீனப் பயணம் மேற்கொண்டுள்ளது. இக்குழுவிற்கு சீன அரசின் சார்பிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் பெய்ஜிங்கில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் லீ கேகியாங் நேரடியாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 27 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராக இருந்தபோது இந்தியாவுக்கு இளம் பிரதிநிதியாக தான் பயணம் மேற்கொண்டதை மகிழ்ச்சியுடன் அவர் நினைவு கூர்ந்தார். சீனப் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் லீ, எதிர்வரும் மே 19 - ம் தேதி முதல்முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம், தனது இளமைக்கால இந்தியப் பயணத்தை நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
               “21ம் நூற்றாண்டு ஆசியா - பசிபிக் பிராந்தியத்திற்கு சொந்தமான நூற்றாண்டு, அதிலும் குறிப்பாக உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஆசியாவுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிற நூற்றாண்டு என்று உலகின் பல பகுதி மக்களும் நம்புகிறார்கள். உலகப் பொருளாதாரத்தை இயக்குகிற பொறியாக ஆசியா விளங்கும் என்பது உறுதி” என்று லீ கூறினார்.“இந்தக் கண்ணோட்டம் உண்மையாக வேண்டுமானால், இந்தியாவும், சீனாவும் கட்டாயம் கைகுலுக்கிக் கொள்ளவேண்டும். இருதரப்பு தொடர்புகள், பரிமாற்றங்கள் மேலும் வலுவடைய வேண்டும். நம் இரு நாடுகளும் ஆசியாவின் வலுவான சக்திகளாக எழுந்து நிற்கவேண்டும். உண்மையிலேயே ஆசியப் பொருளாதாரத்தை, இந்த உலகின் பொருளாதாரத்தையே இயக்குகிற முக்கிய இயக்கு சக்தியாக மாற்றவேண்டும்” என்றும் லீ கூறினார்.
              “நம் இரு நாடுகளின் மாபெரும் சந்தைகளுக்கிடையே பொருத்தமான தொடர்பை ஏற்படுத்துவது மிகப் பிரம்மாண்டமான பொருளாதார வளர்ச்சியையும் வளத்தையும் ஏற்படுத்தும். இந்த இரு நாடுகளுமே உலகப் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்க முடியும். உலகின் எதிர்காலத்திற்கே ஆசிய மக்கள்தான் நம்பிக்கை அளிக்க முடியும். அதிலும் குறிப்பாக இரு நாடுகளின் இளையதலைமுறையினர்தான் அந்த நம்பிக்கையின் உந்துசக்தியாக இருக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: