காங்கிரஸ் கட்சியின் மெகா ஊழல்களிலிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் ''வளர்ச்சி நாயகனாகிய'' நான் ஆட்சிக்கு வரவேண்டும். நான் ஆட்சிபொறுப்புக்கு வந்துவிட்டால் நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும். சாதாரண டீக்கடை வைத்து அரசியலில் முன்னுக்கு வந்த நான் அரசியலில் நேர்மையானவன். நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பது மட்டுமல்ல. இந்திய பணக்காரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தையெல்லாம் மீட்டுவந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் பதினைந்து இலட்சம் ரூபாயினை போடுவேன்'' என்றெல்லாம் வார்த்தை ஜாலங்களை மக்களிடம் உதிர்த்து, தன்னுடைய வார்த்தை ஜாலங்களை மக்கள் நம்புவதற்காக இந்திய கார்ப்பரேட் ஊடகங்களையும், அதற்கு ஆகிற செலவுகளை கோடிக் கோடியாய் கொட்டுவதற்கு பெருமுதலாளிகளையும் பயன்படுத்திக்கொண்டு, 31 சதவீத மக்களை தன் வலையில் விழச்செய்து அவர்களின் வாக்குகளை மட்டுமே பெற்று எண்ணிக்கை அடிப்படையில் நரேந்திரமோடி மத்தியில் ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு நிறைவுபெறுகிறது.
இவர் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து 30 நாள், 100 நாள், 200 நாள், 300 நாள், 365 நாள் என ஒரு சினிமா படத்தை ஓட்டுவது போல் தான் ஆட்சியை ஒட்டினாரே தவிர, தேர்தல் நேரத்தில் இவர் உதிர்த்த வார்த்தை ஜாலங்கள் என்பது மாயாஜாலங்களாகவே போய்விட்டன. அவர் சொன்னது போல் தேனாறும் பாலாறும் ஓடவில்லை. மக்கள் பதினைந்து இலட்சத்தை எதிர்ப்பார்த்து ஏமார்ந்தது தான் மிச்சம். விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே போய்கொண்டிருக்கிறது. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில்லை. வேலையிலிருப்பவர்களுக்கு வருமான உயர்வு இல்லை. மக்கள் விழி பிதுங்கி, நாக்கு வெளியே வந்து சாகிறார்கள். வருமானமின்மையால் விவசாயிகள் மட்டுமல்லாமல், இப்போது தொழிலாளர்கள், ஊழியர்களும் தற்கொலை சாவில் பங்குப் போட்டுக்கொள்கிறார்கள்.
நாட்டில் இப்படி எல்லாம் பிரச்சனைகள் இருக்க மோடியின் அமைச்சர்களும், எம்பிக்களும், அவரது கட்சிக்காரர்களும் திட்டமிட்டே இஸ்லாமிய மக்களையும், தலித் மக்களையும் வம்புக்கு இழுத்துக்கொண்டும், கலவரங்களை நடத்திக்கொண்டும், அமைதியை குலைத்துக்கொண்டும் இந்த பிரச்சனைகளை மக்களின் பார்வைகளிலிருந்து திசைத்திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. ''இஸ்லாமியர்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செய்யவேண்டும்... விரும்பி மதம் மாறிய இந்துக்கள் மீண்டும் இந்து மதத்திற்கு வரவேண்டும்... இந்து பெண்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.... இஸ்லாமிய பெண்களுக்கு கருத்தடை செய்யவேண்டும்... தலித் மணமகன் குதிரை ஊர்வலம் சென்றால் அடி-உதை... தலித் இளைஞன் தன்னுடைய செல்லிடபேசியில் அம்பேத்கர் ''ரிங்டோன்'' வைத்திருந்தால் கொலை... இஸ்லாமியர்களோ தலித் மக்களோ மாட்டிறைச்சி சாப்பிட தடை... சாப்பிட்டால் சிறை தண்டனை... மாட்டிறைச்சி சாப்பிட வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்...'' இப்படியெல்லாம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மோடியின் ஆட்கள் விஷத்தை கக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடியோ இதுவரையில் அதை கண்டித்ததே இல்லை என்பதும் தான் உண்மை. இது தான் மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சியின் ஓராண்டு சாதனையாக பொதுமக்கள் பார்க்கிறார்கள்.
இது மட்டுமா மோடியின் சாதனைகள்...? இன்னும் இருக்கின்றனவே...! அந்நிய பயண மோகம் கொண்ட பிரதமர் மோடி கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை செலவு செய்து கடந்த பன்னிரெண்டு மாதங்களில் பத்தொன்பது நாடுகளுக்கு பயணம் செய்து வரலாறு படைத்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு சென்று இரு நாடுகளுக்கான நல்லுறவுகளைப் பற்றி பேசுகிறாரா...? என்றால் இல்லை. அந்த நாடுகளில் வாழும் இந்தியர்களையும், அந்த நாட்டு மக்களையும் கவருவதற்காக வகைவகையான ஆடை அலங்காரங்கள், போட்டோவிற்கு ''போஸ்'' கொடுப்பது, இளைஞர்களோடு ''செல்ப்பி'' எடுத்துக்கொள்வது போன்ற கோமாளித்தனங்களையும் மோடியின் ஓராண்டுகால சாதனைகளில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இவைகள் தவிர நாட்டின் வளர்ச்சி... மக்களின் பொருளாதார வளர்ச்சி அனைத்தும் பூஜ்ஜியம் தான். பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியம் நடத்தும் ''போஸ் பாண்டி'' மோடியின் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏமாற்றமும், வெறுப்பும், கோபமும் தான் உள்ளது என்பதும் யாராலும் மறைக்கமுடியாத உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக