அர்த்தமுள்ள வகையில் சமூகத்தை அடியோடு மாற்றியமைக்காதவரை, ‘பெண்களுக்கான சிறப்பு வங்கி’ போன்ற அறிவிப்புகள் ‘வெறும் கண்துடைப்பாகவே’
அமைந்திடும் என்றும், இத்தகைய அறிவிப்புகளால் நாட்டில் பெண்களுக்கு சமநீதியைப் கொண்டு வந்து விட முடியாது என்றும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை
நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில்
கே.பி.சிங் நினைவு சொற்பொழிவு சென்ற சனிக்கிழமையன்று நடைபெற்றது.
இதில் உரையாற்றிய போதே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்த நீதிபதி
ஜே.எஸ்.வர்மா இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது :-
‘‘நிதியமைச்சர்
ப.சிதம்பரம் வியாழனன்று பட்ஜெட் உரையின்போது, பெண்களுக்காகத் தனி வங்கி
அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுபோன்ற
‘பெயரளவிலான’ அறிவிப்புகளால் பெண்களுக்கு சமநீதி கிடைத்திடாது. அரசாங்கத்திடமும், சமூகத்திடமும் பெண்கள் பற்றி இருந்து வரும் மனோபாவம்
ஒட்டு மொத்தமாக மாற வேண்டும். எந்தவொரு சமூகத்திலும், நீதியின் சாராம்சம்
நேர்மையானதாக இருக்க வேண்டும். நம்முடைய குடும்பங்களிலேயே பெண்களுக்கு
சமநீதியைப் பேணிவளர்க்கக்கூடிய முறையில் நம் சமூகம் மாறவேண்டும். சமூகம்
அத்தகைய பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிரான
குற்றங்களைத் தடுத்திட நாட்டில் அமலில் இருந்து வரும் சட்டங்களில் பல்வேறு
திருத்தங்களைப் பரிந்துரைத்திருக்கிறோம். ஆயினும், சமூகத்தின் ஆதரவு
இல்லாமல் சட்டத்தால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியாது.
தற்போது இருந்து வரும் சட்டங்களும், வழிகாட்டுதல்களும், ஆட்சி பரிபாலன
அமைப்பு முறையும் சரியாக இருந்திருக்குமானால், டிசம்பர் 16 அன்று தலைநகர்
தில்லியில் நடைபெற்ற மிகக் கொடூரமான பாலியல் வன்கொலைக் குற்றம்
நடந்திருக்காது.
ஆயினும், அக்கொடுமைக்கு எதிராக இளைஞர்கள்
மத்தியில் உடனடியாக ஏற்பட்ட கோபாவேசம் தான் பெண்களுக்கு சமநீதியைப்
பெற்றுத்தருவதற்கான இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது. பெண்களுக்கு
எதிரான கொடுமைகள் குறித்து சமூகத்தின் உயர் அடுக்கில் உள்ளவர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் மிகவும் அபத்தமானவை மட்டுமல்ல;
ஒருதலைப்பட்சமானதும் ஆகும். இது ஆணாதிக்க சமூகத்தின் அணுகுமுறைக்கு சரியான
எடுத்துக்காட்டுகளாகும். உயர்மட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளிடமே இத்தகைய
ஒருதலைப்பட்சமான குறைபாடுள்ள அணுகுமுறைதான் இருக்கிறது. இதனால்தான்
இவர்கள் பாலியல் கொடூரத்திற்குள்ளான பெண்களை ‘‘நடமாடும் பிணங்கள்’’
என்று சித்தரித்தார்கள். இவை இவர்களின் கருத்து மட்டுமல்ல, சமூகத்தின்
மனோபாவம் இது மாதிரியாகத்தான் இருக்கிறது. எனவே சமூகத்தின் மனோபாவமே
அடியோடு மாறியாக வேண்டும்''.
1 கருத்து:
வணக்கம் நண்பரே!
உங்களுடைய பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய கூகிள்சிறி தளத்தில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.
யாழ் மஞ்சு
கருத்துரையிடுக