சனி, 11 மே, 2013

இலங்கை - ஆழமான அரசியல் பிரச்சனைக்கு அதீத முழக்கங்கள் மட்டும் தீர்வாகாது....!

       
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் திடீர் அக்கறை காட்டுபவர்களும், அக்கறையே காட்டாமல் ஒதுங்கி நிற்பவர்களும், உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் நமக்கென்னன்னு தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருப்பவர்களும் கண்டிப்பாக இந்த
பேட்டியை படிக்கவேண்டும்.
        இலங்கை தமிழர் பிரச்சனை 60 ஆண்டுகளாக தொடர்கிறது. அங்கு ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கத்தாலும் பிரச்னைக்கு தீர்வுகாண முடியவில்லை. 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரிலும் பல ஆயிரம் பேர் மடிந்துள்ளனர். இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை எல்லா தரப்பிலும் உள்ளது. இந்த ஆழமான அரசியல் பிரச்சனைக்கு ''அதீத முழக்கங்கள்'' மட்டும் தீர்வாகாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
      ''செம்மலர்'' - மே மாத இதழுக்கு அவர் அளித்த விரிவான பேட்டியின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. 
**********************************************

கேள்வி: 
தனி ஈழம் தீர்வாகாது என்று 80-களில் மார்க்சிஸ்ட் கட்சி கூறியது சரியாக இருக்கலாம். ஆனால் இன்றும் அதையே கூறுவது சரியல்ல என்று ஒரு வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் நல்லது ஒன்றுமே நடக்காத போது தனி ஈழம்தான் தீர்வு என்று கோருவது எப்படித் தவறாகும்? எல்லோரும் ஒரு வழியில் போனால் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் இப்பிரச்சனையில் ஏன் தனி வழியில் போகிறது? என்றெல்லாம் விமர்சனங்கள் வருகின்றன அல்லவா? 
ஜி.ஆர்: 
எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அள்ளி வீசப்படும் அவதூறுகள் என எல்லாவற்றையும் நாங்கள் அறிந்துதான் இருக்கிறோம். விமர்சனங்களைப் பரிசீலிப்பதும் அவதூறுகளைப் புறந்தள்ளுவதும் தான் சரியான அணுகுமுறை. தனி வழியில் போகும் ஆசையில் எழுந்ததல்ல மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. விருப்பு வெறுப்புகளுக்கும் முன் முடிவுகளுக்கும் அப்பாற்பட்டு புறநிலை யதார்த்தங்களின் அடிப்படையில் வரலாற்றுப் பின்னணியில் தான் மார்க்சிஸ்ட்டுகள் முடிவு எடுக்கிறார்கள். தவிர, உங்கள் கேள்வியில் குறிப்பிடுவது போல, தனி ஈழம் என்னும் கோரிக்கையின் பின்னால் எல்லோரும் இருப்பதாகச் சொல்வதும் சரியல்ல.. அதை விளக்கமாகப் பார்க்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் நம் முடைய அடிப்படையான நோக்கம். தனி நாடு கேட்டால் நல்லதை விடத் தீங்குதான் தமிழர்களுக்கு வந்து சேரும் என்பதுதான் தொடர்ந்து எமது புரிதலாகவும் நிலைபாடாகவும் இருக்கிறது. தமிழகத்தில் இருப்பவர்களை விடுங்கள். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எல்லோருமே தனி ஈழம் கேட்கவில்லை என்பதை இந்த நேரத்திலாவது - இவ்வளவு அழிவுக்குப் பிறகாவது - நிதானத்துடன் நாம் பார்க்க வேண்டும். நடைமுறையில் சாத்தியமில்லாத முழக்கம் அது. இலங்கை அரசின் மீது ஒரு அரசியல் நெருக்கடியும் அழுத்தமும் உருவாக்குவதற்கான உத்தியாகவே (PRESSURE TACTICS) தனி நாடு கோரிக்கையை ஆரம்பத்தில் முன்வைத்தார்கள். அதன் மூலம் தமிழ் மக்களுக்கான சம உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வைப் பெற முடியும் என்றுதான் அவர்கள் நம்பினார்கள்.
      தமிழ் மக்கள் மூன்று பிரிவாக இலங்கையில் இருக்கிறார்கள். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பகுதியிலும் கிழக்கு மாகாணத்திலும் வாழும் பூர்வீகத்தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் ஒரு பிரிவு. மலையகத்தமிழர் என்றழைக்கப்படும் தோட்டத் தொழிலாளிகளான இரண்டாவது பிரிவினர். தமிழ் முஸ்லிம்கள் மூன்றாம் பிரிவினர். மலையகத்தமிழர்களும் தமிழ் முஸ்லிம்களும் தனி ஈழம் கேட்கவில்லை. தென்னிலங்கையில் கொழும்பிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் 2 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களும் தனி நாடு கேட்கவில்லை. கொழும்பின் முன்னணி வியாபார வர்க்கத்தின் பகுதியாக தமிழர்கள் கணிசமாக அங்கே வாழ்கிறார்கள். 1947-ல் பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தபோது நிகழ்ந்ததைப்போல லட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வையும், துயரத்தையும் தனிநாடு கோரிக்கை தமிழர்களுக்குக் கொண்டுவரும். தமிழ் முஸ்லிம்கள் நீண்ட நெடுங்காலமாக சிங்களர் பெரும்பான்மையாக உள்ள கட்சிகள், அமைப்புகளோடுதான் நெருக்கமாக இருந்து வருகின்றனர். புலிகளோடு நீண்டகாலப் பகைச் சூழல்தான் அவர்களுக்கு இருந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் எங்களைச் சந்தித்த இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் கூறியதை இங்கே எடுத்துரைக்க வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழர்களுக்கு பெரும்பான்மை கிட்டவில்லை. தமிழ் முஸ்லிம்களிடம் நாம் கூட்டணி அமைக்கலாம். முதல்வர் பதவியை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஒரு திட்டத்தை முன்வைத்தோம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. சிங்களர்களுடன்தான் கூட்டு வைத்து அமைச்சரவை அமைத்துள்ளனர் என்று கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலிருந்து 48 மணி நேரத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் வெளியேற வேண்டும் என புலிகள் உத்தரவிட்டு விரட்டியடித்த கொடுமை முஸ்லிம் மக்கள் மனங்களில் ஆறாவடுவாக இன்றும் உள்ளது. இலங்கையின் ஆளும் அரசு தமிழர்களுக்கு தீமையைத் தவிர வேறு ஏதும் செய்ய வில்லையே என்கிற வெறுப்பிலிருந்து அந்தக் கடைசிக்குச் சென்று தனி ஈழம்தான் தீர்வு என்று கோருவது நடைமுறையில் அவர்களுக்கு நன்மை பயக்காது. கால தாமதம் ஏற்பட்டாலும் சர்வதேச மற்றும் இந் திய அளவில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியும் இலங்கையின் உள்நாட்டிலுள்ள ஜன நாயக சக்திகளின் முன்னெடுப்பிலும் ஓர் நிரந்தர அரசியல் தீர்வைக் காண வேண்டும். இன்றைய உடனடித் தேவைகளுக்கான முழக்கங்களை எழுப்புவதே சரியாக இருக்கும். தமிழர் வாழும் பகுதியிலிருந்து ராணுவத்தை விலக்குதல், தமிழ்ப்பகுதிகளைச் சிங்களமயமாக்கும் முயற்சிகளை நிறுத்துதல், போரினால் சொல்லவொண்ணாத் துயருக்கு ஆளாகியிருக்கும் தமிழ் மக்களுக்கு சமாதானமும் அவர்களின் மனக்காயங்களுக்கு ஆறுதலும் தரும் விதமான அணுகு முறையும் மீள் குடியமர்வுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் உடனடியாகச் செய்யப்பட வேண்டும். புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் பிடித்துச்செல்லப்பட்ட அல்லது காணாமல் போன பத்தாயிரத்துக்கும் மேற் பட்ட இளைஞர்கள், யுவதிகள் வீடு திரும்ப வேண்டும். ஓர் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையைத் துவக்கி தமிழர்களுக்கு சம அந்தஸ்தும் சம உரிமையும் கூடிய மாநில சுயாட்சியுடன் காவல்துறை மற்றும் இதர நிர்வாக உரிமைகளுடன் கூடிய தமிழ் மாநிலம் அமைக்கப்பட வேண்டும். இது போல அம்மக்கள் என்ன தேவையில் இப்போது இருக்கிறார்களோ அதற்கான முழக்கங்களை எழுப்ப வேண்டும். அதுதான் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
           சின்னச்சின்ன இரண்டு நாடுகளாக (ஏற்கனவே அது சின்ன நாடுதான்) இலங்கை பிரிவது என்பது ஏகாதிபத்தியம் நுழைவதற்கான பாதையை அகலத்திறப்பதாகும். அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல. இந்தப் பிராந்தியத்துக்கே ஆபத்து.

கேள்வி: 
இலங்கையை நட்பு நாடென்று மதிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்னும் கோரிக்கை பற்றி..
ஜி.ஆர் : 
நட்பு நாடு இல்லை என்று முடிவு செய்தால் தூதரகங்களை மூட வேண்டும்.பேச்சுவார்த்தைக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாய்ப்பும் இல்லாமல் போய் விடும். அங்கே தமிழ் மக்களுக்கு என்ன நடந்தாலும் நமக்கு தகவல் கிடைப்பதில் துவங்கி தலையிடுவதுவரை சிக்கலாகுமல்லவா?

கேள்வி : 
பொருளாதாரத்தடை விதிப்பது இலங்கை அரசை நிர்ப்பந்திக்க உதவுமல்லவா?
ஜி.ஆர் : 
நாம் பொருளாதாரத் தடை என்றால் இலங்கை மேலும் மேலும் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளைச் சார்ந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்படும். பொருளாதாரத்தடை பெரிதும் ஏழை எளிய மக்களைத்தான் பாதிக்கும். இராக்கிலும், கியூபாவிலும் நமக்குக் கிடைத்திருக்கும் அனுபவம் அதுதானே. தவிரவும் இலங்கையிலிருந்து நமக்கு இறக்குமதியை விட ஏற்றுமதிதான் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்துதான் ஏற்றுமதி அதிகம். (நான் கொழும்பில் உள்ள ஒரு துணிக்கடைக் குச் சென்ற போது அந்த வியாபாரி சொன்னது ‘நாங்க சென்னை பாண்டி பஜாரிலிருந்து தான் இந்தத் துணிகளையெல்லாம் வாங்கி வருகிறோம். வேணுமானா வாங்கிக்கிங்க..) இலங்கையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் கணிசமாகப் பொருள் முதலீடு செய்துள்ளன என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இலங்கை அரசை நிர்ப்பந்திக்க அரசியல் ரீதியான உபாயங்களைக் கையாள வேண்டும்.

கேள்வி : 
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என் பதை மார்க்சிஸ்ட் கட்சி ஏன் ஏற்கவில்லை. உள்ளக விசாரணை என்ற பேரில் கொலை யாளியையே நீதிபதியாக்குவது எந்த வகையில் நியாயமாகும்?
ஜி.ஆர் : 
 சர்வதேச விசாரணை என்ற பேரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளே நுழைந்துவிடக்கூடாது என்பதுதான் நமது கவலை. அதன் பொருள் விசாரணையை ராஜ பக்ஷேயின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதல்ல. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலுடன் கலந்து பேசி (அப்படி ஒரு குறிப்பு இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திலும் இருக்கிறது) சுயேச்சையான, சர்வதேச நம்பகத்தன்மை கொண்ட இலங் கைக்கு வெளியில் உள்ள சர்வதேச மதிப்புடைய நீதிமான்களையும் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இலங்கையிலுள்ள தமிழர்களிலிருந்தும் கூட அத்தகைய மதிப்புமிக்க நீதிமான்கள் விசாரணைக் குழுவில் சேர்க்கப்பட வேண்டும். இத்தகைய சுயேச்சையான விசாரணையை ஏற்றிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். விசாரணைக்குழு முற்றிலும் வெளியிலிருந்து என்று தீர்மானம் வந்தால் இப்போது ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் இத்தீர்மானத்தை ஆதரித்த நாடுகளும் கூட ஆதரித்திருக்காது என்பது தான் அமெரிக்கப் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கூறிய பதில் (அவரே இதை எம்மிடம் கூறினார்). அவரவர் நாட்டுப் பிரச்சனைகளோடு பொருத்தித்தான் அவர்கள் இதைப் பார்ப்பார்கள். இத்தகைய சர்வதேச அரசியல் சூழலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது தமிழர்கள் பால் அவர்கள் கொண்ட அக்கறையால் அல்ல. உலகத்திலேயே மனித உரிமை மீறலில் இலங்கை உள்ளிட்ட வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது என்பதை லேசில் மறந்துவிட முடியாது. இலங்கையை தன் நலன்களுக்கு ஏற்ப அடிபணியச்செய்ய அமெரிக்கா இதன் மூலம் முயல்கிறது. திரிகோணமலையில் அமெரிக்க ராணுவ மையம் மற்றும் வர்த்தகத் தேவைகள் என அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் வேறு பலவும் நிச்சயமாக இருக்கிறது.

கேள்வி: 
நடந்து முடிந்துள்ளது இனப் படுகொலை என்று அறிவிக்க வேண்டும் என திமுக,அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கேட்கின்றன.மார்க்சிஸ்ட் கட்சி அப்படி கோரவில்லை அல்லவா?
ஜி.ஆர் : 
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதால் அது இனப்படுகொலைதான் என்கிற உணர்வு ஏற்பட்டுள்ளது. அது எல்லோருடைய மனங்களையும் உறைய வைத்துள்ள கொடுமை. ஆனால் சர்வதேச அளவில் என்ன புரிதல் இருக்கிறதெனில் ஆயுதமற்ற மக்களின் மீது ஆயுதத் தாக்குதல் தொடுத்து அழிப்பது இனப்படுகொலை என்கிறார்கள். இங்கே ஆயுதபாணிகளான இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் அப்பாவித்தமிழர்கள் இரு தரப்பாலும் கொல்லப்பட்டுள்ளனர் என்றே ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த மூவர் குழு குறிப்பிடுகிறது. ஆகவே மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் கடுமையான அளவுக்கு நடந்துள்ள போர் என்று கணிக்கிறார்கள். இனப்படுகொலை என்று குறிக்கவில்லை. இலங்கையின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் தாக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். உரிய, நம்பகமான விசாரணையும் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் தேவை என்றுதான் மார்க்சிஸ்ட் கட்சி கோருகிறது.

கேள்வி: 
கியூபா, சீனா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் இலங்கை அரசை ஆதரிக்கும் நிலை சரியா?
ஜி.ஆர் :
சோசலிச நாடுகள் எடுக்கும் நிலைபாட்டை நாம் ஆதரிக்க வேண்டும் என்றோ அங்கீகரிக்க வேண்டும் என்றோ நாம் கூறவில்லை. நாம் மாறுபடலாம். அவர்கள் ஒரு அரசு என்கிற முறையில் அரசுக்கு அரசு உறவு என்பதை சர்வதேச அரசியல் சூழலின் அடிப்படையில் பார்க்கிறார்கள். கம்யூனிஸ்ட் அகிலத்தைக் கலைக்கும் போது தோழர் ஸ்டாலின் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். இறையாண்மைமிக்க ஒரு நாட்டின் அரசு என்ற வகையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள ஒரு சோசலிச நாடு கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்கும் ஓர் அரசுடன் கூட நட்பு பாராட்ட வேண்டிய சூழல் வரும். அதை அந்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த உறவை ஏற்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்றார். இலங்கை அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதே நமது நிலைபாடு.

கேள்வி : இலங்கைத்தமிழர் பிரச்சனைக் காக மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றுமே செய்ய வில்லை என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்..
ஜி.ஆர்: கிளிநொச்சியிலிருந்து விடுதலைப்புலிகள் பின் வாங்க நேர்ந்த சமயத்திலேயே 2009 பிப்ரவரியிலேயே மதுரையிலிருந்து தோழர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்தார். “யுத்தத்தை நிறுத்த உடனடியாக இந்திய அரசும் ஐ.நா. சபையும் தலையிட வேண்டும். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வுகாண முயலவேண்டும். யுத்தம் ஒரு போதும் தீர்வாகாது. அப்பாவி மக்கள் எக்காரணம் கொண்டும் பலியாகிவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார். புலிகளை நாங்கள் ஆதரிக்காதபோதும் அன்று அவர்களோடு பேசுங்கள் என்றுதான் சொன்னோம். ஆனால் இந்திய அரசோ ஐ.நா.சபையோ தலையிடாததால் மனிதப் பேரழிவு நிகழ்ந்தது. ஆர்ப்பாட்டங்கள், மனிதச் சங்கிலிகள், தில்லி சென்று தர்ணா என தமிழகத்தில் எல்லாக்கட்சிகளும் செய்த போராட்டங்களை விடவும் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றும் குறைவாக இருந்துவிடவில்லை. புலிகளை யும் தனி ஈழத்தையும் நாங்கள் ஒருபோதும் ஆதரிக்காததால் (பல கட்சிகள் அவ்வப்போது பல்டிகள் அடித்ததுபோல அடிக்காமல்) தமிழக மீடியாக்களும் எங்கள் போராட்டங்களை வெளியிடவில்லை. தமிழக மீடியாக்களில் கணிசமான பகுதியினர் தனி ஈழ ஆதரவு நிலைபாட்டை எடுத்ததும் புலிகளை அளவுக்கு மீறி விமர்சனமின்றி முன்னிறுத்தியதும் நடந்தது. தமிழக எல்லைக்குள் மட்டும் இயங்கும் அரசியல் கட்சிகளும் மீடியாக்களும் அவரவர் நலன் சார்ந்து இலங்கைப் பிரச்சனையைப் பயன்படுத்திக்கொள்வது தொடர்ந்து நடக்கிறது. அங்கு வாடும் தமிழ் மக்களின் நலன்களை விட இவர்களின் சொந்த அரசியல்/வர்த்தக நலன்கள் பிரதானமாக இருக்கின்றன. இது மிகப்பெரிய சோகம்தான். இப்போதும் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யுத்தம் தீர்வாகாது என்பதும் தனி ஈழம் தீர்வாகாது என்பதும்தான் எங்கள் நிலைபாடு.1987 ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஒரு நல்ல ஒப்பந்தம்தான் .அதை ஒன்றுமில்லாமல் செய்ய இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் கூட்டாக செயல்பட்டார்கள். இந்திய அமைதி காக்கும் படையை இலங்கை மண்ணை விட்டு வெளியேற்ற புலிகளும் இலங்கை அரசும் கைகோர்த்தது வரலாறு. தனி ஈழத்துக்குக் குறைவான கோரிக்கையை யார் வைத்தாலும் அவர் சிங்களரோ தமிழரோ அவர்கள் கொல்லப்பட்டார்கள். கதிர்காமர், அமிர்தலிங்கம், நீலம் திருச்செல்வம் எனக் கொல்லப்பட்ட தமிழர் தலைவர்கள் எத்தனை பேர்? அங்கே தனி ஈழம் தீர்வல்ல என்றால் கொல்லப்பட் டார்கள்.இங்கே தனி ஈழம் தீர்வல்ல என்று சொன்னால் இனத் துரோகி என முத்திரை குத்துவார்கள். இரண்டும் ஒரே அரசியலின் இரு வடிவங்கள் தாம். வரலாற்றை சுயபரிசீலனை செய்ய இப்போதாவது நாம் முன்வர வேண்டாமா? சமாதான முயற்சிகள் எல்லா வற்றையும் சீர்குலைத்ததில் புலிகளுக்குப் பங்கில்லையா? புலிகள் போரில் கொல்லப்பட்டுவிட்டதால்-களப்பலி ஆகிவிட்டதால்- அவர்களின் பாதை விமர்சனத்துக்குள்ளாக்கப்படாமல் விடப்பட வேண்டுமா? அது எதிர்காலத்துக்குப் பயன்படுமா? எங்கள் உறுதியான ஊசலாட்டமில்லாத நிலைபாடு காரணமாக - அது சிலருக்கு உவப்பாக இல்லை என்பதால்- எங்கள் போராட்டங்கள் பேசப்படவில்லை என்பது தான் உண்மை.

கேள்வி : இப்போது இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை செய்ய வேண்டியது என்ன?
ஜி.ஆர் : இன்னும் தமிழகத்தில் இனவாத உணர்வைத்தூண்டிக்கொண்டிருப்பது இலங்கையில் சிக்கலில் இருக்கும் தமிழ் மக்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என்பதை உணர வேண்டும். திருச்சியில் பயணியாக வந்த பௌத்ததுறவி தாக்கப்பட்டதற்கு கொழும்பில் தமிழர்கள் கடையடைப்புச் செய்து கண்டனம் செய்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழ் நாட்டுக் கட்சிகளும் அமைப்புகளும் தம் அரசியலுக்காக அல்லாமல் உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்கு இப்போது என்ன தேவையோ அதற்கான முழக்கங்களை முன்வைத்து இந்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அதீதமான கோரிக்கைகளைக் கைவிட்டு யதார்த்த நிலைமைக்கேற்ப குறைந்த பட்ச செயல்திட்டத்தோடு பேச வேண்டும்.

கேள்வி: இலங்கைக்குள் எந்த மாற்றமும் நடக்காமல் நமக்கு எப்படி நம்பிக்கை வரும்? இந்திய அரசு போல ஒரு ஏற்பாடு இலங்கையில் இல்லையே? அங்கு ஜனாதிபதி பதவி அதீத அதிகாரத்துடன் இருக்கிறதே?
ஜி.ஆர் : ஆம். உண்மைதான் ஆனாலும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி மக்களைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் அங்கு இருக்கத்தானே செய்கிறது. இன்றைய அடக்குமுறைச் சூழலில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் பேசத் தயங்குகிற நிலை உள்ளது. ஆனால் உயர்கல்வியைத் தனியார் மயமாக்கும் சட்டத்தை சமீபத்தில் இலங்கை அரசு கொண்டு வந்த போது தமிழ் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் ஒன்றுபட்டுப் போராடி அச்சட்டத்தை திரும்பப்பெற வைத்துள்ளனர். சிங்கள மீடியாக்களும் ஆளும் கட்சியும் சிங்களப் பேரினவாதத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும் இன்றைய இலங்கை நிலையைக் கணக்கில் கொண்டு இங்கு நாம் இயங்க வேண்டும். அதீத முழக்கங்களால் நாம் அங்குள்ள தமிழர்களை திசை திருப்பக் கூடாது. பொருளாதார ரீதியாக இலங்கை அர சின் கொள்கைகளால் கடுமையான நெருக் கடிக்கு ஆளாகியுள்ள சிங்கள, தமிழ், தமிழ் முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் அனை வரும் ஒன்றிணைந்து போராடுவது தவிர்க்க முடியாது. கால அவகாசம் எடுக்கலாம். இக்கூட்டில்தான் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வும் பிறக்கும்.

2 கருத்துகள்:

baleno சொன்னது…

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எல்லோருமே தனி ஈழம் கேட்கவில்லை என்பதை இந்த நேரத்திலாவது - இவ்வளவு அழிவுக்குப் பிறகாவது - நிதானத்துடன் நாம் பார்க்க வேண்டும். நடைமுறையில் சாத்தியமில்லாத முழக்கம் அது.

தலைவணங்குகிறேன் தமிழ்நாட்டு தலைவருக்கு.

இறைகற்பனைஇலான் சொன்னது…

ஈழம் அழிய கம்யூக்களும் ஒருகாரணம். ரசியாவில் பயிற்சி பெற்ற சிங்கள புரட்சியாளன் இனவாதம் பேசுவான் .அவனை கம்யூ. அகிலத்தின் அனைத்துலக கமிட்டியில் கலந்துகள்ள அழைப்பு கிடைக்கும் ஆனால் தமிழன் மட்டும் இன்வாத்ம் பேசக்கூடாது. தமிழர் பிரச்சிணை என்றால் மட்டும் உலகப் பொதுமை பேசுவார்கள்.இலங்கையில் ஒரே மொழி,ஒரே அரசு என்று சொன்னபின் என்ன செய்யமுடியும் இந்தப் புரரட்சியாளர்கலால்.மூண்று பகுதிகளை ஆள ஒன்றாக்கினான் வெளையன். அதனால் மைனாரிடி ஆனார்கள் தமிழர்கல். தேசிய இன்ங்களின் சுயநிர்ணய உரிமை காக்கஒ பட எண்டுமாணால்,தனி அரசாட்சி ஏன் கூடாது? ஓகோ சீனா கோவித்துக்கொள்ளுமோ?