வியாழன், 31 ஜனவரி, 2013

கமல்ஹாசனின் சிந்தனையில் ஏனிந்த மாற்றம்...?

அ. குமரேசன்
பத்திரிகையாளர்  
 
    உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு தகவல் இப்படிக் கூறுகிறது: ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் தொடர்பான வணிக பேரம் படியாததால், அது வேறு நிறுவனத்திற்குக் கைமாறியதால் ஏற்பட்ட ''ஆத்திரம்'' தான் தடையாகத் தொடங்கி தாக்குதல்களாகத் தொடர்கிறது.
             இது உண்மையெனில், தங்களது நியாயமான கவலையையும் கோபத்தையும் இப்படி வர்த்தகம் சார்ந்த, உள்நோக்க அரசியலுக்குப் பயன்படுத்துகிற ஆட்சிபீடத்தை வன்மையாகக் கண்டிக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும். இதற்கு உடன்படமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.
            ‘விஸ்வரூபம்’ எதிர்ப்பு இங்கே இஸ்லாமிய மக்களுக்கு எதிராகப் பகை வளர்க்கத் துடிப்போருக்கும் சாதகமாகியிருக்கிறது. நாளை இது, பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த சிலரது வெறித்தனம் பற்றிய திரைப்படம் ஒன்று வருமானால் அதற்கு எதிராக சூலாயுதம் தூக்க முகாந்திரம் அமைத்துக் கொடுக்கும். ‘ஆதிபகவன்’ என்ற பெயரே இந்துக்களைப் புண்படுத்துவதாகக்கூறி கிளம்பிவிட்டார்கள் என்பதைக் காணத் தவறக்கூடாது. ஏற்கெனவே ‘வாட்டர்,’ ‘ஃபயர்’ போன்ற படங்களின் மீதும், எம்.எப். உசேன் போன்ற கலைஞர்கள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் நினைவுகூரப்பட வேண்டியவை.
              அடிப்படையில், ஒரு திரைப்டம் சரியானதா தவறானதா என்பதை மக்கள் பார்த்து முடிவு செய்கிற உரிமையை மதத்தின் பெயரால் தட்டிப்பறிப்பது ஜனநாயக விரோதம்.
         உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத இன்னொரு தகவல் இப்படிக் கூறுகிறது: திமுக தலைவர் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் புகழ்பாடும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தபோது, அதில் பேசிய கமல்ஹாசன், ''வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வரவேண்டும்'' என்று கூறினாராம். அப்புறம் கலைஞர் பேசும்போது, சேலை கட்டிய தமிழரை விட வேட்டி கட்டிய தமிழர் பிரதமராவது நல்லது தான் என்ற விருப்பம் வெளிப்பட்டதாக விரிவாக்கம் செய்து தனது சொல்லாளுமையைக் காட்டியிருக்கிறார். ஆட்சியாளர்களின் ஆத்திரத்துக்கு இதுதான் அடிப்படைக் காரணம் என்கிறார்கள்.
             இது உண்மையெனில் இதுவும் கண்டனத்திற்கு உரியதே. 
ஆனால் கமல் சிந்தனை பற்றிய சில கேள்விகள் எழுகின்றன....!
 பெண் பிரதமராகக்கூடாது என்ற பொருளில் கமல் அப்படிப் பேசவில்லை, வட மாநிலங்களின் குர்தா, பஞ்சகட்சக்காரர்களுக்கு பதிலாக தமிழ்நாட்டின் வேட்டிக்காரர் பிரதமராக வர வேண்டும் என்ற கோணத்தில் தான் அவர் அப்படிப் பேசியதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால், மக்களைக் கைவிட்டு பெருமுதலாளிகளுக்கு சேவையாற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் பிடிவாதப் பிரதிநிதியான ப. சிதம்பரம் போன்றவர்கள் வேட்டி கட்டிய தமிழர்கள் என்பதால் பிரதமராக வேண்டும் என்பது என்ன அரசியல் முதிர்ச்சியோ?
             தாக்குதல்களை எதிர்கொண்டு, தங்களது சம்பாத்தியத்தின் ஒரு கணிசமான பகுதியை ‘விஸ்வரூபம்’ பார்க்கச் செலவிடுகிற உழைப்பாளி தமிழர்களை வேட்டி கட்டிய பொருளாதார அடியாட்களிடம் பிடித்துக்கொடுக்கிற வேலை கமலுக்கு எதற்கு? ‘சேலை... வேட்டி...’ என்பது வெறும் அரசியல் நையாண்டி மட்டுமல்ல. சரியான நடவடிக்கை எடுக்காத ஆண்களைப் பார்த்து ‘வேட்டியை அவிழ்த்துவிட்டு சேலையைக் கட்டிக்கொள்’ என்று கேலியாய் அல்லது கோபமாய்ச் சொல்கிற பழக்கம் இங்கு உண்டு. பிடிக்காத செயலைச் செய்கிற தலைவர்கள், அதிகாரிகள் போன்றோருக்கு சேலை, வளையல் என்று அனுப்பி வைக்கப்படுவதுண்டு. பெண்ணை இழிவுபடுத்துகிற இந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையோடு கமல் தன்னை அடையாளப்படு
த்திக்கொள்ளலாமா?
      எப்படிப்பார்த்தாலும் கமலின் பேச்சை ஆதரிக்க முடியவில்லை. அதற்காக மக்களின் திரைப்படத் தேர்வு உரிமையைத் தடுக்கிற அராஜக அரசியலையும் அனுமதிப்பதற்கில்லை.
       

செவ்வாய், 29 ஜனவரி, 2013

‘Yes, we spent money on paid news ads...!’


Confessions by politicians to EC belie 
claims of innocence by top newspapers 
- P. Sainath

        
        The political class is more honest than the media when it comes to ‘paid news’ during elections, judging by the fact that several poll candidates have owned up to this corrupt practice. At least, after the Election Commission and the Press Council of India shot off notices to them and held inquiries into the matter. They have acknowledged guilt by belatedly adding their “news” buying expenses to their election statement of accounts. Some candidates have accepted in writing that they bought what are now called, somewhat oxymoronically, “Paid News Advertisements.” But not a single one of the newspapers they say they gave their money to has accepted any wrongdoing. These are not just any papers. In readership terms, they include three top-ranked dailies.
        In some cases, the battles are still on, involving both the politicians and newspapers concerned. On January 15, the EC found that Madhya Pradesh Cabinet Minister Narottam Mishra “failed to lodge his accounts of his election expenses in the manner prescribed by law.” He faces possible disqualification. The EC’s notice to Dr. Mishra concerns 42 news items on him during the November 2008 state elections. These, it pointed out, “read more like election advertisement(s) in favour of you alone rather than (as) news reports.” The EC names four newspapers in its notice: Dainik Bhaskar, Nai Duniya, Aacharan and Dainik Datia Prakash. Dainik Bhaskar is the second most-read daily in the country.
              Less than a month earlier, the Press Council of India held quite a few dailies guilty of doing much the same thing during the 2010 Bihar assembly polls. These include Dainik Jagran, the newspaper with the highest readership in the country. The others are Dainik Hindustan, Hindustan Times, Dainik Aaj and Purvanchal Ki Raahi. Also, Rashtriya Sahara, Udyog Vyapar Times and Prabhat Khabhar.
        In many cases, the route to exposure followed the pattern set in the classic case of the former Congress Chief Minister of Maharashtra, Ashok Chavan. His 2009 poll campaign for the State legislature drew scores of full pages of “news.” Not a single one of those pages ever mentioned the name of Madhav Kinhalkar, his rival for the Bhokar seat. In a 2009-10 investigation into paid news, The Hindu found a hagiographical article on Mr. Chavan appear word for word in three major rival publications. In two of them, on the same day, in all of them under different by-lines (The Hindu, Nov. 30, 2009).
         The 2010 Bihar polls saw a similar pattern. This time, though, one paper came up with a truly novel defence. Same story in different papers? That’s not paid news, argues Udyog Vyapar Times. It submits that other newspapers “hack their computer site and publish the same news.” So what might look like paid news, contends Udyog Vyapar Times, is merely the outcome of desperate rivals hacking into the internal network of this Aligarh-based daily to steal their national exclusives.
        How did the candidates issued ‘Paid News’ notices for the Bihar polls by the EC react? All but one seem to have accepted their guilt. According to the EC, they did so by simply adding “the expenditure included by them on account of these ‘news’ in their accounts of election expenses.” In fact, the District Election Officer of Muzaffarpur in Bihar stated flatly that the dailies had carried “news for payment.” He even had letters from the candidates owning up to buying “news.”
         The Press Council of India, acting on the matter referred to it by the EC, issued show cause notices to Dainik Jagran, Dainik Hindustan, Hindustan Times et al, between July and September 2011. On December 21, 2012, the PCI, on the basis of its own inquiry committee’s report, got tough. Of the high-profile line-up, only Prabhat Khabhar escaped “the highest penalty” of the Press Council — censure — under Section 14 (1) of the Press Council Act of 1978. This was the only case where the paper and the candidate both firmly denied the charge. (In all the other cases, the candidates accepted they had purchased “news”.) And Prabhat Khabar’s own record — it has strongly campaigned against paid news — added weight to its defence. The paper offered to apologise if the EC produced proof of any such aberration. It was “cautioned for the future.”
      All the other dailies denied the charges, too. But, as the PCI’s inquiry committee puts it, “in all these cases, the candidate in question admitted before the Election Commission of India that he paid for the impugned material.” These dailies were found “guilty of having carried news reports that were in fact self-promotion material provided by the candidate in the fray,” and so faced the highest penalty of censure.
      So quite a few politicians seem willing to confess to their paid news sins. They face penalties, too. Just 16 months ago, the EC disqualified Umlesh Yadav, then sitting MLA from Bisauli in Uttar Pradesh, for a period of three years for failing to provide a “true and correct account” of her election expenses. She had skipped any mention of her spending on advertisements dressed up as news during her 2007 poll campaign. She was the first legislator ever to bite the dust on grounds of excessive expenditure (and paid news). Dr. Mishra, Health Minister in the BJP government of Madhya Pradesh, now faces charges of the kind that got her disqualified.
Ashok Chavan case
       Oddly enough, the Ashok Chavan case, which triggered off a spate of such cases, is itself bogged down in both the EC and the Supreme Court. The case of former Jharkhand Chief Minister Madhu Koda is likewise held up in the courts. Judicial delays could have a serious and possibly adverse impact in the fight against Paid News in the 2014 general election.
But what action do habitual offenders in the media face? The Paid News Committee constituted by the Election Commission has concluded that those 42 “news items” involving Dr. Mishra “appear to be advertisements in the garb of news” and fall “within the definition of ‘Paid News’.” The Press Council defines Paid News as “any news or analysis appearing in any media (print or electronic) for a price in cash or kind as consideration.” A Press Council team appointed by PCI Chairperson Justice Katju found last month that Paid News had been rampant in Gujarat during the State polls there in December 2012.
So what happens where media outlets concerned are found guilty? Where the “highest penalty” is censure and that draws not even an apology? Of course, Paid News is not only about elections, though that’s where it does greatest damage to the greatest number. 
           It is an everyday activity in much of the media. The cloying coverage that powerful corporations get routinely reeks of it. You can see it in some completely corporate “sporting” events or “partnerships.” Governments, too, buy “news” sometimes. You can see it at work in Davos, too. Who funds journalists and channels from India at that World Economic Forum event each year is worth looking at. But that’s another story. Watch this space.
 
sainath.p@thehindu.co.in
courtesy : The Hindu / 29.01.2013 

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

விஸ்வரூபம் - தணிக்கை குழு உறுப்பினர் ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம்...!

       
















     
          ''விஸ்வரூபம்'' படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளித்தது பற்றி இஸ்லாமிய அமைப்புகளினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு தணிக்கை குழு உறுப்பினராக இருக்கக்கூடிய திரு.  ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம் அளித்துள்ளார்.
( தி.மு.க.வைச் சேர்ந்த இவர் கடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டவர். தேர்தல் பிரசாரத்தின் போது  ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றவர்.  விஸ்வரூபம் சர்ச்சையி்ல் இவரையும் இழுத்துள்ளனர் )

ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
         தணிக்கைத் துறையில் பல மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தின் உணர்வையும் புண்படுத்தப்படுவதையும் தணிக்கைத்துறை விதிகள் அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில், படத்தைத் தணிக்கை செய்யும் உறுப்பினர்களும் தங்கள் சொந்த மதத்தின் கண்ணோட்டத்தில் தணிக்கை முறையைக் கையாள்வதில்லை.
             வழிகாட்டும் முறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகையிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்ததாகவோ காட்சிகள் இருப்பின் அவை நீக்கப்படுகின்றன.
           விஸ்வரூபம் படத்தைப் பொறுத்தவரை, தமிழில் அது தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பே இந்தி மொழியில் அப்படம் தணிக்கை செய்யப்பட்டது. அதன்பிறகே, தமிழ்ப் பதிப்பு மற்றும் தெலுங்கு தணிக்கை செய்யப்பட்டது. இந்தியிலும், தெலுங்கிலும் தணிக்கை செய்யப்பட்டபோதும் அந்தந்த மொழியறிந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
            ஒரு படம், வேறு மொழியில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறையாகும்.
               அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மொழியில் உள்ள வசனம் மற்றும் பாடல் வரிகளின் தன்மை, காட்சியமைப்புகளால் அந்த மொழி பேசும் பகுதியில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவை கவனத்தில் எடுத்து கொள்ளப்படவேண்டும் என்பதும் வழிகாட்டு நெறி முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
            அதனடிப்படையிலேயே ஒவ்வொரு படமும் தணிக்கைக்குள்ளாகிறது. படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை.
             தணிக்கைத் துறை உறுப்பினர், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும். தலிபான், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும் வேண்டுகோளுமாகும்.
                 இத்தகைய தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய காட்சிகளுடன் ஆங்கிலத்தில் ஹாலிவுட் படங்கள் பல வெளிவந்துள்ளன. வந்துகொண்டும் இருக்கின்றன. அவற்றுக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.
        நான் என் கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை, எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு      எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம், கிறிஸ்தவ மதம் உள்பட எந்தவொரு மதம் அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும்.
          அதை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தணிக்கைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலேயே என் கருத்தையும் முடிவுகளையும் தெரிவிக்கிறேன்.
            நான் ஏற்கனவே கூறியது போல, இறுதி முடிவு என்பது, படத்தைப் பார்க்கும் தணிக்கைத்துறை உறுப்பினர்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது.
                 தற்போதைய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதுவரை பொறுத்திருக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

இவ்வாறு ஜின்னா கூறியுள்ளார்.

விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் கமல்ஹாசன்....!

      இலஞ்சம் வாங்குகிற அரசு அதிகாரிகளைப் பற்றிப்  படம் எடுத்தா, அதிகாரிங்க கோச்சிப்பாங்க..
     அதிகமா துட்டு வாங்குகிற டாக்டரைப் பற்றிப்  படம் எடுத்தா, டாக்டருங்க கோச்சிப்பாங்க..
                போலீஸ்காரர்களைப் பற்றிப் படம் எடுத்தா போலீஸ்காரங்க கோச்சிப்பாங்க...
                வக்கீலைப் பற்றிப் படம் எடுத்தா வக்கீலுங்க கோச்சிப்பாங்க...
          படத்தை DTH - ல திரையிடப்போகிறேன் சொன்னா தியேட்டர்காரங்க கோச்சிப்பாங்க...
            முஸ்லீம்  தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா ஜவஹிருல்லா கோச்சிப்பாரு...
            இந்து தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா இராமகோபாலன் கோச்சிப்பாரு...
           அமெரிக்க அட்டூழியங்களைப் பற்றிப் படம் எடுத்தா ஒபாமா கோச்சிப்பாரு..
          'இவிங்க' ஆட்சியில இருக்கும் போது 'அவருடைய' கூட்டத்தில கலந்துகிட்டா 'இவிங்க' கோச்சிப்பாங்க...
     'அவரு' ஆட்சியில இருக்கும் போது 'இவிங்க' கூட்டத்துல கலந்துகிட்டா 'அவரு' கோச்சிப்பாரு...
          அதுக்கு படம் எடுக்கிறதையே நிறுத்தி விடலாமே... 
அப்படித்தான் கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஒரு குறைப்பிரசவமாக போய்விட்டது.           
        ஆரம்பத்திலேயே DTH - இல் திரையிடுவதற்கு கமல்ஹாசன் முடிவெடுத்த போதே திரையரங்கு உரிமையாளர்கள் முரண்டு பிடித்தார்கள். பிறகு கமல்ஹாசன் தனது முடிவை மாற்றிக்கொண்டு திரையரங்கில் திரையிட முடிவெடுத்து தேதியும் குறித்தாகிவிட்டது. இவைகள் எல்லாமே இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே நடக்கும் விஷயங்கள் ஆகும். தணிக்கைக் குழுவே எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் சான்றிதழ் வழங்கி பச்சைக்கொடி காட்டிய பின்னர், ஒரு மாநில அரசு எப்படி இஸ்லாமிய அமைப்பைக் காரணம் காட்டி படத்தை முடக்கி வைக்கமுடியும். அதுவும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் நிறுவனம் ஒன்று சட்டத்தின் அடிப்படையில் படத்தை தணிக்கை செய்து திரையிட அனுமதியளித்தப் பிறகு அதை ஒரு மாநில அரசு தடை செய்வது என்பது சட்டவிரோதமானது.
            திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதியளித்த பிறகு, அந்த படத்தை திரையிடலாமா என்று யாரிடமும் உத்தரவு கேட்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் கமல்ஹாசன் இஸ்லாமிய அமைப்பினர் கேட்டுக்கொண்ட போது, பிடிவாதம் பிடிக்காமல் 100 பேர் அடங்கிய இஸ்லாமிய அமைப்பினர்களுக்கு படம் திரையிடுவதற்கு முன்பே தனியாக போட்டுக் காண்பித்தது என்பது கமல்ஹாசனின் பெருந்தன்மையையும், நேர்மையையும் காட்டுகின்றது. நல்ல வேளை ஒபாமா கோச்சிப்பாருன்னு அவருகிட்டேயும் உத்தரவு வாங்கனும்னு யாரும் சொல்லவில்லை. ரசிகர்கள் தான் திரைப்படத்தை பார்த்து சரியா தவறா என்பதை முடிவு செய்யவேண்டுமே தவிர, குறிப்பிட்ட 100 பேர்கள் அல்ல. அவர்கள் சொல்லுவது போல தமிழக அரசும் படத்தை தடை செய்தது என்பதும் ஜனநாயகம் அல்ல. இந்த விஷயத்தில் ஏதோ ''அரசியல் நெடி'' அடிப்பது போல் தெரிகிறது. ''நாரத வேலையை'' செய்தவர் சக்கர நாற்காலியில் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருப்பது நமக்கு தெரிகிறது.
           தீவிரவாதத்தைப் பற்றிய மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. அது இந்துமத தீவிரவாதமானாலும், கிருத்துவமத தீவிரவாதமானாலும், இஸ்லாமிய தீவிரவாதமானாலும் அவைகள் அத்தனையும் எதிர்க்கவேண்டியவையே. எந்த மத தீவிரவாதத்தையும் அனுமதிக்க முடியாது. மனித இனத்தையே அழிக்கக்கூடிய - மனிதநேயத்தையே அழிக்கக்கூடிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட  வேண்டிய இந்த மதவாத அமைப்பினர் தீவிரவாதத்தை பற்றி திரைப்படத்தில் காட்டினால் அதை எதிர்ப்பது ஏன் ...? தீவிரவாதத்தினாலேயே  அழிக்கமுடியாத மதத்தை ஒரு திரைப்படத்தின் மூலம் அழித்துவிட முடியுமா...?
          திரைப்படம் என்பது ஒரு கற்பனை உலகம் தான். அது பலத்தரப்பட்ட தொழிலாளர்களை கொண்ட ஒரு கனவு தொழிற்சாலை. திரைப்படங்களை  ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமே பார்க்கவேண்டும். அது ஒரு கலை. அதற்கு மதமோ... சாதியோ கிடையாது என்பதை சாதிய, மதவாத அமைப்பினர் புரிந்துகொள்ளவேண்டும்.
         இப்படியே போச்சினா.... படம் ஷூட்டிங் நடக்கும் போதே ஜவஹிருல்லாவையும், இராமகோபாலனையும் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.            

சனி, 26 ஜனவரி, 2013

புதுச்சேரியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் தொடக்கம்...!





         நேற்று மாலை புதுச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையம் துவக்கிவைக்கப்பட்டது. ''தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம். கல்வி தெரியாதப் பேர்களே இல்லாமல் செய்வோம்'' என்ற மக்கள் கவிஞனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப தெருவெங்கும் கல்விக்கூடங்கள் கட்ட நமக்கு வசதியும் வாய்ப்பும் இல்லாவிட்டாலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுவை - தமிழகத்தில் 21 மாவட்டங்களில், தீண்டாமைக்கு எதிராக எழுந்த தீப்பந்தம் டாக்டர் அம்பேத்கர் பெயரில் ''கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையம்'' துவக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவிக்கும் வழக்கமான சடங்குகளுக்கு மத்தியில், அவர் எந்த ஒரு சமூகத்திற்காக போராடினாரோ, அந்த சமூகத்தின் ஏற்றத்திற்கான இயக்கமாகவே  - ஒரு போராட்டமாகவே இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 10 - ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு படிக்கும் தலித் சமூக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும், வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறையிலும், மத்திய - மாநில அரசுத் துறைகளிலும் வெலைவாய்ப்புகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவதற்கு வேலை தேடும் தலித் சமூக இளைஞர்களை பயிற்சிகள் கொடுத்து தயார்படுத்தும் இந்த பயிற்சி மையம் திட்டமிட்டுள்ளது.
           இந்த மையத்தை நேற்று மாலை புதுச்சேரி -  இலாசுபேட்டை, கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார மையக் கட்டிடத்தில் புதுச்சேரி மாநில நலத்துறை அமைச்சர் திரு. பி. ராஜவேலு துவக்கிவைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் திரு. எஸ். கே. பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் தோழர். வி. பெருமாள் மற்றும் பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். கே. கணேஷ் ஆகியோர் மையத்தை வாழ்த்திப் பேசினார்.
              இந்த மையம் எல். ஐ. சி முகவர்கள் சங்கம், எல். ஐ. சி. ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம், பி. எஸ். என். எல். ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சம்மேளனம், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம், சி. ஐ. டி. யூ ஆகிய ஊழியர் சங்கங்களின் ஒத்துழைப்புகளுடனும், நிதியுதவியுடனும் இந்த பயிற்சி மையம் நடத்தப்படவிருக்கிறது.  


























 

வெள்ளி, 25 ஜனவரி, 2013

Manik Sarkar, the frugal CM...!

            Tripura Chief Minister Manik Sarkar can arguably be dubbed ‘the cleanest and poorest’ chief minister in the country with personal property, movable and immovable, valued at less than Rs 2.5 lakh.
             According to the affidavit submitted by the 64-year-old Sarkar during filing of nomination in Dhanpur constituency on Thursday for the coming assembly elections, he had Rs. 1080 cash in hand and his bank balance stood at Rs. 9720.
         The CPI(M) leader is aiming for a fourth consecutive term in the northeastern state.
            He inherited a home of 432 sq. ft with a tin-shed house from his deceased mother Anjali Sarkar whose present market value was Rs 2,20,000.
However, his wife Panchali Bhattacharya who is a retired officer of the Central government has a cash fixed deposit of Rs 23,58,380 and jewellery of 20 gm of gold, the present market value of which is Rs 72,000. She has cash of Rs 22,015 in hand.
         Her family sources said she had got the money as her retirement benefit. The couple has no movable property and the total value of immovable property and cash is Rs. 24,52,395.
            A state Committee member of the ruling CPI(M), Haripada Das, who looks after the accounts of the party said, like other party members, Mr. Sarkar donates his full salary and subsidiary allowances to the party and instead the party pays him Rs. 5000 as subsistence allowances.
         According to official sources, the Chief Minister’s monthly salary is Rs 9,200 which, perhaps is the lowest in the country. When contacted, State Party Secretary Bijan Dhar said, “I can only say that he has no leaning for increasing his own personal property. He has dedicated his entire life for the party and people.”
          Even his bitter critics do not blame him for any kind of corruptions.
courtesy : The Hindu / 25.01.2013

செவ்வாய், 22 ஜனவரி, 2013

பொதுவாழ்க்கை பிரகடனம் - கம்யூனிஸ்ட்டுகள் என்றால் இப்படித் தான் இருக்கவேண்டும்...!

                                                                       
                                

தமிழருவி மணியன்,                         
வழக்கறிஞர், எழுத்தாளர், காந்திய சிந்தனையாளர்
      
  
  

             உண்மையான ஒரு கம்யூனிஸ்ட்டாக உலகில் வலம் வருவது ஓர் அரிய தவத்துக்கு ஒப்பானது. அடையாள அட்டைகள் வைத்திருப்பவர் எல்லாம் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவது இல்லை. மக்கள் நலனுக்காக வாழ்வை முற்றாக அர்ப்பணித்து, எள் மூக்கின் முனை அளவும் சுயநலமின்றி, தனிச் சொத்துடைமை துறந்து, எளிமை சார்ந்த வாழ்க்கையை மேற்கொண்டு, வர்க்க பேதமற்ற சுரண்டலற்ற சமுதாயத்தைச் சமைப்பதற்குப் போர்க்குணத்துடன் புரட்சிக்கான களம் அமைப்பவரே ஓர் உண்மையான கம்யூனிஸ்ட்டாக உருப்பெற முடியும். இன்று, கம்யூனிஸ்ட் கட்சிகளிலேயே கலப்படம் நிகழ்ந்துவிட்டது. நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே தமிழகத்தில் மார்க்சியத்தின் எச்சமாக நம் முன் நடமாடுகின்றனர். இத்தகைய சூழலில்தான் ''நானும் ஒரு கம்யூனிஸ்ட்'' என்கிறார் கலைஞர் கருணாநிதி. “ஐந்து தலைமுறை முதலமைச்சராக இருந்த எனக்கு ஒரேயொரு ‘தெரு வீடு’ தவிர வேறெந்த வீடும் இல்லை. அதையும் மக்களுக்குத் தானமாக எழுதிவைத்து விட்டேன்’ என்று கலைஞர் வழங்கியிருக்கும் வாக்குமூலத்தில் உண்மை சிலுவையில் அறையப்பட்டுவிட்டதை அறியாத தமிழர் யாராவது உண்டா? ஆலமரத்தின் விழுதுகள் போன்று பரவிப் படர்ந்திருக்கும் கலைஞரின் குடும்ப உறவுகளின் சொத்துப் பட்டியலை விரிவாக எழுத முயன்றால், விரல்கள் வலிக்குமே.
           அவ்வளவு சொத்தும் அறம் சார்ந்த வழிகளிலா வந்து சேர்ந்தது? கலைஞரைப் போல 90 வயதைத் தொட்டவர்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்வை வேள்வியாக நடத்தியவர்கள், ஆயிரம் இன்னல்களைத் தலைமறைவு வாழ்க்கையில் சந்தித்தவர்கள், மாநில முதல்வராக இருந்தவர்கள். செப்புக் காசும் தமக்கென்று சேர்க்காமல் இறுதிவரை வாழ்ந்து செத்தவர்கள், ‘தெரு வீடு’ கூட இல்லாதவர்கள் இருவரைப் பற்றி இன்றைய இளையதலைமுறை அறிவதன் மூலம் ''கலைஞர் ஒரு கம்யூனிஸ்ட்டா?'' என்ற கேள்விக்கு எளிதில் விடை காணக் கூடும். மகாத்மா காந்தி காண விரும்பிய பொது வாழ்க்கைப் பேரேட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய புனிதப் பெயர்கள் இரண்டு. 1. நிருபன் சக்ரபர்த்தி, 2. ஈ.எம்.எஸ். நம்பூதிபாட். இருவருமே காந்தியால் கவரப்பட்டு,தேச விடுதலைப் போரில் தியாகம் புரிந்து, மார்க்ஸியப் பொருளாதாரத்தில் மனம் ஒன்றிக் கலந்து கம்யூனிஸ்ட்டுகளாக மாறியவர்கள்; தாங்கள் பிறந்த மண்ணில் தவ வாழ்க்கை நடத்தி, மார்க்ஸியத்திடம் மக்களைத் திருப்பி, கம்யூனிஸ ஆட்சியை அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர்கள்; அகத்திலும் புறத்திலும் பொய்யின் நிழல் படாமலும், ஊழலின் மாசு படியாமலும் நம்மால் நம்ப முடியாதபடி வாழ்ந்து மறைந்தவர்கள். நிருபன் சக்ரபர்த்தி, தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டவர், கற்றறிந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தபோதும், ஏழைகளின் தோழனாய் தன்னைச் செதுக்கிக் கொண்டவர்; சணல் ஆலைத் தொழிலாளியாய், கூலியாளாய், ரிக்ஷா இழுப்பவராய், மலைவாழ் மக்களின் ஆசிரியராய், கல்கத்தாவின் புகழ் பூத்த இதழான ‘அமிர்தபஜார்’ பத்திரிகையாளராய் பல்துறை அனுபவங்களை அடைந்தவர். 1978 முதல் 1988 வரை கம்யூனிஸ்ட் முதல்வராக 10 ஆண்டுகள் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றிய நிருபன் ஓர் அதிசய மனிதர்.
         முதல்வராகப் பொறுப்பேற்றதும் ஒரு தகரப் பெட்டியுடன் அரசு வீட்டில் அடியெடுத்து வைத்தவர், 10 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி நடத்தி முடித்தபிறகு, அதே தகரப் பெட்டியுடன் ஒரு ரிக்ஷாவில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்து சேர்ந்தார் நிருபன். அவருடைய தகரப் பெட்டியில் சில ஆடை களும் சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகங்களும் மட்டும் தான் இருந்தன. ‘தெரு வீடு’ கூட இல்லாத துறவி நிருபன் ஏழ்மையும் எளிமையும் அழகு தரும் அணிகலன்களாய்ப் பூண்டு ஓர் உன்னதமான மார்க்ஸியராய் வாழ்ந்தார். இரண்டாவது முறை தொடர்ந்து நிருபன் திரிபுரா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வாழ்த்த வந்தவர்களிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். ‘இன்னமும் 60 சதவிகித மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்று வரை ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கவில்லை. இவற்றுக்காக என் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டியவன். எனக்கு வாழ்த்தும் பாராட்டும் பெறும் தகுதி இல்லை’ என்றவர் நிருபன். ஆனால், நம் கலைஞர் புகழுரைக்கும் விளம்பரத்துக்கும் வரவேற்பு வாழ்த்தொலிக்கும் ஏங்கி நிற்கும் இயல்பு கொண் டவர். ‘என்னிடம் பற்றும் அன்பும் கொண்ட தோழர்கள் எனக்கு விழா எடுக்கிறார்கள். அதுகண்டு வக்கற்றோர் வயிற்றெரிச்சல் படுவதா?’ என்று பொங்கும் கலைஞர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்டாக முடியும்? ''எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவுகூட மதித்ததில்லை. பல நாடுகளில் இருந்து எண்ணற்ற பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு. நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத்தால், அந்தப் பாராட்டுகளில் ஒன்றைக் கூட விளம்பரமாகப் பயன்படுத்துவதற்கு நான் அனுமதித்தது இல்லை'' என்று, மார்க்ஸ் தனது எழுத்தில் பதிவு செய்திருப்பதை நிருபன் அறிந்து வைத்திருந்தார். ஆனால், கலைஞர் அதை அறிந்திருக்க நியாயமில்லை. காரணம், அவர் எந்த வகையிலும் கம்யூனிஸ்ட் இல்லை. இந்தியாவில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்த, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிர்வகித்த அரிய வரலாற்று மனிதர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட். தன்னுடைய சிந்தனையாலும் செயல் திறனாலும் கேரள மக்களின் சமூக வாழ்வியலை மடைமாற்றம் செய்த மகாபுருஷர். இளமையில் காந்தியோடு இணைந்து, காங்கிரஸில் கலந்து, சோஷலிஸ்ட்டாக மலர்ந்து, இறுதிநாள் வரை மார்க்ஸியராக மணம் பரப்பியவர் ஈ.எம்.எஸ். ஒரு கம்யூனிஸ்ட்டாக நீண்ட நாள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி 1947ல் வெளிப்பட்ட நம்பூதிரிபாட் தன் குடும்பத்தின் திரண்ட சொத்துக்களை விற்று அதைக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குக் காணிக்கையாக்கினார். பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட ‘தேசாபிமானி’ வார இதழ், அந்தப் பணத்தில் தான் நாளிதழ் ஆனது. அந்த இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நம்பூதிரிபாட் தன்னுடைய 89- ஆவது வயதில் மரணத்தைத் தழுவிய நாளில் கூட மதச்சார்பின்மையின் அவசியம் குறித்து அந்த இதழுக்காக உதவியாளர் துணையுடன் கட்டுரை வடித்தார்.
           ஏராளமாக எழுதிக் குவித்த அவர் தன் எழுத்தின் மூலம் கிடைத்த பணத்தையும் இயக்கத்துக்கே அர்ப்பணித்தார். தான் பிறந்த மண்ணை 26 ஆண்டுகள் திரும்பிப் பார்க்க நேரமின்றி ஏழைக்கும் பாழைக்கும் ஓயாமல் உழைத்த அந்த மனிதர், தள்ளாத வயதிலும் தன் ஆடையைத் தன் கையால் துவைத்து அணிந்தவர். தோழர் நல்லகண்ணு இன்றும் தன் துணியைத் தானே துவைப்பவர். அவர்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள். நம் கலைஞரோ கழகத் தளபதிகளின் கறைபடிந்த அரசியல் பயணத்தில் தலைமை ஏற்று வழி நடத்துபவர். மாணிக்கங்களையும் கூழாங்கற்களையும் ஒரே கூடையில் அடுக்குவது அழகாகுமா? சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத்தைக் குடும்பச் சொத்தாகக் கூறு போட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அரவணைத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வீர வரவேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைத் தானே தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத்தமிழர் அழிந்த போதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர் குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப்பவர், சில்லரை வணிகத்தில் அந்நிய வர்த்தக முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம் நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி மத்தியாசை நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துக் கடுமையாகக் களப்பணி ஆற்றியவர், ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார். கேழ்வரகில் நெய் என்றால் கேட்பவர்க்கா புத்தியில்லை? நம்பூதிரிபாட் ஒருமுறைசொன்னார்: ‘நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு தனி மனிதன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ளும் தருணத்தில் தலைவனாக உயர்ந்து விடுகிறான். தன் சுகங்களுக்காகவும் தேவைகளுக்காகவும், கொள்கையில், லட்சியத்தில் சமரசம் கொள்ளும் தருணத்தில் தலைவன் என்ற தகுதியை இழந்துவிடுகிறான். ஓ... அதுதான் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தமுள்ள பொது வாழ்க்கைப் பிரகடனம்!

நன்றி : ஜூனியர் விகடன் (23.1.13) ஏட்டில் வெளியான கட்டுரையின் பகுதிகள்

திங்கள், 21 ஜனவரி, 2013

ராகுல் Vs மோடி - கருத்தைத் திணிக்கும் ஊடகங்கள்...!




என்னுடைய இந்த படைப்பு வண்ணக்கதிரில் பிரசுரமானது
**********************************************                      
        அனேகமாக இன்று எல்லா செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிலும் ஒரே தலைப்பைக் கொண்ட பட்டிமன்றங்கள் தான். பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தங்களது ''கருத்துத் திணிப்பு'' வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.  ''ராகுல் Vs மோடி'' - 2014 தேர்தலில் வெற்றிப்பெறப் போவது யார்...? என்பது தான் இன்றைக்கு சூடான செய்தியாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக 2014 தேர்தல் வரை இந்த செய்தி தான் ஓடிக்கொண்டிருக்கும். மக்களிடையே கட்டாய கருத்தைத் திணிக்கும் வேலையை  இன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தொடங்கிவிட்டன. இவர்களுக்கு தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையை விட  யார் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்ற சிந்தனையில் தெளிவாக இருக்கிறார்கள். இதைத் தான் அமெரிக்காவும், அந்நிய - இந்திய பெருமுதலாளிகளும் எதிர்ப்பார்க்கின்றனர்.  காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா...?  பா. ஜ. க ஆட்சிக்கு வருமா...? ராகுல் வந்தா நல்லாயிருக்குமா...? மோடி வந்தா நல்லாயிருக்குமா...? இப்படியான கருத்துக்கள் மக்கள் மத்தியில் திணிக்கப்படுகின்றன. அந்த இரண்டு பேரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவிற்கும், அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கும் சந்தோசம் தான். ஆனால் எந்த காரணம் கொண்டும் மக்களின் மூன்றாவது பார்வை இடதுசாரிக் கட்சிகள் மீது திரும்பிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதுவும் 2004 தேர்தலைப் போல் இடதுசாரிக் கட்சிகள் 62 இடங்களில் வெற்றிபெற்றது போல் இந்த முறையும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக  இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதற்கான பிள்ளையார் சுழியை தான் இன்று ஊடகங்கள் போட்டிருக்கின்றன.
            ஆனால் உண்மை என்னவென்றால், அந்த இரண்டு கட்சிகளில் எது ஆட்சிக்கு வந்தாலும், இந்த இரண்டு பேரில் யார் பிரதமாராக வந்தாலும் இந்த நாடு நாசமாக போய்விடும் என்பதையும்,  மக்கள் மோசம் போவார்கள் என்பதையும் இந்திய மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
               கடந்த பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான ஆட்சியினாலும், இன்றைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான  ஆட்சியினாலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல்களில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கும் இந்திய மக்களுக்கு தப்பித்தவறிக்கூட ''மாற்று சிந்தனை'' வந்துவிடக்கூடாது என்கிற பயம் அமெரிக்கா மற்றும் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கு இருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இடதுசாரிக்கட்சிகள் மீது மக்களின் பார்வை திரும்பி விடக் கூடாது என்பதற்காகத் தான் இப்படிப்பட்ட கருத்துத் திணிப்பை இன்றைக்கு ஊடகங்கள் அவசர அவசரமாக கையில் எடுத்துக்கொண்டுள்ளது.
             அதுமட்டுமல்ல, இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜனநாயகப்பூர்வமான பலக் கட்சி அரசியல் முறை என்பது அமெரிக்காவிற்கு பல ஆண்டுகளாக எரிச்சலூட்டும் விஷயமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ளது  போல் ''இரண்டு கட்சி ஆட்சி முறையை'' இந்தியாவிற்குள்ளும்  திணிப்பதற்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி முறையை தான் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளும் விரும்புகின்றனர். அதற்காகத் தான் இந்திய மக்களின் எண்ணங்களில் அதற்கான கருத்துக்களை திணிக்க வேண்டிய கட்டாயத்தில்  இன்றைய ஊடகங்கள் இறங்கியுள்ளன.
             யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்களின் ''வாக்குரிமை'' சம்பந்தப்பட்டது. மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுதந்திரமான சிந்தனைகள் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்றக் கருத்துத் திணிப்பு என்பது மக்களின் சுதந்திரமான எண்ண ஓட்டங்களை - சுதந்திரமான சிந்தனைகளை தடை செய்கின்ற விஷயமாகும். இது தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல. பத்திரிகை ஜனநாயகத்திற்கும் எதிரானது. கருத்து திணிப்பு என்பது கருத்து சுதந்திரமல்ல. அது போல் செய்வது என்பது பத்திரிகை தர்மமுமல்ல என்பதை பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
           ஊடகங்கள் இத்தோடு நிற்கமாட்டார்கள், அடுத்து வரும் காலங்களில் ''தேர்தல் கருத்துக் கணிப்பு'' என்ற பெயரில் இன்னொரு கருத்துத் திணிப்பை நடத்துவார்கள். கருத்துக் கணிப்பு என்கிற முடை நாற்றமெடுத்த குப்பைகளை மக்களின் மூலைகளில் வண்டி வண்டியாய் கொட்டுவார்கள். தேர்தலுக்கு முன்பே கருத்துக் கணிப்பு என்ற பெயரில் இவர்களாகவே தேர்தல் முடிவுகளை அறிவித்துவிடுவார்கள். இவர்களாகவே பதவியேற்பு விழாவையும் நடத்தி முடித்துவிடுவார்கள். இப்படித் தான் மக்கள் நடக்கவேண்டும் என்கிற தங்களின் விருப்பத்தை இப்படியெல்லாம் திணிப்பார்கள். வாக்காளர்களின் வாக்குரிமை என்பது வாக்களிக்கும் உரிமை மட்டுமல்ல. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தேர்ந்தெடுக்கும் உரிமையும் சேர்ந்தது தான் என்பதை மக்கள் உணர வேண்டும். இது போன்று கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களின் எண்ண ஓட்டங்களை - சிந்தனை ஓட்டங்களை தங்கள் விருப்பப்படி திசைமாற்றுவது என்பது வாக்களர்களின் வாக்குரிமைக்கு எதிரானது என்பதையும், ஜனநாயகத்திற்கு முரணானது என்பதையும்  ஊடகங்களுக்கு மக்கள் தான் பாடம் கற்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அந்த வேலையை செய்யாது.   அல்லது தலைமைத் தேர்தல் ஆணையம் வழக்கம் போல் இது போன்ற ''கருத்துத் திணிப்புகளையும், கருத்துக் கணிப்புகளையும்'' வேடிக்கைப் பார்க்காமல், ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். மக்களுக்கு வாக்களிப்பு சம்பந்தமான சுதந்திரமான சிந்தனைகளுக்கும், சுதந்திரமான தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் உத்திரவாதப்படுத்தவேண்டும்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

காங்கிரஸ் கட்சியின் ''மூளைச் சலவை'' கூட்டம் - மக்களிடையே எடுபடாது...!


       கடுமையான விலைவாசி உயர்வால் வாடிக்கிடக்கும் இந்திய நாட்டின் சாதாரண குடிமக்கள் ஒரு பக்கம். மத்திய அரசின் தவறான கொள்கைகளின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை எதிர்வரும் மக்களவைத் தேர்தல் நேரத்தில் எப்படி சந்திப்பது என்று புரியாமல் சோர்ந்துப் போயிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இன்னொரு பக்கம். தேர்தலுக்கோ இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் சூழ்நிலையில், தேர்தலை எப்படி சந்திப்பது என்பதை விட மக்களை எப்படி சந்திப்பது என்ற பயம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு வந்துவிட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் ஜெய்ப்பூரில் கடந்த நான்கு நாட்களாக ''சிந்தனை அமர்வு'' என்ற பெயரில் ஒரு ''மூளைச் சலவை''  கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது
              கூட்டத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை எப்படி மீட்பது...? எதிர் வரும் மத்திய பட்ஜெட்டில் வரிச்சுமையிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது...? நிலம், வேலைவாய்ப்பு, உணவு, கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு எப்படி இருக்கவேண்டும்...? கட்டுக்கடங்கா விலைவாசியை கட்டுப்படுத்துவது எப்படி...? போன்றவைகளைப் பற்றியெல்லாம்  ''சிந்தனை'' செய்வதற்காக - விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டம் என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் இது அதற்கான கூட்டமே அல்ல. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற மக்களவைத் தேர்தலில் எப்படிப்பட்ட ''வேஷங்களையும், கோஷங்களையும்'' போட்டு மக்களை ஏமாற்றலாம் என்பது தான் இந்த கூட்டத்தின் முதல் ''செயல் திட்டமாக'' இருந்தது.
             தற்போது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, வேலையிழப்பு, வருமானம் இழப்பு, உயராத வருமானம், உயர்ந்துகொண்டே போகும் விலைவாசி, சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக போய்விட்ட கல்வி, சுகாதாரம், மருத்துவம், உணவு உரிமை பறிப்பு, சில்லறை வர்த்தகத்தில் அன்னியர் நுழைவு, எங்கும் ஊழல் - எதிலும் ஊழல் போன்றவைகள் தான் ''பொருளாதார மேதை'' மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டுகால சாதனையாகும். இதை யாரும் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. இவைகளை மக்களே உணர்ந்திருக்கிறார்கள். எனவே இவற்றுக்கெல்லாம் காரணமான இந்திய பிரதமராக வேலையிலிருந்து கொண்டு அமெரிக்க எகாதிப்பத்தியத்திற்காக வேலை செய்துகொண்டிருக்கும் மன்மோகன் சிங் மீதும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு நாட்டிற்கெதிரான வேலைகளை செய்துகொண்டிருக்கும் சோனியா காந்தி மீதும் மக்கள் மிகுந்த கோபத்தோடும் எரிச்சலோடும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மக்களை நாடியை புரிந்துகொண்ட தான் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக மக்களை  சந்திக்கப் போகும் போது தங்களை மக்கள் விரட்டியடிப்பார்கள் என்ற பயத்தில், மக்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஒரு ''மாயஜால வித்தை'' உடனடியாக தேவைப்பட்டது. அந்த மாயஜால வித்தைக்கான ''மந்திரக்கோல்'' தான் இந்த ''யுவராஜ்''  ராகுல் காந்தி என்பதையும் மக்கள் எந்த வித மயக்கமுமில்லாமல், சலனமும் இல்லாமல் புரிந்துகொள்ளவேண்டும்.
          அதனால் தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்கு எரிச்சலூட்டும் மன்மோகன் சிங்கின் முகமூடியை கழட்டிவிட்டு, இப்போது யுவராஜ் ராகுலின் முகமூடியை போட்டிருக்கிறார்கள். இந்த முடிவு என்பது கட்சித் தொண்டர்களை எல்லாம் கலந்தாலோசித்து ஜனநாயக முறைப்படி எடுத்த முடிவல்ல. ஒரு சில மேல்மட்ட கட்சித்தலைவர்கள் மட்டுமே முன்மொழித்து திணிக்கப்பட்ட ''கருத்துத்திணிப்பு''  என்பதையும், அதற்கான ''மூளைச் சலவை'' கூட்டமே இந்த கூட்டம் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.
           இது முகமூடி மாற்றமே தவிர அரசியல் மாற்றமோ - கொள்கை மாற்றமோ அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது புதிய மொந்தையில் பழைய கள் தான்.   இந்த பழையக் கள்ளுக்கு மயங்கி காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரச் செய்தால், மிச்ச மீதி உரிமைகளும் பறிக்கப்படும். நாம் இனிமேலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைவரும். நம் நாடும், நாட்டின் செல்வங்களும் நம் கையைவிட்டு போய்விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
           நாமிருக்கும் நாடு நமதென்பதை அறிவோம்... நமக்கே உரிமையாம் என்பதறிவோம்... நமக்கான ஆட்சியை பற்றி சிந்திப்போம்... நமக்காக போராடுபவர்களை அடையாளம் காண்போம்... அவர்களுக்கே வாக்களிப்போம்... தேர்ந்தெடுப்போம்... 

