சனி, 11 மே, 2013

வேதனைகளை வென்று சாதனை படைத்த பெண்மணி....!

      
     
      எஸ்.ஜெயப்ரபா என்ற பெண் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் வட்டத்தைச் சேர்ந்த நொண்டி கோவில்பட்டி கிராமத்தில் வசிப்பவர்.இவரது தந்தை பஞ்சர் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். தாயார் வீட்டை கவனித்துக் கொள்கிறார்.
             ஜெயப்ரபாவை அவரது 14 வயதில் அவர்கள் 'குல' வழக்கப்படி எல்லோருமாக  சேர்ந்து அவரது தாய் மாமனுக்கு மணம்  முடித்துவிட்டார்கள். 16 வயதில் 'குடும்ப சிக்கல்' காரணமாக கணவரிடம் இருந்து பிரிவு ஏற்பட்டது. குழந்தை திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால் விவாகரத்துக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.
           அதன் பிறகு படிப்பைத் தொடர்வதற்காக தன் பெற்றோர்களிடம் கடுமையாக போராடி தனி தேர்வராக நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றார்.    11- ஆம் வகுப்பு  சேர்வதற்கும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. ஒரு வழியாக வீட்டில் சம்மதித்து விட்டார்கள். அடுத்த சிக்கல் பள்ளித் தரப்பில் இருந்து வந்தது. மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  திருமணமான மாணவிகளை பள்ளியில் சேர்த்துக்கொள்வது இல்லை என்பதும்,  பயின்று கொண்டு இருக்கும் போதே மாணவிகளுக்கு திருமணம் நடந்தால் அவர்களை பள்ளியில் இருந்து நீக்கி விடுவது என்பதும் ஒரு ''கொள்கை முடிவாகவே''  தீவிரமாக அமல்படுத்தி வரும் பள்ளி என்பதால் ஜெயப்ரபாவை பள்ளியில் சேர்த்துக் கொள்வதில் சிரமம் இருந்தது. ஆனால் இந்து பத்திரிக்கையின் தலையீட்டினால் அந்த மாணவிக்கு தீர்வு கிடைக்க பள்ளியில் இடமும் கிடைத்தது.
          ஆனால் இன்று
அண்மையில் வெளியான +2 தேர்வு முடிவில்  அந்தப் பெண் ஜெயப்ரபா 1136 மதிப்பெண்களை  பெற்று அவரை சேர்த்துக்கொள்ள தயங்கிய அந்த பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது அந்தப் பள்ளிக்கு மட்டுமல்லாமல் பெண்ணினத்திற்கே பெருமையளிக்கும் நிகழ்வாகும். வேதனைகளை முறியடித்து சாதனையை வென்ற ''சாதனைப் பெண்மணி'' ஜெயப்ரபாவை மனதார வாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை: