வியாழன், 1 ஆகஸ்ட், 2013

காங்கிரஸ் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை செய்கிறது....!


                                                                                                                                                        

கட்டுரையாளர் :          
தோழர். டி . கே. ரங்கராஜன், எம். பி.,    

       காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 அரசு ஆட்சியிலிருந்த நான்கரை ஆண்டு காலமும் மக்களுக்கு கொடுத்த தொல்லைகள் ஏராளம். விலைவாசி உயர்வு, வேலையின்மை, உச்சகட்ட ஊழல், பொதுத்துறைகளை சூறையாடுவது, வறுமை குறித்த மோசடியான அளவீடு என மக்களை வஞ்சித்து வதைத்த ஐ.மு.கூட்டணி அரசு, தேர்தல் நெருங்குகிற காலத்தில் தன்னுடைய குறுகிய அரசியல் ஆதாயத்தை மட்டும் கணக்கில் கொண்டு தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் இந்த விபரீத முடிவு ஆந்திராவில் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 
       தெலுங்கானா மாநில பிரிப்பு குறித்து அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா குழு தனது அறிக்கையில் அளித்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல. இந்த முடிவை எதிர்த்து ஆந்திராவை பிரிக்கக்கூடாது என்று ராயலசீமா மற்றும் கடலோர மாவட்டங்கள் முழுவதும் புதனன்று முழு அடைப்பு போராட்டம் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எம்.பி. சாம்ப சிவராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் சதீஷ்குமார், ஆதிநாராயணராவ், தோட்டா நரசிம்மம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல இன்னும் பலரும் விலகக்கூடும். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் சேர்ந்து தெலுங்கானா பகுதியில் சில சீட்டுகளை பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் ஆந்திராவின் பிற பகுதிகளில் அந்தக் கட்சிக்கு பலத்த அடி கிடைக்கக்கூடும். ஆந்திராவை பிரித்து புதிய மாநிலம் அமைப்பதால் ஏற்படப்போகும் பல்வேறு சிக்கல்களை இந்து (31-07-13) பத்திரிகை விவரித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா என்று இரு மாநிலங்கள் அமைவதால் நதிநீர்ப்பங்கீடு, ஊழியர்கள் பகிர்வு, நிதி மற்றும் ஓய்வூதியம் என பல்வேறு பிரச்சனைகள் எழும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நதிநீர் தாவாக்கள் தீர்க்கப்பட முடியாத பெரும் பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆந்திரா, தெலுங்கானாவும் சேரும். தற்போது ஒரே மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் இடமாற்றம் பணிமாற்றமும் பெரும் தலைவலியாக உருவெடுக்கும்.
         ஐதராபாத்துடன் இணைந்த தனி மாநிலம் தான் வேண்டும் என்று தெலுங்கானா கோரிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிவந்துள்ளனர். ஐதராபாத்தை விட்டுக் கொடுக்க முடியாது என எதிர்த்தரப்பு கூறுகிறது. இப்போதைக்கு பத்து ஆண்டுகள் ஐதராபாத் இரண்டு மாநிலங்களுக்கும் பொது தலைநகரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது ஒரு பெரிய பிரச்சனையாகவே நீடித்துக் கொண்டிருக்கும்.தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்பட்டவுடனேயே உ.பி. உட்பட பல்வேறு மாநிலங்களில் தனி மாநிலம் வேண்டும் என்ற கலகக்குரல்கள் கேட்க துவங்கிவிட்டன. உ.பி. மாநிலத்தை நான்காகப் பிரிக்க வேண்டும் என்று ஏற்கனவே குரல்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. கூர்க்காலாந்து, காஷ்மீர் உட்பட பல்வேறு இடங்களிலும் மாநில பிரிப்பு குரல்கள் வலுப்படும். தனி விதர்ப்பா அமைக்க வேண்டும் என்று அந்த குரல் மராட்டியத்திலிருந்து மீண்டும் கேட்கத் துவங்கியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலுள்ள கட்சிகள் கூட இந்த ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ளன. உதாரணமாக ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இது ஒரு ஆபத்தான விசயம். புதிய மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழுவதை இது ஊக்கப்படுத்தும் என்று கூறியுள்ளார்.தமிழகத்தில் 1967ம் ஆண்டு ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் தாலுகா அமைக்கும் விசயத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு வரை சென்றது. நிஜாம் ஆட்சியில் தெலுங்கானா பகுதி இருந்ததால் தனி மாநிலம் ஆக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டதால் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவில் பல சமஸ்தானங்கள் இருந்தன. அத்தனை பேரும் இப்போது கிளம்பி எங்கள் பழைய சமஸ்தானத்தை இப்போது புதிய மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டால் நிலைமை என்னவாகும். காங்கிரஸ் கட்சி மக்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காகவே இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளது. ஆட்சியில் சாதனைகளை கூறி மக்களிடம் வாக்குக் கேட்க முடியாது என்பதற்காக குறுகிய பிரதேச வெறியைத் தூண்டிவிட முயல்கிறது. மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத அரசு இப்படித்தான் குறுக்கு வழிகளில் வெற்றி பெற நினைக்கும். வறுமையும் வேலையின்மையும் வரலாறு காணாத ஊழல்களும் இந்திய மக்கள் அனைவரின் பொதுப் பிரச்சனையாக உள்ளது. மாநிலங்களை பிரிப்பதால் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.
         மொழிவழி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வாரிசுகளான மார்க்சிஸ்ட்டுகள் மாநிலங்களை துண்டு துண்டாக உடைப்பதை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர். மாநிலத்தின் அதிகாரங்களை குறைக்கவும், மத்தியில் அதிகாரங்களை குவிக்கவுமே இது பயன்படும். இந்திய வரலாற்றில் பல்வேறு தவறுகளை செய்து கலவரத்திற்கு கால்கோள் நடத்திய காங்கிரஸ் தற்போது மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை செய்துள்ளது. 

நன்றி  : 

கருத்துகள் இல்லை: