கட்டுரையாளர் : பிரசன்னா, கணினி மற்றும் இணைய வல்லுநர்
வெகுஜன ஊடகங்களான தினசரி நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிற்கும், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இணையத்துக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடு காரணமாகத்தான் இணையத்தில் நாம் அனைவரும் நேரத்தைக் கணக்கில் கொள்ளாமல் அதனைச் செலவிடுகிறோம். வேறுபாடு என்று நாம் குறிப்பிடுவது எதனை...?
நாளிதழில் நாள்தோறும் வெளிவரும் செய்திகளைப் படிக்கின்றோம். வானொலியில் செய்திகள், பாடல்கள், வர்ணனைகளைக் கேட்கிறோம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். இந்த மூன்றிலும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், மக்களாகிய நாம் வெறும் பார்வையாளராக ( படிக்கவோ, கேட்கவோ அல்லது பார்க்கவோ ) மட்டுமே இருக்கிறோம். நம்மால் நேரடியாக உடனுக்குடன் அதில் பங்குக் கொள்ள முடியாது. தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளலாமே என்று நீங்கள் கூறலாம். ஆனால் இவை மூன்றுக்கும் அது ஒரு துணைக்கருவிதான்.
அவற்றுக்கு முரணாக, இணையம் என்பது அடிப்படையிலேயே மக்களை இணைக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டது. இதில் மக்கள் பங்கெடுத்தால் தான் இணையமே உயிர்ப்புடன் இருக்கும். இணையத்தில் ஒரு செய்தியினை படிக்கும் அதே நேரத்தில் நம்மால் அதில் நம் கருத்துக்களை பதிய முடிகிறது. இங்கே ஒரு குட்டி விவாதம் நடத்தவோ அல்லது அரட்டை அடிக்கவோ முடிகிறது. அதனை உடனடியாகப் பலருடன் பகிர்ந்துக் கொள்ளவும் முடிகிறது. அதாவது நம்மைப் பலவற்றோடு இணைத்து நமது பங்களிப்பை உறுதி செய்வது தான் அந்த மாபெரும் வேறுபாடு.
யூடியூப் (youtube), விமியோ (vimeo) போன்ற வலைதள சேவைகள்மூலம் இன்று பலர் தங்கள் படைப்பாற்றல்களை காணொளிகளாகப் பதிவு செய்து, அவற்றை உலகில் உள்ள எவரும் காணும் வகையில் பதிவேற்றம் செய்ய முடிகிறது. வேர்ட்ப்ரெஸ் (WordPress) போன்ற மென்பொருட்கள் அல்லது வலைப்பதிவுகள்மூலம் தங்கள் கருத்துக்களை எழுத்து வடிவில் கட்டுரையாகவோ, கவிதையாகவோ மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. சமூக வலைதளங்களில் நண்பர்கள், உறவினர்கள், அன்பர்கள் என அனைவரோடும் நேரத்தைச் செலவிட முடிகிறது. இணையம் என்கிற ஊடகமே, வெறும் பார்வையாளராக இருந்த மக்களை பங்கேற்கவைத்தும், அவர்களுக்கு பிடித்தவற்றை உருவாக்கவைத்தும் ஊடகத்தின் ஒரு அங்கமாக அவர்களை மாற்றியிருக்கிறது.
இதைத்தான் ''மக்களுக்கான இணையம்'' என்று நாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. ஏன் என்று பார்ப்போம். ஒருவரின் படைப்புகளையும், கருத்துக்களையும் பலரோடு இணைக்கும் இந்த இணையத்தில் பல சிக்கல்கள் உள்ளன.
- பலதரப்பட்ட மக்கள் ஒன்றுகூடும் இந்த மாயவுலகில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அவர்களின் இலாபத்திற்காகவும், அடக்குமுறைக்காகவும் வெகுஜன மக்களை இதில் உலவு (Mass Surveillance) பார்த்து வருகின்றனர். விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சே, முன்னாள் அமெரிக்க துறை அதிகாரியான எட்வேர்ட் ஸ்னோடன் ஆகியோர் இவற்றை அம்பலப்படுத்தியுள்ளனர். இணையத்தில் கருத்துச் சுதந்திரம் உண்டு என்றாலும்கூட, தொடர்ந்து யார் யார் என்ன செய்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதை அந்நிறுவனங்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன என்பது எவ்வகையிலும் சுதந்திரமாகாதல்லவா? இப்படி கண்காணிக்கப்படுவது தெரிந்தாலே மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும். பிறகு எப்படி கருத்துக்களை சமூகத்தில் தைரியமாக ஒருவரால் சொல்ல முடியும்?
