சனி, 3 ஆகஸ்ட், 2013

இது மோசமான முன்னுதாரணம் - பல்கலைக்கழகத்திற்கும் தேவை ஒரு படிப்பினை...!


 
















கட்டுரையாளர் : தோழர். அ. குமரேசன்           
                               பத்திரிக்கையாளர்                               
        ஒரு பல்கலைக்கழகம் பட்டதாரிகளை உற்பத்தி செய்கிற இடம் மட்டுமல்ல. ஜனநாயகத்தின் அடிப்படையாகிய பன்முகச் சிந்தனைகளைப் பேசுகிற, விவாதிக்கிற களமும் கூட. அரசியல், சமூகம், பண்பாடு, பொருளதாரம், வரலாறு, இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் அப்படிப்பட்ட பன்முகச் சிந்தனைகளின் களத்துமேடாகத் திகழ்ந்து வந்திருக்கிறது சென்னை பல்கலைக்கழகம். அந்தப் பெருமை பழங்கதையாகிவிடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. அமெரிக்காவிலிருந்து வந்துள்ள இஸ்லாமிய ஆய்வாளர் அமினா வதூத் உரையாற்றவிருந்த ஒரு உரையரங்க நிகழ்ச்சியை பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்திவிட்டது தான் அந்தக் கவலையை ஏற்படுத்துகிறது. ஆப்பிரிக்க - அமெரிக்க கலப்பினத்தைச் சேர்ந்தவரான 60 வயது அமினா வதூத் 1972ல் தமது 20-வது வயதில் இஸ்லாம் மதத்தைத் தழுவியவர். இஸ்லாமிய மறைநூலான குரான், பல்வேறு போதனைகள், நடைமுறைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர். மதபோதனைக் கூட்டங்களில் கலந்துகொண்ட அவர் அக்கூட்டங்களில் உரையாற்றவும் தொடங்கினார். பெண்களும் ஆண்களும் பங்கேற்கிற தொழுகைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து அவற்றிலும் உரையாற்றலானார். இப்படிப்பட்ட பாலின சமத்துவ முயற்சிகள் எங்கும் பரவ வலியுறுத்தி வருகிறார்.
         அவர் ஒன்றும் இறைமறுப்பாளர் அல்ல. நபிகள் நாயகத்தையும் குரானையும் ஏற்றுக் கொண்டவர்தான். அதே வேளையில் சமயத்திற்குள் பெண்களுக்கான இடம், சுய மரியாதை சமஉரிமை ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுக்கிறவர். தனது கருத்துகளுக்கு ஆதரவாக மறைநூலிலிருந்தே மேற்கோள்கள் காட்டுகிறவர். எந்த மதத்திலும் இருக்கக்கூடிய பழமைவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இப்படிப்பட்ட மாற்றுச் சிந்தனைகளைப் பொறுத்துக்கொள்கிற ஜனநாயக மனநிலை கிடையாது. அவர்களது எதிர்வினை என்பது இத்தகைய மாற்றுச் சிந்தனைகள் எவ்வளவு தவறானவை என்று நிறுவுவதாகவோ, தங்களது சிந்தனைகள் எவ்வளவு சரியானவை என்று வாதிடுவதாகவோ இருப்பதில்லை. மாறாக, மாற்றுக் குரல்களை மற்றவர்கள் கேட்க விடாமல் ஒடுக்குவதே அவர்களது வழிமுறை.அதே போன்ற எதிர்வினைதான் சென்னை பல்கலைக்கழக உரையரங்கம் தொடர்பாகவும் தலையெடுத்தது. இத்தனைக்கும் அந்த உரையரங்கத்தை ஏற்பாடு செய்ததே பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வு மையம்தான். ஆனால் திடீரென பல்கலைக்கழகத் துணைவேந்தர், அந்த உரையரங்கத்தை நடத்தவேண்டாம் என்று ஆணையிட்டார். மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள பல அறிஞர்கள் இதனால் ஏமாற்றமடைந்தார்கள்.
         காவல்துறையிடமிருந்து வந்த ஒரு தகவல்தான் துணைவேந்தரின் இந்த நடவடிக்கைக்குக் காரணமாம். பல அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாலும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்திருப்பதாலும் நிகழ்ச்சியை நிறுத்துமாறு அந்தத் தகவலில் கூறப்பட்டிருந்ததாம். உரையரங்கத்திற்கு ஏற்பாடு செய்த மையத்தின் தலைவர் பேராசிரியர் அப்துல் ரஹிமான், “எதிர்க்க்கிறவர்கள் உரையரங்கில் கலந்துகொண்டு எதிர்க்கேள்வி கேட்டிருக்க முடியும். இப்படி நிகழ்ச்சியையே நிறுத்தச் செய்ததன் மூலம் ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவதைக் கெடுத்து விட்டார்கள்,” என்று கூறியிருக்கிறார்.
           நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள், மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான முஸ்லிம்கள் ஆகிய அமைப்புகள், “குஜராத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக மற்றவர்களோடு இணைந்து போராடுகிற நாங்கள், சில முஸ்லிம் குழுக்களின் இந்த சகிப்பின்மை கண்டு ஏமாற்றமடைகிறோம், நாணுகிறோம்” என்று தமது கூட்டறிக்கையில் கூறியுள்ளன.   “வதூத்தின் சில விளக்கங்கள் தவறானவையாக இருக்கலாம். ஒருவரது எல்லாக் கருத்துகளையும் ஏற்க வேண்டும் என்பதில்லை, ஆனால் எதிர்வாதம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாதங்களும் எதிர்வாதங்களும் தொடர்ச்சியாக நடந்துவந்திருக்கிற நீண்ட பாரம்பரியம் இஸ்லாமிய கோட்பாட்டிற்கு உண்டு” என்கிறார் நிதான சிந்தனைகள் மேம்பாட்டுக்கான இஸ்லாமிய அமைப்பின் தலைமைச் செயலாளர் ஃபய்சூர் ரஹ்மான். மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, “குரான் தொடர்பான வதூத்தின் விளக்கங்களை பல முஸ்லிம் பிரிவுகள் ஏற்கவில்லை. ஆனால் நாங்கள் யாரும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு எவ்வித மிரட்டலும் விடுக்கவில்லை,” என்று கூறியிருக்கிறார். அமினா வதூத் உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட்டால் வளாகத்தின் முன் போராட்டம் நடத்தப்படும் என்று காவல் துறையின் உளவுத்துறைக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறும் இந்திய ஜவ்ஹீத் ஜமாத் செயலாளர் சையத் இக்பால், “முற்போக்கான கருத்துகள் என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராகப் பேசி வருகிறார்,” என்று கூறியிருக்கிறார். ஆக பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகளின் கருத்தைக் கேட்காமலே இந்த முடிவுக்கு காவல்துறை வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
         “சென்னை பல்கலைக்கழகம் எப்போதுமே சுதந்திரமான கருத்து வெளிப்பாடுகளுக்கு வாய்ப்பளித்து வந்திருக்கிறது. சட்டம் - ஒழுங்கு அமைப்புகளிடமிருந்து வந்த ஆணைக்கிணங்க நிர்வாக அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு இது” என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள துணைவேந்தர் தாண்டவன் கூறியிருக்கிறார். காவல்துறையுடன் பல்கலைக்கழகம் வாதாடியதா, கல்விக்களத்தில் மாறுபட்ட ஆய்வுகள் பகிர்ந்துகொள்ளப்படுவதைத் தடுக்கக்கூடாது என்ற விளக்கம் அளித்ததா போன்ற கேள்விகள் எழுகின்றன. காவல் துறையின் பூட்ஸ் கால்கள் இப்படிப்பட்ட அறிவுத்தள விவாதங்கள் பாதுகாப்புடன் நடக்க உதவியாக நிற்பதற்கு மாறாக, அரங்கக் கதவை மூடுவதற்காக ஓங்கப்பட்டது எவ்வளவு பெரிய வன்மம்!
        இதே பல்கலைக்கழகத்தில் இருக்கிற பொருளாதார ஆய்வு மையம் நாளை முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்குதல்கள் பற்றியோ, அம்பேத்கர் ஆய்வு மையம் சாதியத்தின் கொடூரங்கள் பற்றியோ, வரலாற்று ஆய்வு மையம் இந்தியாவின் உண்மையான பல பின்னணிகள் பற்றியோ உரையரங்குகள் நடத்தினால்? தாங்கள் நிறுவ முயல்கிற பொய்மைகளுக்கு இடைஞ்சல் என்று அஞ்சக்கூடிய சிலர் காவல்துறைக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பினால்? வருமுன் காக்க வேண்டிய கடமை முற்போக்கு, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது.
நன்றி:

2 கருத்துகள்:

kumaresan சொன்னது…

நன்றி தோழர். உங்கள் மறுபதிவின் மூலம் இந்தச் செய்தியும் சிந்தனையும் மேலும் பலருக்குச் செல்லும்...

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சொன்னது…

காவல் துறையின் பூட்ஸ் கால்கள் இப்படிப்பட்ட அறிவுத்தள விவாதங்கள் பாதுகாப்புடன் நடக்க உதவியாக நிற்பதற்கு மாறாக, அரங்கக் கதவை மூடுவதற்காக ஓங்கப்பட்டது எவ்வளவு பெரிய வன்மம்!// இது எல்லா இடத்திலேயும் நடக்கின்ற கூத்துதான்.
கட்டுரை நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. பழமையிலேயே திளைத்திருப்பது பலருக்கு comfort zone.