செவ்வாய், 15 ஜனவரி, 2013

இன்று மாட்டுப் பொங்கல் - ஆனால் மாடுகள் இல்லை..!


                                  
            நேற்று பொங்கல் - உழவர் திருநாள் கொண்டாடினோம். ஆனால் உழவர் இல்லை. விவசாயமும் இல்லை. மிக வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். ஆனால் மாடுகள் இல்லை. அழிந்தேப் போய்விட்டன. உங்களுக்கு நினைவிருக்கிறதா...? நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் திருநாள் என்றால் ஒரே சந்தோஷமாக  இருக்கும். இரண்டு - மூன்று நாட்களுக்கு முன்பே நம் நண்பர்களுக்கும், தாத்தா - பாட்டி, சித்தப்பா - பெரியப்பா - மாமாக்களுக்கும் பொங்கல் வாழ்த்துகளை விதவிதமாக வாங்கி அனுப்புவோம். நகர் புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஏராளமான வாழ்த்து அட்டைக் கடைகள் இருக்கும். சிறுவர்கள் - பெரியவர்கள் என கூட்டம் அலைமோதும். அதேப்போல் கூட்டங்களை அஞ்சல் நிலையங்களில் பார்க்கலாம். அஞ்சல் நிலையங்களில் ஏராளமான பொங்கல் வாழ்த்து அட்டைகள் மலை போல் குவிந்திருக்கும். தபால்காரர் வீடுவீடாக ஏறியேறி பட்டுவாடா செய்வாரு. அந்த சமயங்களில் நம் வீட்டுக்கும் தபால்காரர் வருவாரா என்று நாம் வீட்டு வாசலில் நின்று கொண்டு காத்துகிட்டு இருப்போம். பொங்கல் முடிந்தப் பிறகும் வாழ்த்து அட்டை நமக்கு வந்துகிட்டே இருக்கும். இதெல்லாம் நமக்கான சுகமான அனுபவங்கள்.
          இன்றைக்கு இருக்கிறதா இது போன்ற அனுபவங்கள்...? வாழ்த்துஅட்டைகள் இல்லை. தபால் நிலையங்கள் இல்லை. தபால்காரரை பார்க்கமுடியவில்லை. அந்த சந்தோஷமான நேரங்களை எல்லாம் நாம் இழந்துவிட்டோம். அவைகளெல்லாம் உலகமயம் - தாராளமயத்தினால் அழிந்தே போய்விட்டன. அந்த மகிழ்ச்சியான தருணங்களை எங்கே தேடுவது...?   
           அதேப்  போல் தான் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். ஆனால் மாடுகளை பார்க்கமுடியவில்லை. முன்பெல்லாம் நாம் வாழும்  பகுதிகளிலேயே அக்கம் பக்கத்தில் ஆங்காங்கே மாடுகள் இருக்கும். மாட்டுப்பொங்கல் என்றால் அன்றைக்கு மாடுகளையும்,  கன்றுக்குட்டுகளையும்,  குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மஞ்சள் - குங்குமம் வைத்து, மாலை போட்டு வீதிகளில் விரட்டிச் செல்வார்கள். அதேப்போல் எருதுகளையும் வண்டிகளில் பூட்டி, சிறார்களை உட்கார வைத்துக் கொண்டு வீதிகளில் எருதுகளை விரட்டி ஓட்டிச் செல்வார்கள். இன்று இதற்கெல்லாம் வாய்ப்பில்லை. ஏனென்றால் மாடுகளே இங்கில்லை. அழிந்து போய்விட்டன.
         இன்று மாடுகள் அழிந்ததனால் கொண்டாட்டங்களை மட்டும் நாம் இழக்கவில்லை. நிம்மதியையும் வருமானத்தையும் நாம் இழந்திரூக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இன்று நம் பகுதிகளைச் சுற்றி மாடுகள் இல்லாததால் தான் புதிய புதிய வியாதிகள் நம்மை துரத்துகின்றன. மாடுகளின் நடமாட்டம் இருந்த போது அவைகள் போடுகின்ற சாணமும், கோமியமும் கிருமி நாசிநியாக செயல்பட்டு நோய் கிருமிகள் நம்மை நெருங்காதவாறு நமக்கெல்லாம் பாதுகாப்பாக இருந்தன. இன்றைக்கு சாணமும், கோமியமும் கிடைக்காததால், புதிய புதிய நோய்கிருமிகள் நம் நிம்மதியை இழக்கச் செய்கின்றன.
         நம் நாட்டில் மாடுகளை அழித்ததில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நம் நாட்டில் முன்னூறு - நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை விவசாயம் தான் முக்கியத் தொழிலாக இருந்தது. இராபர்ட் கிளைவ் இந்தியாவிற்குள் நுழைந்த போது தான் இந்திய மாடுகளுக்கு சோதனை காலமாக மாறியது. இராபர்ட் கிளைவ் இந்தியாவிற்குள் நுழைந்து நாட்டை சுற்றிப்பார்த்த போது, அவன்  அதிசயித்து போனது நம் நாட்டின் விவசாயத்தைப் பார்த்து தான். நம் நாட்டில் வளம் கொழிக்கும் விவசாயமாக இருந்தது. அதற்கு காரணம் அன்றைக்கு நம் நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் வளர்க்கப்பட்ட மாடுகள் தான் என்பது வரலாறு. அன்றைய காலக்கட்டத்தில் நம் நாட்டில் பசு மற்றும் எருது என நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
             மாடுகளின் கழிவுகளான சாணமும், கோமியமும் விவசாய வளத்திற்கு மிகவும் உதவி செய்தன. மாட்டின் சாணம் பயிர்களுக்கு எருவாகவும், கோமியம் பூச்சிக்கொல்லியாகவும் பயன்பட்டன. அதுமட்டுமல்லாமல், எருதுகள் ஏர் உழவும், போரடிக்கவும் பயன்பட்டன. அதேப்போல் அறுவடை முடிந்து நெல்மணிகள் போக விஞ்சியிருக்கும் வைக்கோல் விவசாயத்திற்கு உதவி செய்த அதே மாடுகளுக்கு வைக்கோலாக பயன்படுத்தப்பட்டன. வைக்கோலை வளமையாக உண்டு, பசுக்களும் மக்களுக்கு செழுமையாக பாலை வழங்கின. இப்படித்தான் மக்கள் - விவசாயம் -   மாடுகள் - மாட்டின் உழைப்பு - மாடுகளின் கழிவு -  விவசாயம் - உணவு - வைக்கோல் - பால் - என ஒரு சுழற்சியாக நாட்டிலுள்ள மக்களும், விவசாயிகளும், மாடுகளும் ஒன்றோடொன்று சார்ந்து இருந்தார்கள். அப்போதைய காலத்தில் மக்களும் விவசாயமும் மாட்டை நம்பித்தான் இருந்தார்கள். விவசாயத்தை அழித்து மக்களை தன்  கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டுமென்றால், மாடுகளை அழிக்கவேண்டுமென்று ''மதிகெட்ட ஆங்கிலேயன்'' இராபர்ட் கிளைவிற்கு தோன்றியது. எனவே இந்திய மாடுகளை அழிக்க தயங்காமல் முடிவெடுத்தான். அந்த கொடுங்கோலன் இராபர்ட் கிளைவ் ஒரு ஆண்டில் மட்டும் பசு - எருது என ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகளை கொன்று குவித்தான். அன்றைய காலக்கட்டத்திலிருந்து தான் இன்றுவரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்ற மிச்சமீதி மாடுகளையும் இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் உலகமயம் - தாராளமயம் என்ற பெயரில் அழித்துக்கொண்டிருக்கின்றன என்பது தான் நாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கும் எதார்த்தம். அதனால் தான் இன்று நாம் மாடுகளை இழந்துவிட்டு நிர்க்கதியாய் நிற்கின்றோம்.
            இன்று பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் திருநாளில் விவசாயத்தை இழந்தோம்... விவசாயிகளை இழந்தோம்... மாடுகளை இழந்தோம்... வாழ்த்து அட்டைகளை இழந்தோம்...
தபால் நிலையத்தை இழந்தோம்... தபால்காரரை இழந்தோம்... உறவுகளை இழந்தோம்... சந்தோஷங்களை இழந்தோம்....
            நாளை மீதமிருக்கும் பொங்கல் பானைகளையும், பச்சரிசி - வெல்லத்தையும், கரும்பையும் இழக்கப்போகிறோம். இனி பொங்கல் பண்டிகையை தொலைக்காட்சியிலும், பேஸ் புக்கிலும் மட்டுமே பார்க்கமுடியும். அந்த காலம் வெகுதொலைவில் இல்லை.

தலைக்கு தலை - இரத்தத்திற்கு இரத்தம் - பழிக்குப் பழி -தீர்வாகாது....!

                சென்ற வாரம் இந்திய - பாகிஸ்தான் காஷ்மீர் எல்லைகளை பிரிக்கும் ''லைன் ஆப் கண்ட்ரோல்'' எல்லைப்பகுதியில் திடீரென பாகிஸ்தான் எல்லைப்படை வீரர்கள் இந்திய எல்லையில் காவலில் இருந்த நம் படை வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு இந்திய படை வீர்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இந்தியப்படை சுட்டதில் இரண்டு பாகிஸ்தான் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் கொடுமை என்னவென்றால், கொல்லப்பட்ட இரண்டு இந்தியப் படைவீரர்களில் ஒருவரான ஹேம்ராஜ் என்ற வீரரின் தலையை மட்டும் பாகிஸ்தான் படைவீரார்கள் துண்டித்து சென்றுவிட்டனர். இது மனித இனம் ஏற்றுக்கொள்ள முடியாத மிகப்பெரிய கொடூரம் ஆகும். இந்த கொடூரத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர்  உட்பட சில அரசியல் கட்சித்தலைவர்கள் மட்டுமே கடுமையாக கண்டித்தனர். வழக்கம் போல் ''மவுன சாமியார்'' மன்மோகன் சிங் இது பற்றி வாயை திறக்கவில்லை. என்றாலும் இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எல்லையில் பதட்டமாக காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
              இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி இருநாட்டிலும் உள்ள அமைதியை விரும்பாத பிரிவினை சக்திகள் எப்படியாவது இந்த இரு நாடுகளுக்கும் போர் நடைபெறாதா...? அதை அரசியலாக்கி குளிர்காயலாமா என்று துடித்துகொண்டிருக்கின்றன.
             இங்கே இந்தியாவிலும், மதவாத அமைப்புகளான பாரதீய ஜனதா கட்சியும் சிவசேனா கட்சியும்  இந்த பிரச்சனைகளை அரசியலாக்கி ஆதாயம் காண துடித்துக் கொண்டிருக்கின்றன. 1999 - ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கார்கில் போரை தனக்கு சாதகமாக அரசியலாக்கி ஆதாயம் கண்டது போல், தலைத் துண்டிக்கப்பட்ட படை வீரரை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேடத் துடிக்கின்றன இந்த காவிக் கூட்டங்கள். மத்தியில் ஆட்சியாளர்கள், தன் நாட்டு படைவீரரை இழந்த தவிப்பும் இல்லாமலும், குடும்பத்தலைவரை இழந்து தவிக்கும் அந்த படைவீரரின்  குடும்பத்திற்கு - அதுவும் அவரது தலை கிடைக்காத இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தரவேண்டும் என்ற பொறுப்பும் இல்லாமலும் இருக்கும் சூழ்நிலையை பாரதீய ஜனதா கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. மக்களுக்கு இன உணர்வைத் தூண்டி அதில் குளிர் காயலாம் என்று துடித்துக்கொண்டிருக்கிறது. நேற்று உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கொல்லப்பட்ட படைவீரரின் குடும்பத்தினரை சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூற சென்றவர்கள் விஷமத்தனமாக பேசியிருக்கிறார்கள். அதிலும் நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ''இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் தராவிட்டால் பாகிஸ்தானின் 10 வீரர்களின் தலையையாவது நம் படைவீரர்கள் துண்டித்து எடுத்துவர வேண்டும்'' என்று பேசியிருப்பது மக்களின் உணர்வுகளை தூண்டும் செயலாகும்.
           இந்த பதட்டமான சூழ்நிலையில் இரு நாடுகளும் அமைதி காப்பதே இப்போதைய அவசியத் தேவையாகும். எந்த சூழ்நிலையிலும் தங்களது பொறுப்புகளை மறந்து செயல்படக்கூடாது. 2003 - ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலிருக்கும் ''போர்நிறுத்த'' ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி இருப்பது என்பது கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த இரு நாடுகளுக்கும் இடையில் பலக் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது என்பது அமைதியை விரும்புபவர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
          இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு நாடுகளின் ஆட்சியாளர்களும், இந்த நாடுகளிலுள்ள எதிர்கட்சிகளும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். இரு நாடுகளின் அமைதிக்கோ - ஒற்றுமைக்கோ பாதகம் வராமல் ஒத்துழைக்க வேண்டும். இது தான் இரு நாடுகளுக்கும் இன்றைய அவசியத் தேவை என்பதை உணர்ந்து செயல் படவேண்டும். பேச்சுவார்த்தை மட்டுமே இருநாடுகளின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தீர்வாகுமே தவிர தலைக்குத் தலை - இரத்தத்திற்கு இரத்தம் - பழிக்குப் பழி தீர்வாகாது. பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் சிவசேனா போன்ற மதவாத கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த பிரச்சினையை பெரிதாக்குகின்றன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.