- அதையும் மீறி ஒரு சிலர் சொன்னாலும் கூட, இன்டெர்நெட் சென்ஸார்ஷிப் (Internet Censorship) எனப்படும் வழிமுறையை அதிகாரங்கள் கையில் எடுக்கின்றன. அதாவது குறிப்பிட்ட தளங்களைத் தடை செய்வது, அவற்றை இணையத்தில் கிடைக்கவிடாமல் செய்வது போன்று, மக்கள் இணையத்தில் எதைப் பார்க்க வேண்டும், எதைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் சுதந்திரம் மக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. சமீபத்தில் ‘IT ACT 66A’ என்னும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சட்டப்பிரிவு உச்சநீதிமன்றத்தால் செல்லாது என்றே தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தச் சட்டப்பிரிவை பயன்படுத்தித்தான் இணையத்தில் மக்களின் கருத்துக்களை தடை செய்யவோ அல்லது அதற்காக அவர்களைக் கைது செய்யவோ முடிந்தது. உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க இத்தீர்ப்பிற்காக, பல இணைய ஆர்வலர்கள் கடுமையாகப் போராடவேண்டியிருந்தது.
- அரசு அதிகாரத்தையெல்லாம் தாண்டி வந்தால், முதலாளிகளும், தனியார் நிறுவனங்களும் இணையம் மூலம் மக்களின் நேரத்தைத் திருடி, தகவல்களை விற்று பணமாக்கி சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் இணையத்தை பயன்படுத்துகிறோம் என்றால், அதற்கான உள்கட்டுமான வசதிகளை வழங்குபவர்களைத்தான் நாம் இணைய சேவை வழங்கும் BSNL, Airtel, Vodafone, Aircel, Idea, Reliance போன்ற நிறுவனங்களை ஐ.எஸ்.பி. (Internet Service Provider – ISP) என்று அழைக்கிறோம். இவர்களிடம் உள்ள இந்த உள்கட்டுமான அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் எந்தெந்த தளங்களைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பார்க்கிறார்கள். சில தளங்களை இலவசமாகவும், சிலவற்றை அதிக கட்டணம் செலுத்தி பெறுமாரும், இணையத்தின் ஆணிவேரையே அசைக்கப்பார்க்கிறார்கள். அதன் மூலம் தங்கள் இலாபத்தைப் பெருக்கவும் திட்டமிடுகின்றனர். இதைத்தான் சமீபத்தில் ‘நெட் நியூட்ராலிடி (Net Neutrality) மீறுதல்‘ என்று சமூக வலைதளங்களில் பலரும் பேசுவதை நீங்கள் தொடர்ந்து பார்த்திருக்கக்கூடும். சமச்சீரான இணையத்தை உடைக்கும் முயற்சி இது.
இவ்வாறு பல வகைகளில் அவரவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனநாயகம் என்று மார்த்தட்டிக்கொள்ளும் பல நாடுகளில் (இந்தியா உட்பட) மக்களின் கைகளில் அதிகாரமும், உரிமையும் சென்றுவிடாமல் தடுக்கப்படுகிறது. இப்பொழுது கூறுங்கள், இது மக்களின் இணையமாக இருக்கிறதா? இல்லை அதிகார வர்கத்தின் இணையமாக இருக்கிறதா என்று?
இதுதான் பிரச்சனை, இதுதான் சிக்கல் என்று நாம் கண்டறிந்துவிட்டோம். இந்தப் பிரச்சனையை தீர்க்கவோ அல்லது ஒரு மாற்று பாதையைக் கண்டறிவதோதான் இப்போதைய அவசர வேலை. மாற்றுப் பாதையை நோக்கி நாம் செல்லாவிட்டால் ஏற்கனவே சிக்கலாய் இருக்கும் அமைப்புக்குள் இருந்துக் கொண்டு அதை வசைப்பாடுவது யாருக்கும் பயன்தராது. அது தீர்வை நோக்கியும் செல்லாது. மாறாக அது அதிகார வர்க்கத்தைப் பலப்படுத்தத்தான் செய்யும்.
உண்மையான மக்கள் இணையம் என்பதில் அதிகாரமும், உரிமையும் மக்களிடமிருக்கும். அரசிடமோ அல்லது ஆளும் வர்க்கத்திடமோ இணையத்தின் அதிகாரம் இருப்பதன் முக்கியக் காரணமே அதன் உள்கட்டுமானத்தினால் (Internet Infrastructure) தான். இவர்கள் அமைத்திருக்கும் இந்த உள்கட்டுமானத்தை நாம் பயன்படுத்துவதால் தான் அதிகாரம் தொழில்நுடபரீதியாக அவர்கள் கைகளில் ஓங்கியுள்ளது. இதைத்தான் ஆங்கிலத்தில் “Centralized Infrastructure” (மத்தியமயப்படுத்தப்பட்ட உள்கட்டுமானம்) என்பார்கள்.
அதாவது ஒரு நாட்டின் இணைய இணைப்பே Internet Service Provider (ISP) எனப்படும் இணைய இணைப்புகளை வழங்கும் நிறுவனங்கள் கைகளில் இருப்பதுதான். இப்படி இருக்கும் இந்தக் கட்டமைப்புக்குப் பதிலாக மாற்று கட்டமைப்பை உருவாக்க வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம்.
மக்கள் இணையம் – மக்களால், மக்களுக்காக!
பழைய இணையத்திற்கு பதிலாக ஒரு புதிய மாற்று இணையத்தை உருவாக்க வேண்டும். இதில் மத்தியில் ஒட்டுமொத்த அல்லது பெரும்பான்மையான இணையத்தை கட்டுப்படுத்தும் ISP என்பவர் இருக்கவே மாட்டார். மாறாக மக்கள் குழுக்களாக இணைந்து, நமக்கு நாமே இணைய உள்கட்டுமானத்தை உருவாக்க வேண்டும். இப்படி ஆங்காங்கே உருவாக்கப்படும் கட்டுமானத்தை ஒன்றோடொன்று இணைத்து முதலில் ஒரு வட்டாரத்தை, பிறகு ஒரு மாநிலத்தை, பிறகு ஒரு நாடு முழுவதும் பரவச் செய்தால் மக்களின் மாற்று இணையம் சாத்தியமே.
படிப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது. இது உண்மையில் சாத்தியம் தானா...? நிச்சயமாக சாத்தியந்தான். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘Meshnet‘ (மெஷ்நெட்) என்று அழைப்பார்கள். இன்று மக்கள் கைகளின் மிகச்சாதாரணமாகப் புழங்கும் ஸ்மார்ட்ஃபோன்களையும், மடிக்கணினிகளையும், அவற்றில் உள்ள வை–ஃபை (Wi-Fi) வசதியையும் பயன்படுத்தி கம்பியற்ற (Wireless) மெஷ்நெட்வொர்க்குகளை உருவாக்கி, அவற்றை ஒன்றோடொன்று இணைக்க முடியும். சிந்தித்துப் பாருங்கள், புதிதாகச் சாதனங்கள் வாங்கத் தேவையில்லை, உள்கட்டுமானத்திற்காகச் சாலையைப் பிளந்து மண்ணை வாரி, ஒயர்கள் இடத்தேவையில்லை. ஒயர்லெஸ் மூலமே இவற்றைக் கட்டமுடியும் என்பது இதன் சிறப்பம்சம். இவ்வாறு உலகெங்கும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு நெட்வொர்க்கிற்கு ‘Hyperboria‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. இணையத்தில் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘TCP/IP’ எனப்படும் வரைமுறைக்குப் பதிலாக, ‘cjdns‘ எனப்படும் வரைமுறை Hyperboria-வில் பயன்படுத்தப்படுகிறது.
இன்னமும் உங்களுக்கு இது சாத்தியம் என்று தோன்றவில்லை என்றால் இதோ தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் இணைய வல்லுநர்கள், ஆர்வலர்கள், ஹேக்கர்கள் அனைவரும் இணைந்து மெஷ்நெட்வொர்க்குகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில், நான் அங்கம் வகிக்கும் தழிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (Free Software Foundation TamilNadu) தவிர, வேறு யாரும் இதைப் பற்றிப் பேசுவதாகத் தெரியவில்லை. பேசுவதோடு மட்டும் நில்லாமல், இணைய ஆர்வலர்களின் உதவியோடு விரைவில் மெஷ்நெட்வொர்க்குகளை ஒரு சில இடங்களிலாவது உருவாக்க முயற்சிப்போம்.
Hyperboria வளர்ந்து தற்போதுள்ள பழைய இணையத்திற்கு மாற்றாக வருவது என்பது உடனடியாக நடைபெறும் செயல் அல்ல என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். எனினும், அதற்கான தொடர் முயற்சிகள் மூலமும், குழுக்களாக மக்கள் ஆங்காங்கே இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு முதலில் மெஷ்லோக்கல்ஸ் (Mesh Locals) அமைத்துச் செயல்படுத்துவதே தற்போதைய பணியாக இருக்கும்.
இவ்வாறு அமைத்துவிட்டால், இந்த புதிய இணையமானது ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, அதிகாரமும், உரிமையும் மக்கள் கைகளுக்கு வரும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இதுவே மக்களால், மக்களுக்காக, மக்களே உருவாக்கிக்கொள்ளும் இணையமாகும்.
இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்த மாற்று செயல்பாட்டினை உங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் எடுத்துரைப்பதுதான். ஒருவேளை நீங்கள் ஒரு கணினித்துறை வல்லுநராகவோ, ‘Computer Networks’-இல் விருப்பமுள்ளவராகவோ இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ள்வும். அனைவரும் இணைந்து செயல்பட்டால் தான் ஒரு மாற்று சாத்தியமாகும்.
நன்றி : மாற்று - இணைய இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக