புதன், 15 மே, 2013

தமிழ் மொழிக்கு சமாதி கட்டிவிட்டு தமிழன்னைக்கு சிலையா...?


               தமிழக சட்டமன்றத்தில் தினம் ஒரு அறிவிப்பை வெளியிடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதைக் கேட்டதும் அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருந்தது. அந்த அறிவிப்பு என்னான்னா....? மதுரையில் அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவியின் சிலை போல் ரூ.100 கோடி செலவில் தமிழன்னைக்கு வானுயர்ந்த சிலை ஒன்று வைக்கப்போவதாக அறிவித்திருந்தார். அறிவிக்கும் போதே சொல்லப்படுகிற இந்த செலவு என்பது சிலை செய்யும் வேலையை ஆரம்பிக்கும் போது இரண்டு மடங்காக ஆகிவிடும். சிலை வேலை முடித்து திறந்து வைக்கும் போது அதன் செலவு என்பது நான்கு மடங்காக ஆகிவிடும். இது தான் உண்மை.  இப்படி பல கோடிகளை செலவு செய்து எனக்கு சிலை வையுங்கன்னு தமிழன்னை இந்த தமிழகத்து ''அன்னையின்'' கனவுல வந்து சொன்னாங்களா என்ன...? சிலை வைப்பதை பார்த்து நிச்சயமாக தமிழன்னை மகிழ்ச்சி அடையமாட்டாள். இந்த நிதியை கொண்டு முதலில் தமிழை வாழ வையுங்கள் என்று ஓங்கி ஒரு குட்டு குட்டியிருப்பாள்.   
           அன்றே நம் பாட்டன் பாரதி சொன்ன ''தமிழ் இனி மெல்லச்சாகும்'' என்ற  தீர்க்கதரிசன வரிகள் தான் என் நினைவுக்கு வருகிறது. ஆனால் தமிழ் தானாக சாகவில்லை. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துகொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக்கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் சேர்ந்து தான் தமிழ் மொழியையே சாகடித்து குழித்தோண்டி புதைத்து சமாதி கட்டிய ''பெருமைக்குரியவர்கள்''
            முதலில் இந்தி எதிர்ப்பு கோஷத்தை வைத்து ஆட்சிக்கு வந்த திராவிடமுன்னேற்றக் கழகம், இந்தியை தமிழகத்தின் உள்ளே அனுமதிக்க முடியாது என்று சொல்லி தமிழகத்தில் ஆங்கிலவழி கல்வி முறையை அனுமதித்து தமிழை துரத்தியடித்தது. அதேப்போல் அதிமுக - வும் அதற்கு சளைத்தது அல்ல. தமிழ்வழி கல்வி மூலம் அறிவு வளர்ச்சியோ சுய வளர்ச்சியோ இருக்காது என்று சொல்லி அவர்கள் பங்குக்கு நிறைய அரசு பள்ளிகளை ஆங்கிலவழி கல்வி முறைக்கு மாற்றி வருகிறது. மொத்தத்தில் இவ்விரு கட்சிகளும் தமிழ் மொழியை கொன்று குழி தோண்டி புதைத்துவிட்டன என்பது தான் உண்மை.
           ஆனால் வீம்புக்காகவும், சுயவிளம்பரத்திற்காகவும், தமிழ் பற்றாளர்களின் ஓட்டுகளுக்காகவும் தமிழ்ச் சங்கம் அமைப்பதும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துவதும், அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைப்பதும், தமிழன்னைக்கு சிலை வைப்பதுமான வேலைகளை ஒரு போழுதுபோக்காகவும்,  மக்களை திசை திருப்புவதற்காகவும் இது போன்ற சித்து விளையாட்டுகளை அவ்வப்போது தமிழக ஆட்சியாளர்கள் மாறி மாறி செய்து வருகிறார்கள்.
           ஒரு சிலை வைப்பதற்கு பல கோடிகளை செலவு செய்வதற்கு பதில், ஆங்கிலவழி கல்வி அளவிற்கு தமிழ்வழிக் கல்வியின் தரத்தை உயர்த்துங்கள். ஆங்கிலவழிக் கல்வி முறையை ஒழித்துக்கட்டுங்கள். தமிழ் படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு, தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு, தமிழ் ஆராய்ச்சி மாணவ-மாணவியர்களுக்கு இந்த தொகையை பயன்படுத்துங்கள். அவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவசக் கல்விக் கொடுங்கள். கல்வி உதவித்தொகைக் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். தமிழ் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுங்கள். வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் உதவிப்பணம் கொடுங்கள். தமிழ் மொழிக்காக மட்டுமே இத்தனை கோடிகளையும் செலவிடுங்கள்.  இப்படிச் செய்தால் தான் தமிழ்வழி கல்வியும் வளரும். தமிழும் வளரும். அதைவிட்டுவிட்டு தமிழன்னைக்கு சிலை வைப்பதினால் தமிழ் மொழிக்கு எந்தவிதமான பலனும் இல்லை. தமிழ் வளராது. சம்பந்தப்பட்ட அமைச்சரும், அதிகாரிகளும் தான் வளருவார்கள்.
           இதையும் மீறி தமிழன்னைக்கு சிலை வைத்தால், அது தமிழூக்கு பெருமை சேர்க்காது. மாறாக அது திராவிட கட்சிகளினால் சமாதியாக்கப்பட்ட தமிழுக்கு ''நினைவுச் சின்னமாக'' தான் அமையும்.

கருத்துகள் இல்லை: