புதன், 13 மே, 2015

நீதிமன்றம் மீதான நம்பிக்கை குலைந்துவிடும்...!

              
           நேற்று முன் தினத்திலிருந்து ஜெயலலிதாவும் அவரது கட்சிக்காரர்களும் நிம்மதியாக உறங்கியிருப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக எழுதப்பட்டுவிட்டது. அதற்காக அவர்கள் என்ன விலை கொடுத்திருப்பார்கள் என்றெல்லாம் மக்கள் யூகித்துப் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனென்றால் தேர்தலில் வெற்றிக்கே கோடிக்கணக்கில் பணத்தை இறைத்தவர்கள் தானே இவர்கள் என்ற அனுபவம் மக்களுக்கு இருக்கிறது. அதனால் அவர்கள் யூகிப்பது சரியாகத்தான் இருக்கும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். 
           தீர்ப்பின் நகல் வெளியானப்பிறகு இரண்டு விதமான சந்தேகங்கள் நமக்கு எழுகிறது. 
              ஒன்று... நீதிபதி அவர்கள் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளின் வரவு -செலவு கணக்குகளை போட்டு கடைசியில் என்ன சொல்கிறார் என்றால், ''வருமானத்தில் பத்து சதவீதம் வரையில் வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்க்கலாம். அதை அனுமதிக்கலாம்'' என்ற வாதத்தையும் வைத்து, அதற்கான  இரண்டு ஆதாரங்களையும் சுட்டிக்காட்டி 919 பக்க தீர்ப்பின் மூலம் ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார். 
          நமக்கு என்ன கேள்வி எழுகிறது என்றால், வருமானமே இல்லாதவன் வறுமையின் காரணமாக, பசியின் காரணமாக பிக்பாக்கெட் அடித்தாலோ அல்லது  வீடு புகுந்து அண்டா திருடினாலோ அவனுக்கு தண்டனையளிக்கிற நீதிமன்றம், அதிகாரத்திலிருப்பவர்கள் - மக்களுக்கு சேவை செய்ய என்று வந்தவர்கள் தங்கள் வருமானத்தை விட அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்கிறார்கள் என்றால் அந்த கோடி என்பது பத்து சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் தவறில்லை. பாவம் அப்பாவி பிழைக்கத் தெரியவில்லை என்ற பொருளில் அவர்களை தண்டிக்காமல் விடுதலை செய்வது என்பது எந்தவகையில் நியாயம்...? அது நீதி ஆகுமா...? அனைவருக்கும் சமமான நீதி என்பது இது தானா...? சாமானியனுக்கு ஒரு நீதியும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதியும் வழங்கும் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்...?
      ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என   ஏராளமான கணக்கு வழக்குகளை எல்லாம் போட்டுக்காட்டி, பாவம் அந்த அம்மா  சொத்து சேர்த்தது என்னவோ  8.12% தான். பத்து சதவீதம் வரை சேர்க்கலாமென்று சட்டம் சொல்லுது. அதனால அவங்கள விடுதலை செய்கிறேன். நான்கு ஆண்டுகள் தண்டனையும் கிடையாது. 100 கோடி தண்டமும் கட்டவேண்டாம். அதுமட்டுமல்ல அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த அத்தனை பொருட்களையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்றும் 919 பக்கத் தீர்ப்பில் ஜட்ஜ் அய்யா குறிப்பிட்டிருக்கிறார். 
         எனக்கு என்ன கேள்வி எழுகிறது என்றால் பத்து சதவீதம் வரையில் திருடினால் அது திருட்டு இல்லையா...? பத்து சதவீதம் என்பது குறைவாக தெரியலாம்,  ஆனால் அதன் மதிப்பு பல கோடிகள் ஆச்சே...! கோடிகளை திருடினால் அது பரவாயில்லையா...? இது  என்ன அளவுகோல்...? சாமானியர்களுக்கு ஒன்றும், அதிகாரத்திலிருப்பவர்களுக்கு வேறோன்றுமான அளவுகோல். நீதிமன்றத்தில் இருக்கும்  நீதி தேவதை இரண்டு விதமான தராசுகளையா வைத்திருக்கிறாள்...? இப்படிப்பட்ட தன்மை கொண்ட நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்...? 

             இரண்டு... கடந்த நான்கு மாதகாலமாக ஒரு நீதிபதி ஒரு நீண்ட நெடிய பக்கங்களை கொண்ட தீர்ப்பை எழுதுகிறார் என்றால் அதில் கவனக்குறைவாக இருக்கலாமா...? தவறான கணக்கைப் போட்டு அதைக்காட்டி விடுதலை செய்வது என்பது எந்தவகையில் தர்மமாகும். அப்படி செய்வது என்பது எதிர்காலத்தில்  தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா...?  அப்படியென்றால் நீதிபதி குற்றவாளியை விடுதலை செய்வதில் காட்டிய  வேகத்தில் கணக்கு போடுவதில் தவறு செய்துவிட்டார் என்று பொருள்கொள்ளலாமா...?  இப்படியான தீர்ப்பு என்பது வருங்கால தலைமுறைக்கு தவறான பாடமாக அமைந்துவிடக்கூடாது. எதிர்காலத்தில் இது தவறு செய்யும் ஆட்சியாளர்களும் தண்டனை இல்லாமல் தண்டனை இல்லாமல் தப்பிப்பதற்கு முன்னுதாரணமாக காட்டும் நிலை வரும். எனவே கர்நாடக அரசு தாமதிக்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்பது நடுநிலையான மக்களின் எதிர்பார்ப்பாகும். 

கருத்துகள் இல்லை: