அண்மையில் விகடனில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் செய்தி. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டிருக்கிறது. கடந்த 2013-14 ஆம் ஆண்டில் தமிழக அரசு தன்னுடைய ''இலட்சிய திட்டமான'' டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்காக எந்தெந்த மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களிலிருந்து எவ்வளவு தொகைக்கு மதுபான பாட்டில்களை கொள்முதல் செய்திருக்கிறார்கள் என்ற விபரங்களை பெற்று வெளியிட்டிருக்கிறார்கள். இதில் பீர் கொள்முதல் கணக்கைப் பற்றி தரப்படவில்லையாம். அதையும் சேர்த்தால் இன்னும் பலகோடிகளை தாண்டும். இது கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டின் நிலைமை தான். கடந்த ஆண்டின் கொள்முதல் என்பது இன்னும் அதிகமாக இருக்கும். நடப்பு ஆண்டிற்கான கொள்முதல் ''மடை திறந்து ஓடும்'' அபாயம் இருக்கிறது. ஏனென்றால் நடப்பு தமிழக அரசின் பட்ஜெட்டே டாஸ்மாக்கை நம்பித்தான் போடப்பட்டிருக்கிறது. அன்றைய முதலமைச்சரும், இன்றைய நிதியமைச்சரும் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்போது, டாஸ்மாக்கிற்கு ரூ.30,000 கோடி அளவிற்கு இலக்கு வைத்து, இந்த மதுபான விற்பனையிலிருந்து வரும் வருவாயை வைத்து தான் பட்ஜெட்டில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையை ஈடுசெய்யவேண்டும் என்று கணக்கை நேர் செய்து பேசினார். அப்போதே பட்ஜெட்டிலுள்ள தள்ளாட்டம் நமக்கு புரிந்தது. டாஸ்மாக்கில் தானடா தமிழக அரசே செயல்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஓட்டுகள் பொறுக்குவதற்கு இந்த விஷயத்தில் திமுகவும், அதிமுகவும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. இதில் மட்டும் மாற்றுக் கருத்தில்லாமல் ஒத்துப்போகிறார்கள். தமிழகத்தின் குடி கெடுத்தவர்கள் இவர்கள் தான் என்பதை டாஸ்மாக்கினால் பாதிப்படைந்த குடும்பம் நிச்சயம் மறந்திருக்காது. ''குடி குடியை கெடுக்கும்'' என்று போதனை செய்துகொண்டே ''குடி கொடுத்து எங்கள் குடியை கெடுக்கும் அரசே'' என்று கொதிக்கவேண்டாமா தமிழக மக்கள்...? அந்த குடியின் வருமானத்தில் அரசு வாங்கிக்கொடுக்கும் இலவசங்களை மறுக்கவேண்டாமா தமிழக மக்கள்...? சிந்தித்து பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக